கிருஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள், பசுவதையாளர்கள்
பின்வரும் உரையாடலில், கிருஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள், மற்றும் பசுவதையாளர்களின் தவறான எண்ணங்களை தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தனது சீடர்களிடையே விளக்குகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஸ்துவர்கள், “நாங்கள் எல்லாவிதமான பாவச் செயல்களையும் செய்யலாம், ஆனால் இயேசு எங்களை மன்னித்து அப்பாவங்களை ஏற்றுக் கொள்வார். அவர் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்,” என்று கூறுகின்றனர். நான் சொல்வது சரி தானே?
சீடன்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: பாவம் இயேசு, இவர்களின் பாவச் செயல்களுக்காக அவர் துன்பப்பட வேண்டியுள்ளது. “இயேசுநாதர் எங்களை பாவத்திலிருந்து காப்பாற்ற விரும்பினார். எனவே, நாங்கள் பாவம் செய்கிறோமா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை,” என்று அவர்கள் கூறுகின்றனர். இது கபடத்தனமாகும்.
மெல்போர்னில், சில பாதிரியார்கள் என்னை உரையாட அழைத்தனர். அவர்கள் என்னிடம், “கிருஸ்துவ மதம் மறைந்து கொண்டிருப்பதாக ஏன் நினைக்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்?” என வினவினார்கள். நான் அதற்கு பதிலாக, “நீங்கள் என்ன செய்யவில்லை? இயேசுவைப் பின்பற்றுபவர்கள் என்று நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள். இருந்தும் எல்லாவித பாவச் செயல்களையும் செய்கிறீர்கள். எனவே, உங்களது இந்த கபட நாடகத்தை நீங்கள் விரைவில் நிறுத்த வேண்டி வரும்,” என்றேன். எனது பதில் அவர்களுக்கு திருப்தியைத் தரவில்லை.
“நாங்கள் என்ன செய்துவிட்டோம்?” என அவர்கள் வினவுகின்றனர். அவர்கள் பல்வேறு பாவச் செயல்களைப் புரிகின்றனர், ஆனால் தாங்கள் பாவிகள் என அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதுவே கபடத்தனம். பைபிளில் உள்ள பத்து கட்டளைகளில் ஒன்று, “கொல்லாதிருப்பாயாக.” இவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டுள்ளபோதிலும், அவர்கள் அதற்கு கீழ்ப்படிவதில்லை. இது பாவச் செயலே.
அவர்கள் விருப்பத்துடன் பாவம் செய்கிறார்கள். ஒருவர் தெரியாமல் பாவம் செய்தால், அவருக்கு சில சலுகைகள் கிடைக்கலாம்; ஆனால் இவர்கள் தெரிந்தே பாவம் புரிகிறார்கள். பசுவதை ஒரு பாவச் செயல் என அறிந்திருந்தும், இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
சீடன்: பெரும்பாலான கிருஸ்துவர்கள் இறைச்சி உண்பதை பாவச் செயல் எனக் கருதுவதில்லையே!
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், பைபிளுக்கு தவறாக விளக்கமளிக்கும் பாதிரியார்கள் அயோக்கியர்கள். மதத்தின் பெயரால் இந்த கபடத்தனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற தவறான கருத்துகளை பிரச்சாரம் செய்வோர் எவ்வளவு காலத்திற்கு மற்றவர்களை ஏமாற்ற முடியும்? உங்களால் எல்லா மக்களையும் சில காலத்திற்கு ஏமாற்ற முடியும், ஒரு சிலரை எல்லா காலத்திற்கும் ஏமாற்ற முடியும்; ஆனால் எல்லா மக்களையும் எல்லா காலத்திற்கும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது.
சீடன்: கிருஸ்துவ மதம் கபடத்தனம் வாய்ந்தது என்று கம்யூனிஸ்டுகளும் வாதம் செய்கின்றனர். மதம் மக்களை முட்டாள்களாக மாற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் அதனை அழிக்க முற்படுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: கம்யூனிஸ்டுகள் கிருஸ்துவ மதத்துடன் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளனர். மேலும், மதத்தின் அவசியம் குறித்த எந்தவொரு தகவலும் அவர்களிடம் இல்லை. எனவே, எல்லா மதங்களையும் அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
சீடன்: உலகத்தில் மிக அதிகமான பிரச்சனைகள் உள்ளன என்றும், மக்கள் அரசாங்கத்திற்கு ஒப்புதல் தராவிடில், பிரச்சனைகள் தீர வழியில்லை என்றும் கம்யூனிஸ்டுகள் கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: நாமும் இதையே சொல்கிறோம். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், அவரிடம் நாம் அடைக்கலம் அடைந்தால், எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும். இதையே நாமும் போதிக்கிறோம்.
சீடன்: ஆனால் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கம்யூனிஸ்டுகள் விட்டுவிடுகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏகலே ஈஷ்வர க்ருஷ்ண, ஆர ஸப ப்ருத்ய, “கிருஷ்ணர் மட்டுமே எஜமானர், மற்ற அனைவரும் அவரது பணியாளர்களே.” இதுவே பகவத் கீதையின் மையக் கருத்து. இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், உடனடியாக எல்லாம் சரியாகிவிடும்.
பகவத் கீதையை நீங்கள் படித்தால், நீங்கள் ஆட்சேபிக்கும்படி, அல்லது உங்களுக்கு நன்மை பயக்காதபடி, அதில் ஒரு வார்த்தையையும் உங்களால் காண இயலாது. பகவத் கீதை முழுவதும் நடைமுறைக்கு ஏற்றதாகும்—மனித நாகரிகத்திற்கு மிகவும் உதவக் கூடியது. முதலாவதாக, நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ளும்படி கிருஷ்ணர் போதிக்கிறார். நீங்கள் இந்த உடல் அல்ல, அதனுள் உள்ள ஆத்மா. இது யாருக்கு தெரியும்? இதுவே கிருஷ்ணர் பகவத் கீதையில் போதிக்கும் முதல் பாடம். நீங்கள் இந்த உடல் அல்ல, அதனுள் உள்ள ஒன்று என்பதை உணர்ந்தவுடன், ஆத்மா என்றால் என்ன என்பதை அறிவீர்கள். அதன் பின்னர் உங்களது ஆன்மீக அறிவு படிப்படியாக வளர்கிறது. ஆனால் அயோக்கியர்கள் ஆன்மீகம் என்றால் என்ன என்பதையே அறியார்கள். ஆகவே, இவர்களுக்கு ஆன்மீக அறிவே இல்லை.
சீடன்: பசுக்களுக்கு ஆத்மா இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: பசுக்களுக்கு ஆத்மா இல்லையென்று அவர்கள் எவ்வாறு சொல்ல முடியும்? உங்களுக்கு ஆத்மா உண்டு. உங்கள் உடல் நகருகிறது. நீங்கள் வேலை செய்கிறீர்கள், பேசுகிறீர்கள், சாப்பிடுகிறீர்கள். ஆனால் உங்கள் உடலிலிருந்து ஆத்மா பிரிந்தவுடன் அது பிணமாகக் கருதப்படுகிறது. கை கால்கள் இருந்தால்கூட, ஆத்மா (உயிர்) பிரிந்தவுடன் அவை வேலை செய்வதில்லை.
எனவே, பசுவின் உடலுக்கும் உங்களது உடலுக்கும் என்ன வேறுபாடு? மனிதப் பிறவிக்கே உரிய விவேகத்துடன் பார்க்கும்பொழுது பசுவின் உடலுக்கும் உங்கள் உடலுக்கும் ஏதாவது முக்கிய வேறுபாடு உண்டா?
சீடன்: இல்லை. ஆனால் இப்பொழுது மனிதர்களுக்கும் ஆத்மா இல்லை என அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் பசுவுக்கு ஆத்மா இல்லாததால் பசுவைச் சாப்பிடலாம் எனக் கூறுகிறார்கள். மனிதர்களுக்கு ஆத்மா இல்லை என்றால்…
ஸ்ரீல பிரபுபாதர்: உங்களது குழந்தையை அதன் கருவில் கொல்லலாம். அறியாமையின் முன்னேற்றத்தை நாகரிகத்தின் முன்னேற்றமாக ஏற்று வருகின்றனர். ஏன்? ஏனெனில், ஆன்மீக அறிவு இல்லை.
(ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் கோல்ஃப் விளையாடும் ஒரு மனிதனைக் கடந்து செல்கின்றனர்.)
சீடன்: தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அந்த மனிதர் நினைக்கிறார். இருந்தும் அந்த பந்தை ஒரு துளையினுள்ளே போடுவதற்காக இன்னும் கடினமாக வேலை செய்கிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவரால் வேறு என்ன செய்ய முடியும்? அவருக்கு மற்றொரு வேலை இருப்பது தெரியவில்லை, ஆன்மீக வாழ்க்கை இருப்பது தெரியவில்லை. அதுவே அவரது அறியாமையாகும்.
நியூயார்க்கில் மின்தடை ஏற்பட்டபோது அதிக பெண்கள் கருத்தரித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருட்டில் மனிதர்களால் வேறென்ன செய்ய முடியும்? உடலுறவு கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆன்மீக அறிவு இல்லையேல், மனிதர்கள் வெறும் மிருகங்களைப் போல ஆகி விடுகின்றனர்.