வணிகர்களுக்கான அறிவுரை
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பண்பாட்டையும் வணிகத்தையும் பற்றிப் பேச இருக்கிறேன். வணிகம் என்பது ஒரு தொழிற்கடமை. நமது வேதப் பண்பாட்டில் பலவிதமான தொழிற்கடமைகள் உள்ளன. பகவத் கீதை (4.13) கூறுகிறது, சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண–கர்ம–விபாகஷ:, மக்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப சமுதாயத்தில் நால்வகைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன—பிராமணர் (புத்திசாலிகள் மற்றும் ஆசிரியர்கள்), சத்திரியர் (இராணுவ வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள்), வைசியர் (விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்), மற்றும் சூத்திரர் (தொழிலாளிகள்). இவ்வாறாக, பல்வேறு திறமைகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்கள் உள்ளன.
முக்கியமான தலை பகுதி
மனித உடலில் பல பிரிவுகள் இருப்பதைப் போல மனித சமுதாயத்திலும் இயற்கையாகவே பல கலாச்சாரப் பிரிவுகள் உள்ளன. தலை, கை, வயிறு, கால் என பல்வேறு உறுப்புகள் சேர்ந்ததே முழு உடல் எனப்படுகிறது. அதுபோலவே சமுதாயம் எனும் உடலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பிராமணர்கள் சமுதாயத்தின் தலையை பிரதிநிதிக்கின்றனர். சத்திரியர்கள் கையையும் வைசியர்கள் வயிற்றையும் சூத்திரர்கள் கால் பகுதியையும் பிரதிநிதிக்கின்றனர். சமுதாயத்தின் செயல்களை இதுபோன்று விஞ்ஞான ரீதியில் பிரிக்க வேண்டியது அவசியமாகும்.
மற்ற பிரிவினர்களுக்கு அறிவுரை வழங்கி, தலையைப் போன்று செயல்படும் பிரிவு சமுதாயத்தில் இருக்க வேண்டியது அவசியம். அத்தகு தகுதியும் அறிவும் பெற்றவர்களே பிராமணர்கள் எனப்படுகின்றனர். பிராமணர்கள், சமுதாயமெனும் உடலின் தலையைப் போன்று கருதப்படுகின்றனர். சமுதாயத்தை அவர்கள் பண்பாட்டுடன் வழிநடத்திச் செல்வர். வாழ்வின் குறிக்கோளை அறிவதே பண்பாடாகும். வாழ்வின் குறிக்கோளை அறியாத மனிதன் துடுப்பில்லாத படகினைப் போன்றவன். தற்போதைய சமுதாயத்தில் இத்தகைய தலைப் பகுதி இல்லாத காரணத்தினால் நாம் வாழ்வின் குறிக்கோளை இழந்துள்ளோம்.
சத்திரியர்கள் அறிவுரை பெற வேண்டியவர்கள். இதற்கு சிறந்த உதாரணம், அர்ஜுனன். அவன் ஒரு போர்வீரன்; போரில் சண்டையிடுவது அவனது கடமை. குருக்ஷேத்திர போர்க்களத்தில் அவன் தனது கடமையில் ஈடுபட்டிருந்தான். ஆயினும், அதே சமயத்தில் அவன் ப்ரஹ்மண்யதேவாய, பிராமணர்களின் இறைவனான பகவான் கிருஷ்ணரிடமிருந்து அறிவுரைகளை ஏற்றான்.
பக்குவமான பண்பாட்டிற்கு வேண்டிய உபதேசங்கள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பல பண்டிதர்களும் பிராமணர்களும் குழுமியிருந்த நைமிசாரண்ய வனத்தில் உரையாற்றிய ஸ்ரீல சூத கோஸ்வாமி, வர்ணாஷ்ரம அமைப்பினை (அத: பும்பிர் த்விஜ–ஷ்ரேஷ்டா வர்ணாஷ்ரம–விபாகஷ) பற்றி எடுத்துரைத்தார். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நான்கு சமுதாய அமைப்புகளையும், பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு ஆன்மீக ஆஷ்ரமங்களையும் உள்ளடக்கியதே வேதப் பண்பாடு.
வர்ணாஷ்ரமத்தின் நோக்கம்
இந்த வர்ணாஷ்ரம தர்மத்தின் நோக்கம் பரம புருஷரை திருப்திப்படுத்துவதாகும். விஷ்ணு புராணம் [3.8.9] கூறுகிறது,
வர்ணாஷ்ரமாசாரவதா
புருஷேண பர: புமான்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா
நான்யத் தத்–தோஷ–காரணம்
ஒருவர் பிராமணரின் தொழிலை, சத்திரியரின் தொழிலை, வைசியரின் தொழிலை, அல்லது சூத்திரரின் தொழிலைச் செய்யலாம். ஆனால் அதன் மூலம் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்த வேண்டும். நீங்கள் வியாபாரியாக, தொழில்நுட்ப வல்லுநராக, சட்ட ஆலோசகராக, அல்லது மருத்துவராக இருக்கலாம். அது முக்கியமல்ல. உங்கள் தொழிலில் பக்குவத்தை விரும்பினால், நீங்கள் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்த முயல வேண்டும். இல்லையென்றால், நீங்கள் உங்களது நேரத்தை விரயமாக்குகிறீர்கள்.
பரம புருஷரான விஷ்ணுவிற்காக நீங்கள் வேலை செய்ய வேண்டும். இல்லையெனில், உங்களுடைய செயல்களின் விளைவுகளில் நீங்கள் பந்தப்படுவீர்கள். அர்ஜுனன் தனது தொழிலைச் செய்ததைப் போன்று, நீங்களும் உங்களின் தொழிலைச் செய்து கொண்டிருக்கலாம். அவன் சத்திரியன் என்பதால் போர்வீரனாக இருந்தான். ஆனாலும் அதிகாரிடமிருந்து கீதையைக் கேட்க வேண்டும் என்னும் தனது கலாச்சாரத்தினை அவன் மறந்துவிடவில்லை. ஆனால், நீங்களோ ஆன்மீக வாழ்வினை விருத்தி செய்யாமல் வெறுமனே தொழிலை மட்டும் செய்து கொண்டிருந்தால், உங்களது தொழில் பயனற்ற கால விரயமே, ஷ்ரம ஏவ ஹி கேவலம்.
கடமையைக் கைவிடாதீர்
நீங்கள் உங்களது தொழிலை விட்டுவிட்டு எங்களைப் போன்று சந்நியாசியாக வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. கிருஷ்ணரும் அவ்வாறு கூறுவதில்லை. “அர்ஜுனா, போர்புரியும் உனது தொழிலை விட்டுவிடு” என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. “அர்ஜுனா, நீ ஒரு சத்திரியன். ‘போர் புரிதல் வெறுக்கத்தக்கதாக உள்ளது” என்று எண்ணி நீ போர் செய்ய மறுக்கின்றாய். இவ்வாறு செய்வது சரியல்ல. நீ நிச்சயமாகப் போர் புரிய வேண்டும்.” இதுவே கிருஷ்ணரின் உபதேசம்.
அதைப் போலவே கிருஷ்ண பக்தர்களாகிய நாங்களும் மக்களுக்கு அறிவுறுத்துகின்றோம், “உங்களுடைய கடமைகளைத் துறக்காதீர். கடமைகளைச் செய்தபடி கிருஷ்ணரைப் பற்றிக் கேளுங்கள்.” சைதன்ய மஹாபிரபுவும் இதனையே ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து மேற்கோள் காட்டி கூறுகின்றார், ஸ்தானே ஸ்திதா: ஷ்ருதி–கதாம் தனு வாங் மனோபிர்.
சைதன்ய மஹாபிரபு, “உங்களது நிலையினை தியாகம் செய்யுங்கள்,” என்று ஒருபோதும் கூறியதில்லை. ஒருவன் தனது சமுதாய நிலையினைக் கைவிடுதல் கடினமல்ல. ஆனால் அந்த நிலையில் இருந்தபடியே ஆன்மீக ஞானத்தினை விருத்தி செய்வதுதான் தேவை. விலங்குகள் ஆன்மீக வாழ்வில் ஈடுபடுவதில்லை, ஆன்மீக ஞானத்தினை விருத்தி செய்துகொள்ள விலங்குகளால் முடியாது. எனவே, மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஆன்மீக ஞானத்தினை வளர்த்துக்கொள்ளாவிடில், அவர்கள் விலங்குகளுக்கு ஒப்பானவர்களே, தர்மேண ஹீனா பஷுபி ஸமானா.
நான் யார் என்பதை உணருங்கள்
நமது நித்தியமான நிலையினைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உடம்பினுள் குடிகொண்டுள்ள ஆத்மாக்களாகிய நாம் நித்தியமானவர்கள், ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே. உடல் அழிக்கப்பட்டவுடன் நாம் அழிக்கப்படுவதில்லை. இதுவே நமக்கான ஞானமாகும், அதாவது தன்னைப் பற்றி அறிவதாகும். சைதன்ய மஹாபிரபுவின் முதல் சீடராகிய ஸநாதன கோஸ்வாமி, நவாப் ஹூசைன் ஷா என்பவரின் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்தார். அவர் அதிலிருந்து ஓய்வு பெற்று சைதன்ய மஹாபிரபுவை அணுகி பணிவுடன் கூறினார், “பகவானே, பலரும் என்னை பண்டிதன் என்கின்றனர். ஆனால் நானோ ‘நான் யார்’ என்பதைக்கூட அறியாதவனாக இருக்கின்றேன்.”
இதுவே, அனைவரின் நிலை. நீங்கள் வணிகராக இருக்கலாம், அல்லது வேறு கடமையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் யார், எங்கிருந்து வந்துள்ளீர்கள், ஏன் ஜட இயற்கையின் சட்டங்களில் உழல்கின்றீர்கள், அடுத்த பிறவியில் எங்கு செல்கிறீர்கள் என்பன போன்றவற்றை அறியாமல் நீங்கள் எதைச் செய்தாலும் அது பயனற்றதே. ஸ்ரீமத் பாகவதம் [1.2.8] கூறுகின்றது,
தர்ம: ஸ்வனுஷ்டித பும்ஸாம்
விஷ்வக்ஷேன–கதாஸு ய:
நோத்பாதயேத் யதி ரதிம்
ஷ்ரம ஏவ ஹி கேவலம்
“ஒருவன் தனது நிலைக்கு ஏற்றவாறு செய்யும் கடமைகள், பரம புருஷ பகவானைப் பற்றிய செய்திகளிடம் கவர்ச்சியைத் தூண்டவில்லை
யென்றால், அவையனைத்தும் பயனற்ற உழைப்பே.” எனவே, கிருஷ்ணரால் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளைச் சிறப்புற செய்தவாறே கிருஷ்ண உணர்வையும் வளர்க்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மறுபிறவியைப் பற்றி சிந்தியுங்கள்
கிருஷ்ணரின் உணர்வு என்றால், நாம் பகவானின் அம்சம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் (மமைவாம்ஷோ ஜீவ–லோகே ஜீவ–பூத: ஸநாதன:). நாம் கிருஷ்ணரின் நித்திய அம்சங்களாக இருக்கும்போதிலும், எவ்வாறோ, தற்போது மனம் மற்றும் புலன்களுடன் போராடிக் கொண்டுள்ளோம் (மன:-ஷஷ்டானி இந்த்ரியாணி ப்ரக்ருதி–ஸ்தானி கர்ஷதி). ஏன் போராடுகிறோம்? இந்த தற்காலிக வாழ்விற்கு அப்பாலுள்ள நிரந்தர வாழ்வினைப் பற்றி நாம் வினவ வேண்டும். இந்த தற்காலிக வாழ்வில், இருபது வருடங்கள், ஐம்பது வருடங்கள், அல்லது அதிகபட்சம் நூறு வருடங்கள் நான் தொழிலதிபராக இருக்கலாம். அடுத்த பிறவியிலும் நான் தொழிலதிபராகவே இருப்பேன் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால், நாம் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இந்த சில கால வாழ்வினைப் பற்றியே கவலைப்படுகிறோம். இதுவே நமது தவறு.
இந்த வாழ்வில் நான் உயர்ந்த தொழிலதிபராக இருக்கலாம். ஆனால், எனது அடுத்த பிறவியில், கர்ம வினையின் காரணமாக, நான் வேறு ஏதாவதொரு நிலையில் இருக்கலாம். மொத்தம் 84,00,000 வகையான உயிரினங்கள் உள்ளன. 9,00,000 நீர்வாழ் இனங்கள்; 20,00,000 வகையான மரங்கள், செடிகளைப் போன்ற அசையா உயிரினங்கள்; 11,00,000 வகையான பூச்சிகள், ஊர்வன; 10,00,000 வகையான பறவைகள்; 30,00,000 வகையான மிருகங்கள்; மற்றும் 4,00,000 வகையான மனித இனங்கள் உள்ளன. எனவே, 80,00,000 வகையான உயிரினங்களைக் கடந்த பின்னரே நாம் மனித வாழ்விற்கு வருகிறோம்.
எனவே, இந்த மனிதப் பிறவி மிகவும் அரிதானது. நாம் பெரும் தொழிலதிபர்களாவதில் மட்டும் திருப்தியடையக் கூடாது. நமது அடுத்த பிறவி என்ன, நாம் என்னவாகப் போகிறோம் என்பதை அறிய வேண்டும்.
யோகிகளில் யார் முதல்வர்?
பலவிதமான மனிதர்கள் உள்ளனர். சிலர் கர்மிகள் என்றும், சிலர் ஞானிகள் என்றும், சிலர் யோகிகள் என்றும், வேறு சிலர் பக்தர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். கர்மிகள் ஜட இன்பத்திற்காக உழைக்கின்றனர், உலகின் சிறந்த ஜட வசதிகளை—இந்த வாழ்விலும், மரணத்திற்குப் பின்னர் ஸ்வர்க வாழ்விலும்—பெற விரும்புகின்றனர். ஞானிகளும் இன்பத்தையே விரும்புகின்றனர்; ஆனால், அவர்கள் இந்த ஜட வாழ்வில் விரக்தியடைந்துள்ளதால் பிரம்மனில் கலந்துவிட விரும்புகின்றனர். யோகிகள் யோக சித்திகளை விரும்புகின்றனர். பக்தர்களோ பகவானின் சேவையை மட்டுமே விரும்புகின்றனர். எனவே, பகவானைப் பற்றிய அறிவினை வளர்த்துக்கொள்வதே உயர்ந்த பண்பாடாகும்.
கர்மிகளின் பண்பாடு, ஞானிகளின் பண்பாடு, யோகிகளின் பண்பாடு, பக்தர்களின் பண்பாடு என பலவிதமான பண்பாடுகள் உள்ளன. இவர்கள் தங்களது கடமைகளை சரியாகச் செய்யும்போது, அனைவருமே யோகிகள் என்று அழைக்கப்
படுகின்றனர். இவர்கள் கர்ம யோகிகள், ஞான யோகிகள், தியான யோகிகள், மற்றும் பக்தி யோகிகள் என்று அறியப்படுகின்றனர். இருப்பினும், கிருஷ்ணர் பகவத் கீதையில் [6.47] பின்வருமாறு கூறுகிறார்,
யோகினாம் அபி ஸர்வேஷாம்
மத்–கதேனாந்தர்–ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்
ஸ மே யுக்ததமோ மத:
யார் முதல் தரமான யோகி என்பதற்கு கிருஷ்ணர் பதிலளிக்கின்றார், “என்னை எப்பொழுதும் நினைத்துக் கொண்டுள்ளவனே முதல்தர யோகி.” அதாவது, கிருஷ்ண பக்தனே தலைசிறந்த யோகி. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பலவிதமான யோகிகள் உள்ளனர், ஆனால், பகவானுக்கு சேவை செய்பவரே முதல்தர யோகியாவார்.
எனவே, நாம் யார்? கிருஷ்ணர் யார்? கிருஷ்ணருடனான உறவு என்ன? வாழ்வின் இலக்கு என்ன? என்பனவற்றை அறிந்துகொள்ளுமாறு நாங்கள் உங்களை வேண்டுகிறோம். இந்த ஞானத்தினை வளர்த்துக்கொள்ளாத வரை, நாம் வெறுமனே நேரத்தை வீணடிக்கின்றோம், மதிப்புமிக்க மானிட வாழ்வினை வீணடிக்கின்றோம்.
பூனைகளும் மரணத்தைத் தழுவுகின்றன, நாய்களும் மரணத்தைத் தழுவுகின்றன, மனிதனும் மரணத்தைத் தழுவுகின்றான்—அனைவரும் நிச்சயம் மரணமடைவோம். ஆயினும், கிருஷ்ணரை அறிந்து மரணிப்பதே வெற்றிகரமான மரணம்.
வாழ்வில் வெற்றி பெறுதல்
எனவே, நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், எங்களது ஒரே கோரிக்கை: “தயவுசெய்து கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் வாழ்வு வெற்றிபெறும்.” நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. உயிர் வாழ்வதற்கு எதையேனும் செய்தாக வேண்டும். வேலை செய்வதை நிறுத்தினால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் அதே சமயத்தில் வாழ்வினைப் பக்குவமாக்கிட இந்த ஞானத்தினை விருத்தி செய்துகொள்ள வேண்டும். வாழ்வினை பக்குவமாக்குவது எளிது: கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயலுங்கள். இதையே நாங்கள் உலகம் முழுவதும் பரிந்துரைக்கின்றோம். இது கடினமானதல்ல. நீங்கள் பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படித்தால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்வீர்கள்.
வாழ்வின் ஒவ்வோர் அடியிலும் உங்களால் கிருஷ்ணரை நினைவுகொள்ள முடிந்தால், நீங்கள் தலைசிறந்த யோகியாவீர். அனைத்திற்கும் மேலாக, நீங்கள் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மந்திரத்தினை உச்சரித்தால், உங்களால் கிருஷ்ணரை எளிதில் நினைவுகொள்ள முடியும். இதற்கு எந்த வரியும் இல்லை, உங்கள் தொழிலில் எந்த இழப்பும் இல்லை. உங்களால் ஹரே கிருஷ்ண மந்திரத்தினை உச்சரிக்க முடிந்து, கிருஷ்ணரை நினைவுகொள்ள முடிந்தால், உங்களுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன? இதனை ஏன் நீங்கள் முயற்சிக்கக் கூடாது? இதுவே உண்மையான பண்பாடு. இந்த ஞானத்தினை விருத்தி செய்தபடி, தொழிலையும் நீங்கள் தொடர்ந்து வந்தால், உங்களது வாழ்வு வெற்றி பெறும். மிக்க நன்றி.