மூலத்தை ஆய்வு செய்யுங்கள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

மூலத்தை ஆய்வு செய்யுங்கள்

உலகின் தோற்றம்குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் இதற்கான ஆதிமூலத்தை ஆராயாமல் காலத்தைக் கழிக்கின்றனர் என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். கௌதம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

 

 

டாக்டர் சிங்: ஒரு காலத்தில் பூமியானது மிதக்கும் தன்மையுடைய சில வாயுக்களின் அணுத்துகள்களால் நிறைந்திருந்தது என்றும், பிறகு அது பூமியாக மாறியது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், அந்த வாயுக்கள் எங்கிருந்து வந்தன?

டாக்டர் சிங்: அது ஏற்கனவே இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.4) கூறுகிறார்,

பூமிர் ஆபோ  வாயு:கம் மனோ புத்திர் ஏவ ச

அஹங்கார இதீயம் மேபின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்-இந்த எட்டும் எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.”

இங்கே வாயு தம்மிடமிருந்து வந்ததாக கிருஷ்ணர் விவரிக்கிறார். வாயுவைவிட மெல்லியது ஆகாயம், ஆகாயத்தைவிட சூட்சுமமானது மனம், மனதைவிட சூட்சுமமானது புத்தி, புத்தியைவிட சூட்சுமமானது பொய் அஹங்காரம், பொய் அஹங்காரத்தைக் காட்டிலும் சூட்சுமமானது ஆத்மா. விஞ்ஞானிகளுக்கு இதெல்லாம் தெரியாது. அவர்கள் ஸ்தூல பொருட்களை மட்டுமே அறிந்துள்ளனர். அவர்கள் வாயுவைப் பற்றி கூறுகிறார்கள், ஆனால் வாயு எங்கிருந்து வந்தது?

டாக்டர் சிங்: இதற்கு அவர்களால் பதிலளிக்க இயலாது.

ஸ்ரீல பிரபுபாதர்: எம்மால் பதிலளிக்க இயலும். வாயு ஆகாயத்திலிருந்தும், ஆகாயம் மனதிலிருந்தும், மனம் புத்தியிலிருந்தும், புத்தி பொய் அஹங்காரத்திலிருந்தும், பொய் அஹங்காரம் ஆத்மாவிலிருந்தும் வருவதாக நாம் பாகவதத்திலிருந்து அறிகிறோம்.

டாக்டர் சிங்: டார்வினின் உடல் ரீதியிலான பரிணாமக் கொள்கையின் தோற்றத்திற்கு முன்பாக, வேதியியல் ரீதியிலான பரிணாமம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஆனால் அந்த வேதியியல் பரிணாமம்” எனும் வார்த்தை, வேதியியலுக்கு ஒரு தோற்றுவாய் உள்ளதைக் குறிக்கின்றதே. அந்தத் தோற்றுவாய் ஓர் உயிர். எலுமிச்சையிலிருந்து சிட்ரிக் அமிலம் வெளிப்படுகிறது. நமது உடலிலிருந்து சிறுநீர், இரத்தம், வியர்வை போன்ற அமிலங்கள் வெளிப்படுகின்றன. அதாவது, அமிலங்கள் அல்லது இரசாயனங்கள் உயிரிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. உயிர் இரசாயனங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்.

டாக்டர் சிங்: உயிருக்கான விதை செல்களில் இருந்தால், உயிர் தானாகவே வளர்ச்சியுற்று வேலை செய்கின்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஆனால் அந்த விதையை அளிப்பவர் யார்? பீஜம் மாம் ஸர்வ பூதானாம் வித்தி பார்த்த ஸநாதனம், பிருதாவின் மகனே, நானே அனைத்து உயிர்வாழிகளின் விதையளிக்கும் தந்தை என்று கிருஷ்ணர் கீதையில் (7.10) இக்கேள்விக்கு பதிலளிக்கிறார். மேலும், அவர் கூறுகிறார் (பகவத் கீதை 14.4),

ஸர்வ யோனிஷு கௌந்தேயமூர்தய: ஸம்பவந்தி யா

தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோனிர்அஹம் பீஜ ப்ரத: பிதா 

குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன; மேலும், நானே விதையளிக்கும் தந்தை என்பது–புரிந்துகொள்ளப்பட வேண்டும்.”

டாக்டர் வோல்ஃப் ரோட்கே: ஆனால் ஸ்ரீல பிரபுபாதரே, ஒருவேளை மனிதவியல் துறையில் விஞ்ஞானிகள் உண்மையிலேயே சில உயிருள்ள அமைப்பினை அல்லது செல்லினை உருவாக்குவதில் வெற்றி பெற்று விட்டால், நீங்கள் அதற்கு என்ன சொல்வீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: அதில் அவர்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது? இயற்கையில் இருப்பதை அவர்கள் வெறுமனே நகல் செய்கின்றனர். மக்கள் நகலின் மீது (உண்மையின் போலித் தோற்றத்தின் மீது) அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இரவு கேளிக்கை விடுதியில் ஒருவன் நாயைப் போல குரைத்தால் மக்கள் அதை பணம் கொடுத்து பார்க்கச் செல்வர். ஆனால் உண்மையான நாய் வீதியில் குரைக்கும்போது யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை.

டாக்டர் சிங்: வேதியியல் பரிணாமம்குறித்த கருத்து முதன்முதலில் 1920இல் ஒரு ரஷ்ய உயிரியல் அறிஞரால் கூறப்பட்டது. வேதியியல் பரிணாமத்திற்கு முன்பாக பூமி ஒரு முறையான அமைப்பாக இல்லை என்று அவர் கூறுகிறார். அதாவது, பூமி முழுவதும் வெறும் ஹைட்ரஜன் நிரம்பியதாகவும் சிறிதளவு ஆக்ஸிஜன் இருந்ததாகவும் அவர் கூறுகிறார். காலப்போக்கில், சூரியக் கதிர்களின் காரணத்தினால், இந்த ஹைட்ரஜன் மூலக்கூறுகள் வெவ்வேறு இரசாயனங்களாக மாற்றம் பெற்றன என்கிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: இது வெறும் பகுதி ஆய்வுதான். முதலில் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது? விஞ்ஞானிகள் தொடக்கத்தை ஆய்வு செய்யாமல் நடுவில் இருக்கும் விஷயங்களையே ஆய்வு செய்கின்றனர். தொடக்கத்தை நாம் அறிந்திருக்க வேண்டும், ஆனால் தொடக்கத்தை இவர்கள் ஆய்வு செய்வதே இல்லை. (கடற்கரையில் நின்றபடி தொடுவானில் தென்பட்ட விமானத்தைச் சுட்டிக்காட்டி) இந்த ஆகாய விமானம் இருக்கின்றது, இது கடலிலிருந்து வந்தது என்று கூறுவீர்களா? திடீரென்று கடலில் இருந்து ஒளி தோன்றியது பின்னர் அது விமானமாக மாறியது என்று முட்டாளே கூறுவான். ஆனால் அதுவே அறிவியல் விளக்கமாக உள்ளது, விஞ்ஞானிகளின் விளக்கங்களும் அதைப் போன்றதே. அவர்கள் கூறுகின்றனர், இஃது ஏற்கனவே இருந்தது, பின்னர் திடீரென்று இதிலிருந்து அது தோன்றியது.” இவ்வாறு கூறுதல் அறிவியல் அல்ல. தொடக்கத்தைப் பற்றிக் கூறுவதே அறிவியல். ஒருவேளை விஞ்ஞானிகள் இயற்கையை ஒத்த எதையாவது உருவாக்கினால் நாம் ஏன் அவர்களைப் புகழ வேண்டும். மாறாக, அனைத்தையும் படைத்த கடவுளை நாம் புகழ வேண்டும். அதுவே, நமது தத்துவம்.

டாக்டர் சிங்: ஒரு விஞ்ஞானி ஏதேனும் ஒரு புதிய கொள்கையைக் கண்டுபிடிக்கும்போது அதற்கு தனது பெயரை வைத்துக் கொள்கிறான்…

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், இந்த விதிகள் ஏற்கனவே இருக்கின்றன, ஆனால் இந்த அயோக்கியன் அதற்குரிய பெருமையை தனதாக்கிக்கொள்கிறான்.

டாக்டர் சிங்: உண்மையில் அவர்கள் இயற்கைக்கு எதிராகப் போராடுகின்றனர். அத்தகைய போராட்டத்தில் அவர்கள் குறிப்பிட்ட அளவு மகிழ்ச்சியையும் பெறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இது குழந்தைத்தனமான மகிழ்ச்சி. குழந்தை கடற்கரையில் மணல் கோட்டையை மிகுந்த சிரமத்துடன் கட்டுகிறது. அதில் அக்குழந்தை மகிழ்ச்சியடையலாம், ஆனால் அது குழந்தைத்தனமானதே. அது வளர்ச்சியடைந்த மனிதனின் மகிழ்ச்சியல்ல. போலியான மகிழ்ச்சியை பௌதிக மனிதன் உருவாக்கியுள்ளான். நிரந்தரமாக இன்பம் அனுபவிக்கும் சூழ்நிலையை அவர்களால் உருவாக்க இயலாத காரணத்தினால், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான நாகரிகத்தை அவன் ஏற்படுத்தியுள்ளது போலியானதாகும். சௌகரியமான நாகரிகத்தை தக்க வைப்பதற்காக அவர்கள் வசீகரமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால் அவர்களால் நிரந்தரமாக இன்பம் துய்க்கும் சூழ்நிலையை உருவாக்க இயலாத காரணத்தினால், இவை அனைத்தும் போலியானதாகும். யாரையும் எப்போது வேண்டுமானாலும் மரணம் எட்டி உதைக்கும். அப்போது அவர்களது இன்பங்கள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும்.

டாக்டர் சிங்: ஆகவேதான், அவர்கள் கடவுள் எதையும் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். நாம் இங்கு நிரந்தரமாக வாழ முடியாததால் அவ்வாறு கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், கடவுள் நாம் நிம்மதியுடன் அமைதியாக வாழ்வதற்கும் அவரைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் தேவையான அனைத்தையும் நமக்கு வழங்கியுள்ளார். அவர்கள் ஏன் கடவுளைப் பற்றி வினவுவதில்லை? மாறாக, அவர்கள் கடவுளை மறப்பதற்கான விஷயங்களையே செய்து கொண்டுள்ளனர்.

வேதியியல் ஆராய்ச்சி செய்பவர்கள் அந்த வேதிப் பொருட்களின் ஆதாரம் ஓர் உயிரே என்பதை அறிய வேண்டும்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives