சந்திராயன் 2 பயனற்ற பயணமா

Must read

Sridhara Srinivasa Dasa
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்

வரும் செப்டம்பர் 7, 2019, பாரத மக்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நாளாகும். ஆம்! அன்றைய தினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் 2 சந்திரனில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திர மண்டல ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்து சாதனை படைத்து பேரும் புகழும் பெறும் நாள் வெகு அருகில் உள்ளது என்பதை எண்ணி இந்தியர்கள் பேராவலுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். நவீன அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வலிமை முதலிய பல கோணங்களிலிருந்து பார்க்கையில் இந்த சாதனையை இந்தியா படைக்குமேயாயின் இஃது இந்தியாவிற்கு உலக நாடுகள் மத்தியில் மாபெரும் செல்வாக்கை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நிலவை நோக்கிய பயணம்

பிற கிரகங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்னும் நவீன மனிதனின் ஆசை நியாயமானதே. விண்ணுலகின் பல்வேறு கிரகங்களில் ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு அதிசயங்கள் நிரம்பியுள்ளதால், மனிதன் அங்கு பயணம் மேற்கொள்ள தூண்டப்படுகிறான்.

1950 முதல் 1970 வரை அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையே மனிதனை நிலவிற்கு அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் முதலிடம் வகித்து வலிமையை வெளிப்படுத்துவதில் கடும் போட்டி நிலவியது. அதற்கான முயற்சிகளில் இரண்டு நாடுகளும் கோடிக்கணக்கில் செல்வத்தை இறைத்தனர் என்பது வரலாறு. அவர்களது பல்வேறு முயற்சிகளில் சில பணிகள் மட்டுமே வெற்றியடைந்தன. மேலும், சுமார் 50 ஆண்டுகள் கடந்தும்கூட, இவ்விரண்டு நாடுகளும் மீண்டும் நிலவிற்குச் செல்ல எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது வியப்பளிக்கும் வரலாற்று உண்மை.

நிலவில் நீரோ வளமோ தென்படவில்லை என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளபோதிலும், இந்தியா நிலவிற்கு சந்திராயன் 2 செலுத்தியிருப்பதை எண்ணிப் பார்த்தால், ஆச்சரியமாக உள்ளது. நிலவைப் பற்றிய புதிய தகவல்களை சந்திராயன் 2 வழங்கும் என உலக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட பொருட்கள்

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு டாக்டர் எமிலோ சேக்ரே என்பவரும் டாக்டர் ஓவென் சேம்பர்லெயின் என்பவரும் வழங்கிய Anti Matter Theory ஒரு முக்கிய வழிகாட்டுதலை வழங்குகிறது. அமெரிக்காவைச் சார்ந்த இவர்கள் இக்கொள்கைக்காக 1959ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். நாம் காணும் பௌதிக மூலக்கூறுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட மூலப்பொருட்களைக் கொண்ட மாற்று உலகம் ஒன்று (அல்லது பல) இருப்பது சாத்தியம் என்பதே அந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க, ரஷ்ய நாடுகள் ஈடுபட்டிருந்த சமயத்தில், அந்த விஞ்ஞானிகள் கூறிய தகவல் பலரது ஆர்வத்தைத் தூண்டியது. சந்திரன் உட்பட வேறு எந்த கிரகத்திற்கு மனிதன் சென்றாலும், அங்கிருக்கும் பொருட்களும் மக்களும் இங்கிருக்கும் மனிதர்களின் புலன்களுக்கும் கருவிகளுக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கலாம் என்பது அவர்களின் கருத்தாகும்.

வேற்று கிரகங்களில் வாழ்பவர்கள் நமது கண்களுக்கும் கருவிகளுக்கும் புலப்படுவதில்லை என்பதால், அங்கு யாரும் வாழவில்லை என்று கூறுவது புத்திசாலித்தனம் அல்ல.

நிலவிற்குச் செல்வதால் என்ன பயன்?

அதன்படி, சந்திரனில் என்ன உள்ளது என்பதை மனிதனின் புலன்களால் உணர முடியாது. மனிதனின் புலன்களுக்கு அதற்கான திறன் இல்லை. சந்திராயன் 2 மூலமாக நமக்கு சில புகைப்படங்கள் கிடைக்கலாம், நிலவிலிருந்து கொஞ்சம் மண் கிடைக்கலாம், இதர சில தகவல்களும் கிடைக்கலாம்; ஆயினும், நிலவில் என்ன உள்ளது என்பதை நமது கருவிகளால் ஒருபோதும் தெரிவிக்க இயலாது என்பதே உண்மை.

பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி கொஞ்சம் மண் துகள்களைப் பெறுவதால் என்ன பயன்? அப்படியே மனிதன் நிலவிற்குச் சென்றாலும் அவனால் அங்கு நிலைத்து நீண்ட நாள் வாழ முடியுமா? அல்லது தனது பரிவாரங்களைத்தான் அழைத்துச் செல்ல முடியுமா? மனிதன் அங்கு சென்று சில மணித்துளிகள் வாழ்ந்து விட்டு திரும்புவதால், அவனுக்கோ மற்றவர்களுக்கோ என்ன பயன்? மனிதன் சந்திரனுக்குச் சென்று திரும்பினால், அது தம்பட்டம் அடிக்க உதவுமே தவிர, உண்மையான முறையில் அவனுக்கோ மற்றவர்களுக்கோ எந்த நன்மையையும் வழங்காது.

இந்த வருடம் எவரெஸ்ட் சிகரத்தில் மக்கள் கூட்டம் சற்றே அதிகரிக்க, அங்கே நெரிசலில் சிக்கியோரின் சுவாச வாயு உருளைகள் தீர்ந்துபோயின. அவர்களில் சிலர் மரணமடைந்தனர், வேறு சிலர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடவுளை பிரார்த்தித்து தப்பினர். இது நாம் கண்ட உண்மை. நிலைமை இவ்வாறு இருக்கையில், வெகு தொலைவிலுள்ள நிலவிற்குச் சென்று நாம் சந்தோஷமடைவோம் எனும் நம்பிக்கை, வெற்று காசோலை போன்று மதிப்பற்றதாகும்.

இத்தகு பயனற்ற பயணங்களுக்கு பதிலாக, புத்திசாலி மனிதன் வேத சாஸ்திரங்களை அணுக நேரிட்டால், அவன் நிலவைப் பற்றியும் இதர லோகங்களைப் பற்றியும் துல்லியமான எண்ணற்ற தகவல்களைப் பெற முடியும்.

நிலவைப் பற்றிய சாஸ்திரங்களின் கூற்று

வேத சாஸ்திரங்களின்படி, இந்த பௌதிக உலகம் 14 லோகங்களைக் கொண்டதாகும். இந்த 14 லோகங்களும் உயர் லோகங்கள், மத்திய லோகங்கள், தாழ்ந்த லோகங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு லோகத்திலும் பல்வேறு கிரகங்கள் உள்ளன. அவற்றில் எண்ணிலடங்காத வியக்கவைக்கும் செல்வமும், அந்த கிரகத்திற்கு உகந்த உடல்களைப் பெற்ற எண்ணிலடங்காத உயிர்வாழிகளும் வாழ்கின்றனர். எந்த கிரகமும் காலியாக இல்லை.

அந்த கிரகங்களில் வாழ்பவர்கள் நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை, நமது கருவிகளுக்குப் புலப்படவில்லை என்பதால், அங்கு யாரும் வாழவில்லை என்று கூறுவது புத்திசாலித்தனம் அல்ல. நமது கண்களுக்குப் புலப்படாத உலகம் உள்ளது, அங்கே கண்களுக்குப் புலப்படாத உயிரினங்களும் உள்ளனர் என்னும் வேதக் கருத்து, முன்பு கூறிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் கருத்துடன் ஒத்ததாக உள்ளது.

சாஸ்திரங்களின்படி, சந்திரன் ஸ்வர்க லோக கிரகங்களில் ஒன்று என்பதால், அதிலுள்ள உயிரினங்கள் நம்மைக் காட்டிலும் சூட்சுமமான உடலைப் பெற்றவர்கள். அவர்களும் அங்குள்ள பொருட்களும் நமது பார்வைக்கு நிச்சயம் தென்படாதவை.

சந்திர லோகம் அழகிய மலைகள், மாளிகைகள், ஆறுகள், அருவிகள், மலர்கள், மங்கைகள் என மிகவும் சொகுசான வாழ்க்கையை வழங்கும் இடமாகும். இது சோம பானம் உட்பட பலதரப்பட்ட சுவை நிறைந்த பானங்களால் நிரம்பியுள்ளது. அவை நிலவொளியின் மூலமாக பூலோகத்திலுள்ள காய்கனிகளுக்கு சுவையை வழங்குகின்றன. நிலவொளியை வைத்தே காய்கள் சிறப்பான சுவையைப் பெறுகின்றன என்பதை விவசாயிகளும் விஞ்ஞானிகளும் நன்கறிவர்.

சந்திரனைப் பற்றிய இத்தகு தகவல்கள் பன்னெடுங் காலமாக சாஸ்திரங்களில் காணப்படுகின்றன. வளர்பிறை, தேய்பிறை கணக்குகள், கிரகண கணக்குகள் என வானவியல் சார்ந்த பல்வேறு விஞ்ஞான அறிவை நமது முன்னோர்கள் பெற்றிருந்தனர். அவர்கள் சந்திரனுக்குச் சென்று ஆய்வு செய்து அவற்றைப் பெறவில்லை. மாறாக, சாஸ்திரங்களைக் கொண்டு பல்வேறு நூற்றாண்டுகளாக அறிந்திருந்தனர். அவர்கள் என்றோ குறித்த பஞ்சாங்க குறிப்புகள் இன்றைய விஞ்ஞான கணக்குகளுக்கு முற்றிலும் இணக்கமாக உள்ளன.

எனவே, ஒரே ஒரு முறை பயணம் செய்து விட்டு சந்திரனில் எதுவுமில்லை என்று கூறும் விஞ்ஞானிகளின் கருத்து ஏற்கத்தக்கதல்ல.

பௌதிகக் கூறுகளுக்கு அப்பால் ஒரு வஸ்து உள்ளதை மைக்ரோஸ்கோப்பில் கண்டால் மட்டுமே ஏற்க முடியும் என்பது என்னே பிரமை?

சந்திரனை அடைய சாஸ்திரம் கூறும் வழி

விண்வெளிக் கலங்களைக் கொண்டு பல வாரங்கள் பயணம் செய்து சந்திரனுக்குச் சென்றாலும், சந்திரனில் இருப்பவற்றைக் காணக்கூடிய திறன் நமக்கு இல்லை. அதே சமயத்தில், அத்தகு திறன் பெற்ற உடலை நாம் பெற நேரிட்டால், சந்திரனின் எல்லா வசதிகளையும் நம்மால் உணர முடியும்.

நமது தற்போதைய உடல் மரணித்த பிறகு, நாம் நல்ல கர்மங்களைச் செய்திருந்தால், அந்த புண்ணியத்தின் விளைவாக நம்மால் சந்திர லோகத்திற்குச் செல்ல முடியும். புண்ணியங்கள் நம்மை உயர்ந்த கிரகங்களுக்கு மாற்றி, அங்குள்ள சுகங்களை அனுபவிக்க வைக்கின்றன. பாவங்கள் நம்மை தாழ்ந்த கிரகங்களுக்கு மாற்றி, அங்குள்ள துன்பங்களை அனுபவிக்க வைக்கின்றன. எனவே, சந்திர லோகத்திற்குச் செல்ல விரும்புவோர் அதற்கான புண்ணியங்களைச் செய்தபடி சந்திர தேவனை வழிபட வேண்டும். யார் எந்த தேவர்களை வணங்குகிறார்களோ, அவர்கள் அந்த தேவர்களின் லோகத்திற்குச் செல்வர் என்று பகவத் கீதையில் (9.25) கிருஷ்ணர் கூறுகிறார்.

யோகப் பயிற்சிகளின் மூலமாகவும் விண்ணிலுள்ள எண்ணிலடங்காத கிரகங்களுக்கு நம்மால் பயணம் மேற்கொள்ள முடியும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சந்திரனும் தற்காலிகமானதே

ஆயினும், சந்திர லோகமும் தற்காலிகமானதே. புண்ணியம் தீர்ந்த பின்னர், சந்திர லோகம் சென்றவர்கள் மீண்டும் இந்த பூலோகத்திற்குத் திரும்ப வேண்டும். வேற்று கிரகங்களுக்கு நாம் இயந்திரத்தின் மூலமாகப் பயணம் மேற்கொண்டாலும் சரி, புண்ணியத்தின் மூலமாகச் சென்றாலும் சரி, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகிய நான்கு துயரங்கள் நம்மைத் தொடர்ந்து வந்து நம்மை வாட்டும். ப்ரஹ்ம புவனால் லோகா: புனர் ஆவர்தின:, ஒருவன் பிரம்மலோகத்திற்குச் சென்றால்கூட, அதுவும் பிறப்பும் இறப்பும் தொடரக்கூடிய இடமே; அவன் மீண்டும் இந்த பூலோகத்திற்கு வந்தாக வேண்டும் என்று பகவத் கீதையில் (8.16) கிருஷ்ணர் தெளிவாகக் கூறுகிறார்.

எனவே, பகவான் கிருஷ்ணர் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, பல கோடி ரூபாய் செலவில் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் பயனற்ற கால விரயமே. நாம் நமது பொன்னான நேரத்தை இவற்றில் வீணடிக்கக் கூடாது.

சந்திர லோகம் அழகிய மலைகள், மாளிகைகள், ஆறுகள், அருவிகள், மலர்கள், மங்கைகள் என மிகவும் சொகுசான வாழ்க்கையை வழங்கும் இடமாகும்

நிரந்தரமான வாழ்க்கை

முன்பு குறிப்பிட்ட நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், பௌதிகத் தன்மைகளுக்கு எதிர்மறையான தன்மைகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன என்று கூறியுள்ளனர். வேத சாஸ்திரங்களோ ஜடத்திற்கு அப்பாற்பட்ட அந்தப் பொருட்களை ஆன்மீகப் பொருட்கள் என்று தெரிவிக்கின்றன. அவர்கள் ஆராய்ந்ததைப் போன்றே ஜடத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக உலகம் ஒன்று உள்ளது என்று வேத சாஸ்திரங்கள் உறுதி செய்கின்றன.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஜடத்திற்கு அப்பாற்பட்ட உலகம் ஒன்று இருக்குமேயாயின், அந்த உலகமும் அந்த உலகிலுள்ள உயிர்களும் ஜடத் தன்மைக்கு எதிர்மறையான தன்மைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, இந்த ஜடவுலகின் ஜடப் பொருள்கள் அனைத்திற்கும் தோற்றமும் அழிவும் உறுதியாக இருக்கும்பட்சத்தில், ஜடத்திற்கு அப்பாற்பட்ட உலகமும் அங்கு வசிப்பவர்களும் தோற்றம் மற்றும் அழிவிற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதைத்தான் பகவத் கீதை (2.20) நமக்குத் தெரிவிக்கிறது:

ஜாயதே ம்ரியதே வா கதாசின்

நாயம் பூத்வா பவிதா வா பூய:

அஜோ நித்ய: ஷாஷ்வதோயம் புராணோ

ஹன்யதே ஹன்யமானே ஷரீரே

“ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன். உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.”

பகவத் கீதைக்கும் இவ்விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இருப்பினும், ஆத்மா எனும் ஜடத்திற்கு அப்பாற்பட்ட சக்தியை இவ்விஞ்ஞானிகளால் ஏற்க முடியாதது துரதிர்ஷ்டவசமானதாகும். பௌதிகக் கூறுகளுக்கு அப்பால் ஒரு வஸ்து உள்ளதை அவர்கள் ஏற்கிறார்கள். இருப்பினும், அக்கூறுகளின் விஞ்ஞானத்தை ஜட வஸ்துக்களாலான மைக்ரோஸ்கோப்பில் கண்டால் மட்டுமே ஏற்க முடியும் என்பது என்னே பிரமை?

விஞ்ஞானிகள் பகவத் கீதையின் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டால், அவர்கள் இந்த ஜடத்திற்கு அப்பாற்பட்ட ஆத்மாவின் தன்மைகளைத் தெரிந்து கொண்டு, அதனை முறையாக ஆராய்ந்து, அதன் மூலம் இறுதியான நன்மையைப் பெற முடியும்.

நிரந்தர லோகத்தை அடைவோம்

நிரந்தர லோகத்தை அடைவதற்கு, வேத சாஸ்திரங்களின் தீர்மானங்களை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பரம்பரையில் வரும் ஆன்மீக குருவை அணுகி பணிவுடன் அவருக்கு சேவை புரிந்து அடக்கத்துடன் கேட்டறிவதே சரியான வழிமுறையாகும். இந்த உலகின் பதினான்கு லோகங்கள் அனைத்தும் நமக்கு துன்பத்தை வழங்கும் தற்காலிக இடமே என்று வேத நூல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஜடவுலகிற்கு அப்பால் எண்ணற்ற ஆன்மீக உலகங்கள் உள்ளன; அங்கே இந்த ஜடவுலகைப் போன்று இருள்ஒளி, இன்பதுன்பம், குளிர்வெப்பம், பிறப்புஇறப்பு முதலிய இருமைகள் கிடையாது; அந்த இடம் நிரந்தர இன்பம் நிறைந்தது; அது சூரியன், சந்திரன், அக்னி முதலியவற்றைச் சாராத பிரகாசமான இடம் என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறுகிறார். யாரொருவர் அவ்விடத்தை அடைகின்றனரோ அவர்கள் மீண்டும் இந்த இருமை நிறைந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை என்றும் கிருஷ்ணர் தெரிவிக்கின்றார்.

அந்த ஆன்மீக உலகிற்கும் இந்த பௌதிக உலகிற்கும் கிருஷ்ணரே மூலம் என்னும் உண்மையை அறிந்தவர்கள், தங்களது புத்தியை முறையாகப் பயன்படுத்தி, அவரிடம் சரணடைந்து, அவருடைய நினைவில் வாழ்ந்து, இறுதியில் அவரது நித்திய இருப்பிடமான வைகுண்ட லோகங்களை அடைந்து அவருடன் வாழ்வர் என்று பகவத் கீதை உறுதியளிக்கிறது. எனவே, தற்காலிக நன்மைக்காக பிற கிரகங்களுக்கு அதிக சிரமத்துடன் செல்வதைக் கைவிட்டு, பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளபடி, அவரது திருநாட்டை அடைய முயல்வோமாக.

ஆன்மீக உலகிற்கும் பௌதிக உலகிற்கும் கிருஷ்ணரே மூலம் என்னும் உண்மையை அறிந்தவர்கள், அவரிடம் சரணடைந்து, அவருடைய நினைவில் வாழ்ந்து, இறுதியில் அவரது நித்திய இருப்பிடமான வைகுண்ட லோகங்களை அடைந்து அவருடன் வாழ்வர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives