பகவத் கீதையில், அர்ஜுனன் நமது நன்மைக்காக ஒரு சாதாரண மனிதனைப் போல நடந்து கொண்டான். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவருக்கு தான் தொண்டு செய்ய வேண்டும் என்றும் அர்ஜுனனுக்குத் தெரியும். அவன் சிறந்த பக்தன், தனது வாழ்நாள் முழுவதையும் கிருஷ்ணரின் தொண்டில் அர்ப்பணித்தவன். பகவத் கீதையின் இறுதியில் கிருஷ்ணரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், “சரி, தங்களின் விருப்பப்படி நான் போரிடுகிறேன்” என்று கூறினான். இதுவே உண்மையான பக்தி.
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும். இதுவே எங்கள் இயக்கம். நாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. அவருக்குக் கடவுளின் மீது அன்பு இருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கின்றோம்.
பகவத் கீதையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது! அது மட்டுமல்ல; சொந்த உறவினர்களோடு போர் புரியத் தயாராக நின்ற ஒரு போர் வீரனுக்கு, அதாவது அர்ஜுனனுக்கு அது கற்பிக்கப்பட்டது. வெறும் பாச உணர்வினால் உந்தப்பட்டு, “நான் ஏன் என் சொந்த உறவினர்களுடன் போர் புரிய வேண்டும்” என்று அர்ஜுனன் எண்ணமிட்டு நின்ற சமயம் அது.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது. அஃது இந்த ஜடவுலகைச் சார்ந்தது அல்ல. அதனால் சில சமயம் இதனை மனிதர்கள் தவறுதலாக புரிந்துகொள்ளக் கூடும். எனவே, நாம் அவர்களுக்கு இதனைத் தெளிவாக விளக்க வேண்டும். ஆத்மா என்றால் என்ன என்பதைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. பெரிய பெரிய விஞ்ஞானிகளும் பெரிய பெரிய தத்துவவாதிகளும்கூட ஆத்மாவைப் பற்றியும் ஆன்மீக உலகைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றனர். அதனால் சில நேரங்களில் அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதை மிகவும் கடினமாக உணர்கின்றனர்.
இந்த ஜடவுலகம் நமக்குப் பொருத்தமில்லாத இடம். இங்கு ஒவ்வொருவரும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு செல்வமுடையவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும், உறுதியற்ற நிலைகள் கண்டிப்பாக உண்டு.