குருட்டுத்தனம் வேண்டாம்
இறையுணர்வு, கடவுளின் திருநாமம், சாஸ்திரக் கருத்துகள் முதலியவற்றை குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது என்றும், வாத விவாதங்களுடன் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தம்மை சந்திக்க வந்த இரண்டு கிறிஸ்துவ பாதிரியார்களிடமும் இரண்டு கிறிஸ்துவ
பண்டிதர்களிடமும் உரையாடுகிறார்.
திருமதி சியாதே: படிப்பறிவற்ற பாமரனும் சரணாகதியினால் இறைவனை அடைய இயலுமா சுவாமி?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், நிச்சயமாக. சரணடைவதற்கு படிப்பறிவோ பாண்டித்துவமோ இதர தகுதிகளோ தேவையில்லை. இறைவனின் தாமரைத் திருவடிகளில் சரணடையும்போது ஒருவனது வாழ்வு பூரணத்துவம் பெறுகிறது. சாஸ்திரம் கூறுகிறது, ஆராதிதோ யதி ஹரிஸ் தபஸா தத: கிம், “பகவானின் தாமரைத் திருவடிகளில் சரணடைந்து அவரை பூஜிப்பவருக்கு எத்தகைய தவங்களும் விரதங்களும் தேவையில்லை.” மாறாக, நாராதிதோ யதி ஹரிஸ் தபஸா தத: கிம், “பகவானிடம் சரணடையாமலும் அவரை வழிபடாமலும் இருப்பவருக்கு தவங்களும் பாண்டித்துவமும் பயனற்றவை.”
மேலும், அந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம்: “உள்ளும்புறமும் இறைவனைக் காண முடிந்தவருக்கு தவத்திற்கான அவசியம் என்ன?” நாந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம், “உள்ளும்புறமும் இறைவனைக் காண முடியாதவரால் மேற்கொள்ளப்படும் தவத்தினாலும் விரதங்களினாலும் என்ன பயன்?” ஆகவே, இறைவனை உணர்வதே மனித சமுதாயத்திற்கான ஒரே கடமை.
சியாதே: நீங்கள் கூறுவதை முற்றிலும் ஏற்கிறோம்.
போதகர் பிரான்சட்: அதேசமயம் இதில் முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. “நாம் முதலில் கடவுளைப் பற்றி கற்றறிய வேண்டும். அதன் பின்னரே கடவுளிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பதை அறிய முடியும்,” என்று தாங்கள் சில நிமிடங்களுக்கு முன்பாகக் கூறினீர். தற்போதோ, “கடவுளிடம் சரணடைந்தால் போதும், அவரைப் பற்றி கற்பதற்கு அவசியமில்லை,” என்று கூறுகிறீர்.
ஸ்ரீல பிரபுபாதர்: இறைவனிடம் அன்பு செலுத்துவதையே மதம் என்று நாங்கள் கூறுகிறோம். இறைவன் யார் என்பதை அறியாத வரை உங்களால் அவரிடம் அன்பு செலுத்த இயலாது.
பிரான்சட்: அதாவது பண்டிதனாக இல்லாவிடினும், இறைவன் தம்மை வெளிப்படுத்துவார் அல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதுவே உண்மை. நீங்கள் உண்மையான பக்தராக இருந்தால், உங்களுக்கு பகவான் தம்மை வெளிப்படுத்துவார். அத: ஸ்ரீ க்ருஷ்ண நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை:, நமது குறைபாடுடைய புலன்களால் இறைவனின் நாமம், ரூபம், குணங்கள் மற்றும் லீலைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்று வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. குறைபாடுகளுடன்கூடிய தற்போதைய புலன்களைக் கொண்டு இறைவனை அறிய முடியாது. அப்படியெனில், எவ்வாறு இறைவனை அறிவது? ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ, நாவைக் கொண்டு இறைவனுக்கு சேவை செய்யும்போது இறைவன் படிப்படியாகத் தம்மை வெளிப்படுத்துவார்.
பேசுதல், உண்ணுதல் எனும் இருவிதமான செயல்களை நம்மால் நாவைக் கொண்டு மேற்கொள்ள முடியும். பகவானைப் பற்றி பேசுவதிலும் அவரது பிரசாதத்தை ஏற்பதிலும் நாவை ஈடுபடுத்தும்போது நம்மால் இறைவனை அறிய இயலும். எனவே, ஐரோப்பிய அமெரிக்க இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் நாங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தல், கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்ணுதல் ஆகிய சேவைகளை நாவைக் கொண்டு செய்வதற்கு கற்பிக்கிறோம்.
இதன் பலனாக, இவர்கள் இந்த இளவயதிலும் பகவான் கிருஷ்ணரை உணர்ந்துள்ளனர், மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளனர். தகாத பாலுறவு, மாமிசம் உண்ணுதல், போதைப் பொருட்களை உபயோகித்தல், சூதாடுதல் ஆகிய பெளதிக செயல்களைக் கைவிட்டு கிருஷ்ண சேவையில் இவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதில் நாவை ஈடுபடுத்தியதன் காரணத்தினால், மாமிசம் உண்ணுதல், போதை வஸ்துக்களை உபயோகித்தல் முதலிய அனைத்து அபத்தங்களிலிருந்தும் விடுபட்டுள்ளனர். LSD போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிப்பதற்காக அமெரிக்க அரசாங்கம் பல இலட்சம் டாலர்களைச் செலவழிக்கிறது, இருப்பினும், ஒருவரைக்கூட அப்பழக்கத்திலிருந்து அரசாங்கத்தால் விடுவிக்க இயலவில்லை. ஆனால், இந்த இளைஞர்களோ கிருஷ்ண உணர்விற்கு வந்தவுடன் அனைத்து அபத்தங்களையும் உடனடியாகக் கைவிடுகின்றனர்.
சியாதே: உங்களது வெற்றியைக் கண்டு நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: மிக்க நன்றி. இந்த இயக்கத்தை வளர்க்க எங்களுடன் இணைந்து செயல்படுங்கள். பகவானின் திருநாமத்தை உச்சரியுங்கள். “நீங்கள் கிருஷ்ணரின் திருநாமத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்,” என்று நாங்கள் கூறவில்லை. உங்களிடம் இறைவனின் நாமம் வேறு ஏதேனும் இருந்தால், அதனை நீங்கள் உச்சரிக்கலாம்.
போதகர் கேனீவ்ஸ்: நேற்று மாலையில் நிகழ்ந்த உங்களது சொற்பொழிவின்
போது, சிலர் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், சிரமமாகத்தான் இருந்தது. இன்றைய உலக மக்கள் படிப்படியாக இழிவடைந்து தரம்தாழ்ந்து வருகின்றனர். நீங்கள் இங்கு வருவதற்குச் சற்று முன்பாக, கலி யுக மக்கள் எந்த அளவிற்கு இழிவடைவர் என்பதுகுறித்து ஸ்ரீமத் பாகவதத்தின் பன்னிரண்டாம் ஸ்கந்தத்திலுள்ள விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தேன். இறையுணர்வு இல்லாததே இழிவான நிலைக்கு காரணமாகும்.
கேனீவ்ஸ்: உங்களுடைய சொற்பொழிவு ஏற்பதற்கு கடினமாக இருப்பதாக அந்த இளைஞர்கள் நினைத்திருக்கலாம். அதனால் அவர்கள் தொந்தரவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: இளைஞர்கள் படிப்படியாக இழிவடைந்து வருவதால், அவர்கள் அதிகாரிகளை ஏற்பதில்லை.
சீடர்: ஆம், ஸ்ரீல பிரபுபாதரே. நீங்கள் அதிகாரபூர்வமானவற்றை எடுத்துரைக்கும்போது அவர்கள் அதனை நிராகரிக்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: இழிவடைந்துள்ள காரணத்தினால் எந்த அதிகாரியையும் அவர்களால் ஏற்க முடிவதில்லை. அதிகாரியை ஏற்காதவர் அறிவில் முன்னேற்றம் காண இயலாது.
சீடர்: நிச்சயமாக.
ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரியை ஏற்காமலும் கீழ்ப்படியாமலும் வாழும் இந்தப் பழக்கம் அவர்களது பாதிரியார்களிடமிருந்து தொடங்கியதாக நான் நினைக்கிறேன்.
சீடர்: யாரிடமிருந்து?
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களது பாதிரியார்களிடமிருந்து தொடங்கியது; ஏனெனில், “கொல்லாதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகின்றது. ஆனால், பாதிரியார்களே கொல்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளதால், அவர்களின் சந்ததியினரும் இயற்கையிலேயே இழிவடைந்தவர்களாக உள்ளனர்.
கேனீவ்ஸ்: நேற்றைய இரவு நிகழ்ச்சிக்கு அதிகமானோர் வந்திருந்தனரா?
சீடர்: ஆமாம், அவர்கள் நள்ளிரவு வரையிலும் இருந்தனர். நேற்று ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் வந்தனர். அதில் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது பன்னிரண்டு மணி வரையிலும் இருந்திருப்பர்.
ஸ்ரீல பிரபுபாதர்: பன்னிரண்டு மணி வரையிலுமா?
சீடர்: ஆமாம், பிரபுபாதரே. அரங்கத்தின் நிர்வாகி தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி, அனைவரையும் அனுப்புமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார்.
கேனீவ்ஸ்: உங்களுடைய சீடர்களிடம் கலந்துரையாடவும் விவாதிக்கவும் இத்தனை பேர் தங்கியிருந்தது மிகவும் நல்ல விஷயமே.
ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. பொறுப்புடைய எந்த மனிதனும் இத்தகைய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவான். ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய தயா கரஹ விசார, “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணையை நன்கு ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்,” என்று சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது. குருட்டுத்தனமாக எதையும் ஏற்கச் சொல்லி நாங்கள் ஒருபோதும் பரிந்துரைப்பதில்லை. கரஹ விசார, “எல்லா கோணத்திலும் வாத விவாதங்களைக் கொண்டு நன்கு ஆராயுங்கள்.” மேலும் கூறுகிறது, விசார கரிலே சித்தே பாபே சமத்கார, “இதனை ஆராய்ந்தால், இதன் மேன்மையை உணர்வீர்கள்.”
சீடர்: பைபிள், பகவத் கீதை முதலிய ஆன்மீக நூல்களைப் புரிந்துகொள்வதற்கு வாத விவாதங்களும் ஆய்வுகளும் தேவையா?
ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. உதாரணமாக, “ஆதியிலே வார்த்தை இருந்தது,” என பைபிள் கூறுகின்றது. அதாவது, தொடக்கத்தில் கடவுளின் வார்த்தை மட்டுமே இருந்தது, அந்த வார்த்தை பௌதிக வார்த்தை இல்லை என்பது இதன் பொருளாகும்.
சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, போலி குருமார்கள் பலர், எல்லா ஒலியும் பௌதிக ஒலியே என்றும், அதனால் கிருஷ்ண நாமத்தை உச்சரிக்கும் நமது செயல் பயனற்றது என்றும் கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அந்த அயோக்கியர்களுக்கு ஒலி என்றால் என்னவென்று தெரியவில்லை. பகவானுடைய திருநாமம் என்னும் ஒலி படைப்பிற்கு முன்னரே இருந்துள்ளது என்பதை இவர்களால் உணர முடியாது. பகவானுடைய திருநாமம், அவருடைய உலகம் முதலியவை படைப்பிற்கு முன்பே இருந்தவை.