கோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கோயில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டலாமே என்று அவ்வப்போது சிலர் கருத்து கூறுவர். இந்த வாதம் சமீபத்தில் ஊடகங்களில் (குறிப்பாக சமூக வலைத்தளங்களில்) அதிகமாக விவாதிக்கப்பட்டது. நாமும் இவற்றைச் சற்று விவாதிப்போமே.

 

இரண்டிற்கும் உள்ள சம்பந்தம்

முதலில் கோயிலுக்கும் மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டுமெனில், முதலில் அவை இரண்டிற்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும். தொடர்பற்ற இரண்டு விஷயங்களை ஒப்பிடுதல் தவறு.

ஏதாவது ஓரிடத்தில் கொசுக்கள் பரவி அதனால் மக்கள் நோயுறும்போது, நோய்க்கு மட்டும் மருந்து கொடுத்து கொசுக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அப்போது, “மருந்து கொடுப்பதில் காட்டும் ஆர்வத்தை கொசுக்களை ஒழிப்பதில் காட்ட வேண்டும்,” என்று ஒப்பிடலாம். புல்லட் ரயிலுக்கு முயற்சி மேற்கொள்ளப்படும்போது, சாதாரண ரயிலின் தரத்தை உயர்த்தலாமே என்று கருத்து தெரிவிக்கலாம். மின்சாதன பொருட்களை இலவசமாகக் கொடுத்தால், முதலில் மின்சாரத்திற்கு வழி கொடுங்கள் என்று கூறலாம். இவை தொடர்புடன் வழங்கப்படும் வாதங்கள். இவ்வாறு ஒரு துறையினுள் ஒப்பீடு செய்தல் என்பது, நன்மை பயக்கும் வாதமாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும்.

அதனை விடுத்து, வாதிட வேண்டும் என்பதற்காக மட்டும் ஏதோ ஒன்றைக் கூறி வாதிட்டால், அஃது அறிவுபூர்வமான வாதமாக அமையாது. உதாரணமாக, வெளியுறவுத் துறையில் இருப்பவர்கள் ஏதோ ஒரு நாட்டினருக்கு இலவச விசா வழங்கினால், இலவச விசாவிற்கு பதிலாக, நட்சத்திர ஓட்டல் கட்டலாம்,” என்று எவரேனும் கருத்துரைத்தால், அவரை நாம் நிச்சயமாக வித்தியாசமாகத்தான் பார்ப்போம். ஏனெனில், இரண்டும் தொடர்பற்றவை, வெவ்வேறு துறையைச் சார்ந்தவை.

அதுபோலவே, கோயிலும் மருத்துவமனையும் இருவேறு துறைகள், தொடர்பற்ற கட்டமைப்புகள். மருத்துவர்கள் அனைவரும் மருத்துவமனையை விற்று விட்டு கோயில் கட்ட வந்து விட்டார்களா என்ன? நாட்டில் மருத்துவமனை கட்டுவதற்கு இடமே கிடைக்கவில்லையா? எதற்காக கோயிலையும் மருத்துவமனையையும் ஒப்பிட வேண்டும்? சம்பந்தமே இல்லாமல், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது நியாயமா?

ஏன் இந்த நாஸ்திக வெறி?

ஒரு சிலர், சம்பந்தம் இருக்கு, இரண்டிற்கும் பணம் செலவிட வேண்டியுள்ளதே. கோயில் கட்டும் பணத்தில் மருத்துவமனை கட்டலாமே,” என்று கூறலாம். இந்த வாதத்தை ஏற்றால், கோயிலுக்கு யார் பணம் செலவழிக்கிறார்கள், மருத்துவமனைக்கு யார் பணம் செலவழிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நிச்சயம் இரண்டும் வேறுபட்ட நபர்கள். இன்றைய கோயில்கள் தனிமனிதர்களின் நன்கொடையினாலேயே கட்டப்பட்டு வருகின்றன. ஒருவர் தமது பணத்தை தாம் விரும்பும் வழியில் அறநெறியில் செலவழிப்பதற்கு அவருக்கு பூரண உரிமை உள்ளது, யாரும் யாரையும் பலவந்தப்படுத்த முடியாது.

தமிழகத்தின் பெருமையை பாரெங்கும் பரப்பிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது செல்வத்தை கோயில் கட்டுவதில் ஈடுபடுத்தினர். இன்றைய அரசாங்கம் அதுபோன்று பணத்தை கோயில் கட்டுவதற்குச் செலவழிக்கின்றதா? நிச்சயம் இல்லை. தமிழக அரசால் கட்டப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை எத்தனை? பல்வேறு அரசுகள் அறங்காவலர்கள் என்ற பெயரில் கோயிலின் சொத்துக்களைக் களவாடியதுதான் நிகழ்ந்துள்ளதே தவிர, கோயில் கட்டியதாகத் தெரியவில்லை. உண்மை இவ்வாறிருக்க, இந்த இரண்டையும் ஒப்பிடுவது ஏன்?

இத்தகு தொடர்பற்ற ஒப்புமைகள் மக்களுடைய நாஸ்திக எண்ணத்தினாலேயே எழுகின்றன. நாட்டில் முற்றிலும் பயனற்ற எத்தனையோ கட்டிடங்கள் தினந்தோறும் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக மருத்துவமனைகள் என்று பேசலாமே. ஏன் கோயிலை மட்டும் தாக்குகிறார்கள்? நாட்டில் எத்தனையோ கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, பல நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன, கோடிகளைக் கொட்டி மால்கள் கட்டப்படுகின்றன, பல கோடி மதிப்புடைய கார்கள் வாங்கப்படுகின்றன, சுற்றுலா என்ற பெயரில் கோடிகளை செலவழிப்போர் பலர் உள்ளனர், நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு திரையரங்குகள் கட்டப்படுகின்றன; ஏன், 50 கோடி, 100 கோடி என பல்வேறு திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு பதிலாக மருத்துவமனைகளைக் கட்டலாமே!

(திரைப்படங்களே தேவையில்லை என்னும் ஆன்மீகப் பார்வை ஒருபுறம் இருந்தாலும்) திரைப்படங்களை எளிமையான முறையில் எடுக்கலாமே! பல கோடிகள் தேவையா? அதில் சில கோடிகளைக் கொண்டு மருத்துவமனைகளைத் திறக்கலாமே! தெருவிற்குத் தெரு சாராயக் கடைகளைக் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனைகளைக் கட்டலாமே! ஏன் இந்த நாஸ்திக வெறி கோயில்களின் மேல்?

தமிழகத்தின் பல்வேறு மன்னர்கள் பிரம்மாண்டமான கோயில்களை எழுப்பியுள்ளனர். இன்றைய அரசாங்கம் எத்தனை கோயில்களை எழுப்பியுள்ளது?

கோயில்களுக்கான அவசியம்

சமுதாயத்திற்கு சில விஷயங்கள் அடிப்படைத் தேவைகளாகவும், சில ஆடம்பரத் தேவைகளாகவும் உள்ளன. அவற்றிற்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. உணவு, உடை, இருப்பிடம், நீர், மருத்துவமனை முதலியவை சமுதாயத்திற்கான அடிப்படைத் தேவைகளின் பிரிவில் அடங்குகின்றன. மேலே குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டல்கள், ஆடம்பர பங்களா, கார், திரைப்படங்கள், மால்கள் என எத்தனையோ கட்டமைப்புகள் ஆடம்பரப் பிரிவில் அடங்குகின்றன. ஆடம்பர செலவுகளுக்கு பதிலாக, மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும் என்று யாரேனும் முன்மொழிந்தால், அந்த வாதத்தினை நாம் நிச்சயம் ஏற்கலாம். அதை விடுத்து, ஓர் அவசியத் தேவையை நிறுத்தி மற்றோர் அவசியத் தேவையை வழங்குவது என்பது அறிவுடைய செயல் அல்ல. உதாரணமாக, மக்களுக்கு தண்ணீர் தேவையில்லை, உடை மட்டுமே அவசியம் என்று யாரேனும் மொழிந்தால், அது சரியல்ல.

அதுபோலவே, கோயில் என்பதும் ஓர் அவசியத் தேவையே. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எடுத்துரைத்த நம் முன்னோர்கள் எவரும் முட்டாள்கள் அல்லர். கோயில் எவ்வாறு அவசியத் தேவை என்பதைப் புரிந்துகொள்ள சற்று புத்தி அவசியம். மேலோட்டமாகப் புரியாது. கோயில் ஓர் ஆடம்பரத் தேவையாக இருந்தால், நிச்சயம் கோயில்களுக்கு பதில் மருத்துவமனை என்று உரைப்பதில் அர்த்தம் இருக்கும். ஆனால் கோயில் நிச்சயம் ஆடம்பரத் தேவை அல்ல, மாறாக, இஃது ஓர் அவசியத் தேவை.

மனித வாழ்க்கை என்பது, சாதாரண விலங்குகளைப் போன்று உண்டு, உறங்கி, குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தங்களைத் தற்காத்து, பின்னர் மடிவதற்கானதல்ல. இது மீண்டும் பிறவா நிலையை அடைவதற்கானதாகும். இதைப் பற்றி யாம் பல்வேறு கட்டுரைகளில் விளக்கியுள்ளோம். மனித வாழ்வின் உண்மையான பக்குவத்திற்கு கோயில்கள் மிகவும் அவசியமானவை. மனித வாழ்வின் இத்தகு பக்குவத்தை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், அன்றாட வாழ்வில் ஆர்வமுடையவராக இருக்கலாம். இறை வழிபாடு இல்லாவிடில், நமது அன்றாடத் தேவைகளை நாம் வாழும் பூமி நமக்கு வழங்காது. இறை வழிபாட்டில் ஈடுபடும் நல்லோர் சிலர் உள்ளோர் பொருட்டு, எல்லாருக்கும் மழை பொழிகிறது, எல்லாருக்கும் உணவு கிடைக்கிறது. இதை நீங்கள் ஏற்கலாம், மறுக்கலாம்ஶீஆனால் மறுத்தாலும் உண்மை மாறாது.

நமது அன்றாடத் தேவைகள் அனைத்தும் இறை வழிபாட்டைச் சார்ந்ததாக இருப்பதால், கோயில்களும் அங்கு நடைபெறும் இறை வழிபாடும் மனித சமுதாயத்திற்கான பல்வேறு அவசியத் தேவைகளில் ஒன்றாகும்.

மனதிற்கான மருத்துவமனை

இஃது ஒருபுறம் இருக்க, கோயில்கள் இல்லாவிடில் மருத்துவமனைகளின் தேவை பூர்த்தி செய்ய இயலாத அளவில் அதிகரித்து விடும். அஃது எப்படி? பெரும்பாலான நோய்கள் மனதிலிருந்து எழுகின்றன. மக்கள் தங்களது மனதை சாந்தப்படுத்திக்கொள்வதற்கும் தங்களது மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை கோயிலுக்குச் செல்வோர் அனைவரும் உணர்வர். யாரிடமும் சொல்ல முடியாத மன கஷ்டங்களை கோயிலுக்கு வந்து பெருமாளிடம் முறையிடுவோர் எண்ணற்றவர்கள். கஷ்டங்களை முறையிடாதவர்கள்கூட கோயிலுக்கு வந்து செல்வதால், மனதில் ஒரு வித அமைதியையும் புத்துணர்ச்சியையும் பெறுகின்றனர். எனவே, கோயில் என்பதை மனதிற்கான மருத்துவமனை” என்று சரியாக அழைக்கலாம்.

தினசரி கடுமையான வேலைப்பளுவில் சிக்கித் தவிப்பவர்கள் கோயில்களுக்குச் சென்று மனதை சரி செய்கின்றனர். கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் எப்போது மக்களிடம் குறைந்ததோ, அப்போதே மக்கள் மது பானங்களுக்கும் மாதுக்களுக்கும் அடிமையாயினர். கோயிலுக்குச் செல்லும் பழக்கம் மக்களிடம் இருந்தபோது, மக்களிடம் இந்த அளவிற்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனால் இன்று குடிப்பழக்கம் இல்லாத குடிமகனைக் காண்பது அரிதாகி வருகிறது. மேலும், நவீன காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் வருகையினால், பல்வேறு ஆபாச படங்களைப் பார்ப்பதும் அதன் தொடர்ச்சியாக இதர தகாத செயல்களில் ஈடுபடுவதும் மக்களிடையே பெருகி வருகிறது. இந்த உண்மையை அனைவரும் அறிவர், ஆனால் யாரும் பேச மாட்டார்கள். தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் பல்வேறு நோய்களை வரவழைக்கின்றனர். அப்போது அவர்களுக்கு மருத்துவமனை அவசியமாகிறது.

மேலும், நவீன காலத்தில் பல்வேறு நோய்களின் தோற்றத்திற்கு நவீன விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளே முக்கிய காரணமாக அமைகின்றன. இதுகுறித்து யாம் இக்கட்டுரையில் விரிவுபடுத்த விரும்பவில்லை. எப்படிப் பார்த்தாலும், நவீன சமுதாயம் மக்களின் நோயை அதிகரிப்பதாகவே அமைந்துள்ளது.

அதாவது, நவீன சமுதாயம் மக்களுக்கு அதிகமான நோயைக் கொடுத்து அதிகமான மருத்துவமனைகள் வேண்டும் என்று வாதிடுகிறது. நமது பாரம்பரிய சமுதாயமோ நோயின் தோற்றுவாயை அழித்து மக்களுக்கு நல்வாழ்வைக் கொடுக்கிறது. எனவே, மக்களே முடிவு செய்வீர்! நோயுற்று சிகிச்சை பெற விரும்புகிறீர்களா, நோயின்றி வாழ விரும்புகிறீர்களா? நோயுற்று சிகிச்சை பெற விரும்பினால், கோயில், ஆன்மீகம், எளிய வாழ்க்கை முதலியவை உங்களுக்கு வேண்டாம், மதுவிடமும் மாதுவிடமும் தஞ்சமடையுங்கள். நோயின்றி ஆரோக்கியமாக வாழ விரும்பினால், கோயிலிடமும் அந்த கோவிந்தனிடம் தஞ்சமடைந்து, ஆன்மீக ரீதியில் எளிய வாழ்வை வாழுங்கள்.

கோயில்கள் இல்லாத கொரியா போன்ற நாடுகளில், பெரும்பாலான மக்கள் மாலை வேளைகளில் கிளப்புகளுக்குச் சென்று குடிப்பதும் பெண்களுடன் கும்மாளம்போடுவதுமாகவே வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முற்றிலும் இருண்ட மகிழ்ச்சியற்ற வாழ்வாகவே உள்ளது. கோயில்களுக்குச் செல்லும் பண்பாடு மக்களிடையே குறையுமெனில், இந்திய மக்களுக்கும் அத்தகு நிலை வந்துவிடும்.

நோய் உருவாக காரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிப்பதற்கு பதிலாக, நோய்க்கு மருந்தளித்தல் உகந்ததல்ல என்பதை யாம் முன்னரே கூறினோம். அதே வழியில், மக்களுக்கு எல்லாவித மன பிரச்சனைகளைக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளைக் கொடுப்பதில் அர்த்தமில்லை. மக்களின் மன நோய்க்கு இன்றைய சினிமாவும் முக்கிய காரணம் என்பதை மறுத்தலாகாது. கோயில்கள் மக்களிடம் எழும் மன நோய்க்கு தீர்வாகவும், மன பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும் இடமாகவும், தவறான வழியில் சென்று நோய்களை உருவாக்காமல் பாதுகாப்பதற்கும் உதவியாக அமைகின்றன. எனவே, கோயில்களை மனதிற்கான மருத்துவமனை என்று அழைக்கலாம்.

கோயில்களில் மன அமைதி கிடைக்கிறது என்னும் காரணத்திற்காக, பலர் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோயில்: ஆன்மீக மருத்துவமனை

கோயில்களை மனதிற்கான மருத்துவமனை என்று அழைப்பதைவிட ஆன்மீக மருத்துவமனை என்று அழைப்பது மேலும் பொருத்தமானதாக அமையும். கோயில்கள் மனிதனின் மனதிற்கு மருந்தாக உள்ளன என்பது உண்மையே. கோயில்கள் மனதை வெறுமனே சாந்தப்படுத்துவதற்காக மட்டும் அல்ல, சாந்தப்படுத்தி தூய்மைப்படுத்துவதற்கானவை. கோயில்களுக்குச் செல்வோர் பெரும்பாலும் பகவானை தரிசித்து விட்டு சற்று அமைதியாக இருந்து விட்டு வருகின்றனர். அங்கே அவர்களுக்கு சற்று நல்லதிர்ஷ்டம் இருந்தால், அதாவது, அவர்கள் செல்லும் கோயில் மக்களுக்கு அறிவூட்டக்கூடிய கோயிலாக இருந்தால், அவர்களால் அங்கே ஆன்மீக அறிவைப் பெற முடியும்.

கோயில்களின் முக்கிய நோக்கம் மக்களுக்கு ஆன்மீக அறிவை வழங்குவதே. அந்த ஆன்மீக அறிவு மக்கள் இவ்வுலக துன்பங்கள் அனைத்தையும் நிரந்தரமாகக் கடந்து செல்ல உதவும். துரதிர்ஷ்ட வசமாக, பெரும்பாலான கோயில்கள் அத்தகு ஆன்மீக அறிவை வழங்கக்கூடியவையாக இல்லை, வெறும் மன சாந்தி தருபவையாக மட்டுமே உள்ளன.

உலகில் மக்களுடைய பல்வேறு நோய்களைக் காப்பதற்கு பல்வேறு மருத்துவமனைகளும் பல்வேறு துறைகளும் உள்ளன. ஆனால் மக்களுடைய மாபெரும் நோயான பௌதிக வாழ்க்கை” என்பதை எவ்வாறு போக்க முடியும்? பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நிகழ்கின்றன, மனிதன் பிறவிதோறும் கர்ம வினைகளைச் சேகரித்து பல்வேறு இன்னல்களுக்கு உட்படுகிறான். இந்த நோயினை சாஸ்திரங்கள் பவ-ரோக, பௌதிக வாழ்வின் நோய்” என்று குறிப்பிடுகின்றன. கோயில்கள் இந்த நோயைப் போக்குவதற்கானவை. எல்லா நோய்களிலும் இந்த நோயே பெரிய நோய். ஏனெனில், இந்த நோய் இருப்பதால்தான் மற்ற நோய்கள் எல்லாம் வருகின்றன, இந்த நோயை ஒழித்து விட்டால் வேறெந்த நோயையும் ஒழிக்க வேண்டிய தேவை இருக்காது. இவ்வாறாக, கோயில்களே மக்களுக்குத் தேவையான மிக முக்கிய மருத்துவமனைகளாக உள்ளன.

ஆத்மாவைக் காப்பதும் உடலைக் காப்பதும்

துரதிர்ஷ்டவசமாக, கலி யுகத்தின் தாக்கத்தினால், பௌதிக வாழ்வு என்னும் அடிப்படை நோயை விரட்டுவதற்கான கோயில்கள் அல்லது ஆன்மீக இயக்கங்களிலும், அந்த நோயை விரட்டுவதற்கு பதிலாக, அன்றாடம் ஒன்றன் பின் ஒன்றாக வரக்கூடிய நோய்களை விரட்டுவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். (கிறிஸ்துவ இயக்கங்களைப் பின்பற்றி) பல்வேறு ஆன்மீக இயக்கங்களில் மக்களுக்கு உடல் ரீதியிலான சேவைகளைப் புரிகின்றனர். அதாவது, ஆன்மீக இயக்கம் என்ற பெயரில் மருத்துவமனைகளைத் திறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, கோயில்கள் எதற்கு என்னும் வாதம் வலுப்பெறுகிறது. உண்மையான ஆன்மீகவாதிகள் இத்தகு உடல் சார்ந்த மருத்துவமனைகளில் ஆர்வம் செலுத்த மாட்டார்கள், ஆன்மீக மருந்துகளை வழங்குவதில் மட்டுமே ஆர்வம் செலுத்துவர். பௌதிக மருந்துகளின் தேவையை யாம் மறுக்கவில்லை, ஆனால் ஆன்மீகவாதிகள் என்னும் பெயரில் பௌதிக மருத்துவம் புரிவதையே கண்டிக்கிறோம்.

ஆத்மாவைக் காப்பதற்காக ஆத்ம விஞ்ஞானத்தை வழங்குவதற்காக முறையான குரு சீடப் பரம்பரையின் மூலமாகச் செயல்படும் ஒரு கோயில் என்பது, உண்மையில் இலட்சக்கணக்கான மருத்துவமனைகளைக் காட்டிலும் சிறந்ததாகும். அந்தக் கோயிலில் மணியடிக்கும் ஒரு பக்தர் இலட்சக்கணக்கான மருத்துவமனைகளைத் திறந்து புண்ணியம் தேடுபவரைக் காட்டிலும் அதிகமான புண்ணியத்தைச் சேகரிக்கிறார் என்று ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் கூறுவதுண்டு. கோயில் என்பது ஆத்மாவிற்கான மருத்துவமனை. கோயிலினால் ஆன்மீக விஷயங்கள் நிறைவேற்றப்படும்போது, அது மக்களுக்கு சொல்லவியலா நன்மையினை வழங்குகிறது.

எனவே, கோயில் என்பது மக்களின் அவசியத் தேவை என்பதை உணர்ந்து, அதன்படி செயல்பட அனைவரையும் யாம் வேண்டிக்கொள்கிறோம்.

பௌதிக வாழ்க்கை” என்னும் மாபெரும் நோயினை ஆன்மீக அறிவின் மூலமாக குணப்படுத்துவதால், கோயில்கள் மாபெரும் மருத்துவமனைகளாக அமைகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives