வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதும் மிகுந்த அங்கீகாரம் பெற்றதுமாகும். உங்களில் பெரும்பாலானோர் பகவத் கீதையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், “பற்பல பிறவிகளுக்குப் பிறகு, புத்திசாலி மனிதன் என்னிடம் சரணடைகின்றான், வாஸுதேவனான நானே எல்லாம் என்பதை உணர்கிறான்.” தற்போதைய மக்கள் மரணத்திற்குப் பின்னர் மறுபிறவி உள்ளது என்பதை நம்புவதில்லை, ஆயினும், நீங்கள் நம்புகிறீர்களா, இல்லையா, என்னும் கேள்விக்கு இடமே இல்லை. உண்மை உண்மையாகவே இருக்கும். மரணத்திற்குப் பிறகு மறுபிறவி நிச்சயம் உண்டு. உடல் அழியும்போது நீங்கள் அழிந்துவிடுவதில்லை; நீங்கள் மற்றோர் உடலை ஏற்கிறீர்கள்.
இதனை நீங்கள் தினசரி வாழ்விலும் உணரலாம். குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு குழந்தையின் உடல் இருந்தது. தற்போது நீங்கள் வளர்ந்துள்ளீர்கள், குழந்தையின் அந்த உடல் எங்கே? அந்த உடல் மடிந்துவிட்டது. தற்போது உங்களிடம் புதிய உடல் உள்ளது, ஆனால் உங்களுக்குக் குழந்தைப் பருவ உடல் இருந்தது என்பதை நீங்கள் நினைவில் வைத்துள்ளீர்கள். உண்மையில் ஆத்மாவின் பரிணாமம் புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையான விஷயமாகும், எந்தவொரு புத்திசாலி மனிதனாலும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். பகவத் கீதையின் ஆரம்பத்திலேயே கிருஷ்ணர் கூறுகிறார், உயிர்வாழி தன்னுடைய உடலை மாற்றும்பொழுது புத்திசாலி மனிதன் மயங்குவதில்லை. உடலின் மாற்றம் என்பது ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்ந்து கொண்டுள்ளது, ஒவ்வொரு நொடியிலும் நம்முடைய உடல் மாறுகின்றது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்கின்றது. இந்த உடலின் இறுதி மாற்றம் “மரணம்” என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் உங்களுக்கு (ஆத்மாவிற்கு) மரணம் என்பது இல்லை, நீங்கள் மற்றொரு புதிய உடலை ஏற்கிறீர்கள்.
நாம் எட்டி உதைக்கப்படுவோம்
ஞானத்தை வளர்ப்பது அனைவருக்கும் எளிதான காரியமல்ல. இதுவும் பகவத் கீதையில் உரைக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மனிதர்களுள் யாரேனும் ஒருவரே, வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதை அறிவதில் ஆர்வமுடையவராக இருப்பார், “நான் ஏன் துன்பப்படுகிறேன்?” என்று அவர் வினவலாம். ஒவ்வொருவரும் துன்பப்படுகின்றனர், இதுவே உண்மை. இந்த ஜடவுலகில் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பௌதிகமான முறையில் ஒருவன் தன்னை மகிழ்ச்சியுடன் இருப்பதாக நினைத்தால், அவன் ஒரு முட்டாள். இங்கே யாராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இந்த இடமே துன்பத்திற்கான இடம்தானே. இது சாஸ்திரங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தற்காலிகமானது என்பதையும் நாம் அறிகிறோம். இது துன்பகரமான இடமாக இருந்தாலும் பரவாயில்லை, நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு தங்குவதற்கு நாம் அனுமதிக்கப்பட மாட்டோம். ஒருநாள் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நாம் எட்டி உதைக்கப்பட்டு விடுவோம்.
அமெரிக்க நாட்டின் மிகச்சிறந்த ஜனாதிபதியான திரு. கென்னடி அவர்கள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டியவர், ஆனால் அவர் ஒரு நொடிப்பொழுதில் அகற்றப்பட்டார். எங்களுடைய நாட்டில் மகாத்மா காந்தி மிகவும் பிரபலமான தலைவராக இருந்தார், ஆனால் நொடிப்பொழுதில் அவர் தன்னுடைய ஸ்தானத்திலிருந்து அகற்றப்பட்டார். நாம் இயற்கையின் கரங்களினால் எப்பொழுது அகற்றப்படுவோம் என்பதை அறியோம். எனவே, புத்திசாலி மனிதன் தன்னுடைய உண்மையான நிலையை அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். “நான் தங்குவதற்கு விரும்புகிறேன், ஆனால் ஏதோ ஓர் உயர்ந்த சக்தி என்னை எட்டி உதைத்துவிடுகிறது. ஏன்?” இதுவே கேள்வியாகும். மனிதர்கள் அறியாமையில் இருக்கக் கூடாது என்று வேதாந்த சூத்திரம் அறிவுறுத்துகிறது. “துன்பங்களுக்கு நான் ஏன் உட்படுகிறேன்?” என்று நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். “நான் மரணத்தை விரும்புவதில்லை. மரணம் ஏன் எனக்கு நிகழ்கிறது?” புத்திசாலி மனிதன் எப்போதும் வாழ்வின் நான்கு துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றைப் பற்றி யோசிக்க வேண்டும். இவை பகவத் கீதையின் உபதேசங்களாகும். அறிவில் முன்னேற்றம் அடையக்கூடியவன் தனக்கு முன்பாக இந்த நான்கு பிரச்சனைகளைக் கையாள வேண்டும். நீங்கள் உங்களுடைய விஞ்ஞான அறிவில் மிகவும் கர்வம் கொண்டிருக்கலாம், ஆனால் இங்கே உண்மையான விஞ்ஞானம் கொடுக்கப்படுகிறது. உங்களால் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை வெற்றிகொள்ள முடிந்தால் அப்போது நீங்கள் முன்னேறுவதாகப் பொருள்படும்.
வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்
இந்தியன், அமெரிக்கன், ஆங்கிலேயன், விஞ்ஞானி, தொழிலதிபர், தாய் அல்லது தந்தை என நீங்கள் உங்களுடைய கடமையை முறையாக நிறைவேற்றினாலும், கடவுளைப் பற்றி கேள்வி கேட்பதற்கான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளாவிடில், நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டதாக பாகவதம் கூறுகிறது. இதுவே வேதாந்த சூத்திரத்தின் தொடக்கமாகும். மக்கள் வேதாந்தத்தை படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர், ஆனால் வேதாந்தம் என்பது கற்பனைக்குரிய விஷயமில்லை. இது முறையான அதிகாரிகளிடமிருந்து கற்கப்பட வேண்டும். உங்களுடைய கடமைகளை முறையாக நிறைவேற்றியபோதிலும், நீங்கள் உங்களுடைய உணர்வுகளை முறையாக வளர்த்துக் கொள்ளாவிடில் அப்போது நீங்கள் காலத்தை மட்டுமே விரயமாக்கியுள்ளீர்கள்.
அனைத்து தரப்பட்ட மக்களின் உண்மையான தர்மம் கிருஷ்ணரிடம் சரணடைவதே
சரணடைவதே நமது தர்மம்
சமஸ்கிருதத்தின்படி தர்மம் என்றால், உங்களால் மாற்ற இயலாத உண்மையான நிலை என்று பொருள்படும். உதாரணமாக, சர்க்கரை இனிப்பானதாகும். “ஆஹா, இந்த சர்க்கரை உப்பாக உள்ளது” என்று நீங்கள் கூறினால், அது சர்க்கரை அல்ல. சர்க்கரையின் தர்மம் இனிப்பாக இருப்பதாகும். அதுவே உண்மையான தர்மம். இன்று நீங்கள் இந்து தர்மத்தை ஏற்பது, நாளை கிறிஸ்துவ தர்மத்தை ஏற்பது, நாளை மறுநாள் இஸ்லாமிய தர்மத்தை ஏற்பது என்பது இல்லை. இவை எதுவும் தர்மம் அல்ல. உண்மையான தர்மத்தை உங்களால் மாற்ற இயலாது. அதை மாற்றுவது சாத்தியமல்ல. அந்த தர்மம் என்ன? கிருஷ்ணர் கூறுகிறார், “நீங்கள் உங்களுடைய கற்பனையான அபத்தங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, என்னிடம் சரணடையுங்கள்.” முழுமுதற் கடவுளிடம் சரணடைவதே உண்மையான தர்மமாகும். எல்லாப் பிரிவுகள் மற்றும் நம்பிக்கைகளும் இந்த மையக் கருத்தை நோக்கியே செயல்படுத்தப்படுகின்றன.
உண்மையான தர்மம் என்பது முழுமுதற் கடவுளிடம் சரணடைவதற்கானதாகும். எனவே, பற்பல பிறவிகளுக்குப் பிறகு உண்மையான அறிவுடையவன் பரம புருஷரிடம் சரணடைகிறான் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அவ்வாறு சரணடைபவன் மஹாத்மாவாகிறான். அந்த மஹாத்மாவின் அறிகுறிகள் யாவை? அந்த மஹாத்மாக்கள் இந்த ஜட இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்கள் அல்ல. அவர்கள் ஆன்மீக இயற்கையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளனர். ஆன்மீக இயற்கையின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவர்களின் அறிகுறிகள் யாவை? இதுவும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது.
மஹாத்மாவின் அறிகுறிகள்
மஹாத்மா என்பவர் பரம புருஷ பகவானிடம் முற்றிலும் சரணடைந்தவராகவும் பகவானின் செயல்களைப் புகழ்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளவராகவும் இருக்கின்றார். மஹாத்மா எப்போதும் பக்தித் தொண்டை நிறைவேற்றுவதில் கவனத்துடன் இருப்பார். அவர் எப்போதும் பகவானை நமஸ்கரித்தபடி, மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் உள்ளார். இதுவே மஹாத்மாவின் அறிகுறிகளாகும். எவ்வாறு முக்தி பெறுவது, எவ்வாறு மஹாத்மா ஆவது, எவ்வாறு தத்துவவாதியாவது என எத்தனையோ கொள்கைகள் உள்ளன. ஆனால் வாழ்வின் உண்மையான வெற்றி என்பது, பரந்த மனப்பான்மை கொண்டவராக ஆவதில் உள்ளது.
மஹாத்மா என்றால் பரந்த மனப்பான்மை கொண்டவர் என்று பொருள். “நான் இத்தகையவன், “நான் அத்தகையவன், நான் இந்து, நான் முஸ்லீம், நான் கிறிஸ்துவன், நான் இந்தியன், நான் ஜெர்மானியன், நான் ஆங்கிலேயன்,” என்று மஹாத்மாக்கள் நினைப்பதில்லை. மஹாத்மா என்பவர் இவ்வெல்லா அடையாளங்களிலிருந்தும் விடுபட்டவர். “நான் ஆங்கிலேயன், அல்லது நான் இந்தியன்,” என்று நான் நினைக்கும்போது, அஃது என்னுடைய அடையாளமாகிறது. இந்த உடலை மாற்றிய பிறகு, நான் மற்றோர் உடலை எடுக்கின்றேன், அப்போது இந்த அடையாளங்கள் அனைத்தும் உடனடியாக முடிந்துவிடுகின்றன. ஜனாதிபதியான கென்னடியை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஜனாதிபதி கென்னடியும் அவருடைய தத்துவங்களும் தற்போது முடிந்துவிட்டன. இப்போது திருவாளர் கென்னடி எங்கே இருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் வேறோர் உடலில் உள்ளார், அதுவே உண்மையாகும். இதனை நான் முன்னரே விளக்கியுள்ளேன். தற்போது அவர் எங்கே எவ்வாறு இருக்கிறார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அதுவே அறியாமை அல்லது மாயை என்று அழைக்கப்படுகிறது.
மாயையிலிருந்து உங்களை விடுவித்து, உங்களுடைய இழந்த உண்மையான உணர்வினைப் புதுப்பிப்பதற்காகவே இந்த இயக்கம் உள்ளது. உண்மையான உணர்வு என்பது கிருஷ்ண உணர்வாகும். இதர உணர்வுகள் அனைத்தும் மேலோட்டமான தற்காலிக உணர்வுகளாகும். “நான் இந்தியன், நான் இது, நான் அது.” இவையனைத்தும் மேலோட்டமானவை.
பரமனுடன் தொடர்புகொள்வோம்
இந்த இயக்கத்தை இந்தியாவின் வங்காளப் பகுதியில் சைதன்ய மஹாபிரபு ஆரம்பித்து வைத்தார். உங்களுடைய உண்மையான அடையாளம், கடவுள் அல்லது கிருஷ்ணரின் அம்சமாக (சேவகனாக) இருப்பதே என்று அவர் நமக்கு தெரிவித்துள்ளார். கை என்பது உடலின் ஓர் அம்சமாகும். அந்தக் கையின் பணி என்ன? உடலுக்குச் சேவை செய்வது. கையினால் சுதந்திரமாக அனுபவிக்க இயலாது. அது சாத்தியமல்ல. நீங்கள் கையினை இந்த உடலிலிருந்து வெட்டித் தெருவில் எறிந்துவிட்டால், யாரும் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். அது மக்கி பயனற்றதாக மாறிவிடுகிறது. ஆனால் அந்த உடலுடன் தொடர்பிலிருக்கும் வரை அதற்கு இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான டாலர் மதிப்பு உள்ளது. அந்தக் கையில் ஏதேனும் தொல்லை ஏற்படுமெனில், நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழித்து அதனைப் பாதுகாக்க நினைப்பீர்கள். ஆனால் அந்தக் கையானது உங்களுடைய உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அதனை யார் என்ன செய்தாலும் நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். இதுவே நம்முடைய நிலையாகும்.
நாம் முழுமுதற் கடவுளின் அம்சங்கள். நாம் பரமனுடன் தொடர்பிலிருப்போமானால், அப்போது நமக்கு மதிப்பு உண்டு. இல்லாவிடில், நமக்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே, கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், “என்மீது பற்றுதல் கொள்வாயாக. அப்போது உன்னுடைய எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.”
கிருஷ்ண பக்தி இயக்கம் இந்துக்களைத் தாண்டியது
இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் தற்போது எங்களுக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல்வேறு கிளைகள் உள்ளன, இங்குள்ள ஆண்களும் பெண்களும் இந்துக்களோ இந்தியர்களோ அல்ல. இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில், தற்போது நான் ஒருவன் மட்டுமே இந்தியன். மற்றவர்கள் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள்? ஏனெனில், கிருஷ்ண உணர்வு எல்லா இடங்களிலும் உள்ளது. அது தங்களிடமும் உள்ளது. அஃது என்னிடமும் உள்ளது. நாம் அதனைத் தூண்டிவிட்டால் போதும். அவ்வாறு தூண்டி விடுவதற்கான வழிமுறையே இந்த ஸங்கீர்த்தன இயக்கமாகும். நீங்கள் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரித்தால், உங்களுடைய இதயம் தூய்மையடைந்து நீங்கள் கிருஷ்ணரே அனைத்தும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
இந்த இயக்கம் தானாகத் தயாரிக்கப்பட்டதல்ல, போலியானதல்ல, உளறல்கள் நிறைந்த இயக்கமல்ல. இஃது அங்கீகாரம் பெற்றதும் உண்மையானதும் ஆகும். இந்த தத்துவத்தினைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நாங்கள் புதிதாக எந்தத் தத்துவத்தையும் வழங்குவதில்லை. பகவத் கீதையை உள்ளது உள்ளபடி உண்மையுருவில் அப்படியே வழங்குகிறோம். பகவத் கீதை உலகம் முழுவதும் படிக்கப்படுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு அயோக்கிய கருத்துரையாளர்களினால் மொத்த விஷயமும் விஷமாக்கப்பட்டுள்ளது. அதனால் பகவத் கீதையை உண்மையுருவில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், எல்லா நன்மைகளும் உடனடியாக வழங்கப்படும்.
மஹாமந்திரத்தை உச்சரியுங்கள்
ஸ்ரீமத் பாகவதத்தில் இந்தக் கலி யுகத்தின் நிலையினை விவரிக்கையில், கலி யுகத்தின் இறுதி மிகமிக மோசமாக இருக்கும் என்று சுகதேவ கோஸ்வாமி கூறியுள்ளார். கலி யுகத்தின் சிரமங்கள் அனைத்தையும் விளக்கிய பின்னர், (கலி யுகத்தின் 5,000 வருடங்கள் ஏற்கனவே கடந்துவிட்டன, மேலும் 4,27,000 வருடங்கள் எஞ்சியுள்ளன), சுகதேவ கோஸ்வாமி கூறுகிறார், “எனதருமை மன்னரே, இந்த கலி யுகத்தின் சிரமத்தையும் மோசமான நிலையையும் நான் உமக்கு விளக்கியுள்ளேன், ஆயினும் இந்த யுகத்தில் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது.” அஃது என்ன? “ஹரே கிருஷ்ண மந்திரத்தை எளிமையாக உச்சரிப்பதாலேயே ஒருவன், எல்லாக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டு இந்த இருள் நிறைந்த பிரதேசத்திற்கு அப்பாலுள்ள ஆன்மீக இராஜ்ஜியத்திற்கு ஏற்றம் பெறுவதற்கான தகுதியைப் பெற முடியும்.”
அனைத்தும் பகவத் கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பகவத் கீதை உண்மையுருவில் படியுங்கள் என்பதே எங்களுடைய வேண்டுகோள். நாங்கள் யாரிடமும் எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. நான் அவ்வாறு பிழைப்பு நடத்துபவன் அல்ல. இந்த ஸங்கீர்த்தன இயக்கம் இலவசமானது. இஃது ஏதோ இரகசியமானது என்றோ, நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால் நான் உங்களுக்கு மந்திரம் அளிப்பேன் என்றோ கிடையாது. இது வெளிப்படையான இரகசியமாகும். ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதால், உங்களுக்கு எந்தவோர் இழப்பும் இல்லை, ஆனால் மாபெரும் இலாபம் உண்டு. நீங்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள். நாங்கள் இந்த கீர்த்தனத்தினை தாராளமாக விநியோகித்து வருகிறோம். எங்களுடன் இணைந்து இந்த தத்துவத்தினைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எங்களுடைய மாதாந்திரப் பத்திரிகை Back to Godhead (பகவத் தரிசனம்) உள்ளது, பகவத் கீதை உண்மையுருவில், சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள் போன்ற இதர நூல்களும் உள்ளன. இந்த இயக்கத்தினை தத்துவம், விஞ்ஞானம், வாதம் போன்றவற்றினால் நீங்கள் அறிய விரும்பினால், நாங்கள் தயாராக உள்ளோம்.
நீங்கள் எளிமையான கீர்த்தனத்திலும் ஈடுபடலாம். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரியுங்கள், நீங்கள் அனைத்தையும் அடைவீர்கள். நன்றி.