வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
யோகம் என்றால், கட்டான தேகம், மிளிரும் ஆரோக்கியம், அமைதியான மனோநிலை போன்றவற்றை வழங்கும் ஒரு பயிற்சி என்று நாகரிக மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் யோகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் ஆழ்ந்த விளக்கமானது, பரமனுடனான தொடர்பு” என்பதேயாகும். 1968இல் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய இவ்வுரையில் யோகப் பயிற்சியின் மிகவுன்னத நிலையை விளக்குகிறார்.
யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கதேனாந்தர்-ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:
“எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.” (பகவத் கீதை 6.47)
அஷ்டாங்க யோகி, தியான யோகி, ஹட யோகி, ஞான யோகி, கர்ம யோகி, பக்தி யோகி என பலதரப்பட்ட யோகிகளிலும் பக்தி யோகியே யோகத்தின் உயர்நிலையில் இருப்பவன் என்று இங்கே மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. “எல்லா யோகிகளிலும் என்னை உன்னத அன்புத் தொண்டினால் வழிபடும் என்னுடைய பக்தனே மிகச் சிறந்தவன்,” என்று கிருஷ்ணரே உறுதியுடன் கூறுகிறார். என்னில் நிலைத்தவன்” என்று கிருஷ்ணர் கூறுகிறார். அதாவது, ஸ்ரீ கிருஷ்ணரில் நிலைத்தவன். எனவே, யோகத்தின் உன்னத நிலையை அடைய விரும்புவோர் கிருஷ்ண உணர்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பஜதே–ஆழமான விளக்கம்
பஜதே என்னும் சொல்கூட கருத்தாழமிக்கதும் ஆராய வேண்டியதுமாகும். இச்சொல், வழிபடுதல் என்னும் பொருளில் உபயோகிக்கப்படுகிறது. இருப்பினும், வழிபடுதல் என்பது பஜ என்னும் சொல்லுக்கு ஈடாகாது. வழிபடுதல் என்றால், பூஜை செய்தல், உயர்வானவருக்கு மரியாதை செலுத்துதல், வணக்கம் செலுத்துதல் என்று விளக்கம் தரலாம். ஆனால், பஜதே என்பது உண்மையான அன்புத் தொண்டினைக் குறிக்கும், இது பரம புருஷ பகவானுக்கு மட்டுமே உரித்தானதாகும். எனவே, வழிபடுவது என்னும் வார்த்தை, அன்புத் தொண்டு, பக்தித் தொண்டு என்னும் வார்த்தைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். வழிபாடு என்பது எண்ணற்ற பௌதிக இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகும். உதாரணமாக, நாம் ஒரு பெரிய வியாபாரிக்கு மரியாதை செலுத்துகின்றோம் என்றால், அவரிடமிருந்து நமக்கு சில வியாபார வரவு கிடைக்கும், நிறைய இலாபம் அடையலாம், சந்தோஷமாக வாழலாம் போன்ற சில சுயநல எண்ணங்களுடனேயே மரியாதை கொடுக்க முன்வருகிறோம். அதுபோலவே ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துதான் மக்கள் தேவர்களுக்கு பூஜை செய்கின்றனர். ஆனால் அத்தகு எண்ணத்தை பகவத் கீதை வன்மையாக கண்டிக்கிறது: காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத-க்ஞானா: ப்ரபத்யந்தே ‘ன்ய-தேவதா:, “ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைகின்றனர்.” (பகவத் கீதை 7.20)
எனவே, வழிபாடு என்பது பெரும்பாலும் சுயநல எண்ணங்களை இலட்சியமாக கொண்டது. ஆனால் பக்தித் தொண்டு என்பது, பிரதிபலனாக பௌதிக இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விருப்பங்கள் ஏதுமில்லாத நிலையைக் குறிப்பதாகும். பக்தித் தொண்டு என்பது அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும். ஒரு தாய் தன் குழந்தைக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்கிறாள். அங்கு அன்பு மட்டுமே முக்கியமான மையமாக செயல்படுகிறது. சில காரணங்களுக்காக குழந்தையை யாராவது வெறுத்தாலும், தாய் தன் குழந்தையை ஒருபோதும் வெறுக்க மாட்டாள். ஏனெனில், அவள் தன் குழந்தையை உண்மையான அன்புடன் நேசிக்கின்றாள். அதுபோலவே பகவத் சேவையில் சுயநலம், எதிர்பார்ப்பு போன்றவற்றிற்கு இடமே இல்லை. இதுவே தூய்மையான கிருஷ்ண உணர்வாகும்.
முதல்தர தர்மம்
இத்தகைய தூய உணர்வையே ஸ்ரீமத் பாகவதம் (1.2.6) முதல்தரமான உயர்ந்த தர்மமாக வலியுறுத்துகின்றது. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே, பகவானின் மீதான பற்று அல்லது அன்பு எதனால் வளர்ச்சியடைகின்றதோ, அதுவே மிகவுயர்ந்த தர்மமாகும். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. ஆனால் அவர் பகவானின் மீதான அன்பை எந்த அளவுக்கு வளர்த்துள்ளார் என்பதே முக்கியமாகும். “எந்த மதத்திற்குப் போனாலும் எனது ஆசைகள் நிறைவேறவில்லை,” என்று சிலர் எண்ணலாம். இத்தகு எண்ணம் முதல்தர தர்மமாகாது, இது மூன்றாம்தர தர்மமாகும். முதல்தர தர்மம் என்பது பரம புருஷரின் மீதான அன்பை வளர்க்க உதவுவதாகும். அந்த அன்பு எவ்வித பௌதிக உள்நோக்கமும் இன்றி இடையறாததாக (அஹைதுக்யப்ரதிஹதா) இருக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகள் இன்றி நேசிக்கப் பழகுவோம்
கிருஷ்ண உணர்வே உன்னத யோகமாகும், இதுவே உன்னத தர்மமும்கூட; ஏனெனில் இது சுயநலமற்றதாக மிளிர்கிறது. எனது சீடர்கள், கிருஷ்ணர் இதைத் தருவார், அதைத் தருவார் என்று எதிர்பார்த்து அவருக்கு சேவை புரிவதில்லை. அஃது, இஃது என்ற தேவை அவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், உண்மையில், இங்கே பற்றாக்குறை என்பதற்கு இடமே இல்லை. பக்தர்கள் தங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவாக பெறுகின்றனர். கிருஷ்ண உணர்வை அடைபவர் ஏழ்மையாகி விடுவார் என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணர் எங்கு இருக்கின்றாரோ, அங்கு அனைத்துமே நிறைவாக இருக்கும்; ஏனெனில், கிருஷ்ணர் என்றும் நிறைவானவர். இதனால், “கிருஷ்ணா எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு,” என்று கேட்டு வியாபார பரிமாற்றத்தை வைத்துக் கொள்ள நினைக்கக் கூடாது. எவ்வாறு தன் குழந்தையின் தேவைகளை தக்க சமயத்தில் தந்தை பூர்த்தி செய்கின்றாரோ, அவ்வாறே நமக்கு நன்மை தருபவற்றை பகவானும் தக்க சமயத்தில் நிறைவேற்றிக் கொண்டே இருப்பார். அவ்வாறு இருக்கையில், நாம் அவரிடம் கேட்டுப் பெற வேண்டிய அவசியமென்ன? பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர், அவர் நமது விருப்பத்தையும் தேவைகளையும் மிகவும் தெளிவாக அறிந்துள்ளார். ஏகோ பஹுனாம் யோ விததாதி காமான், பரம புருஷ பகவான் எண்ணற்ற ஜீவராசிகளின் அனைத்து தேவைகளையும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றார் என்று வேதங்கள் உரைக்கின்றன.
எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பகவானை உண்மையாக நேசிக்கப் பழக வேண்டும். அப்போது நமது தேவைகள் அனைத்தும் தானாகவே நிறைவேற்றப்பட்டுவிடும். நடைமுறையில் பார்த்தால், நாய்களுக்கும் பூனைகளுக்கும்கூட தேவைகள் இருக்கத்தான் செய்கின்றன. தேவைகளை நிறைவேற்ற அவை கோயிலுக்குச் சென்று விண்ணப்பப் படிவம் ஏதும் கொடுப்பதில்லை. ஆயினும், அவற்றின் தேவைகள் அனைத்தும் நிறைவேறிக் கொண்டுள்ளன. பக்தனுக்கு மட்டும் தேவைகள் நிறைவேற்றப்படாமல் போகுமா? பூனைகளும் நாய்களும் கடவுளிடம் சென்று எவ்வித கோரிக்கையும் வைப்பதில்லை, அவற்றின் வாழ்க்கைத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இதைக் காணும் போது, நாம் மட்டும் ஏன் கடவுளிடம் சென்று, “எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு” என்று வியாபாரம் பேச வேண்டும்? அதற்கு அவசியமே இல்லை. நாம் அவரை உண்மையாக நேசித்து அவருக்கு சேவகம் செய்தாலே போதும். நம்மை அனைத்திலும் நிறைவானவராக அவர் மாற்றிவிடுவார். இதுவே யோகத்தின் மிக உன்னத நிலையாகும்.
சேவை செய்வதே நமது நிலை
பகவானுக்கு சேவை செய்வது என்பது நமது இயற்கையான குணமாகும். ஏனெனில், நாம் அனைவரும் கடவுளின் அம்சங்களாவோம். அம்சத்தின் வேலை முழுமைக்கு சேவை செய்வதாகும். உதாரணமாக, உடலானது தனது தேவைகளுக்காக கைவிரல்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. விரல்கள் முழு உடலின் அம்சங்கள்; அவற்றின் கடமை என்ன? முழு உடலுக்கும் சேவை செய்தல். திடீரென்று உடலில் அரிப்பு ஏற்பட்டால், விரல்கள் உடனே சென்று சொரிந்து கொடுக்கும். எதையாவது காண விரும்பினால் உடனே கண்கள் செயல்பட ஆரம்பிக்கும், எங்காவது செல்ல விரும்பினால் உடனே கால்கள் செயல்பட ஆரம்பிக்கும். இவ்வாறாக, அனைத்து உறுப்புகளும் உடலின் செயலுக்கு துணை புரிகின்றன.
அதைப் போலவே, நாம் அனைவரும் பகவானின் அங்கங்கள் என்பதால், அவருக்கு சேவை செய்வதில் நாம் ஒற்றுமையாக உற்சாகம் கொள்ள வேண்டும். கால்கள் முழு உடலுடன் ஒத்துழைத்து தன் கடமையைச் செய்வதால் கால்களுக்கு தேவைப்படும் சக்தி தானாகவே வந்தடைவதைப் போலவே, கிருஷ்ணருக்கு சேவை செய்வதால் நமது அனைத்து தேவைகளும் தானாகவே நிறைவேற்றப்பட்டுவிடும். யதா தரோர் மூல நிஷேசனேன, எவ்வாறு மரத்தின் வேருக்கு நீரூற்றினால், உடனடியாக இலைகள், கிளைகள், மரப்பட்டைகள் என அனைத்திற்கும் அதன் சக்தியானது விநியோகிக்கப்பட்டு செழுமையாக்கப்படுகிறதோ, அதைப் போலவே கிருஷ்ணரை திருப்திபடுத்தினாலே படைப்பில் உள்ள மற்ற அனைவரும் திருப்தியடைவர். தனித்தனியாக மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
நாம் பகவானுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்கு மற்றொரு காரணம் என்னவெனில், நாம் அனைவரும் இயற்கையாகவே யாராவது ஒருவருக்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கிறோம். எனவே, கிருஷ்ண உணர்வு என்பது நமது பாரம்பரிய தர்மமாகும். கிருஷ்ண உணர்வற்ற சேவையானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றுவிடும். ஆனால் கிருஷ்ண உணர்வின் சேவை அனைத்து ஜீவன்களையும் மகிழ்வடையச் செய்கிறது. ஜீவன்கள் பரம புருஷ பகவானின் அங்கங்கள் என்பதால், அவர்கள் இயல்பாகவே பரம புருஷருக்கு சேவை செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். இதைச் செய்யத் தவறினால் வீழ்வது நிச்சயம். இதன் விளக்கத்தை ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.3) காணலாம்:
ய ஏஷாம் புருஷம் ஸாக்ஷாத் ஆத்ம-ப்ரபவம் ஈஷ்வரம்
ந பஜந்த்யவஜானந்தி ஸ்தானாத் ப்ரஷ்டா: பதந்த்யத:
“நான்கு வர்ணங்களையும் நான்கு ஆஸ்ரமங்களையும் சேர்ந்த உறுப்பினர்களில் யாரேனும் பரம புருஷரை வழிபடத் தவறினால், அல்லது தனது படைப்பிற்கு மூலமான பரம புருஷரை அவமதித்தால், அவன் தன் நிலையிலிருந்து இழிவடைந்து நரக வாழ்வில் வீழ்வான்.”
நாம் வீழ்ந்து கிடப்பது ஏன்?
நமது உன்னத நிலையிலிருந்து வீழ்ந்து விடுவோம் என்றால் என்ன? அதன்பின் நம் நிலை என்ன? கைவிரல்களின் உதாரணத்தை மீண்டும் கொடுக்கலாம். விரல்கள் உடலுடன் ஒத்துழைக்கும்போது, அவற்றிற்கு எவ்வித துன்பமும் உண்டாவதில்லை. அதே சமயம் விரல்களில் ஏதாவது வெட்டுக் காயம் ஏற்பட்டுவிட்டால், அதன்பின் உடலுடன் ஒத்துழைக்க இயலாமல் அந்த விரல்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்கும். அதைப் போலவே பகவானுடன் ஒத்துழைக்காதவன் தன்னைத் தானே வருத்தி கொண்டவனாவான். அவனிடம் மிஞ்சியிருப்பது வேதனையும் வலியும் துன்பமுமேயாகும். எந்த மனிதன் நாட்டின் சட்டத்தை மதிக்கத் தவறுகிறானோ, அவன் தண்டனையை அனுபவிக்க வேண்டியவனாவான். நான் மிகவும் நல்லவன் என்று அவன் நினைக்கலாம். ஆனால் நாட்டின் சட்டங்களை அவன் மதிக்காவிடில், அவன் அரசாங்கத்திற்கு வேதனை கொடுப்பவனாகவே இருப்பான். இதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதாகும்.
இவ்வாறாக, கிருஷ்ணருக்கு சேவை செய்யாத ஜீவராசிகள் அவருக்கு மிகுந்த வேதனையை தருகின்றனர். நமது பாவச் செயல்கள் அவரது வேதனையை அதிகப்படுத்துகின்றன. “நீங்கள் குற்றவாளிகள் என்பதால், இங்குதான் வாழ வேண்டும், அப்போது பொது மக்களை துன்புறுத்தமாட்டீர்கள்,” என்று அரசாங்கம் குற்றவாளிகளை ஒன்று சேர்த்து சிறைசாலைக்கு அனுப்பி வைப்பதைப் போலவே, பகவானும் அவரது கட்டளைக்கு கீழ்படியாமல் அவருக்கு வேதனையளித்த அனைத்து குற்றவாளிகளையும் இந்த ஜடவுலக சிறைக்குள் வைத்து விட்டார். ஸ்தானாத் ப்ரஷ்டா பதந்த்யத:. இவ்வாறாக ஜீவராசிகள் ஆன்மீக உலகின் உன்னத நிலையிலிருந்து இந்த ஜடவுலகிற்குள் வீழ்ந்து விடுகிறார்கள். மீண்டும் கைவிரல்களின் உதாரணத்தைப் பார்ப்போம். விரல்கள் உங்களுக்கு தாங்க முடியாத வேதனையைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், “ஐயா, உங்களது விரல்கள் அழுகி விட்ட காரணத்தினால் அவற்றை அறுவை சிகிச்சையினால் வெட்டியெடுத்து விட வேண்டும், இல்லையேல் உங்களது உடல் முழுவதும் வீணாகிவிடும்” என்று மருத்துவர் எச்சரிப்பார். அதன்படி, விரல்களானது உடலின் இணைப்பிலிருந்து தனியே வெட்டப்பட்டு வீசப்பட்டுவிடும்.
பாகவத தர்மத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் இந்த ஜடவுலகில் வீழ்வது நிச்சயம். இந்த தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் நமது உண்மை நிலையான பேரின்பத்தை அடைய நாம் விரும்பினால், நமது இயற்கை நிலையான சேவக மனப்பான்மையை நாம் உடனே ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதுவே சிறந்த நிவாரணியாகும். இம்முறையை மேற்கொள்ளாமல், மேன்மேலும் நாம் நம்மை துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டு இருந்தோமெனில், நமக்காக நம்மைவிட அதிக துன்பத்தை பரம புருஷரும் அடைகிறார். ஏனெனில், நாம் பகவானின் மூர்க்கத்தனமான குழந்தைகளாவோம். மகன் நல்லவனாக இல்லையெனில், அத்துன்பம் மகனை மட்டும் பாதிக்காது, பெற்ற தந்தையையும் அளவு கடந்த துன்பத்தில் ஆழ்த்திவிடும். அதைப் போலவே நாம் துன்பப்படுவதைக் கண்டு பகவானும் நமக்காக வருந்திக் கொண்டுள்ளார். எனவே, இனியாவது நாம் நம்மை திருத்திக் கொண்டு நல்ல முடிவுடன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டு பகவானுக்கு செய்யும் அன்புத் தொண்டில் உற்சாகம் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணரை ஏளனம் செய்தல்
ஸ்ரீமத் பாகவதத்தில் உவமிக்கப்பட்டுள்ள அவஜானந்தி என்ற வார்த்தையின் உதாரணமானது ஏற்கனவே கிருஷ்ணரால் பகவத் கீதையில் (9.11) பேசப்பட்டுள்ளது.
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்
பரம் பாவம் அஜானந்தோ மம பூத-மஹேஷ்வரம்
“மனித உருவில் நான் தோன்றும் போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.”
பரம புருஷ பகவானை அலட்சியப்படுத்துபவர்கள் முட்டாள்களே. முட்டாள்கள், அயோக்கியர்கள் என்னும் பொருள் தரக்கூடிய மூடா என்னும் சொல்லை இங்கு பகவான் கிருஷ்ணரே குறிப்பிடுகின்றார். மூடர்களால் கிருஷ்ணரை உணர முடியாது, நமக்காக பகவான் படும் வேதனையை அவர்களால் உணர முடிவதில்லை. மேலும், அவர்கள் பகவானை அலட்சியப்படுத்துகின்றனர். அவரது உயர் ஆளுமையை உணரத் தவறும் இவர்கள் சிறு தேவர்களை கடவுள் என்று வழிபடுகின்றனர். மேலும், கடவுளாக மாறுவது மிகவும் எளிது என்று கூறி, “நானும் கடவுள், நீயும் கடவுள்” என்று பிதற்றுகின்றனர்.
எனவே, அவஜானந்தி என்பது மிகவும் பொருத்தமான வார்த்தையாகும். இதன் பொருள் அவமரியாதை என்பதாகும்.
“கடவுள் என்றால் என்ன? நானும் கடவுளே. நான் ஏன் அவருக்கு சேவை செய்ய வேண்டும்?” இவ்வாறு பகவானின் உயர் ஆளுமையை புறக்கணிப்பது அவஜானந்தி எனப்படும். இஃது ஒரு குற்றவாளியின் மனப்பான்மையை ஒத்துள்ளது. அவன் அரசாங்கத்திடம், “அரசாங்கம் எதற்கு? நான் என் விருப்பம்போல் எதை வேண்டுமானாலும் செய்வேன். அரசாங்கத்தை நான் கண்டுகொள்ள மாட்டேன்,” என்று கூறுகிறான். இதுவே அவஜானந்தி எனப்படுகிறது. அரசாங்கத்தைக் கண்டுகொள்ள மாட்டேன் என்று நாம் கூறினாலும், அரசாங்கத்தின் காவலாளிகள் நமக்கு தண்டனையைத் தருவது உறுதி. அதைப் போலவே பகவானை ஏற்று நாம் அவரிடம் சரணடையாவிடில், ஜட இயற்கையானது பிறப்பு, இறப்பு, நோய், முதுமை என்னும் தண்டனைகளை நமக்குக் கொடுத்து கொண்டே இருக்கும். இத்தகு கொடுமையான தண்டனைகளின் துன்பங்களிலிருந்து வெளிவர விரும்பினால், நாம் உடனடியாக யோகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
யோகத்தின் படிக்கட்டுகள்
அனைத்து வகையான யோகப் பயிற்சியின் உச்சநிலைகளும் பக்தி யோகத்திற்குள் அடங்கிவிடுகின்றன. யோகம் என்றாலே அது பக்தி யோகத்தையே குறிக்கும். மற்ற யோகங்கள் அனைத்தும் இவ்வுன்னத யோகத்தை அடைய துணைபுரியும் படிக்கட்டுகளேயாகும். இப்படிக்கட்டானது கர்ம யோகத்தில் தொடங்கி பக்தி யோகத்தில் முடிவுறும் நீண்ட தொலை தூரப்பாதையாகும். பாவச் செயல்களைச் செய்யாமல் தமக்கு நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்தல் கர்ம யோகமாகும். கர்ம யோகத்தின் உயர்வால் ஞானமும் துறவும் உண்டானால், அந்நிலை ஞான யோகம் எனப்படும். அதன் பின்னர் ஞான யோகத்தின் வளர்ச்சியால் அனைத்து வகையான பௌதிக கிளர்ச்சியிலிருந்தும் விடுபட்டு மனதை உள்ளிருக்கும் பரமாத்மாவின் மீது குவித்து புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திய நிலை அஷ்டாங்க யோகம் எனப்படும். மேலும், ஒருவர் அஷ்டாங்க யோகத்தில் உயர்ந்து, பரம புருஷ பகவானான கிருஷ்ணருக்கு சேவை செய்யும் பக்குவத்தை எப்போது அடைகிறாரோ, அப்போதே அவர் உன்னதமான பக்தி யோக நிலையை அடைந்து விட்டார் எனலாம்.
உண்மையில் பக்தி யோகமே இறுதி இலட்சியமாகும். பக்தி யோகத்தின் நுட்பங்களை ஆராய்பவன் மற்ற அனைத்து யோகங்களையும் புரிந்து கொண்டவனாவான். ஆன்மீகப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு யோகி, ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து அதற்கு மேல் முன்னேறாமல் அங்கேயே நின்றுவிட்டால், அவர் கர்ம யோகி, ஞான யோகி, அல்லது அஷ்டாங்க யோகி என்று குறிப்பிட்ட அடையாளங்களுடன் அழைக்கப்படுவார். ஆனால் அதிர்ஷ்டவசத்தால் பக்தி யோக நிலையை அடைந்துவிட்டால், அனைத்துவித யோகங்களின் அடைமொழிகளும் அவற்றுள் அடங்கிவிடும். எனவே, கிருஷ்ண உணர்வை அடைந்தவர் யோகங்களின் உன்னத நிலையை அடைந்தவராவார்.
அனைத்து யோக நிலைகளையும் படிப்படியாக கடந்து நீங்கள் கிருஷ்ண உணர்வினைப் பெறலாம், அல்லது எவ்வித சிரமமுமின்றி நேரடியாகவும் கிருஷ்ண உணர்வை ஏற்கலாம். இக்கலி யுகத்திலுள்ள மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்களாக துன்பங்களும் கவலைகளும் நிறைந்தவர்களாக இருப்பதால், நேரடியான முன்னேற்றத்தை ஏற்பதே சாலச் சிறந்தது என்று சைதன்ய மஹாபிரபு பரிந்துரைத்துள்ளார். மேலும் அவரது காரணமற்ற கருணையினால் அவர் நமக்கு அளித்துள்ள ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் என்னும் லிஃப்டில் ஏறினால் உடனடியாக பக்தி யோக நிலையை அடைந்து விடலாம்.
லிஃப்டின் உதவியை நாடுவோம்
ஞான யோகத்தைப் பயில்பவர்களில் சிலர், “இப்பயிற்சியை நான் முடித்து விட்டேன், இருந்தும் என்னுள் ஏதோ ஏக்கம் உள்ளது, அடுத்த நிலையைப் பயில முயற்சிக்கலாம்,” என்று நினைக்கக்கூடும். உதாரணமாக, ஒரு நூறு மாடி கட்டிடத்தினை படிக்கட்டுகளின் மூலமாக அணுகினால், பதிமூன்று, பதினைந்து, பதினெட்டு என ஒவ்வொன்றாக கடந்து செல்ல வேண்டியிருக்கும். பதினைந்து, பதினெட்டு என ஏறிக் கொண்டிருக்கும்போது, “நான் எனது இலட்சியத்தை எட்டிவிட்டேன்,” என்று நினைக்கக்கூடும். ஆனால் நீங்கள் அடைய வேண்டிய இலக்கு நூறாவது மாடியாகும். அதைப் போலவே பல்வேறு நிலைகளைக் கொண்ட யோகப் பயிற்சியில், நிதானம் இல்லாததன் காரணத்தினால், பதினைந்து, பதினெட்டு என்று ஏதேனும் ஒரு நிலையில், இதுவே போதும் என்று நின்றுவிடக் கூடாது. நாம் செல்ல வேண்டிய உயர்ந்த நிலை நூறாவது மாடி, கிருஷ்ண உணர்வாகும்.
நூறாவது மாடியை உடனடியாக அடைய விரும்புவோர் லிஃப்டின் உதவியை ஏற்பது மிகவும் புத்திசாலித்தனமாகும். அது நிமிடத்திற்குள் நம்மை நேரடியாக உயர்நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும். நான் ஏன் லிஃப்டின் உதவியை நாட வேண்டும் என்று சிலர் கேட்கலாம். நான் ஒவ்வொரு நிலையையும் ஒன்றன்பின் ஒன்றாக கடந்து செல்வேன் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் அச்செயலினால் நிச்சயம் அவர்களால் நூறாவது மாடியை அடைய இயலாது. ஆனால், அதே சமயத்தில், பக்தி யோகம் என்னும் லிஃப்டில் ஏறியவர் குறுகிய நேரத்தில் உன்னத யோகமான கிருஷ்ண உணர்வெனும் நூறாவது மாடியை அடைந்துவிடலாம்.
எனவே, தாமதமின்றி உடனே இதில் ஏறிக் கொள்ளுங்கள். யாருக்காகவும் எதற்காகவும் காத்துக் கொண்டு நிற்காதீர்கள். இதுவே சைதன்ய மஹாபிரபு கருணையுடன் நமக்களிக்கும் ஈடுஇணையற்ற பொக்கிஷமாகும். சாதாரணமாக கிருஷ்ணரின் அன்பைப் பெற ஒருவர் யோகங்களின் பல நிலைகளையும் மிகவும் துன்பப்பட்டு கடந்துவர வேண்டியிருக்கும். ஆனால் சைதன்ய மஹாபிரபு தமது கருணையினால் அதனை இலவசமாகவே விநியோகித்துக் கொண்டிருக்கிறார். எனவே அவரே கருணையின் அவதாரமாவார்.
பகவானை உணர எளிய வழி பக்தி யோகத்தில் சரணடைவதேயாகும். இதற்கான உறுதிமொழியை பகவத் கீதையில் (18.55) கிருஷ்ணரே வழங்குகிறார். பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஸ்சாஸ்மி தத்த்வத:, பக்தித் தொண்டினால் மட்டுமே பரம புருஷ பகவானை உள்ளது உள்ளபடி அறிய இயலும். இதை வேதங்களும் உறுதிபடுத்துகின்றன. பக்தியினால் மட்டுமே ஆன்மீகத்தின் உன்னத நிலையை அடைய இயலும். இதைத் தவிர்த்து மற்ற யோகப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அவை பக்குவமானவை அல்ல. மக்கள் தங்களது கிடைத்தற்கரிய பொன்னான நேரத்தை மற்ற யோக நிலைகளில் செலவிடாமல், உடனடியாக பக்தி யோகத்தை ஏற்க வேண்டியது மிகமிக அவசியமாகும். கலப்படமற்ற பக்தித் தொண்டே இக்கலி யுகத்திற்கு விமோசன மார்க்கமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, யாரொருவர் வேதங்களில் நன்கு பரிந்துரைக்கப்பட்டபடி நேரடியான பக்தி யோக நிலையை ஏற்று கிருஷ்ண உணர்வை அடைந்துள்ளார்களோ, அவர்கள் அனைவரும் மிகுந்த பாக்கியசாலிகளாவர்.
இத்தகைய பாக்கியசாலிகளின் சிந்தனை முழுவதும் கிருஷ்ணரை மட்டுமே மையம் கொண்டிருக்கும். கிருஷ்ணரின் கார்மேக வண்ண அழகையும், கோடி சூரிய ஒளியைப் போல் பிரகாசிக்கும் அவரது தாமரை மலர் முகத்தின் கவர்ச்சியையும், மின்னும் ஆபரணங்களால் ஜொலிக்கும் அவரது ஆடை அணிகலன்களையும், வைஜயந்தி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரின் மேனி அழகையும் கண்டு ரசித்த வண்ணம் ஆனந்தத்தில் மூழ்கியிருப்பர். இராமர், வராஹர், கிருஷ்ணர் என்று எண்ணற்ற அவதாரங்கள் உள்ளனர். அவர் தாய் யசோதையின் மகனாக, கிருஷ்ண, கோவிந்த, வாஸுதேவ என்று அன்புடன் அழைக்கப்படுகின்றார். அவரே அனைத்து செல்வ வளங்களையும், பேரின்பத்தையும் உள்ளடக்கிய சர்வ வல்லமை படைத்தவராவார். எனவே, யாரொருவர் தன்னிகரற்ற பூரணமான பகவானின் கவர்ச்சியில் தம் சிந்தனை முழுவதையும் வைத்திருக்கின்றாரோ அவரே உயர்ந்த யோகியாவார். இத்தகைய உன்னத யோக நிலையை பக்தி யோகத்தால் மட்டுமே பெற இயலும். இதை அனைத்து வேதங்களும் உறுதிப்படுத்துகின்றன.