வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
உண்மையான பொதுநலத் தொண்டு என்பது தற்காலிகமான விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாகும், அது மனிதனை அடுத்த பிறவிக்கு தயார் செய்வதாகும், மேலும், அவனுக்கும் கிருஷ்ணருக்குமான ஆதியந்தமற்ற உறவைப் பற்றி நினைவுபடுத்துவதாகும். அந்த பொதுநலத் தொண்டில் கிருஷ்ண பக்தியைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.
ஸ்ரீல பிரபுபாதரும் அவரது பத்திரிகையும்
ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் தனது மறைவிற்கு சற்று முன்பாக 1936ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீல பிரபுபாதருக்கு எழுதிய கடிதம்: “வங்காளம், இந்தி தெரியாத மக்களிடையே நம்முடைய எண்ணங்களையும் வாதங்களையும் ஆங்கிலத்தில் உங்களால் விளக்க முடியும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்படி செய்வதனால் உங்களுக்கும் நன்மை, உங்களிடமிருந்து கேட்பவர்களுக்கும் நன்மை. ஆங்கிலத்தில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை பிரச்சாரம் செய்வதில் நீங்கள் வல்லவனாக திகழ்வீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.” இதனை தனது குருவின் ஆணையாக ஏற்ற ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ண பக்தியை ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் பொருட்டு, இரண்டாம் உலகப் போர், பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களுக்கு மத்தியிலும், பணபலமோ இதர ஆதரவோ இன்றி, காகிதத்திற்காக அங்குமிங்கும் அலைந்து திரிந்த நிலையிலும், Back to Godhead (பேக் டு காட்ஹெட்) என்ற பத்திரிகையை 1944இல் ஆங்கிலத்தில் துவங்கினார்.
வாழ்வின் துயரங்களிலிருந்து மக்களை நிரந்தரமாக விடுவிக்கும் புத்தகங்களை விநியோகம் செய்யும் சேவையில் ஸ்ரீல பிரபுபாதர் தானே முன்னோடியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார். தனது பத்திரிகை அச்சடிக்கப்பட்டவுடன் அதன் பிரதிகளை எடுத்துக் கொண்டு வீதிவீதியாக செல்வார் ஸ்ரீல பிரபுபாதர். அபய் என்று அச்சமயத்தில் அழைக்கப்பட்ட அவர், தேநீர் விற்கும் சிறு ஹோட்டல்களில்கூட நுழைந்து ஓர் இடத்தில் அமர்ந்துகொள்வார், தன் பக்கத்தில் யார் உட்கார்ந்தாலும் அவரிடத்தில் ஒரு பிரதியைக் கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறு கூறுவார். தனது தலையங்கத்தின் மூலமாகவும் இதர கட்டுரைகளின் மூலமாகவும் அபய் மக்களிடையே பெருகி வந்த நாஸ்திகத்தையும் ஜடப்பொருள் மோகத்தையும் விமர்சனம் செய்தார், சில சமயம் தன்னுடைய சொந்த அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டும் எழுதுவார், பத்திரிகையை விற்கும்போது தான் சந்திந்த எதிர்ப்புகளைப் பற்றி ஒரு தனி கட்டுரையே எழுதினார், அவரது எழுத்துக்கள் ஒருபோதும் கொடூரமாகவோ மதவெறியுடனோ இருந்ததில்லை, தான் எடுத்துரைக்கும் நியாயமான தத்துவத்தைக் கேட்பதற்கு தனது வாசகர்கள் தயாராக இருப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர் எழுதினார். பத்திரிகையை ஆங்காங்கே விற்பதோடும் நன்கொடையாளர்களுக்கு கொடுப்பதோடும் அபய் நிறுத்திக்கொள்ளவில்லை, பல பிரதிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் பலருக்கும் தபாலில் இலவசமாக அனுப்பி வைத்தார். ஆங்கிலம் பேசும் கோடிக்கணக்கான அயல்நாட்டினர்களை தன் எழுத்துக்களால் தொட வேண்டும் என்று பல ஆண்டுகளாக அபய் நினைத்துக் கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள நூலகங்கள். பல்கலைக் கழகங்கள். கலாச்சார மையங்கள் ஆகியவற்றின் விலாசங்களை எப்படியோ சேகரித்து, அவற்றிற்கெல்லாம் தன்னால் முடிந்தவரைக்கும் பத்திரிகையின் பிரதிகளை அனுப்பிவைத்தார் அபய்.
புதுடில்லியில் வெயில் 114 டிகிரியை தொடக்கூடிய நாள்களிலும் அபய் விடாமல் பத்திரிகை விற்பதற்காக வெளியே சென்று விடுவார். ஒரு சமயம் வெயில் தாங்காமல் தெருவில் மயங்கி விழுந்துவிட்டார், மற்றொரு சமயம் ஒரு பசுமாடு அவரை முட்டித்தள்ளிவிட்டு ஓடிவிட்டது. ஆனால் இவை நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மாபெரும் இயக்கமாக நிலைநாட்டிய பின்னர், இச்சோதனைகளைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் பேசுகையில், “அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் இப்போது அன்று நான் பட்ட கஷ்டங்களெல்லாம் ஒருவித சொத்து என்பதை உணர்கிறேன்” என்றார்.
இஸ்கானில் புத்தக விநியோகத்தின் ஆரம்பம்
தன்னைப் போலவே தனது சீடர்களும் கிருஷ்ண பக்தி பற்றிய புத்தகங்களை விநியோகம் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். பத்திரிகையினை எவ்வாறு விநியோகம் செய்வது என்பதை ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் மெல்லமெல்ல கற்றுக் கொண்டனர். சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள் என்ற புத்தகம் முதன்முதலில் இஸ்கானில் அச்சிடப்பட்ட பெரிய புத்தகம், அதன் மொத்த பிரதிகளும் ஏப்ரல் மாதம் 1967ஆம் ஆண்டு நியூயார்க் வந்தடைந்தபோது பக்தர்கள் ஒரு லாரியின் மூலம் துறைமுகத்திலிருந்து அவற்றை இஸ்கான் மையத்திற்கு கொண்டுவந்து சேர்த்தனர். அதன்பிறகு, அவற்றை லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ, போஸ்டன், மான்ட்ரில் ஆகிய நகரங்களில் உள்ள இஸ்கான் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். புத்தகங்கள் பல மையங்களுக்குச் சென்ற போதிலும், அவை விநியோகிக்கப்படாமல் ஆங்காங்கே அப்படியே கிடந்தன.
நாளிதழ்களில் விளம்பரம் செய்வது, புத்தகக் கடைகளில் சில பிரதிகளை வைப்பது போன்ற யுக்திகளை சில பக்தர்கள் கையாண்டு பார்த்தனர். ஆனால் புத்தகங்கள் நகர்வதாக இல்லை, எப்படிதான் இந்த பெரிய புத்தகங்களை விற்பனை செய்வது என்று புரியாமல் முழித்தனர் பக்தர்கள். இப்படியிருக்கையில் எதிர்பாராத விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. 1971ஆம் ஆண்டு ஒருநாள் பக்தர்கள் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு பகுதியில் கீர்த்தனை செய்துவிட்டு கோயிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் பெட்ரோலுக்காக பெட்ரோல் பங்க் ஒன்றில் வண்டியை நிறுத்தினார்கள், பங்க் ஊழியர் பெட்ரோலுக்கான தொகையை பெற்றுக்கொள்ள கார் ஜன்னல் அருகில் வந்தபோது காரில் இருந்த பக்தர்களில் ஒருவர் அவரிடம் கிருஷ்ணர் புத்தகத்தைக் காட்டினார். புத்தகத்தைப் பார்த்த அந்த ஊழியரின் முகத்தில் ஈடுபாடு தெரிவதைப் பார்த்த பக்தர்கள் அந்த ஊழியருக்கு கிருஷ்ண உணர்வு பற்றி போதிக்க ஆரம்பித்தார்கள், சிறிது நேரம் போதித்தப்பின் பெட்ரோலுக்கு பணத்திற்கு பதிலாக புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்கள் அந்த ஊழியரைக் கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு உடனே ஒப்புக் கொண்டார். இந்நிகழ்ச்சி புத்தக விநியோகத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பக்தர்கள் பரவலாக விநியோகம் செய்யத் தொடங்கினர். கோடிக்கணக்கான நூல்கள் விநியோகிக்கப்பட்டன, இன்றும் இஸ்கான் பக்தர்களின் ஒரு முக்கியப் பணியாக புத்தக விநியோகம் இருந்து வருகிறது.
பேக் டு காட்ஹெட் என்ற பத்திரிகையை விநியோகம் செய்யும் சேவையில் ஸ்ரீல பிரபுபாதர்.
புத்தக விநியோகத்தின் முக்கியத்துவம்
இவ்வுலகிலுள்ள இதர புத்தகங்கள் அனைத்தையும் நீக்கி அவ்விடங்களை ஆன்மீகமான கிருஷ்ண உணர்வு புத்தகங்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பது ஸ்ரீல பிரபுபாதரின் ஆசை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு கிருஷ்ண உணர்வு புத்தகமாவது இருக்க வேண்டும். ஏன் என்றால் ஒருவர் இந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தைப் படித்தாலே போதும், அவரது வாழ்க்கைப் பாதை கிருஷ்ணரை நோக்கித் திரும்பிவிடும். இந்த புத்தகங்களைப் படிப்பவர்களில் ஒரு சதவீதம் பேராவது முழுமையான பக்தரானால் போதும், இந்த உலகமே மாறிவிடும் என ஸ்ரீல பிரபுபாதர் கூறியிருக்கிறார்.
மாயையின் அறியாமை என்னும் மாபெரும் படைகளைத் தோற்கடிக்க நம்மிடம் இருக்கும் ஆயுதங்களே இந்தப் புத்தகங்களும் பத்திரிகைகளும். இவற்றை எந்த அளவிற்கு அதிகமாக அச்சடித்து அதிகமான பேருக்கு விநியோகம் செய்கிறோமோ, அந்த அளவிற்கு இந்த உலகத்தின் போக்கை நம்மால் மாற்ற முடியும் என ஸ்ரீல பிரபுபாதர் சொல்லியிருக்கிறார். எனவே, நாமும் ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களை தொடர்ந்து விநியோகம் செய்வதில் ஈடுபடுவோமாக. அதிலும் குறிப்பாக, இந்த டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தொடர் புத்தக விநியோகத்தில் நமது பங்கினை நாம் நிலைநாட்ட முயல்வோமாக. இந்த புத்தகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை, யாரெல்லாம் இவற்றைப் படிக்கிறார்களோ அவர்கள் பக்தர்களாவது நிச்சயம். ஆகையால், புத்தகங்களை விநியோகம் செய்வது மதிப்புமிக்க சேவை.
பக்தியின் ஆரம்ப நிலையிலுள்ள நம்மைப் போன்ற நபர்கள் நமக்குத் தெரிந்த துளியளவு சித்தாந்தங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும், ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை விநியோகித்து அவர்களை பக்தித் தொண்டில் ஈடுபடுத்த முயல்வோம். ஸ்ரீல பிரபுபாதர்: “உனது இரண்டு நிமிட பிரச்சாரத்தால் என்ன பலன்? அவர் கேட்பார், பிறகு சென்று விடுவார். ஆனால், அவர் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் நித்தியமான பலனை அடைவார்.” மேலும், “நமது மிக முக்கியமான செயல் புத்தகங்களை விநியோகிப்பதே, இதில் எந்த சந்தேகமும் இல்லை. கோயில் என்பது உண்பதற்கும் உறங்குவதற்குமான இடமல்ல. இது மாயைக்கு எதிராக போரிடுவதற்கு நமது போர்வீரர்களை அனுப்பும் தளம். மாயையுடன் போர்புரிவது என்றால் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான புத்தகங்களை கட்டுண்ட ஆத்மாக்களின் மடியில் சேர்ப்பதாகும். இது போரின்போது வானிலிருந்து மழைபோன்று குண்டுகள் விழுவதைப் போன்றதாகும்.”
புத்தகங்கள்தான் அடிப்படை
ஸ்ரீல பிரபுபாதர் தனது சிஷ்யர்களுக்கு கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் புத்தக விநியோகத்தின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
“ஸ்ரீமத் பாகவதத்தைப் போன்றதொரு இலக்கியம் பிரபஞ்சத்தில் இல்லை. இதற்கு இணையாகவோ போட்டியாகவோ எதுவும் இல்லை. இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மனித குலத்திற்கு நன்மையளிப்பவை. எவ்வாறாயினும் ஒருவரது கைகளுக்கு புத்தகம் சென்றதென்றால் அவர் பயனடைவார். எனவேதான் நான் வலியுறுத்திக் கூறுகிறேன், ’தயவுசெய்து புத்தகங்களை விநியோகம் செய்யுங்கள், புத்தகங்களை விநியோகம் செய்யுங்கள், புத்தகங்களை விநியோகம் செய்யுங்கள்.”
“நாம் நாமத்தைப் பாடுகிறோம், மிருதங்கத்தை வாசிக்கிறோம். இது இந்த சபைக்குள் மட்டும், அல்லது சற்று வெளியே கேட்கும். ஆனால் இந்த மிருதங்கம் (எனது புத்தகங்கள்) வீட்டிற்கு வீடு, நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம் செல்லும். மிருதங்கம் மற்றும் கரதாளங்களுடன் பாடுவது கீர்த்தனை, அதுபோல புத்தகங்களை விநியோகிப்பதும் கீர்த்தனையே.”
“புத்தக விநியோகமும் கீர்த்தனையே. இந்த புத்தகங்கள் என்னால் பேசப்பட்டு பதிவு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன. எனவே, புத்தக விநியோகமும் கீர்த்தனையே. இவை சாதாரண புத்தகங்கள் அல்ல. யாரெல்லாம் படிக்கிறார்களோ, அவர்கள் கேட்கிறார்கள். எனவே, புத்தக விநியோகம் புறக்கணிக்கப்படக் கூடாது.”
“நமது பிரச்சாரத்தின் வெற்றி நாம் எவ்வளவு புத்தகங்களை விநியோகித்துள்ளோம் என்பதில் தெரியும். அதிகமான புத்தகங்களை விநியோகிப்பதே நமது கலை, பொதுமக்களை கோபமூட்டுவதல்ல.”
“புத்தக விநியோகத்தைப் பற்றிய அறிக்கை கிடைக்கும்போதெல்லாம் நான் வலிமை பெறுவதாக உணர்கின்றேன்.”
“புத்தக விநியோகமென்பது பாகவத மார்க்கம், கோயில் வழிபாடு என்பது பஞ்சராத்ர மார்க்கம். இரண்டுமே வைஷ்ணவ தர்மத்தை வளர்ப்பதற்கு அவசியம். ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பாகவத மார்க்கம் என்பது பஞ்சராத்ர மார்க்கத்தை விட முக்கியமானது. முடிந்தவரை இவை இரண்டும் இணையாகச் செல்ல வேண்டும். இருப்பினும், பாகவத மார்க்கமானது மற்றதைக் காட்டிலும் முக்கியமானது.”
ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பரவலாக விநியோகம் செய்யும் பக்தர்.
நாமும் புத்தக விநியோகத்தில் ஈடுபடுவோம்
ஸ்ரீல பிரபுபாதரைத் திருப்திப்படுத்துவதற்கான மிக எளிமையான வழிமுறை அவருடைய புத்தகங்களை விநியோகிப்பதாகும். புத்தக விநியோகத்துடன் இணைந்து, அந்த புத்தகங்களை பக்தர்களும் ஆழ்ந்து படிக்க வேண்டும். ஆழ்ந்து படித்தால் மட்டும் போதாது, அதிலுள்ள கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவோ பேச்சாகவோ வெளிப்படுத்த பழக வேண்டும்.
இன்று இஸ்கான் சமூகத்தில் இருக்கும் பக்தர்களில் பெரும்பாலானோர் கோயில்களில் வசிப்பவர்கள் அல்ல, வெளியே வேலை பார்த்துக் கொண்டே கிருஷ்ண பக்தியை இல்லத்தில் இருந்தபடி பயிற்சி செய்பவர்கள். இதனால், அவர்களால் முழுநேர பக்தர்களைப் போன்று புத்தக விநியோகத்தில் ஈடுபட முடிவதில்லை. இருப்பினும், அவர்கள்கூட அவ்வப்போது (குறைந்தபட்சம் வார இறுதி நாள்களில்) வெளியே சென்று, புத்தக விநியோகத்தில் ஈடுபட வேண்டும். டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தொடர் புத்தக விநியோகத்தில் அனைவரும் தீவிரமாக பங்குகொள்ள வேண்டும். டிசம்பரில் மட்டுமல்ல, ஆண்டின் 365 நாளும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட வேண்டும், அதற்கு பக்தர்கள் பழக வேண்டும். இதுவே நமது உண்மையான தொழில் என ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார். இந்த இருள் சூழ்ந்த யுகத்தில் மக்களுக்கு கிருஷ்ண பக்தியெனும் ஒளியைக் கொடுப்பதற்காக பிரகாசமான சூரியனைப் போன்று தோன்றியுள்ள ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களை அனைவருக்கும் வழங்குவோம். ஸ்ரீல பிரபுபாதரின் கருணையைப் பெறுவோம்.
துப்பாக்கி குண்டு பல மக்களைக் கொல்லும், ஆனால் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகம் என்ற குண்டு பல மக்களை மாயையிலிருந்து காக்கும்.