பக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெருமைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி எளிமையாக புலனடக்கத்துடன் இருக்க வேண்டும். அனைவரிடமும் நட்பு பாராட்டும் அதே சமயத்தில் பக்தரல்லாதோரிடம் நட்பைத் தவிர்க்க வேண்டும்.
பகவான் கபிலர் தனது அன்னையிடம் தொடர்ந்து விளக்கினார். மனதை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியடைய முடியும், பரம புருஷ பகவானைப் புரிந்துகொள்ளும் வழியில் முன்னேற முடியும். ஒருவர் தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை தனது முழுத் திறனையும் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.
தன்னையுணர்ந்த ஆத்மா தான் பகவானின் நித்திய தொண்டன் என்று நினைக்கும்பொழுது, ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு, சுத்த-ஸத்வ நிலையை அடைகிறது. மேலும், உடல் மற்றும் மனமே தான் என்னும் தவறான எண்ணத்திலிருந்து விடுதலை அடைகிறது. தூய பக்தர் பௌதிக இன்பத்திற்கான பொருட்களுடன் தொடர்புடையவராக தோன்றினாலும் அவர் பொய் அஹங்காரத்திலிருந்து விடுபட்டவர் என்பதை அறிய வேண்டும்.
கபிலதேவர் தொடர்ந்தார், “அன்னையே, காலையில் உதிக்கும் கதிரவன் போன்ற கண்களுடன் கூடிய என் வடிவத்தின் சிரித்த முகத்தை என் பக்தர்கள் எப்போதும் பார்க்கின்றனர். மேலும் அவர்கள் என்னுடன் நட்புடன் பேசுகின்றனர். என்னுடைய இனிமையான சொற்களைக் கேட்டு தூய பக்தர்கள் ஏறக்குறைய பிற எல்லா ஈடுபாடுகளிலிருந்தும் விடுதலையடைகின்றனர். மேலும், பெருமுயற்சியின்றியே எளிதில் வீடுபேறு (முக்தி) அடைகின்றனர். காரணம், அவர்கள் எனது பக்தித் தொண்டில் ஆழ்ந்துவிடுகின்றனர்.