பகவத் கீதையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது! அது மட்டுமல்ல; சொந்த உறவினர்களோடு போர் புரியத் தயாராக நின்ற ஒரு போர் வீரனுக்கு, அதாவது அர்ஜுனனுக்கு அது கற்பிக்கப்பட்டது. வெறும் பாச உணர்வினால் உந்தப்பட்டு, “நான் ஏன் என் சொந்த உறவினர்களுடன் போர் புரிய வேண்டும்” என்று அர்ஜுனன் எண்ணமிட்டு நின்ற சமயம் அது.
இந்த ஜடவுலகம் நமக்குப் பொருத்தமில்லாத இடம். இங்கு ஒவ்வொருவரும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு செல்வமுடையவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும், உறுதியற்ற நிலைகள் கண்டிப்பாக உண்டு.
பக்தித் தொண்டு எல்லாருக்கும் கிடைப்பதில்லை; புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதனை ஏற்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கிருஷ்ணருக்கு சேவை செய்வதாகும். விடியற் காலையிலிருந்து இரவு நெடு நேரம் வரை அவர்கள் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேவலயா பக்தி, அதாவது தூய்மையான பக்தி என்று அழைக்கப்படுகிறது.
தியானம் என்றால் இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தல் என்று பொருள். பாண்டவர்கள் கிருஷ்ணரை எப்பொழுதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் பேசும்போதும் போரிடும்போதும் நினைத்துக் கொண்டிருந்தனர். இதுவே கிருஷ்ண உணர்வு. அர்ஜுனன் போரிட்டபோது கிருஷ்ணர் அங்கு இருந்தார், பாண்டவர்கள் துரியோதனனுடன் அரசியலில் ஈடுபட்டபோதும் கிருஷ்ணர் அங்கு இருந்தார்.
பகவத் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எனவேதான், இங்கு (4.1) யோகம் என்னும் சொல் உபயோகிக்கப்படுகிறது. ’யோகம்’ என்ற சொல்லுக்கு இணைப்பது என்று பொருள். ’யோகம்’ என்றால் நாம் நமது உணர்வை இறைவனுடன் இணைக்கின்றோம் என்று பொருள்.