உணர்வு பரிணாமம், உடல் பரிணாமம்
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
டாக்டர் சிங்க்: ஸ்ரீல பிரபுபாதரே, 84 இலட்சம் உயிரின வகைகளும் ஒரே சமயத்தில் சிருஷ்டிக்கப்பட்டன என்று நான் பகவத் கீதையில் படித்தேன். அது சரியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
டாக்டர் சிங்க்: அப்படியானால், சில உயிர்வாழிகள் பரிணாம மாற்றங்களுக்கு உட்படாமல் நேரடியாக மனிதப் பிறவியை அடைந்துள்ளன என்று சொல்லலாமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், உயிர்வாழிகள் ஓர் உடல் வடிவிலிருந்து மற்றொன்றிற்கு மாறிச் செல்கின்றன. ஆனால் அந்த வடிவங்கள் ஏற்கனவே உள்ளன, உயிர்வாழி மட்டுமே தனது இடத்தை மாற்றிக்கொள்கிறான். இஃது ஒரு மனிதன் ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குச் செல்வதைப் போன்றது. ஓர் அறை முதல் தரமானதாகவும், மற்றொன்று இரண்டாம் தரமானதாகவும், மற்றொன்று மூன்றாம் தரமானதாகவும் இருக்கலாம். ஒரே மனிதன் தனது பண வசதிக்கு ஏற்ப, அதாவது கர்மத்திற்கு ஏற்ப, வெவ்வேறு தரப்பட்ட அறைக்குச் செல்லும் தகுதியைப் பெறுகிறான். எனவே, பரிணாமம் என்பது பௌதிக நிலையினால் ஏற்படுவதல்ல, உணர்வின் வளர்ச்சியில் ஏற்படுவதாகும், புரிகிறதா?
டாக்டர் சிங்க்: உம். ஒருவன் வாழ்வின் கீழ்நிலைக்கு விழுந்துவிட்டால் மேல்நிலைக்கு மீண்டும் படிப்படியாக உயர வேண்டியவன் என்கிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உங்களுக்குப் பண வசதி ஏற்படும்போது, உயர் தரப்பட்ட அறைக்குச் செல்வது சாத்தியமாகிறது. ஆனால் அறை ஏற்கனவே இருக்கிறது. கீழ்த்தர அறை மேல்தர அறையாக மாறுவதில்லை, அது டார்வினின் அபத்தமான கொள்கை. கீழ்த்தர அறை முதல் தரமாக மாறிவிட்டதென்று அவர் சொல்வார். நவீன விஞ்ஞானிகள் உயிர் ஜடப் பொருளிலிருந்து தோன்றியதாக எண்ணுகிறார்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஜடப் பொருள் மட்டுமே இருந்ததாகவும் அவற்றிலிருந்து உயிர் தோன்றியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அதனை நாம் ஏற்பதற்கில்லை.
டாக்டர் சிங்க்: இவையிரண்டும் ஒரே சமயத்தில் இருக்கின்றனவா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்! ஆனால் ஆத்மா சுதந்திரமானது, ஜடப்பொருளோ அதனைச் சார்ந்துள்ளது. உதாரணமாக, என்னுடைய கை கால்கள் இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் கை கால்களை நம்பியிருக்கவில்லை. ஆனால், என்னுடைய கைகளும் கால்களும் என்னை, அதாவது உடலுக்குள் இருக்கும் ஆத்மாவைச் சார்ந்திருக்கின்றன.
டாக்டர் சிங்க்: மனிதனாகப் பிறந்தவன் முக்தியடையாவிட்டால் மீண்டும் 84 இலட்சம் வகைகளில் பிறந்து மனித உருவை அடைய வேண்டுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: அவசியமில்லை. கீழ்நிலைகளில் இருக்கும்போது மட்டுமே உயிர்வாழிகள் படிப்படியாக, இயற்கை விதிகளின்படி முன்னேற்றமடைய வேண்டும். மனிதப்பிறவியில் அவனுக்கு உயரிய உணர்வு இருப்பதால், அவனுக்குச் சற்று சுதந்திரம் உள்ளது. எனவே, அவன் தன்னுணர்வில் முன்னேறியவனாக இருந்தால், தனது மறுபிறவியில் அவன் நாய் அல்லது பூனையின் உடலைப் பெறப் போவதில்லை, அவன் மற்றொரு மனித உடலை அடைவான்.
உஷித்வா ஷாஷ்வதீ: ஸமா: ஷுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோக–ப்ரஷ்டோ ‘பிஜாயதே தன்னுணர்வில் முழு வெற்றியடையாத நபர் உயர் லோகங்களில் வாழ்ந்துவிட்டு, மீண்டும் மனித உடலை அடைகிறார், (பகவத் கீதை 6.41) யோக ப்ரஷ்ட: என்னும் சொல், யோகம் பயில முயற்சித்து முழுவதுமாக வற்றியடையாதவரைக் குறிக்கின்றது. அவரைப் பொருத்தவரை பரிணாமமுறை அவசியமில்லை; அவர் மீண்டும் மனித உடலைப் பெறுகிறார், நாய் அல்லது பூனையின் உடலைப் பெறுவதில்லை.
டாக்டர் சிங்க்: நீங்கள் கூறுவது டார்வினின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக இருக்கிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: டார்வின் ஓர் அயோக்கியன். அவனது கொள்கை என்ன? அதை நாங்கள் தூக்கி எறிகிறோம். அதை நாம் எந்த அளவிற்கு நிராகரிக்கிறோமோ, அந்த அளவிற்கு ஆத்ம உணர்வில் முன்னேறுகிறோம்.
டாக்டர் சிங்க்: பல விஞ்ஞானிகள் டார்வினுடைய கொள்கையைச் சந்தேகிக்கிறார்கள். ஆனால் டார்வினின் ஆதரவாளர்கள் உயிர் ஜடப் பொருளிலிருந்து உற்பத்தியாகி, ஒற்றை உயிர்க் கூறு நிலையிலிருந்து பல கூறுகளைக் கொண்டதாகப் பரிணமித்துள்ளது என்கிறார்கள். படைப்பின் ஆரம்பத்தில் மிருகங்கள், மனிதன் போன்ற உயர்நிலைப் பிராணிகள் இருக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.
ஸ்ரீல பிரபுபாதர்: டார்வினும் அவரது சகாக்களும் அயோக்கியர்கள். ஆரம்பத்தில் உயர்மட்டப் பிராணிகள் இருக்கவில்லையென்றால் இப்போது ஏன் இருக்கின்றன? மேலும், கீழ்மட்டப் பிராணிகள் இன்னும் இருப்பது ஏன்? உதாரணமாக, இப்போது நாம் அறிவுள்ள மனிதனையும் முட்டாளான கழுதையையும் காண்கிறோம். இந்த இரண்டும் ஒரே சமயத்தில் ஏன் இருக்கின்றன? கழுதை வடிவம் மேல் மட்டத்தை அடைந்து ஏன் மறைந்து போகவில்லை? குரங்கு மனிதக் குழந்தையைப் பெற்றெடுத்ததாக நாம் கண்டதில்லையே? மனிதப் பிறவி ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றியதென்ற டார்வின் கோட்பாடு அபத்தமானது. உங்களின் முயற்சியின்படி, நீங்கள் எந்த உயிர்வகைக்கும் நேரடியாகச் செல்லலாம் என்று பகவத் கீதை கூறுகிறது. நான் சில வேளைகளில் அமெரிக்காவிற்கும் சில வேளைகளில் ஆஸ்திரேலியாவிற்கும் சில வேளைகளில் ஆப்பிரிக்காவிற்கும் செல்கிறேன். அந்த நாடுகள் ஏற்கனவே உள்ளன. நான் அவற்றிற்கு பிரயாணம் செய்கிறேன். நான் அமெரிக்காவிற்கு வந்திருப்பதால் அமெரிக்காவை நான் உண்டாக்கினேன், அல்லது நான் அமெரிக்காவாக ஆகிவிட்டேன் என்பதல்ல. நான் பார்க்காத பல நாடுகள் உள்ளன. அதனால் அவை இல்லை என்று சொல்ல முடியுமா? டார்வினை ஆதரிக்கும் விஞ்ஞானிகள் அர்த்தமற்றவர்கள். எல்லா இனங்களும் ஒரே சமயத்தில் இருக்கின்றன. எந்த இனத்திற்கும் உங்கள் விருப்பம் போல் நீங்கள் செல்லலாம் என்று பகவத் கீதை கூறுகிறது. நீங்கள் விரும்பினால் கடவுளின் நாட்டிற்குக்கூட செல்லலாம். இதையெல்லாம் கிருஷ்ணர் பகவத் கீதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.