தலை வணங்குதல்
கீழ்ப்படிந்து தலை வணங்கி நாம் வாழ்கிறோமா என்பது குறித்து
ஸ்ரீல பிரபுபாதரும் விருந்தினர் ஒருவரும் உரையாடுகின்றனர்.
விருந்தினர்: கீழ்ப்படிதல் என்பது குறித்து விவரிக்க இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: கீழ்ப்படிதல். ஆம், அஃது எளிமையானது. எல்லாரும் யாருக்காவது கீழ்ப்படிந்துதான் வாழ வேண்டும். நீங்கள் யாரிடமும் கீழ்ப்படிவதில்லையா?
விருந்தினர்: உலக வாழ்வில் கூற வேண்டுமெனில், ஆம், கீழ்ப்படிந்துதான் இருக்கின்றேன். ஆனால் ஆன்மீக ரீதியில் நான் யாரிடமும் கீழ்ப்படிந்திருப்பதாக எண்ணவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக வாழ்க்கை குறித்து நீங்கள் அறியும்போது, ஆன்மீக ரீதியாகவும் நீங்கள் கீழ்ப்படிந்திருப்பதை உணர்வீர்கள். ஏனெனில், உமது இயற்கை கீழ்ப்படிந்திருத்தலாகும். ஆன்மீகம், உலக வாழ்க்கை என்பதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?
விருந்தினர்: உலக வாழ்வில் நான் வேலை செய்யும் இடத்தில் எனது முதலாளியிடம் கீழ்ப்படிந்துள்ளேன். ஆனால், ஆன்மீக நிலையில் எனது முதலாளியிடமோ மற்ற யாரிடமோ நான் கீழ்ப்படிந்திருப்பதாக எண்ண வில்லை. யாரும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எண்ணவும் இல்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் ஏன் கீழ்ப்படிந்திருக்க விரும்பவில்லை?
விருந்தினர்: ஏனெனில், நான் யாரிடமும் கடன்பட்டிருப்பதாக எண்ணவில்லை. யாரும் எனக்குக் கடன்பட்டிருப்பதாகவும் எண்ணவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே உலக வாழ்வின் நோயாகும். நாம் கீழ்ப்படிவதற்கு வற்புறுத்தப்படுகிறோம், இருப்பினும் யாருக்கும் கீழ்ப்படிய தேவையில்லை என நினைக்கிறோம். இதுவே நோயாகும்.
விருந்தினர்: கீழ்ப்படியச் சொல்லி யாரும் என்னை வற்புறுத்த இயலாது.
ஸ்ரீல பிரபுபாதர்: புரிந்துகொள்வதற்கு முயலுங்கள், யாருக்கும் அடிபணிய விரும்பவில்லை என்று கூறினீர்கள்ஶீசரிதானே?
விருந்தினர்: ஆமாம். உண்மை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏன்?
விருந்தினர்: ஏனெனில், யாரை விடவும் நான் என்னைக் கீழானவனாகக் கருதவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே பௌதிக வாழ்வின் நோயாகும். உங்களது வியாதியை நீங்களே கண்டறிந்துவிட்டீர்கள். நான் தலைவனாக இருக்கவே விரும்புகிறேன், யாரிடமும் அடிபணிய விரும்பவில்லை” என்றே அனைவரும் நினைக்கின்றனர். இஃது உங்களது நோய் மட்டுமல்ல, அனைவரும் இந்த நோயுற்ற மனோநிலையைக் கொண்டுள்ளனர். அனைவரும் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்: நான் ஏன் அடிபணிய வேண்டும்? எதற்காக கீழ்ப்படிய வேண்டும்?” ஆனால், இயற்கை என்னைக் கீழ்ப்படிய வற்புறுத்துகிறது. எதற்காக மக்கள் இறக்கின்றனர். இக்கேள்விக்கு உங்களால் பதிலளிக்க இயலுமா?
விருந்தினர்: மக்கள் எதற்காக இறக்கின்றனரா? (கேள்வி புரியவில்லை)
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், யாரும் இறப்பதற்கு விரும்புவதில்லை. இருந்தும் எதற்காக அனைவரும் இறக்கின்றனர்? காரணம் என்ன?
விருந்தினர்: இறப்பு என்பது உயிரியல் ரீதியாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஸ்ரீல பிரபுபாதர்: அதாவது, அடிபணியும்படி நீங்கள் உயிரியல் ரீதியாக வற்புறுத்தப்படுகிறீர்கள். அப்படியெனில், சுதந்திரமானவன் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்?
விருந்தினர்: நான் என்னைச் சுதந்திரமானவன் என்றே எண்ணுகிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: உங்களது எண்ணம் தவறானது என்றே நான் கூறுகிறேன். நீங்கள் கீழ்ப்படிந்தவர். நீங்கள் உயிரியல் சக்திக்கு அடிபணிந்துதான் ஆக வேண்டும். இறப்பு வரும்பொழுது, நான் உனக்கு அடிபணிய மாட்டேன்” என்று உங்களால் கூற முடியாது. எனவே, நீங்கள் கீழ்ப்படிந்தவரே.
விருந்தினர்: ஆமாம், நான் கடவுளுக்குக் கீழ்படிந்தவன்.
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, கடவுளை விடுங்கள். அவரைப் பற்றி நாம் தற்போது பேசவில்லை. நாம் பௌதிக உலகின் இயற்கையைப் பற்றி பேசிக் கொண்டுள்ளோம். இதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் இறப்பதற்கு விரும்பவில்லை, ஆனால் இறப்பதற்கு வற்புறுத்தப்படுகிறீர்கள். எனவே, நீங்கள் கீழ்ப்படிந்தவர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
விருந்தினர்: நீங்கள் சொல்வது நியாயமாகத் தோன்றுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: கீழ்ப்படிந்தவன் எனும் உங்களது நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களால், நான் சுதந்திரமானவன், கீழ்ப்படிந்தவனல்ல”என்று அறிவிக்க இயலாது. நீங்கள் கீழ்ப்படிய விரும்பவில்லை, அடிபணிவதற்கு விரும்பவில்லை என்றால் நோயுற்று இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
விருந்தினர்: சரி, யாருக்கு அடிபணிய வேண்டும்?
ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் உங்களது நோயைப் புரிந்துகொள்ளுங்கள், பிறகு அதற்கான மருந்தை பரிந்துரைக்கிறேன். நீங்கள் இறப்பின் முன் மண்டியிடுகிறீர்கள், வியாதி, முதுமை முதலிய பல விஷயங்களுக்குக் கீழ்ப்படிகிறீர்கள், கீழ்ப்படிய வற்புறுத்தப்படுகிறீர்கள். ஆனால் நீங்கள், நான் மண்டியிட மாட்டேன், கீழ்ப்பணிய மாட்டேன்” என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும். நீங்கள் ஏன் உங்களது நிலையை மறந்துவிடுகிறீர்கள்? இந்த மறதியே உங்களது நோயாகும்.
அடுத்த நிலை, நீங்கள் அடிபணிய வற்புறுத்தப்படுகிறீர்கள் எனும்போது, யாரிடம் அடிபணிந்தால் மகிழ்வுடன் இருக்க முடியும் என்பதை அறிய வேண்டும். அவரே பகவான் கிருஷ்ணர். உங்களது அடிபணிதல் என்னும் நிலை மாறாது. ஏனெனில், நீங்கள் அதற்கானவர்தான். ஆனால் நீங்கள் கிருஷ்ணரிடமோ கிருஷ்ணரது பிரதிநிதியிடமோ அடிபணிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். அதுவே வித்தியாசம். நீங்கள் கிருஷ்ணரிடமும் அவரது பிரதிநிதியிடமும் அடிபணிய மறுத்தால், கிருஷ்ணரது இயற்கையான மாயையிடம் அடிபணிய வற்புறுத்தப்படுவீர்கள். இதுவே உங்களது நிலை. நீங்கள் எந்நேரத்திலும் சுதந்திரமானவராக இருக்கவியலாது.
ஆனால், கிருஷ்ணரிடமும் அவரது பிரதிநிதியிடமும் அடிபணியும்போது நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உதாரணமாக, பெற்றோர்களிடம் எப்போதும் அடிபணிந்துள்ள குழந்தை மகிழ்ச்சியுடன் இருக்கிறது. குழந்தாய், இங்கே வா, வந்து அமர்ந்துகொள்,” என்று அம்மா கூற, குழந்தையும் சரி” என்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே தாயின் உறவிலுள்ள குழந்தையின் இயற்கை நிலையாகும். அதுபோலவே கிருஷ்ணரும் அவரது பிரதிநிதியும் அன்பான பெற்றோரைப் போன்றவர்கள், நாம் உதவியற்ற நிலையில் மாயையின் பிடியில் இருக்கின்றோம். ஆனால் அவர்களுக்கு அடிபணியும்போது மகிழ்ச்சியடைய இயலும்.
ஆகவே, அடிபணிவதை உங்களால் நிறுத்தவியலாது. அது சாத்தியமில்லை. ஆனால், அடிபணிவதற்குத் தகுந்த நபரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன், நான் சுதந்திரமானவன்” என்று நீங்கள் செயற்கையாக நினைத்தால், அப்போது துன்புறுவீர்கள். சரியான நபரிடம்ஶீகிருஷ்ணர் அல்லது அவரது பிரதிநிதியிடம் நீங்கள் அடிபணிய வேண்டும்.