கொரோனாவும் ஸநாதன தர்மமும்

Must read

Sridhara Srinivasa Dasa
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ்

“ஸநாதன தர்மத்தை வேரறுப்போம்,” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சில நாத்திக கட்சிகள் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வருவதாக நண்பர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆயினும், இன்றோ கொரோனாவின் காரணத்தினால் உலக நாடுகள் ஸநாதன தர்ம பண்பாடுகளை ஏற்று வருவதைப் பார்க்கும்போது, ஸநாதன தர்மம் எனும் அரிய பொக்கிஷத்தைப் புறக்கணிக்கும் நாத்திகர்களின் மடமை வியப்பாக உள்ளது.

கொரோனாவைத் தடுத்து நிறுத்தும் மருந்தை உலக மருத்துவர்களாலோ விஞ்ஞானிகளாலோ கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில், இது மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகள் ஸநாதன தர்மத்தின் சில பண்பாடுகளை ஒருமனதாக ஏற்க தீர்மானித்துள்ளன. வாழ்வின் இன்ப துன்பங்களை எதிர்கொள்ள ஸநாதன தர்மம் கற்பிக்கும் கலையை இக்கட்டுரையில் சற்று காண்போம்.

வணக்கம் செலுத்துவதன் நன்மை

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஏற்படும் அன்புப் பரிமாற்றங்களில், கரங்களைக் கூப்பி வணக்கம் தெரிவிப்பது மிகவும் முக்கியமானதாகும். இது ஸநாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் பாரத தேசத்தில் பின்னிப்பிணைந்த பழக்க வழக்கமாகும். இந்தப் பழக்கம் நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் என்பதை உணர்ந்து, இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய மக்கள் இதைப் பின்பற்றுகின்றனர்.

இது வெறும் மனிதனுக்குச் செய்யப்படும் மரியாதை மட்டுமின்றி, ஒவ்வொருவரின் இதயத்திலும் கடவுள் வசிக்கின்றார் என்பதை உணர்த்தும் முக்கிய பாடமாகவும் உள்ளது. ஒருவர் மற்றவரை கரம் கூப்பி வணங்குதல் என்பது, உயிர்வாழியின் இதயத்தில் ஆத்மாவுடன் வசிக்கும் பரமாத்மாவிற்குச் செலுத்தப்படும் வந்தனையே என்று ஸநாதன தர்மம் விளக்குகிறது. அதாவது, தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ, ஒருவர் மற்றொருவரை கரம் கூப்பி வணங்கும்போது, பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனை தமக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்தித் தொண்டாகக் கருதி, அந்நபருக்கு ஆன்மீகப் பலனை வழங்குகிறார். ஸநாதன தர்ம சாஸ்திரங்களும் ஆழ்வார்களின் பாடல்களும் இவ்வுண்மையைப் போற்றுகின்றன.

தூய்மையான வாழ்க்கை

மக்கள் தற்போது வணக்கம் செலுத்துவது மட்டுமின்றி, கொரோனா பரவாமல் தடுக்கும் பொருட்டு, சைவ உணவை ஏற்றல், சாப்பிட்ட இடத்தையும் கரத்தையும் உடனுக்குடன் சுத்தமாகக் கழுவுதல் முதலிய ஸநாதன தர்மத்தின் அடிப்படை பழக்கங்களையும் கடைப்பிடிக்குமாறு பரிந்துரைக்கப் படுகின்றனர்.

கரங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், மூக்கு, வாய், கண் அல்லது காதுகளை அடிக்கடி தொடாமல் இருத்தல், தொட நேர்ந்தால் உடனுக்குடன் கை கழுவுதல், தினமும் நீராடி உடலை சுத்தம் செய்தல், தினமும் அழுக்கு ஆடைகளைத் துவைத்துப் போடுதல் முதலிய வேதப் பண்பாட்டினை இன்று உலக மக்கள் பலரும் சிறிதளவில் உணர்ந்து, ஏற்று பயன்பெற்று வருகின்றனர்.

கரம் கூப்பி வணங்குதல் என்பது, ஆத்மாவுடன் வசிக்கும் பரமாத்மாவிற்குச் செலுத்தப்படும் வந்தனையே என்று ஸநாதன தர்மம் விளக்குகிறது.

பாராட்டத்தக்க ஆரம்பநிலை

இது வெறும் ஆரம்ப நிலை என்றாலும் பாராட்டத்தக்கதே. இதுபோன்ற அடிப்படை கலாச்சாரத்தை அன்றாட வாழ்வில் ஏற்பதன் மூலம் ஸநாதன தர்மத்தின் உயர்ந்த ஆன்மீகப் பாடங்களைக் கற்கும் நற்பாக்கியம் நமக்குக் கிட்டலாம். பகவத் கீதை, பாகவதம் முதலிய வேத இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு, ஸநாதன தர்மம் அன்றாட வாழ்வில் நமக்கு எளிய கோட்பாடுகளை விதிக்கின்றது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், ஸநாதன தர்மமானது மனித குலத்திற்கு மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு வரப் பிரசாதமாகும்.

ஸநாதன தர்மத்தின் சுகாதார வழிமுறைகள் அன்றாட வாழ்க்கையில் எளிதாகப் பயிலத் தக்கது. இந்த அருமையான வாழும் கலையைப் பின்பற்றாமல், அசையும் உயிர்கள் அனைத்தையும் அசைவ உணவாக்கி உண்ணும் கீழ்நிலையான பண்பாடற்ற வாழ்க்கையை ஏற்று, பௌதிக வளர்ச்சியின் மிதப்பில் வாழ்ந்த மக்கள் இன்று உலகெங்கிலும் கொரோனா கிருமியால் படுகொலை செய்யப்படுகின்றனர். அதற்கான காரணம் என்ன? சீனா உள்ளிட்ட உலக நாட்டு மக்களின் கொடூரமான உணவுப் பழக்கமே.
ஸநாதன தர்மத்தின் அடிப்படை பண்பாட்டில் ஒன்று: நாம் அன்றாடம் உண்ணும் உணவானது, ஸாத்வீகமான முறையில் சமைக்கப்பட்டு, பகவானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, தூய ஸாத்வீக பிரசாதமாக இருத்தல் வேண்டும். மக்கள் அவ்வாறு தூய ஸத்வ உணவினை உண்டு வந்தால், இம்மாதிரியான கொடிய நோய்கள் நம்மை அண்டும் வாய்ப்புகள் குறைவு.
எனவே, ஸநாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை. இதனை அன்றாட வாழ்வில் நேரடியான அனுபவங்களின் மூலம் உணர முடியும்.

கொரோனா கர்மாவா?

ஆன்மீக அறிவைக் கற்பிக்கும் பொருட்டு, ஸநாதன தர்மம் வழங்கும் முதன்மை பாடங்களுள் ஒன்று கர்மம் குறித்ததாகும். கர்மத்தையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மற்ற உயிர்களுக்குத் தீங்கிழைப்பது பாவச் செயல் என்பதில் யாருக்கும் சிறிதளவும் ஐயமில்லை. நமது ஒவ்வொரு செயலுக்கும் இதயத்தில் வசிக்கும் பரமாத்மா நேரடி சாட்சியாக இருக்கிறார். எனவே, நல்ல செயல்களுக்கு நல்ல பலன், தீய செயல்களுக்குத் தீய பலன் என்பது இயற்கையின் நியதி. இதனை அனைத்து உலக மதங்களும் ஏற்கின்றன.

அதாவது, கொரோனாவினால் தற்போது தவிப்பவர்கள் இப்பிறவியிலோ முற்பிறவியிலோ அதுபோன்ற தவிப்பினை மற்றொரு நபருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்கியிருப்பர். உலக நாடுகள் அனைத்திலும் கடந்த எழுபது ஆண்டுகளில் தொழிற்சாலை நாகரிகம் என்ற பெயரில் அன்றாட வாழ்க்கையானது கசாப்புக்கடை சந்தையாக மாற்றப்பட்டுள்ளது மறுக்கமுடியாத உண்மை. காடுகளை அழித்து, இயற்கையை நாசம் செய்து, மாமிச உணவை பல்லாயிரம் மடங்கு அதிகரித்து இதர உயிரினங்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளனர். இவை உள்ளங்கை நெல்லிக்கனியன்றோ! இவற்றின் விளைவு: கொரோனா வைரஸ், சுனாமி, பூகம்பம், வெள்ளம், சூறாவளி முதலிய இயற்கையின் சீற்றங்கள்.

பிற உயிர்களுக்குத் தொல்லை கொடுத்து வாழ்வதன் விளைவாகவே, மனித சமுதாயம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றது.

கர்ம பந்தத்திலிருந்து விடுபடுதல்

நாம் தூய பக்தித் தொண்டின் மூலமாக பகவான் கிருஷ்ணரிடம் அன்பை வளர்த்து அவரிடம் சரணடைந்தால், அப்போது அவர் நம்மை அனைத்து பாவ விளைவுகளிலிருந்தும் மீட்டு அவரது உயர்ந்த தாமத்திற்கு அழைத்துச் செல்வார். இதனை கிருஷ்ணர் பகவத் கீதையில் உறுதிப்படுத்தியுள்ளார். பௌதிக இயற்கையில் நாம் பற்பல ஜன்மங்களாக கர்ம வினையினால் தவிக்கின்றோம்; பகவான் கிருஷ்ணருடனான உறவை மறந்திருப்பதே இதற்கான காரணமாகும். பகவான் கிருஷ்ணரே அனைத்து லோகங்களுக்கும் உரிமையாளர், அவரே அனைத்தையும் கட்டுப்படுத்துபவர், அவரே அனைவருக்கும் உற்ற நண்பர்—இவற்றை யாரொருவர் உணருகின்றாரோ, அவரே நிரந்தர அமைதியை அடைகிறார் என்று பகவத் கீதை கூறுகிறது. பார்ப்பவை அனைத்தும் தனக்கே சொந்தம் என்றும், தன்னுடைய புலனின்பத்திற்கு உரித்தானவை என்றும் நாம் நினைக்கும்போது, கர்ம வினை எனும் சூழலில் நாம் சிக்கிக்கொள்கிறோம். அனைத்தையும் பகவான் கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் சமர்ப்பித்து அவரது இன்பத்திற்காக நாம் செயல்பட்டால், அது நம்மை கர்ம வினையின் சிக்கல்களிலிருந்து விடுவிக்கும். பகவத் கீதை, பாகவதம் முதலிய வேத சாஸ்திரங்களின் மூலமாக ஸநாதன தர்மம் நமக்கு இதனைக் கற்பிக்கின்றது.

பகவான் கிருஷ்ணரின் கருணா அவதாரம்

“ஒரு பூவோ இலையோ கனியோ நீரோ பக்தியோடும் அன்போடும் அர்ப்பணித்தால், அவற்றை ஏற்றுக்கொள்வேன்,” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். நாம் உண்ணும் அப்பொருட்களை அவருக்கு அர்ப்பணித்து, அவர் ஏற்ற பின்னர், அதன் மீதியினை பிரசாதமாக நாம் ஏற்றால், அப்போது கர்ம வினையெனும் சங்கிலியை உடைத்து அதில் மீண்டும் சிக்காமல் மகிழ்ச்சியோடு நாம் வாழலாம். மேலும், பகவான் கிருஷ்ணர் தமது அனைத்து சக்திகளையும் தமது திருநாமத்தில் உள்ளடக்கி, கட்டுண்ட ஆத்மாக்களாகிய நமக்கு கருணையுடன் வழங்கியுள்ளார்.

அதாவது, நமது நாவின் செயல்களான பேச்சு, சுவை ஆகிய இரண்டையும் முறையே பகவான் கிருஷ்ணரது திருநாம உச்சாடனத்திலும் அவரது பிரசாதத்தைச் சுவைப்பதிலும் உபயோகித்தால், நாம் உள்ளும் புறமும் தூய்மையடைவோம்.

உண்ணும் பொருட்களை பகவானுக்கு அர்ப்பணித்து பிரசாதமாக ஏற்றால், அப்போது கர்ம வினையெனும் சங்கிலியை உடைத்து மகிழ்ச்சியாக வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives