கிருஷ்ணரை அடைய பக்தியே வழி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ந ஸாதயதி மாம் யோகோ

ந ஸாங்க்யம் தர்ம உத்தவ

ந ஸ்வாத்யாயஸ் தபஸ் த்யாகோ

யதா பக்திர் மமோர்ஜிதா

பரம புருஷ பகவான் கிருஷ்ணர் கூறினார்:] “அன்புள்ள உத்தவரே, [புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கான] அஷ்டாங்க யோகத்தினால் இயலாது, அருவமான ஒருமைத்துவத்தினாலோ பரம்பொருளின் ஆய்வறிவினாலோ இயலாது, வேதங்களைப் படிப்பதால் இயலாது, தவம் அல்லது துறவறத்தினாலும் இயலாது, என்மீதான களங்கமற்ற பக்தித் தொண்டினை வளர்ப்பதால் மட்டுமே என்னை திருப்திப்படுத்த இயலும்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.14.20)

புதையலுக்கான வழி

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மத்திய லீலையில் இந்த ஸ்லோகம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அங்கே பகவான் சைதன்யர் ஓர் உருவகக் கதையைச் சொல்வார். அதில் புதையலைத் தேடுவதற்கு சரியான இடம் என்ன என்பதை ஒரு ஜோதிடர் ஏழை ஒருவனுக்கு எடுத்துரைப்பார். புதையல் என்பது கிருஷ்ண உணர்வையும், எந்த திசையில் தேட வேண்டும் என்பது பரம்பொருளைத் தேடுவதற்கான பல்வேறு வழிமுறைகளையும் குறிக்கும்.

ஏழையிடம் அந்த ஜோதிடர் கூறினார், “நீ உண்மையில் மிகப்பெரிய செல்வந்தனின் மகன். ஆனால், அது தெரியாததால் நீ துன்பப்படுகிறாய்.”

ஏழையாக இருப்பது பௌதிக சிந்தனையுடன் வாழும் சாதாரண மனிதர்களுக்கு ஒரு சாபத்தைப் போன்றது. ஆயினும், ஆன்மீக சிந்தனையில் உயர்ந்தவனுக்கோ பௌதிகச் செல்வமோ ஏழ்மையோ ஒரு பொருட்டல்ல. உயிர்வாழிகள் ஏழ்மையில் வாட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் பரம ஆளுநரான இறைவனின் அம்சங்கள். தந்தையின் சொத்தைப் பெறுவது மகனுக்கு மரபுரிமையாக இருப்பதைப் போல, இறைவனின் சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை ஒவ்வோர் உயிர்வாழிக்கும் உண்டு. இதுவே சட்டம். இருப்பினும், மாயையின் பிடியில் சிக்கியுள்ள நாம் நமது பரம தந்தையுடனான உறவை மறந்து விட்டோம். அதன் காரணமாகவே துன்பப்படுகிறோம்.

வழிமுறைகள் பல

இப்போது நாம் அந்த முழுமுதற் கடவுளின் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், எவ்வாறு அங்கு செல்வது, எவ்வாறு வீடுபேறு அடைவது என்பதை அறிய வேண்டும். அதுவே மனித வாழ்வின் குறிக்கோள். நாம் ஏன் இந்த பௌதிக உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை ஆராய வேண்டியதில்லை. வேத இலக்கியங்களின் வழிகாட்டுதல்கள் ஜோதிடரின் அறிவுரையைப் போன்றவை, அவற்றைக் கொண்டு வீடுபேறு அடைவதற்கான வழியைத் தேட வேண்டும். ஜோதிடர் எவ்வாறு ஏழைக்கு குறிப்புகளைத் தருகிறாரோ, அவ்வாறே வேத நூல்கள் நமக்கு குறிப்புகளைத் தருகின்றன. அதன் மூலமாக நமது தந்தையுடனான இழந்த உறவைப் புதுப்பித்து நாம் பெரும் செல்வந்தர்களாக முடியும்.

அந்த உறவைப் புதுப்பிக்க பல வழிகள் உள்ளன. ஆயினும், பக்தியை தவிர சிறந்த வழி வேறில்லை என்று பகவான் சைதன்யர் கூறுகிறார். வேத சாஸ்திரங்களும் அதையே கூறுகின்றன. இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ சைதன்யர் பாகவதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இங்கே, ஸாதயதி மாம் யோகோ. அதாவது, “அஷ்டாங்க யோகத்தினால் என்னை அடைய இயலாது,” என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். ஸாங்க்யம், “தத்துவ ஆய்வறிவினாலும் என்னை அடைய இயலாது.” தர்ம உத்தவ, “அறச் செயல்களாலும் முடியாது.”

எவ்வாறு நதிநீர் கடலுக்குச் சென்றாலும் கடல் அப்படியே மாற்றமின்றி உள்ளதோ அதே போல நாம் கடவுளிடம் சேரும்போது அவரது சக்தி கூடும் என்பது கிடையாது.

கூட்டல் கழித்தலுக்கு அப்பாற்பட்ட கடவுள்

உண்மையில் யோகம் என்பது தொடர்பை ஏற்படுத்தி இணைப்பதாகும். கணிதத்தில் நாம் கூட்டல், கழித்தலை அறிவோம். நமது தற்போதைய நிலை கழிக்கப்பட்ட நிலை—கடவுளிடமிருந்து நான் கழிக்கப்பட்டுள்ளேன். எனக்கு கடவுளைப் பற்றிய உணர்வே இல்லை. எனவே, நான் கழிக்கப்பட்ட நிலையில் உள்ளேன். யோகம் என்பது கடவுளுடன் நான் கூட்டப்படும் (சேர்க்கப்படும்) நிலை. இதுவே யோகத்திற்கான உண்மை விளக்கம். இதுவரை நான் கடவுளிடமிருந்து கழிக்கப்பட்டிருந்தேன், இப்போது யோகத்தின் மூலமாக அவருடன் சேர்க்கப்பட்டுள்ளேன்.

அதே நேரத்தில், இறைவனுடன் நான் சேர்க்கப்படும்போதும் இறைவன் இறைவனாகவே இருப்பார், இறைவனிடமிருந்து என்னைக் கழித்தாலும் அவர் அப்படியே இருப்பார்—இந்த ஆன்மீக உண்மையை நினைவிற்கொள்ளுதல் அவசியம். நான் கழிக்கப்பட்டு, அதாவது கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும்போது, அவர் தமது சக்திகளில் சிலவற்றை இழந்திருப்பார் என்று பொருளல்ல. அவர் முழுமையானவர். மேலும், கடவுளுடன் நான் கூட்டப்படும்போது, அதாவது இணைக்கப்படும்போது, அவரது சக்தியில் சிறிது கூடும் என்பதும் இல்லை.

பகவத் கீதையில் சிறந்ததோர் எடுத்துக்காட்டு உள்ளது: ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம். மழைக்காலத்தில் இலட்சக்கணக்கான கன அடி நீர் நதிகளின் மூலமாகக் கடலில் சேர்கிறது. ஆயினும், கடல் அப்படியே மாற்றமின்றி உள்ளது. ஒரு சாதாரண கடலே ஏதாவது சேர்க்கப்படும்போது மாற்றமின்றி இருக்கும்போது, இறைவனைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

அஷ்டாங்க யோகத்தின் நிலை

உடல் சார்ந்த கருத்தில் ஊறியவர்களுக்கு அஷ்டாங்க யோகம் சிறந்தது; ஏனெனில், அது புலன்களை வெளிப்புற கவர்ச்சிகளிலிருந்து பிரித்து உள்ளே செலுத்தும் பயிற்சியை அளிக்கவல்லது. இதில் எட்டு நிலைகள் உள்ளன. யம, நியம எனப்படும் கட்டுப்பாட்டு விதிகளுடன் இப்பயிற்சி தொடங்குகின்றது. உணவு, உறக்கம், பிணி முதலியவற்றை முதலில் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். யோகத்தின் முதல் கொள்கை புலனுகர்ச்சியைத் தவிர்ப்பதாகும். அதுவே உண்மையான யோகம். புலனுகர்ச்சி, போதை மற்றும் பல வேண்டாத செயல்களில் ஈடுபடுபவனுக்கு, யோகத்தில் வெற்றி பெறுதல் அசாத்தியம்.

அஷ்டாங்க யோகத்தின் அடுத்த நிலை, ஒரு தனிமையான புனிதமான இடத்தில், கழுத்து, தலை, உடல் ஆகியவற்றை ஒரே கோட்டில் நிறுத்தி முறையாக அமர வேண்டும். பிறகு மூக்கின் நுனியை பாதி திறந்த கண்களால் பார்க்க வேண்டும். கண்களைத் திறந்து விட்டால், பௌதிகத் தோற்றங்கள் இடையூறு செய்யலாம், கண்களை மூடிவிட்டால் நாம் உறங்கிவிடலாம். யோகிகள் பலரும் குறட்டை விடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

தியானம் என்றால் மனதை ஒருமுகப்படுத்துதல் என்று பொருள். மனதை ஒருமுகப்படுத்துவதன் நோக்கம் என்ன? நம் உடலுக்குள்ளே நம்மைக் காண்பதும், அதன் பின் பகவானைக் காண்பதுமே அதன் நோக்கம். அப்போதுதான் யோகம் பூரணத்துவம் பெறுகிறது. அதை விடுத்து, இரவு பகல் முழுக்க மனம் போன போக்கில் இருந்துவிட்டு, நூறு ரூபாய் கட்டி ஒரு யோகா வகுப்பில் சேர்ந்து விட்டு, “நான் பெரிய யோகி” என்று சொல்லிக்கொள்வது அபத்தமானது.

யோகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. யோகாசிரியர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் பலரும் மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களையும் அந்த மாணவர்களையும் “ஏமாற்றுவோர், ஏமாற்றப்படுவோரின் சங்கம்” என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.

உண்மையான யோகத்தைக் கடைப்பிடித்தாலே பகவானிடம் செல்ல முடியாது; முறையற்ற யோகத்தைப் பயில்வதால் பகவானை அடைய முடியுமா என்ன?

சாத்தியமற்ற யோகம்

வேத சாஸ்திரங்கள் ஏற்கும்போதிலும், அஷ்டாங்க யோகத்தைக் கடைப்பிடிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினம். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு சூழ்நிலை சாதகமாக இருந்தது, மக்கள் பெருமளவில் களங்கமின்றி நற்சிந்தனையுடன் திகழ்ந்தனர். இருப்பினும், அந்தச் சூழ்நிலையிலும் அர்ஜுனனைப் போன்ற உத்தம மனிதன்கூட அஷ்டாங்க யோகத்தைச் செய்ய மறுத்துவிட்டான். “இத்தகைய யோகியாக இரு” என்று கிருஷ்ணர் கூறியபோதும், அர்ஜுனனோ, “அஃது எனக்கு சாத்தியப்படாது” என்றே கூறி விட்டான்.

எனவே, இன்றைய சூழ்நிலையில் அஷ்டாங்க யோகம் அறவே சாத்தியமில்லை. ஸத்ய யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஸத்வ குணத்தில் இருந்தபோது அது சாத்தியப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவனாக இருந்தான், உயர்ந்தவனுக்கே யோகம் சொல்லப்பட்டது, சாதாரண மக்களுக்கு அல்ல.

என்னதான் சீராகவும் செம்மையாகவும் யோகம் செய்தாலும், அது பரம புருஷ பகவானிடம் நம்மை  இட்டுச்செல்லாது. அதைத்தான் இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கின்றது. உண்மையான ஒழுங்கான யோகத்தைச் செய்தாலும் பகவானை அடைய முடியாது எனும் பட்சத்தில், முறையற்ற யோகத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ?

ஸாங்கிய யோகத்தின் நிலை

ஸாங்க்யம், “ஸாங்கிய யோகத்தினால் அல்ல” என்றும் இங்கே சொல்லப்படுகிறது. ஸாங்கிய யோகம் என்பது ஜடத்தையும் ஆத்மாவையும் அறிவதாகும். ஸாங்கிய தத்துவ அறிஞர்கள் இவ்வுலகம் 24 மூலகங்களைக் கொண்டது எனக் கூறுகின்றனர். பஞ்ச பூதங்கள், மூன்று சூட்சும பொருட்கள், ஐந்து ஞான இந்திரியங்கள், ஐந்து கர்ம இந்திரியங்கள், ஐந்து புலனுணுர்வு பொருட்கள், ​பிரதான எனப்படும் ஜட இயற்கையின் தோற்றமற்ற தன்மை ஆகியவையே அந்த மூலகங்கள்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகும். மனம், புத்தி, பொய் அஹங்காரம் ஆகிய மூன்றும் சூட்சுமப் பொருட்களாகும். கண், மூக்கு, காது, நாக்கு, தோல் ஆகிய ஐந்தும் அறிவைப் பெறுவதற்கான புலன்கள் (ஞான இந்திரியங்கள்). குரல், கால், கை, ஆசனவாய், பிறப்புறுப்பு ஆகிய ஐந்தும் நமக்கு இன்பதுன்பத்தை உணர்த்தும் கர்ம இந்திரியங்களாகும். மேலும், மணம், சுவை, உருவம், தொடு உணர்ச்சி, சப்தம் ஆகியவை ஐந்து புலனுணர்வுகளாகும்.

ஜட உலகை இவ்வாறு 24 பகுதிகளாகப் பிரித்து ஆராய்தல் ஸாங்கியம் எனப்படும். நம் அனுபவத்திற்கு உட்பட்ட அனைத்தும் இந்த ஆராய்ச்சியில் அடங்கும். இந்த 24 பகுதிகளுக்கும் அப்பாற்பட்டதே ஆத்மா. ஆத்மாவிற்கு அப்பாற்பட்டதே பரமாத்மா.

ஸாங்கிய தத்துவ அறிஞர்களால் ஆத்மாவைக் காண முடியாது. அவர்கள் ஜட உலக விஞ்ஞானிகளைப் போன்று ஜடப் பொருட்களை ஆராய்வதோடு சரி, அதைப் பற்றிய விளக்கத்தை அறியார். நான் இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்; பேசிக் கொண்டிருப்பவன் யார், அல்லது பேசிக் கொண்டிருக்கும் பொருள் எது என்பதை ஸாங்கிய தத்துவவாதிகளால் விளக்க முடியாது. அதுபோலவே, மருத்துவர்கள் ஓர் உடம்பைக் கிழித்தும்கூட அது செயல்பட காரணமாக இருக்கும் ஆத்மாவைக் காண முடியாது. கடவுளின் அங்கமான ஆத்மாவைக் காண முடியாதவர்களால் கடவுளை எவ்வாறு காண முடியும்? எனவே, ஸாங்கிய அறிஞர்களும் சரி, யோகிகளும் சரி, இறைவனைக் காண இயலாது!

கிருஷ்ண பக்தி ஒன்றே வாழ்வின் குறிக்கோளை அடைவதற்கான வழி, அதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை,
வேறு வழியில்லை.

பக்தி மட்டுமே வழி

இவ்வாறாக, இதர வழிகள் அனைத்தையும் (அஷ்டாங்க யோகம், ஸாங்கிய யோகம், மதச் சடங்குகள், வேத சாஸ்திரங்களைக் கற்றல், விரதம், தியானம், வனத்திற்குச் சென்று தனிமையில் வாழ்தல், சந்நியாசம், தியாகம் என அனைத்தையும்) பரம புருஷ பகவான் கண்டிக்கின்றார். அவற்றைக் கடைப்பிடித்தால் இறுதி இலக்கை ஓரளவு நெருங்க முடியுமே தவிர, அங்கே பக்தி இல்லாவிடில், அந்த இலக்கை அடைவது அசாத்தியம். எனவே, கிருஷ்ணர் இவற்றைக் கண்டிக்கிறார்.

கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.19) கூறுகிறார், பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே, “பற்பல பிறவிகளுக்குப் பின் உண்மையான அறிவுடையவர்கள் இந்த வாஸுதேவரே எல்லாம் என்பதை உணர்ந்து என்னிடம் சரணடைகின்றனர்.”

இந்த கிருஷ்ண உணர்வு நிலைக்கு ஒருவர் வர வேண்டும். யோக முறை, தத்துவ முறை, சடங்குகள், தியானம், வேதக் கல்வி என எதன் மூலமாக வந்தாலும் சரி, கிருஷ்ண உணர்விற்கு வருவதே அவசியம். கிருஷ்ண உணர்விற்கு வராவிடில், எந்த முயற்சியும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே வெற்றியைத் தரும்.

துரதிர்ஷ்டவசமாக மக்கள் இவற்றால் கிடைக்கும் கீழ்நிலை வெற்றியிலேயே திருப்தியடைந்து விடுகின்றனர், இறுதி இலக்கை அடைய முயல்வதில்லை. இறுதி இலக்கை அடைய ஆவல் கொண்டவர்கள் கிருஷ்ண பக்தி என்ற வழிமுறைக்கே வர வேண்டும். பக்திர் மமோர்ஜிதா. அந்த மார்க்கம் ஒன்றே பரம புருஷ பகவானிடம் கொண்டு செல்லும். அறிவுடையோர் இந்த எளிய வழியைக் கடைப்பிடிப்பர். இந்த யுகத்தில் யோகத்தை பூரணமாகச் செய்யவோ சமயச் சடங்குகளை குறைபாடின்றிச் செய்யவோ சாஸ்திரங்களை முழுமையாகக் கற்கவோ வாய்ப்பில்லை. அவற்றிற்கான சாதகமான சூழ்நிலை இல்லை.

அதனால்தான், சைதன்ய மஹாபிரபு தமது காரணமற்ற கருணையினால் இந்த வழியை நமக்குக் காட்டியுள்ளார்.

ஹரேர் நாம ஹரேர் நாம

ஹரேர் நாமைவ கேவலம்

கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ

நாஸ்த்யேவ கதிர் அன்யதா

“கலி யுகத்தில் கிருஷ்ணரின் திருநாமத்தினை உச்சரிப்பதால் மட்டுமே பரம கதியை அடைய முடியும். வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.” இந்த ஸ்லோகம் ப்ருஹந்நாரதீய புராணத்தில் உள்ளது. இதனையே பகவான் சைதன்யர் எடுத்துக் கூறுகிறார். அவர் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பக்தியே பரம கதிக்கு வழி என்று பிரச்சாரம் செய்தார், இந்த வழியினை அவர் தாமாக உருவாக்கவில்லை. இதை நாம் ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

இதனை ஏற்றுக் கொண்டால், பரம்பொருளை உணர்வதற்கான துரித வழி இதுவே என்பது புலப்படும். எனவே, கிருஷ்ண பக்தியை அக்கறையுடனும் உண்மையுடனும் கடைப்பிடிக்க வேண்டும். மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives