கிருஷ்ணரிடம் பிரேமை (தூய அன்பு) உடையவர்கள் மட்டுமே அவரைக் காண இயலும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதற்கான விருப்பம் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதை நாம் மாயைக்கு மாற்றம் செய்துவிட்டோம். மாயையிடம் உள்ள அன்பை மீண்டும் கிருஷ்ணரிடம் செலுத்துவதே கிருஷ்ண உணர்வின் ஒட்டுமொத்த செயல்முறையாகும். இதுவே கிருஷ்ண உணர்வைப் பற்றிய எளிமையான விளக்கம். கிருஷ்ணருக்கான அன்பு நம்மிடம் உள்ளது, ஆனால் அந்த அன்பு தற்போது தவறான இடத்தில், மாயையிடம் உள்ளது. கிருஷ்ணரல்லாத ஒன்றிடம், மாயையிடம் அன்பு செலுத்த நாம் முயற்சிக்கிறோம். இது கிருஷ்ணரது மாயையாகும்.
பக்தனானவன் ஒருபோதும் அபாயங்களால் சஞ்சலமடைவதில்லை, துயரங்களும் வாழ்வின் சிக்கல்களும் அவனை சஞ்சலப்படுத்துவதில்லை. மாறாக, அவன் அவற்றை வரவேற்கின்றான். அவன் சரணடைந்த ஆத்மாவாக இருப்பதால் அபாயங்களும் நன்மைகளும் கிருஷ்ணரால் வழங்கப்படும் பல்வேறு தோற்றங்களே என்பதை அவன் அறிந்துள்ளான்.
கிருஷ்ணரை எப்பொழுதும் எவ்வாறு நினைப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த தீக்ஷை நிகழ்ச்சி. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஙுஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம. ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிப்பதே மிகச்சிறந்த வழியாகும். நாம் கிருஷ்ணரை “ஹரே கிருஷ்ண” உச்சாடனத்தின் மூலமாக நினைப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.
நமது உடலில், மூளை, கைகள், வயிறு, கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளதுபோல, இந்த சமுதாயமும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஃது இயல்பானதாகும். ஆனால் தலையை வெட்டிவிட்டால் உடலினால் என்ன பயன்? அஃது ஒரு பிணம். அதுபோலவே, பிராமணப் பண்பாடு இல்லாத இன்றைய சமுதாயம் தலையற்ற சமுதாயமாகும். மிக சக்தி வாய்ந்த பாதுகாப்புத் துறையும் (சத்திரியர்களும்), அனைத்து வசதிகளும் கொண்ட பொருளாதாரத் துறையும் (வைசியர்களும்), எண்ணிலடங்காத தொழிலாளர்களும் (சூத்திரர்களும்) இன்றைய சமுதாயத்தில் இருக்கலாம். ஆனால் தலைப் பாகம் (பிராமணர்களின் பிரிவு) இல்லாததால், இன்றைய சமுதாயம் உயிரற்ற உடலாகவே செயல்படுகிறது. இதனால்தான் அனைவரும் துன்பப்படுகிறார்கள்.
பாட்டனார்கள், மாமன்கள், மகன்கள், நண்பர்கள் என அர்ஜுனனின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அவனுக்கு முன்பாக இருந்தனர். அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டியிருந்தது. குருக்ஷேத்திர போர் ஒரே குடும்பத்தினுள் நடைபெற்ற சண்டையாகும். குடும்பத்தில் பலர் மறுபக்கமும் சிலர் அர்ஜுனனின் பக்கமும் குழுமியிருந்தனர். பீஷ்மதேவர், சோமதத்தர் போன்ற பெரியவர்கள், குரு துரோணாசாரியர் மற்றும் பலரையும் அவன் போர்க்களத்தில் சந்திக்க நேர்ந்தது.