தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்னர் பலியின் நோக்கத்தை அறிந்த பிருகு வம்ச பிராமணர்கள் அனைவரும் இணைந்து, மன்னருக்காக விஸ்வஜித் யாகத்தை நிறைவேற்றினர். யாகத்தின் பலனாக பலி பலமடங்கு வலிமை பெற்றார். மேலும், சக்தி வாய்ந்த வில், அம்பு, தெய்வீக கவசம், மஞ்சள் நிற குதிரைகள் பூட்டிய தங்க விமானம் முதலியவற்றையும் பெற்றார். அவருடைய பாட்டனாரான பிரஹலாதர் என்றுமே வாடாத மலர்களைக் கொண்ட மாலையையும், சுக்ராசாரியர் உயர்ரக சங்கினையும் பரிசளித்தனர். இவை அனைத்தும் கிடைக்கப்பெற்ற பலி மஹாராஜர் மிகுந்த பராக்கிரமத்துடனும் தேஜஸுடனும் மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்ற தன் பரிவாரங்களுடன் படையெடுத்தார்.
ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். இது வேத வியாசர் இயற்றிய பதினெட்டு புராணங்களில் ஒன்றாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.