துயரங்கள் நிறைந்த உலகில் அமைதியைப் பெறுதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

விபத: ஸந்து தா: ஷஷ்வத்  தத்ர தத்ர ஜகத்-குரோ

பவதோ தர்ஷனம் யத் ஸ்யாத்  அபுனர் பவ-தர்ஷனம்

குந்தி மஹாராணி கூறினாள், “எங்களுக்கு எழுந்த அவ்வெல்லா துயரங்களும் மீண்டும்மீண்டும் தோன்ற வேண்டும் என்று விரும்புகிறேன், அதன் மூலமாக உங்களை மீண்டும்மீண்டும் எங்களால் தரிசிக்க இயலும்; தங்களை தரிசிப்பதால் நாங்கள் மீண்டும்மீண்டும் பிறப்பு இறப்பினைச் சந்திக்க வேண்டிய தேவை இருக்காது.” (ஸ்ரீமத் பாகவதம் 1.8.25)

இந்த ஜடவுலகம் துன்பங்கள் நிறைந்த இடம் என்று பகவத் கீதையில் பகவான் சான்றளிக்கின்றார். குறைமதி கொண்ட நபர்கள் இந்த துயரங்களை அனுசரித்துக் கொண்டு வாழ்வதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டுகின்றனர். பகவானின் உலகைப் பற்றிய தகவல் அவர்களிடம் இல்லை, பகவானின் அந்த உலகம் துயரங்கள் துளியுமற்ற ஆனந்தமயமான உலகமாகும்.

ஜடவுலகில் மகிழ்ச்சி சாத்தியமல்ல

ஆத்மா எல்லா பௌதிகத் துயரங்களுக்கும் அப்பாற்பட்டதாகும்; எனவே, பெயரளவிலான துயரங்கள் அனைத்தும் பொய்யானவை. ஒரு மனிதன் தனது கனவில் புலி ஒன்று தன்னை விழுங்குவதைக் காணலாம், அத்துயரத்தினை நினைத்து அவன் அழ நேரிடலாம். ஆனால் உண்மையில் அங்கே புலியும் இல்லை, துயரமும் இல்லை; அது வெறும் கனவு மட்டுமே. அது போலவே வாழ்வின் எல்லா துயரங்களும் கனவுகளாகக் கூறப்படுகின்றன. ஒருவன் பக்தித் தொண்டின் மூலமாக பகவானுடன் ஏதேனும் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளும் அதிர்ஷ்டத்தைப் பெற்றால், அது மிகவும் நன்மை பயப்பதாகும்.

இந்த அருமையான ஸ்லோகத்தில் விபத என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. விபத: என்றால் துயரங்கள் அல்லது அபாயங்கள் என்று பொருள்படும். துயரங்களும் அபாயங்களும் கிருஷ்ணரை நமக்கு நினைவூட்டினால், அவை நன்மை பயக்கக்கூடியவையாகக் கருதப்படுகின்றன. இந்த ஜடவுலகம் அபாயங்கள் நிறைந்தது என்பதால், இங்கே அபாயங்கள் நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். ஆனால் இதை உணராத முட்டாள் மக்கள் அபாயங்களை தவிர்ப்பதற்காக முயல்கின்றனர். பணிபுரியும் மனிதன் ஒருவன் நினைக்கின்றான், நான் இப்போது கடினமாக உழைத்து வங்கியில் பணத்தைச் சேகரித்து வைப்பேன், வயதான பின்னர் பணிபுரியாமல் இன்பமாக வாழ்வேன்.” யாரும் வேலை செய்ய விரும்புவதில்லை, பணம் சம்பாதித்த பின்னர் வேலையிலிருந்து ஓய்வுபெற்று மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகின்றனர். ஆனால் அது சாத்தியமல்ல. இந்த முறையின் மூலமாக மகிழ்ச்சியாக இருத்தல் யாருக்கும் சாத்தியமல்ல.

கடல் போன்ற அபாயம்

இங்கே குந்திதேவி அபுனர் பவ-தர்ஷனம் என்று பேசுகிறாள். புனர் பவ என்றால் மீண்டும்மீண்டும் பிறத்தல் என்று பொருள். இங்கிருக்கக்கூடிய என்னும் முன்னடையானது “இல்லை” என்று பொருள்படுகிறது. மீண்டும்மீண்டும் பிறந்து இறப்பதே உண்மையான அபாயமாகும். இந்த அபாயத்தை நாம் நிறுத்தியாக வேண்டும். இந்த பௌதிக உலகம் முற்றிலும் அபாயங்கள் நிறைந்தது (பதம் பதம் யத்விபதாம்).

உதாரணமாக, ஒருவர் வலிமையான கப்பல் ஒன்றில் கடலில் பயணம் செய்யலாம், ஆனால் அந்த கப்பல் ஒருபோதும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது; ஏனெனில் கடலில் இருக்கும்போது எந்த தருணத்திலும் அபாயங்கள் நிகழலாம். டைட்டானிக் பாதுகாப்பானதாக இருந்தது, ஆனால் அதன் முதல் பயணத்திலேயே அது மூழ்கி விட்டது, பல்வேறு முக்கியமான மனிதர்கள் உயிரை இழந்தனர். அதனால் அபாயம் என்பது நிச்சயமாக ஒவ்வோர் அடியிலும் உள்ளது. இந்த ஜடவுலகம் முற்றிலும் அபாயங்கள் நிறைந்ததாகும். எனவே, இந்த அபாயக் கடலை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கடப்பதே நமது பணியாக இருக்க வேண்டும். கடலில் இருக்கும் வரை நாம் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளோம். கப்பல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அந்தச் சூழ்நிலை அபாயகரமானது என்பதே உண்மை. கடலலைகளால் நாம் சஞ்சலமடையக் கூடாது, கடலைக் கடந்து மறுகரைக்குச் செல்வதில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும்.

வசதியான கப்பலில் இருந்தாலும், கடலில் இருக்கும் வரை அபாயம் இருந்து கொண்டே இருக்கும்.

இன்பமான வழிமுறை

குருக்ஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கூறினான், “நான் இந்த உடலல்ல, ஆன்மீக ஆத்மா என்பதை முழுமையாக ஏற்கிறேன். உடல் அழிவடையும்போது ஆத்மா அழிவதில்லை. ஆயினும், எனது மகனோ பாட்டனாரோ மடிவதைக் காணும்போது, அமைதியாக இருத்தல் எவ்வாறு சாத்தியம்? இங்கே வருத்தமும் துயரமும் இருக்கத்தான் செய்கிறது.” கிருஷ்ணர் அர்ஜுனனின் கூற்றினை மறுக்கவில்லை, “ஆமாம், அஃது உண்மையே. நீ உடல்சார்ந்த வாழ்வில் இருப்பதால், துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதனால் அவற்றை சகித்துக்கொள்ள வேண்டும். வேறு வழிகள் ஏதும் கிடையாது.” (பகவத் கீதை 2.14)

அமெரிக்காவில் காலை வேளையில் சில நேரங்களில் மிகவும் குளிராக இருக்கலாம், அஃது அந்நேரத்தில் குளிப்பதற்கு சிரமத்தைக் கொடுக்கலாம். அதற்காக பக்தர்கள் காலை நேரத்தில் குளிக்காமல் இருந்துவிடுவார்களா? இல்லை. குளிர்ச்சியாக இருந்தாலும் அவர்கள் தினசரி குளிக்கின்றனர். இது தபஸ்ய அல்லது தவம் என்று அழைக்கப்படுகிறது. தபஸ்ய என்றால் நம்முடைய கிருஷ்ண உணர்வினை நிறைவேற்றும் பொறுட்டு உலகின் எல்லா அபாயங்களையும் துயரங்களையும் பொறுத்துக்கொள்வதாகும்.

சில நேரங்களில் கடும் தவங்களை மேற்கொள்பவர்கள் தங்களைச் சுற்றிலும் நெருப்பை மூட்டிக் கொண்டு கடும் கோடை வெயிலில் கொதிக்கும் சூரியனின் கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அதுபோலவே, கடும் குளிரில் கழுத்துவரை நீரில் இறங்கி தியானம் செய்வர். அத்தகு கடும் தவங்கள் தியானப் பாதையில் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆனால் சைதன்ய மஹாபிரபு அதுபோன்ற தவங்களை நமக்கு பரிந்துரைக்கவில்லை. மாறாக, அவர் நமக்கு எளிமையான நிகழ்ச்சியினை வழங்கியுள்ளார்: கீர்த்தனம் செய்யுங்கள், ஆடுங்கள், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தினை சுவையுங்கள். இவ்வளவு எளிமையாக உள்ளபோதிலும் நாம் இவற்றை விரும்புவதில்லை. இந்த சிறிய தவங்களைக் கூட ஏற்றுக்கொள்வதற்கு இயலாத அளவிற்கு நாம் வீழ்ச்சியடைந்துள்ளோம். இந்த வழிமுறை மிகவும் இன்பகரமானது. (ஸுஸுகம் கர்தும் அவ்யயம்). இருப்பினும் இதை நாம் ஏற்பதில்லை. தெருவில் அலைந்து திரிந்து காய்ந்து போனாலும் பரவாயில்லை, மதுவுடனும் மாதுவுடனும் வாழ்வதே வாழ்க்கை என்று மக்கள் நினைக்கின்றனர். இவர்களை எவ்வாறு திருத்த முடியும்?

அருகிலும் உள்ளார், தொலைவிலும் உள்ளார்

இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் எல்லா தரப்பட்ட மக்களுக்கும் ஆடிப் பாடி கிருஷ்ண பிரசாதம் ஏற்று மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் வழங்குகிறது, ஆனால் மக்கள் இதனை ஏற்பதில்லை. இஃது அவர்களது துரதிர்ஷ்டம். கலி யுகத்தின் இந்த துரதிர்ஷ்டமான நிலையினை பிரதிபலிக்கும் விதமாக சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், “ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதில் எனக்கு பற்றுதல் இல்லாத அளவிற்கு நான் துரதிர்ஷ்டசாலியாக உள்ளேன்.”

கடவுளின் தெய்வீக திருநாமமான “கிருஷ்ண” என்பதில் எல்லா சக்திகளும் அடங்கியுள்ளன என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். கிருஷ்ணர் எல்லா சக்திகளும் கொண்டவர், அவரைப் போலவே அவரது திருநாமமும் எண்ணற்ற சக்திகளைக் கொண்டுள்ளது. கிருஷ்ணருக்கு ஆயிரக்கணக்கான திருநாமங்கள் உள்ளன, அவற்றில் “கிருஷ்ண” என்னும் திருநாமம் தலையாயதாகும், இந்த திருநாமத்தை உச்சரிப்பதில் எத்தகு கடினமான விதிகளும் நெறிகளும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்பதில்லை, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். மேலும், கிருஷ்ணருடைய பெயரும் கிருஷ்ணரும் சமமானவர்களே.

கிருஷ்ணர் வெகு தொலைவில் உள்ளார் என்று நாம் நினைக்கலாம், ஆனால், கிருஷ்ணர் நமக்குள்ளும் இருக்கிறார் என்பதே உண்மை. அவர் வெகு தொலைவில் உள்ளார், ஆனால் அதே சமயத்தில் அவர் மிக அருகிலும் உள்ளார். கிருஷ்ணர் மிகமிக தொலைவில் இருப்பதாக நாம் கருதினால் கூட, அவருடைய நாமம் எங்கும் உள்ளது. நாம் ஹரே கிருஷ்ண என்று உச்சரித்த மாத்திரத்தில், கிருஷ்ணர் உடனடியாக அங்கே தோன்றுகிறார். கிருஷ்ணரை இவ்வளவு எளிதில் அணுக இயலும். நாம் எந்த நேரத்திலும் கிருஷ்ணருடைய நாமத்தைக் கூறி கிருஷ்ணரை உடனடியாக பெற முடியும்.

அபாயங்களை வரவேற்றல்

பக்தனானவன் ஒருபோதும் அபாயங்களால் சஞ்சலமடைவதில்லை, துயரங்களும் வாழ்வின் சிக்கல்களும் அவனை சஞ்சலப்படுத்துவதில்லை. மாறாக, அவன் அவற்றை வரவேற்கின்றான். அவன் சரணடைந்த ஆத்மாவாக இருப்பதால் அபாயங்களும் நன்மைகளும் கிருஷ்ணரால் வழங்கப்படும் பல்வேறு தோற்றங்களே என்பதை அவன் அறிந்துள்ளான். எனவே, பக்தன் செல்வச் செழிப்பில் இருந்தாலும் அபாயத்தில் இருந்தாலும் ஒருபோதும் சஞ்சலமடைவதில்லை, அவை இரண்டுமே கிருஷ்ணருடையவை என்பதை அவன் அறிந்து செயல்படுகிறான்.

எனவே, குந்திதேவி கூறுகிறாள், விபத: ஸந்து தா: ஷஷ்வத், “துயரங்கள் மீண்டும்மீண்டும் தோன்றுவதாகட்டும்.” அபாயமான சூழ்நிலையில் கிருஷ்ணரை எவ்வாறு நினைப்பது என்பதை அறிந்திருப்பதால், அவள் அபாயங்களை வரவேற்கின்றாள், “எம்பெருமானே நான் அபாயங்களை வரவேற்கின்றேன்; ஏனெனில் அபாயங்கள் வரும்போது என்னால் உங்களை நினைவுகொள்ள முடிகிறது.”

எனவே, நாம் அபாயகரமான சூழ்நிலையில் வைக்கப்பட்டால், அந்தச் சூழ்நிலை கிருஷ்ணரை நினைவுகொள்வதற்கு நமக்கு உதவியாக அமையும், அதனால் அந்தச் சூழ்நிலையினை நாம் வரவேற்க வேண்டும், ஏன் இதனை வரவேற்க வேண்டும்? ஏனெனில், கிருஷ்ணரைக் காண்பது அல்லது நினைப்பது என்பது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றமாகும், அதன் மூலமாக நாம் வருங்காலத்தில் எந்த அபாயங்களையும் சந்திக்க நேரிடாது. த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ  ஒருவன் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றமடைந்தால், அதன் விளைவாக அவன் இந்த உடலைவிட்ட பின்னர், மீண்டும் இந்த பௌதிக உலகில் பிறவியெடுக்க மாட்டான். இதுவே விரும்பப்படுகிறது.

கையில் வெட்டுப்படுதல்

எனவே, கிருஷ்ண உணர்வில் சில அபாயங்களும் துன்பங்களும் இருந்தால்கூட, நாம் அவற்றை சகித்துக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரைப் புகழ்வதற்காக அத்தகு அபாயங்களை நாம் வரவேற்க வேண்டும், கிருஷ்ணரைப் புகழ்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்? தத் தே ’நுகம்பாம் ஸுஸமீக்ஷமான: எம்பெருமானே, தங்களது கருணையினால் நான் இந்த அபாயகரமான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளேன்.” இதுவே பக்தனின் எண்ணமாகும். அவன் அபாயத்தினை அபாயமாகக் கருதுவதில்லை. மாறாக, அவன் அதனை கிருஷ்ணரின் கருணையாக நினைக்கின்றான். அஃது எத்தகைய கருணை? புஞ்ஜான ஏவாத்ம-க்ருதம் விபாகம், “என்னுடைய பழைய செயல்களினால், நான் மேலும் அதிக துன்பத்தை அடைய வேண்டும். ஆனால் நீங்கள் அந்த துயரத்தைக் குறைத்து எனக்கு குறைந்த அளவே வழங்குகிறீர்.” வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ணரின் கருணையினால் பக்தன் சிறிதளவு தண்டனையினை மட்டுமே பெறுகிறான்.

உதாரணமாக, ஒருவன் கத்தியினால் குத்தப்பட்டு மரணமடைய வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கலாம், ஆனால் கொலை செய்யப்படுவதற்கு பதிலாக, அவன் தனது கையில் சிறிய வெட்டுக்காயத்துடன் தப்பலாம். இவ்வாறாக, யாரெல்லாம் பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார்களோ, அவர்களது முந்தைய பாவச் செயல்களின் விளைவுகள் குறைக்கப்படுகின்றன.

எனவே, பக்தன் அபாயத்தை எண்ணி ஏன் அஞ்ச வேண்டும்? நாம் கிருஷ்ண உணர்வில் கிருஷ்ணரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்; நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் கிருஷ்ண உணர்வில் வாழ்வோமேயானால், மீண்டும் இந்த பௌதிக உலகத்திற்குத் திரும்பி வர மாட்டோம் (அபுனர் பவ-தர்ஷனம்). நாம் மீண்டும்மீண்டும் கிருஷ்ணரைப் பற்றி நினைத்து கிருஷ்ணரைப் பற்றி கேட்டு கிருஷ்ணரைப் பற்றி படித்து கிருஷ்ணருக்காக வேலை செய்து எப்படியோ கிருஷ்ண உணர்வில் இருப்போமேயானால், மீண்டும்மீண்டும் இந்த பௌதிக உலகில் பிறத்தல் என்பதிலிருந்து பாதுகாக்கப்படுவோம். இதுவே உண்மையான நன்மையாகும்.

கிருஷ்ணரின் திருநாமத்தை பாடி ஆடுதல் என்பது எளிமையான இன்பகரமான வழிமுறையாகும்.

திடமான நம்பிக்கை வேண்டும்

குருக்ஷேத்திரப் போரின் வெற்றிக்கு முன்பாக, பாண்டவர்கள் பல்வேறு அபாயமான சூழ்நிலையில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது, அரக்கு மாளிகைக்கு நெருப்பூட்டப் பட்டது, மனிதனை உண்ணும் ராட்சசர்களை அவர்கள் சந்திக்க நேரிட்டது, இராஜ்யத்தை இழந்தனர், மனைவி அவமதிக்கப்பட்டாள், கௌரவத்தை இழந்தனர், காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனவே, “நான் பக்தனாகிவிட்டேன், இனிமேல் என்னுடைய வாழ்வில் அபாயங்களும் துயரங்களும் இருக்காது,” என்று நாம் நினைக்கக் கூடாது. பிரஹலாத மஹாராஜா மாபெரும் துன்பத்தை அனுபவித்தார், பாண்டவர்கள், ஹரிதாஸ தாகூர் போன்ற இதர பக்தர்களும் மாபெரும் துன்பங்களை அனுபவித்தனர். எனவே, துயரங்களால் நாம் சஞ்சலமடையக் கூடாது. “கிருஷ்ணர் உள்ளார், அவர் எனக்கு பாதுகாப்பளிப்பார்,” என்பதில் நாம் திடமான நம்பிக்கைக் கொண்டிருத்தல் அவசியம். கிருஷ்ணரின் அடைக்கலத்தைத் தவிர வேறு அடைக்கலத்தை நாடுவதற்கு முயலக் கூடாது, எப்போதும் கிருஷ்ணரிடம் அடைக்கலம் கொள்ள வேண்டும்.

(தமிழாக்கம்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்)

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives