உண்மையான குருவையும் போலியான குருவையும் உணர்வதற்கான கலை
வழங்கியவர்: திரு. ஸந்தான கிருஷ்ண தாஸ்
இன்றைய உலகில், ஆடை முதல் அரசியல் வரை அனைத்திலும் ஊடகங்களின் பங்கு அலாதியாக உள்ளது. விளம்பரம் செய்தால் போதும், எதை வேண்டுமானாலும் விற்றுவிடலாம்; மக்கள்தான் மூடர்களாயிற்றே, அவர்கள் யோசிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், அனைத்தையும் விளம்பரப்படுத்தி, ஆசை காட்டி ஆவலை உருவாக்கி பாக்கெட்டுகளை பதம் பார்க்கின்றன இன்றைய ஊடகங்கள்.
போலி குருமார்களின் வளர்ச்சி
விளம்பரங்களின் தாக்கம் ஆன்மீகத்திலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன; விளம்பரம் இல்லாத காலத்தில் சின்னஞ்சிறு போலி சாமியார்களாக ஏதேனும் ஓரிடத்தில் மக்களை ஏமாற்றியவர்கள் இன்று, விளம்பரங்களின் மூலமாக பெரிய அளவில் ஏமாற்றத் தொடங்கியுள்ளனர். ஆன்மீகத்தில் ஆர்வமுள்ள மக்களையும் தங்களது தொலைக்காட்சி அல்லது பத்திரிகையின் பக்கம் இழுத்து, தங்களின் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் ஊடகங்கள், இதிலும் பெரும் போட்டியில் ஈடுபடுகின்றன. சக்தி மிக்க ஊடகங்கள் சிறிய அளவிலான நபர்களைத் தங்களது நிகழ்ச்சிகளின் வாயிலாக பிரபலப்படுத்துகின்றன, ஊரெங்கும் பேனர் வைத்து அவர்களின் புகழைப் பெறுகின்றனர். புகழின் உச்சாணிக்கு செல்லும்போது, இவர்கள் அனைத்தையும் மறந்துவிடுகின்றனர்.
முறையான குருவிற்கான சிறிதளவு தகுதிகளையும் இல்லாத இவர்கள், விளம்பர உத்திகளின் மூலமாக பிரபலமடைந்து மக்களை வசதியாக ஏமாற்றுகின்றனர். காலில் விழுவதற்கு ரூ. 10,000, கட்டிப் பிடிப்பதற்கு ரூ. 50,000, வீட்டிற்கு வருவதற்கு ஒரு இலட்சம், தீக்ஷை அளிப்பதற்கு ஐந்து இலட்சம் என்றெல்லாம் ஆன்மீகத்தைப் பட்டியல்போட்டு விளம்பரப்படுத்தி சொகுசாக வாழ்கின்றனர்.
இவர்களில் சிலர் ஏதேனும் தகாத காரியங்களினால் வசமாக சிக்கிக்கொள்ளும்போது, அவர்களது சீடர்களும் அவர்களைப் பின்பற்றிய பொதுமக்களும் பெரிய அளவில் வருத்தப்படுகின்றனர். அவர்களது பெரிய படங்களை வீடுகளிலும் அலுவலகங்களிலும் வைத்திருந்தவர்கள் வெட்கத்தினால் கூனி குறுகுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற போலிகளைப் பெரிதுபடுத்தி இலாபம் பார்த்த ஊடகங்கள், அவர்கள் கையும் களவுமாக அகப்படும்போது, அதை வைத்து மீண்டும் அதிக லாபம் பார்க்கின்றன.
நம் ஊரில் இருக்கும் மக்களோ, காய் வாங்க கடைக்குச் செல்லும்போது கத்தரிக்காயை பார்த்துப்பார்த்து வாங்குவதில் காட்டும் முனைப்பில் சிறிதளவைக்கூட, ஆன்மீக குருவினைத் தேர்ந்தெடுப்பதில் காட்டுவதில்லை. எனது மனதிற்கு இவரைப் பிடித்துள்ளது என்பதை மட்டும் வைத்து குருவைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
ஆசிரியரும் ஆன்மீக குருவும்
ஆன்மீக குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, அவரின் தகுதிகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
இன்றைய பாடத்திட்டத்தின்படி, ஆசிரியர் என்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட பாடத்தை, ஒரு குறிப்பிட்ட அளவில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவராக உள்ளார். அவர்கள் எடுத்துரைக்கும் அறிவுரைகளை பெரும்பாலான நேரங்களில் அவர்களே பின்பற்றுவதில்லை. உதாரணமாக, மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களில் எத்தனைபேர் நல்லொழுக்கத்துடன் உள்ளனர்? உண்மை என்னவெனில், நிறைய இடங்களில் மாணவர்களுக்குத் தீய பழக்கங்களைக் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள்தானே!
ஆன்மீக குருவும் ஓர் ஆசிரியரே, ஆனால் அவர் ஆன்மீக விஷயங்களை போதிக்கும் ஆசிரியர். அவர் தனது சீடனுடைய வாழ்வின் குறிக்கோளை நோக்கி அவனுக்கு வழிகாட்டுகிறார், ஒவ்வொரு பிறவியிலும் அவனுக்கு வழிகாட்டுபவராக இருக்கிறார் (ஜென்மே ஜென்மே பிரபு சே). வேத சாஸ்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற அவர், இந்த உலகிற்கு மட்டுமல்லாது மறுமைக்குமான கல்வியை அளிப்பவராக உள்ளார்: “நான் யார்?” “வாழ்வின் குறிக்கோள் என்ன?” “மரணத்திற்கு பின் நிகழப்போவது என்ன?” போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பவராக, பூரண ஞானத்தை நல்குபவராக அவர் இருக்க வேண்டும். தான் சொல்லிக்கொடுப்பதைத் தானும் பின்பற்றுபவராக அவர் இருக்க வேண்டும், தனது சீடர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்தவராகவும் அதற்கு ஏற்ப அறிவுரை வழங்குபவராகவும் அவர் இருக்க வேண்டும்.
குருவின் தகுதிகள்
குரு என்பவர் நமது தற்காலிகமான கஷ்டத்தைத் தீர்த்து வைத்து ஆசியளிப்பவர் அல்ல; பொருளாதார பிரச்சனைகள், மனக் கஷ்டங்கள், உடலிலுள்ள உபாதைகள் போன்றவற்றைத் தீர்க்க பலர் உள்ளனர், குருவின் பணி அவற்றைத் தீர்ப்பது அல்ல. துரதிர்ஷ்டவசமாக மக்கள் இவற்றைத் தீர்ப்பதற்காகவே குருவைத் தேடுகின்றனர், இதை அறிந்துள்ள பல்வேறு நபர்கள் வெறுமனே காவி உடையை அணிந்து கொஞ்சம் தாடியை வளர்த்துகொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர்.
உண்மையான குரு என்பவர், வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தனது சீடர்களுக்கு உதவ வேண்டும். வாழ்வின் உண்மையான பிரச்சனை, மீண்டும் மீண்டும் எழக்கூடிய பிறப்பும் இறப்புமே. மேலும், அவர் வாழ்வின் உண்மையான இன்பத்தை நோக்கி மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். பொருளாதார முன்னேற்றமும் வசதிகளும் நமக்கு உண்மையான இன்பத்தினை வழங்கமாட்டா. உலகின் முன்னேறிய நாடுகளிலும் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. கிருஷ்ணரின் பிரதிநிதியாக செயல்படும் ஆன்மீக குருவின் மூலமாகவும், பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற கிருஷ்ண விஞ்ஞானம் அடங்கிய நூல்களின் மூல மாகவும், நாம் உலகினை அணுகினால் மட்டுமே நம்மால் உண்மையான இன்பத்தை அடைய முடியும்.
ஸ்ரீ ஸம்பிரதாயத்தின் பெரும் ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனது உபதேச ரத்னமாலையில் (61) பின்வருமாறு கூறுகிறார்:
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்
அதாவது, ஞானமும் அனுஷ்டானமும் (வேத அறிவும் முறையான நடத்தையும்) கொண்ட குருவை நாம் அடைந்த மாத்திரத்தில், திருமாமகள் கேள்வனான ஸ்ரீவைகுண்டநாதன், ஸ்ரீவைகுண்டத்தை தானாகவே தந்துவிடுகிறார் என்கிறார்.
நூறு சதவீதம் கிருஷ்ண உணர்வில் இருப்பவரே அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவாவார்; ஏனெனில், அவரால் மட்டுமே வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்க முடியும். ஜாதி, மதம், இனம் போன்ற சமுதாய நிலைகள் எப்படி இருப்பினும், கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தில் வல்லுநராக இருப்பவர், அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குரு என்று பகவான் சைதன்யர் கூறியுள்ளார்:
கிபா விப்ர, கிபா ந்யாஸீ, ஷூத்ர கேனே நய
யேய் க்ருஷ்ண–தத்த்வ–வேத்தா, ஸேய் குரு ஹய
“ஒருவர் வேத ஞானத்தைக் கற்றறிந்த பண்டிதரா, தாழ்ந்த குலத்தில் பிறந்தவரா, சந்நியாசியா என்பது பொருட்டல்ல; கிருஷ்ணரைப் பற்றிய தத்துவத்தில் அவர் வல்லுநராக இருந்தால், அவரே தகுதிபெற்ற ஆன்மீக குருவாவார்.” (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை, 8.128)
எனவே, கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தில் வல்லுநராக ஆகாமல், எவரும் அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவாக இருக்க முடியாது. வேத இலக்கியங்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஷத் கர்ம–நிபுணோ விப்ரோ மந்த்ர–தந்த்ர–விஷாரத:
அவைஷ்ணவோ குரூர் ந ஸ்யாத் வைஷ்ணவ: ஷ்வ–பசோ குரு:
“வேத ஞானத்தின் அனைத்து விஷயங்களில் நிபுணனாகத் திகழும் கற்றறிந்த பிராமணன், வைஷ்ணவனாக இல்லாவிடில் (கிருஷ்ண உணர்வு பற்றிய தத்துவத்தை அறியாவிடில்), அவன் குருவாகத் தகுதியற்றவன். கிருஷ்ண உணர்வுடன் வைஷ்ணவனாக இருப்பவன், இழிகுலத்தில் பிறந்திருந்தாலும் ஆன்மீக குருவாகலாம்.”
உண்மையான அறிவைப் பெற விரும்புவோர், முறையான குரு சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியரை குருவாக ஏற்க வேண்டும் (பார்க்க, பகவத் கீதை உண்மையுருவில் (4.2). வெறுமனே வேதங்களைப் படித்துத் தனது சுய புத்தியைக் கொண்டு விளக்கமளிப்பவரை அணுகாமல், எந்தவொரு குரு வேறொரு குருவிடம் சீடனாக இருந்து அறிவைப் பயின்றாரோ, அவரை அணுக வேண்டும். அந்த பரம்பரையானது இறுதியில் பகவான் கிருஷ்ணரிடம் முடியக்கூடியதாக இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று தலைமுறை மட்டும் கொண்டதாக இருக்கக் கூடாது.
மேலும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது உபதேசாமிருதத்தில் (1), குரு என்பவர், பேச்சு, மனம், கோபம், நாக்கு, வயிறு, பாலுறுப்பு ஆகியவற்றின் தூண்டுதல்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆறு விஷயங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவர், கோஸ்வாமி, ஸ்வாமி, அல்லது சாமியார் என்று அழைக்கப்படத் தகுதி வாய்ந்தவராவார்; வெறுமனே காவி உடையுடுத்தி தாடி வளர்த்தவர் அல்ல.
இவ்வாறாக, குரு என்பவர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்: (1) முறையான சீடப் பரம்பரையில் வந்திருக்க வேண்டும், (2) சீடனின் அறியாமையை அழித்து ஆன்மீக ஞானத்தை அளிப்பவராக இருக்க வேண்டும், (3) ஆறு உந்துதல்களைக் கட்டுப்படுத்தக்கூடியவராக இருக்க வேண்டும், (4) சீடனை வாழ்வின் உண்மையான பிரச்சனையில் வழிகாட்டுபவராக இருக்க வேண்டும், (5) தான் சொல்லிக் கொடுப்பதைத் தானும் பின்பற்றுபவராக இருக்க வேண்டும், மற்றும் (6) எந்த சமூகப் பிரிவைச் சார்ந்தவராக இருந்தாலும், சீடனுக்கு கிருஷ்ண விஞ்ஞானத்தை அளிப்பவராக இருக்க வேண்டும்.
அவசியமற்ற தகுதிகள்
சில நேரங்களில், பௌதிகக் கல்வியளிக்கும் ஆசிரியரையும் மக்கள் குரு என்று கருதுவதைக் காண்கிறோம், இதற்கும் ஒருபடி மேலே சென்று, யோகா என்ற பெயரில் உடற்பயிற்சிகளை கற்றுத் தருபவரையும் குரு என்றழைப்பதைக் காண முடிகிறது.
தன்னுடைய குரு சந்நியாசியாக இருக்க வேண்டும், பெரிய தாடி வைத்திருக்க வேண்டும், பல்வேறு சீடர்களைக் கொண்டிருக்க வேண்டும், தன்னைவிட வயதில் மூத்தவராக இருக்கவேண்டும், உயர்ந்த பிராமண குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் விரும்புவதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால், இவற்றை முறியடிக்கும் விதமாக, வேதகாலத்திலும் பிற்காலத்திலும் பல்வேறு உதாரணங்களை ஆச்சாரியர்களின் வாழ்வில் நாம் காண்கிறோம்.
சுகதேவ கோஸ்வாமி தனது சீடரான பரீக்ஷித் மகாராஜரைவிட வயதில் இளையவர். சூத கோஸ்வாமி பிராமண குடும்பத்தில் பிறந்தவர் அல்ல, ஆனால் நைமிஷாரண்யத்தில் பாகவதத்தை உபதேசிக்கும் அளவிற்குத் தகுதிவாய்ந்தவராக இருந்தார்.
திருப்பாணாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர், மதுரகவியாழ்வார் தன்னுடைய குருவான நம்மாழ்வாரைவிட வயதில் மூத்தவர். பணிவிற்குப் பெயர்பெற்ற கூரத்தாழ்வார் தன்னுடைய குருவான இராமானுஜாசாரியரைவிட வயதில் மூத்தவர். புரந்தர தாஸரும் கனக தாஸரும் உயர்குடியில் பிறந்தவர்கள் அல்ல.
முஸ்லீம் குடும்பத்தில் பிறந்திருந்த ஸ்ரீல ஹரிதாஸ் தாகூர், முஸ்லீம்களிடம் வேலை பார்த்ததால் ஜாதியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி என பலரையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆன்மீக குருமார்களாக உயர்த்தினார்.
இக்கொள்கைகளைப் பின்பற்றிய ஸ்ரீல பிரபுபாதரும், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளிலிருந்து, எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய பல்வேறு ஆன்மீக தலைவர்களை உருவாக்கினார். எனவே, வயது, பிறப்பு போன்ற பௌதிக விஷயங்கள் குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான தடைகள் அல்ல.
நான்கு வகையான குருமார்கள்
சாஸ்திரங்களின்படி நான்கு வகையான குருமார்கள் உள்ளனர்: (1) சைத்ய-குரு, (2) வர்தமபிரதர்ஷக-குரு, (3) தீக்ஷா-குரு, மற்றும் (4) சிக்ஷா-குரு.
சைத்ய-குரு என்பவர் எல்லாரின் இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மா ஆவார், அவரே ஆன்மீகத் தேடல்களுக்கான தூண்டுதலைக் கொடுக்கிறார். வர்தமபிரதர்ஷக-குரு என்பவர், பக்திப் பாதையை முதன்முதலில் காட்டுபவர்.
தீக்ஷா-குரு அல்லது மந்திர-குரு எனப்படுபவர், சீடனுக்கு தீக்ஷை வழங்கி, புனிதமான மந்திரங்களை அளிப்பவர். நான்காவது வகையான ஷிக்ஷா-குரு அல்லது போதனைகளை வழங்கும் ஆன்மீக குரு என்பவர், பக்திப் பாதையில் விரிவான வழிகாட்டுதலை வழங்குபவர். சில நேரங்களில், தீக்ஷா-குருவும் சிக்ஷா-குருவும் ஒரே வைஷ்ணவராக இருக்கலாம்.
போலி குருக்களை அடையாளம் காணுதல்
இதுவரை வழங்கப்பட்டுள்ள உண்மையான குருவின் அடையாளங்களை வைத்து, போலியான குருக்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அந்த தகுதிகள் இல்லாத குரு, போலி குரு என்று அறியப்பட வேண்டும்.
கலி யுகத்தின் தாக்கத்தினால் மந்த புத்தியில் இருக்கும் மக்கள், முன்னரே கூறப்பட்டதுபோல, கத்திரிக்காய் வாங்குவதில் யோசிக்கும் அளவிற்குக்கூட குருவின் விஷயத்தில் யோசிப்பதில்லை. ஏதேனும் ஒரு மாய வித்தையைக் காட்டுபவரை குருவாக ஏற்கக்கூடிய (ஏன் கடவுளாகவே ஏற்கக்கூடிய) நபர்கள் பலர் உள்ளனர். விறகை எரித்தால் வரும் சாம்பலை திடீரென்று கையில் கொண்டு வருபவரைக் கடவுள் என்று நினைக்கின்றனர். சில சித்திகளின் மூலமாக, நோயை குணப்படுத்தினால், அவர் குருவாக அல்லது கடவுளாக மாறி விடுகிறார். மீண்டும் என்றென்றும் நோய் என்பதே வராமல் இருக்குமா, மரணம் வராமல் இருக்குமா என்பதையெல்லாம் மக்கள் யோசிப்பதில்லை.
தற்காலிக விஷயங்களைக் காட்டி மக்களைக் கவருபவர்கள் போலியானவர்களாக அடையாளம் காணப்பட வேண்டியவர்கள். கிருஷ்ணர் பகவத் கீதையில் வழங்கும் உபதேசங்களை பகவத் கீதை உண்மையுருவில் நூலைக் கொண்டு படிப்பவர்கள், போலி குருமார்களை எளிதில் அடையாளம் காணலாம். உதாரணமாக, கீதையில் கிருஷ்ணர் இந்த உலகம் துன்பமயமானது என்கிறார்; யாரேனும் ஒரு குரு உங்களிடம் இந்த உலகில் நான் உங்களை மகிழ்ச்சியாக புன்சிரிப்புடன் வாழ வைப்பேன் என்று கூறினால், அவர் போலியான குரு என்பதை நாம் உடனே தெரிந்துகொள்ளலாம்.
தன்னால் வழங்கப்படும் கருணைக்காக (உண்மையிலேயே கருணையா!) காசு பணம் வாங்குவோர் நிச்சயம் போலி குருமார்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். விதவிதமான கோணங்களில் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுப்பது, ஆன்மீகவாதிகளுக்கு என்றிருக்கும் அடிப்படை விதிகளைப் பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை உள்ளங்கை நெல்லிக்கனிபோல போலி குருக்களை அடையாளப்படுத்துபவையாகும்.
சில நேரங்களில் தன்னை குருவாக கூறிக்கொள்ளும் சில அயோக்கியர்கள், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதையும் நாம் காண்கிறோம். அவர்களே குருவைப் போல இருந்து கொண்டு, குரு தேவையில்லை, கடவுள் தேவையில்லை, நானும் கடவுள், நீயும் கடவுள் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருப்பர்.
சில குறிப்பிட்ட கோயில்களுக்கு, பலமுறை சென்று வருவதாலேயே, தங்களை குருவாக கூறிக்கொள்பவர்களும் உள்ளனர். இவையாவும் இன்றைய நடைமுறை வாழ்வில் உலவும் போலி குருமார்களை அடையாளம் காண்பதற்கான வழியாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னரே கூறியபடி, உண்மையான ஆன்மீகத்தினை பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படித்து தெரிந்துகொள்பவர்களால் போலி குருக்களை எளிதில் கண்டுகொள்ள முடியும். மேலும், தன்னையறியும் விஞ்ஞானம் என்னும் ஸ்ரீல பிரபுபாதரின் நூலின் இரண்டாவது அத்தியாயம் இதற்கு பேருதவியாக அமையும்.
போலி குருக்களை நிராகரித்தல்
பல நேரங்களில், எந்தவொரு யோசனையும் இல்லாமல் தாங்கள் பின்பற்றத் தொடங்கிய குரு, ஒரு போலி குரு என்பதை அறிந்தும்கூட, மக்கள் அவர்களை விட்டு வெளியேறுவதற்குத் தயங்குகின்றனர்; ஆனால் அத்தகைய தயக்கம் தேவையற்றதாகும். அவர்களைக் கைவிடுவதால் பாவம் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர், ஆனால் உண்மையில் அவர்களைக் கைவிடுவதால் நீங்கள் பாவ வாழ்விலிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள், போலி குருமார்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தால், அவருடன் சேர்ந்து நாமும் நரகத்திற்குச் செல்வது உறுதி.
ஆன்மீக குருக்களை விட்டு விலகுவதை சாஸ்திரங்கள் எதிர்க்கும்போதிலும், போலி குருக்களை விட்டு நீங்குவதை சாஸ்திரங்கள் எதிர்ப்பதில்லை. ஸ்ரீல ரூப கோஸ்வாமி தனது பக்தி ரஸாம்ருத சிந்துவில் (1.2.101), வேத சாஸ்திரங்களை அலட்சியப்படுத்தி விட்டு செய்யக்கூடிய ஆன்மீகப் பயிற்சியானது சமுதாயத்தில் தேவையற்ற தொந்தரவு என்று கூறியுள்ளார்.
சீடனை பகவானின் லோகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியது குருவின் கடமையாகும். அவரால் அதனைச் செய்ய இயலவில்லையெனில், அவர் குருவாக இருக்கக் கூடாது என்று ஸ்ரீமத் பாகவதம் (5.5.18) கூறுகிறது.
வாமன தேவருக்குக் கொடுத்த வாக்குறுதியை மறுத்துவிடும்படி சுக்ராசாரியர் பலி மகாராஜனுக்கு அறிவுரை கூறினார். தனது குருவின் உத்திரவிற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது பலி மகாராஜனைப் போன்ற நிதான புத்தியுடையவர்களின் கடமையாகும். இருப்பினும், ஆன்மீக குருவின் கடமையிலிருந்து சுக்ராசாரியர் விலகிச் சென்றிருந்த காரணத்தினால், பலி மகாராஜன் அவரை உடனடியாக நிராகரித்தார். ஆகவே, தவறான முறையில் நடந்து கொள்பவர்களையும் போலி குருமார்களாக இருப்பவர்களையும், ஒருவன் சற்றும் யோசிக்காமல் துறந்து விட வேண்டும்.
பின்வரும் கூற்றினை நாம் மஹாபாரதத்தில் (உத்யோக பர்வம், 179.25) காண்கிறோம்:
குரோர் அப்யவலிப்தஸ்ய கார்யாகார்யம் அஜானத:
உத்பத–ப்ரதிபன்னஸ்ய பரித்யாகோ விதீயதே
“பௌதிக இன்பத்திலும் வசதிகளிலும் வாழ்ந்து கொண்டு, மனித வாழ்வின் குறிக்கோளைப் பற்றி குழம்பிய நிலையில் இருந்து கொண்டு, பக்தித் தொண்டில் ஈடுபடாமல், தன்னை குருவாக கூறிக்கொள்ளும் ஏமாற்றுக்காரர் நிராகரிக்கப்பட வேண்டியவர்.”
ஆன்மீகம் என்பது, ஏதோ நம் மனதில் தோன்றிய கற்பனைகளை வெளிக்காட்டும் மூட நம்பிக்கையாக அல்லாமல், குரு, சாது, மற்றும் சாஸ்திரத்தை அடிப்படையாக ஏற்று பின்பற்றப்பட வேண்டும். அதுவே போலி குருமார்களை ஒழிப்பதற்கான இறுதி தீர்வாக அமையும். மக்கள் இவற்றை உணராத வரை, ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் வையம் உள்ளவரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
நாம் செய்யவேண்டிய செயல்
தங்கம் வாங்க கடைத்தெருவிற்குச் செல்பவன் தங்கத்தைப் பற்றி அறியாதவனாக இருந்தால், அவன் நிச்சயம் ஏமாற்றப்படுவான். எனவே, கவலைகளை நாம் நன்முறையில் களைய விரும்பினால், அர்ஜுனனைப் போல நாமும் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். அர்ஜுனன் தனது பிரச்சனைக்கு இறுதியான தீர்வினை அடைவதற்காக கிருஷ்ணரை அணுகினான், இதுவே கிருஷ்ண உணர்வின் வழியாகும்.
சுகதேவர், வியாஸர் போன்ற சிறந்த முனிவர்களிடமிருந்து கிருஷ்ண விஞ்ஞானத்தைக் கற்ற சூத கோஸ்வாமி, அதனை நைமிஷாரண்ய முனிவர்களுக்கு, ஸ்ரீமத் பாகவதத்தின் உருவில் வழங்கினார். இதுவே வழிமுறையாகும். நாம் உன்னதமான கிருஷ்ண விஞ்ஞானத்தை அதிகாரிகளிடமிருந்து கற்றறிய வேண்டும்; அதன் பிறகு, அதை பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போது, நாம் அதிக தகுதிகளை அடைகிறோம். முறையான குரு சீடப் பரம்பரையில் வரும் உண்மையான குருவினைத் தேர்ந்தெடுத்து அவருக்கு சேவை செய்பவர்கள், ஆன்மீக வாழ்வின் பக்குவத்தினை அடைய முடியும்.
வீட்டு உபயோகப் பொருட்களில் ஐ.எஸ்.ஐ., அக்மார்க் முத்திரைகள் உள்ளனவா என பார்த்து வாங்கும் நாம், ஆன்மீக விஷயங்களில் சாஸ்திரங்களின் அங்கீகாரத்தினைப் பார்க்காமலேயே குருவை அணுகுதல் சரியா? உயர்ந்த கட்டிடத்தினைத் தாங்கும் தூண்கள் மிகவும் வலுவுள்ளதாகவும் நேராகவும் இருக்கவேண்டும்; அவை பலமிழந்தோ வளைந்தோ இருப்பின், கட்டிடம் வீழ்ச்சியடையும். அதுபோல, ஆன்மீகம் என்பது மிகவும் பாரமான விஷயம் என்பதால், இதனைத் தாங்கக்கூடிய நபர் மிகவும் சக்தி மிக்கவராகவும் நேர்மையானவராகவும் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள பிரச்சாரகர்களை உலகம் முழுவதிலும் அனுப்பி, கெட்டுப்போயுள்ள உலகச் சூழ்நிலையை சீர்படுத்துவது இந்தியர்களின் முக்கிய கடமையாகும். ஆனால் இன்றோ, இந்தியாவிலிருந்துதான் போலி குருமார்கள் உருவெடுக்கின்றனர். இந்த நிலையினைப் போக்க, உண்மையான சீடனாக இருப்போம், பிற்காலத்தில் உண்மையான குருவாகி பிரச்சாரம் செய்வோம். போலிகளைக் கண்டு ஏமாறாமல் வாழ்வோமாக.