கிருஷ்ணரிடம் பிரேமை (தூய அன்பு) உடையவர்கள் மட்டுமே அவரைக் காண இயலும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதற்கான விருப்பம் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதை நாம் மாயைக்கு மாற்றம் செய்துவிட்டோம். மாயையிடம் உள்ள அன்பை மீண்டும் கிருஷ்ணரிடம் செலுத்துவதே கிருஷ்ண உணர்வின் ஒட்டுமொத்த செயல்முறையாகும். இதுவே கிருஷ்ண உணர்வைப் பற்றிய எளிமையான விளக்கம். கிருஷ்ணருக்கான அன்பு நம்மிடம் உள்ளது, ஆனால் அந்த அன்பு தற்போது தவறான இடத்தில், மாயையிடம் உள்ளது. கிருஷ்ணரல்லாத ஒன்றிடம், மாயையிடம் அன்பு செலுத்த நாம் முயற்சிக்கிறோம். இது கிருஷ்ணரது மாயையாகும்.
“மனப்பான்மை” என்றால் சுதந்திரம். சுதந்திரத்தை சரியாகவோ தவறாகவோ உபயோகிக்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதுவே சுதந்திரம். ஒரு வழிப்பாதையாக கீழே விழுவதற்கு வாய்ப்பின்றி இருந்தால், அது பலவந்தப்படுத்துவதாக ஆகிவிடும், அது சுதந்திரமாக இருக்காது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், யத்தேச்சஸி ததா குரு, “நீ எதை விரும்புகிறாயோ, அதைச் செய்யலாம்.”
நீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன, உங்களுடைய கண்கள் அவ்விஷயத்தில் குருடாக உள்ளன. உங்களால் இந்த நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க முடிவதில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா?
பக்தனானவன் ஒருபோதும் அபாயங்களால் சஞ்சலமடைவதில்லை, துயரங்களும் வாழ்வின் சிக்கல்களும் அவனை சஞ்சலப்படுத்துவதில்லை. மாறாக, அவன் அவற்றை வரவேற்கின்றான். அவன் சரணடைந்த ஆத்மாவாக இருப்பதால் அபாயங்களும் நன்மைகளும் கிருஷ்ணரால் வழங்கப்படும் பல்வேறு தோற்றங்களே என்பதை அவன் அறிந்துள்ளான்.
கிருஷ்ணரை எப்பொழுதும் எவ்வாறு நினைப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த தீக்ஷை நிகழ்ச்சி. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஙுஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம. ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிப்பதே மிகச்சிறந்த வழியாகும். நாம் கிருஷ்ணரை “ஹரே கிருஷ்ண” உச்சாடனத்தின் மூலமாக நினைப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.