குடிமக்கள் பிருது மஹாராஜருக்கு பிரார்த்தனைகளை அர்ப்பணித்துக் கொண்டிருந்த போது, ஸனகரின் தலைமையிலான நான்கு குமாரர்கள் அங்கு வருகை புரிந்தனர். யோக சித்திகளின் தலைவர்களும் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவர்களுமான அம்முனிவர்களைக் கண்டவுடன் மன்னரும் மக்களும் எழுந்து நின்று அவர்களை வரவேற்றனர். மன்னர் அவர்கள் அமருவதற்கு ஆசனமளித்தார், அவர்களது பாதங்களைக் கழுவி அத்தீர்த்தத்தினை தம் தலையில் மகிழ்வுடன் தெளித்துக் கொண்டார், பக்தியும் மரியாதையும் மேலிட அவர்களிடம் உரையாடத் தொடங்கினார்.
மாமன்னர் பிருது தமது நகரத்திற்குத் திரும்பியபொழுது, அந்நகரம் முத்துக்களாலும் மலர்களாலும் பொன்னாலும் அழகிய துணிமணிகளாலும், வாழை மரம், பாக்கு மரம் முதலிய மங்கல பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தூப தீபங்களின் நறுமணம் கமழ, காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் இனிமையாகத் திகழ்ந்தது. குடிமக்கள் அனைவரும் தீபம், மலர், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தானியங்கள், குங்குமம் முதலிய மங்கல பொருட்களை கைகளில் ஏந்தி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இளம் சிறுமிகள் முன்னே நிற்க, வாத்தியங்களும் வேத மந்திரங்களும் முழங்க தமது மன்னரை இதயபூர்வமாக வரவேற்றனர்.
பிருது மஹாராஜர் நிறைவேற்றிய யாகங்களால் முழுதும் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தேவேந்திரனுடன் வேள்விச் சாலையில் தோன்றி, பின்வருமாறு கூறினார். அன்பிற்குரிய பிருது மன்னரே, உங்களது நூறாவது வேள்வியைத் தடுப்பதற்காக இந்திரன் செய்த தவறுகளை மன்னியுங்கள், அறிவில் சிறந்தோர் ஆத்மா வேறு, உடல் வேறு என்பதை உணர்ந்தவர்கள். முந்தைய ஆச்சாரியர்களின் கட்டளைகளின்படி நடப்பதினால் அவர்களுக்கு வெற்றியே கிட்டுகிறது.
பூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை கன்றுகளின் வடிவில் அனுப்பி, தமக்குத் தேவையான உணவினை பாலாகக் கறந்து, தத்தமது பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர். அதன் விவரம் அட்டவணையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.
தம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.