சாத்தான் இறைவனின் போட்டியாளனா?

Must read

Jaya Krishna Dasa
திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

 

சில மத நம்பிக்கைகளில், இறைவனுக்கு எதிரான காரியங்கள் சாத்தானால் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இறைவனை எதிர்த்து அந்த பதவிக்காக சாத்தான் புரட்சி செய்தான் என்றும், எண்ணிலடங்கா ஜீவராசிகளில் சிலர் சாத்தானின் திட்டத்திற்கு துணை போனார்கள் என்றும், சிலர் நடுநிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாது இருந்தனர் என்றும், பலர் சாத்தானை எதிர்த்து இறைவனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

இறைவனை எதிர்க்கத் துணிந்தவர்கள் மிருகங்களாகவும் பேய்களாகவும் இருக்கின்றனர் என்றும், இறைவனை எதிர்ப்பதா வேண்டாமா என தடுமாற்றத்தில் இருந்தவர்கள் மனிதர்களாக இருப்பதாகவும், இறைவனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தவர்கள் தேவர்களாக இருப்பதாகவும் கூறுவர். மேலும், இப்புவியினை மட்டுமே சாத்தான் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது என்றும், கடவுள் பணியில் ஈடுபடுகின்றவர்களை இந்த சாத்தான் திசை திருப்பவும் தடுக்கவும் முயலும் என்றும் கூறி வருகின்றனர்.

இத்தகைய தகவல்கள் இறைவனின் உன்னத நிலை மற்றும் அவரது உன்னத சக்தியைப் பற்றிய ஞானமில்லா தன்மையினை வெளிப்படுத்துகின்றது. இந்த உலகில் ஏற்படும் தீமைகளுக்கு முறையான தத்துவ விளக்கம் வழங்க இயலாதபோது புனையப்பட்ட கற்பனையான கதையே சாத்தான் எனப்படும் கருத்து. இதனை இக்கட்டுரையில் சற்று காண்போம்.

இறைவன் சர்வ வல்லமை படைத்தவர்

இறைவன் சர்வ சக்திகளையும் பெற்றவராவார்; அவருக்கு சமமாகவோ அவரை விட உயர்வாகவோ அவருக்கு போட்டியாகவோ யாரும் இருப்பதில்லை, அவ்வாறு இருப்பதும் இயலாத ஒன்று. எனவேதான், அவர் ஒப்பிலியப்பன், ஒப்பில்லாதவன் என்று அறியப்படுகிறார். அவ்வாறு யாரேனும் கடவுளுடன் போட்டியிடும் அளவிற்கு திறன் படைத்தவராக அல்லது உயர்ந்தவராக இருப்பாரேயாயின், அந்தக் கடவுள் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்பது அடிப்படை அறிவாகும். தனக்கு ஒரு காரணமில்லாது, தானே அனைத் திற்கும் காரணமாக இருப்பவரே கடவுள். கடவுள் என்றால் அனைத்தையும் கடந்து உள்ளிருப்பவர் என்று பொருள்.

அவரே ஸர்வ காரணங்களுக்கும் காரணம் என்று பிரம்ம சம்ஹிதை குறிப்பிடுகிறது. இவ்வுலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் கடவுள் எல்லா காரணங்களுக்கும் காரணமாவார்.

மத் ஸ்தானி பூதானிபஷ்ய மே யோகம் ஐஷ்வரம்

பூத ப்ருன் பூத-ஸ்தோமமாத்மா பூத-பாவன:

இருப்பினும், படைக்கப்பட்டவை எல்லாம் என்னில் நிலை பெற்றிருக்கவில்லை. எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்! நானே எல்லா உயிரினங்களையும் காப்பவன் என்றபோதிலும், எங்கும் நிறைந்துள்ளவன் என்றபோதிலும், நான் இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் ஒரு பகுதி அல்ல, ஏனெனில் நானே படைப்பின் மூல காரணம். (பகவத் கீதை 9.5)

கடவுளிடம் பல்வேறு சக்திகள் இருப்பதால், எந்த ஒரு காரியத்தையும் அவர் தானே இறங்கி வந்து செயல்புரிய வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக, அவர் படைக்க வேண்டும் என நினைக்கும்போதே அவரது சக்திகள் அவ்வேலையை நிறைவேற்றிவிடுகின்றன. இப்பிரபஞ்சம் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், தனது விருப்பத்தின் பேரில் இது தானாகத் தோன்றி, இறுதியில் தனது விருப்பத்தின் பேரிலேயே அழியவும் செய்கின்றது என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (9.8) கூறுகிறார்.

இறைவன் நினைத்தாலே காரியங்கள் நடக்கும். இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சங்கள், அதனுள் இருக்கும் கோடிக்கணக்கான உலகங்கள் என அனைத்துமே பகவான் நினைத்த மாத்திரத்திலேயே தோன்றுகின்றன, அவர் நினைத்த மாத்திரத்தில் மறையவும் செய்கின்றன. எனவே, அவரால் கட்டுப்படுத்த முடியாமல் தீமைகளை இழைப்பவர் என்று யாரும் இருக்க முடியாது.

எல்லா பிரபஞ்சங்களும் இறைவன் நினைத்த மாத்திரத்தில் தோன்றி மறைகின்றன, அவருக்கு அப்பாற்பட்டதாக எதுவும்  இருக்க முடியாது.

கடவுளின் இதர தன்மைகள்

கடவுள் என்பது ஒரு பதவி அல்ல. கடவுள் என்பவர் சிலர் கூடி ஓட்டெடுப்பு நடத்தி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல. கடவுள் என்ற பதவியில் எவர் வேண்டுமானாலும் அமரலாம் என நினைப்பது முற்றிலும் அபத்தமானதாகும்.

ஜடத் தன்மைகள் துளியும் இல்லாதிருப்பதுவே கடவுளின் தன்மையாகும். ஜடத் தன்மைகளிலிருந்து விடுபடுபவர் கடவுளின் இராஜ்ஜியத்தை அடையலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், அந்த கடவுள் எவ்வாறு ஜடத் தன்மைக்கு உட்பட்டவராக இருக்க முடியும்? அனைத்தையும் படைத்து, காக்கின்ற இறைவன், ஜடவுலகின் கட்டுப்பாட்டிற்குள் துளியளவும் இருப்பதில்லை. அவரைக் கட்டுப்படுத்தக்கூடியது என்று எதுவும் இல்லை, கட்டுப்படுத்துபவர் என்று யாரும் கிடையாது. எனவே, அவர் எவர் மீதும் கோபத்துடன் இருக்க வேண்டியதே கிடையாது.

கடவுள் காலத்தின் பாதிப்புகளுக்கு உட்படாதவர். இவ்வுலகில் வாழ்பவர்கள் மட்டுமே பிறப்பு, இறப்பு என்று தோன்றி மறைகின்றனர், இடையில் முதுமை பருவத்தையும் அடைகின்றனர். ஆனால் இறைவன் அப்படிப்பட்டவர் அல்ல. முதுமை என்பதோ இயலாமை என்பதோ அவருக்கு கிடையாது. அவர் என்றும் இளமையானவர். அவர் நித்தியமாக வாழும் புராண புருஷராக உள்ளபோதிலும், என்றென்றும் இளமையாக (நவ யௌவனம்) இருப்பவர் என்று கூறப்படுகிறது. அவர் புராண புருஷர், மிகவும் பழமையான நபர் என்பதால், அவர் தன் கையில் கோல் வைத்துக்கொண்டு நடக்கக்கூடிய முதியவர் அல்ல. அவரின் உடல் ஸச்-சித்-ஆனந்தம் என்று வர்ணிக்கப்படுகின்றது. அதாவது பூரண அறிவையும் பூரண ஆனந்தத்தையும் நித்தியமாக கொண்டவர் இறைவன். அவரின் சக்திகள் அளவிட முடியாதவை. அவர் எவ்வகையிலும் எக்காலத்திலும் தன்னில் குறையில்லாதவர். அப்படிப்பட்டவர்தான் கடவுளாகவே இருக்க முடியும். எனவே, ஏதோ ஒரு சாத்தான் கடவுளை எதிர்க்கின்றான் என்பது வறண்ட கற்பனையாகும். கடவுள் தனக்கு எதிராக ஒருவனைப் படைத்தார், அவன் கடவுளை எதிர்த்து அனைவரையும் ஒன்று கூட்டி புரட்சி செய்கிறான் என்று கூறுபவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்! ஒருவன் புரட்சி செய்யும்போது, அவனை ஒன்றும் செய்ய இயலாது கையைப் பிசைந்து கொண்டிருக்க கடவுள் ஒன்றும் திறமை இல்லாதவர் அல்லவே.

நமக்கு துன்பம் வருவது ஏன்?

கடவுளுக்கு போட்டியாக சாத்தான் என்று யாரும் இல்லை. அப்படியெனில், மக்களுடைய துயரத்திற்கு காரணமாக இருப்பது என்ன?

ஒவ்வொரு ஜீவனுக்கும் தனித் தன்மை உள்ளது, கொஞ்சம் சுதந்திரமும் உள்ளது. இறைவன் பூரண சுதந்திரம் கொண்டவர், அவரது அம்சங்களான ஜீவன்களுக்கு சிறிதளவு சுதந்திரம் உள்ளது. கடவுளும் ஜீவராசிகளும் ஒரே தன்மையை உடையவர்கள், ஆனால் அளவில் வேறானவர்கள். இறைவன் விபு (பெரியவர்) என்றும், ஜீவராசிகள் அணு (சிறியவர்கள்) என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது, கடவுள் ஒரு கடல் என்றால், ஜீவராசிகள் அனைவரும் அந்த கடலின் ஒரு துளியைப் போன்றவர்கள்.

இந்த ஜீவராசிகள் அனைவரும் கடவுளைப் போன்று நிரந்தரமானவர்கள். இறைவனுக்குப் பல்வேறு சேவைகளைப் புரிய வேண்டிய ஜீவன்கள், சுயமாக அனுபவிக்க விரும்பும் வேளையில், கருணைக் கடலாக விளங்கும் இறைவன், இவர்களுக்கென தனி இடத்தினை உருவாக்கி இவர்களை அங்கே அனுப்புகின்றார். இறைவனே உன்னத அனுபவிப்பாளர், நாம் அவரால் அனுபவிக்கப்பட வேண்டியவர்கள். இதுவே நமது உண்மையான நிலை. இதனை மறுத்து சுயமாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் வந்த பொழுதிலே, அத்தகைய எண்ணம் தவறு என சுட்டிக் காட்டுவதற்காகவும், நம்மைத் திருத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இடமே இந்த ஜடவுலகம்.

இந்த ஜடவுலகம் பார்ப்பதற்கு தனித்து செயல் புரிவது போன்று தோன்றினாலும், இந்த ஜட சக்தியினை இறைவனே இயக்குகின்றார். இந்த புவியில் மட்டுமின்றி இன்னுமுள்ள கோடிக்கணக்கான கோள்கள் மற்றும் கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் என எல்லா இடத்திலும் ஜீவராசிகள் பரவியுள்ளனர். தங்களின் சுய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் இந்த ஜீவராசிகள் ஈடுபட்டுள்ளதால், தங்களின் உண்மையான நிலை இறைவனுக்கு சேவை செய்வது என்பதை மறந்து வாழ்கின்றனர். எனினும், இறைவன் எவற்றையும் அவ்வாறு மறந்து விடுவது இல்லை.

ஜீவன்களை மீண்டும் தன்னகத்தே அழைக்க விரும்பும் பகவான், ஜட சக்தியினை துன்பம் நிறைந்ததாகவும் தற்காலிக மானதாகவும் படைத்துள்ளார். ஜடவுலகில் நாம் துன்புறுவதற்கு இதுவே இறுதி காரணம். நாம் இவ்வுலகில், எந்த உடலை எடுத்தாலும் அது தற்காலிகமானதே, எந்த மகிழ்ச்சியைப் பெற்றாலும் அது தற்காலிகமானதே. (இதுகுறித்து மேலும் விவரம் அறிய, தலையெழுத்து குறித்து இந்த இதழில் வெளியாகியுள்ள மற்றொரு கட்டுரையையும் படிக்கவும்.) எனவே, துன்பங்கள் என்பது நம்மைத் திருத்துவதற்கான தண்டனையே தவிர, கடவுளுக்கு எதிராக நிகழக்கூடியவை அல்ல.

கிருஷ்ணரிடம் சரணடைவதே மாயையை வெல்வதற்கான வழியாகும்.

மாயை, கிருஷ்ணரின் சக்தி

இந்த ஜடவுலகினை பகவான் கிருஷ்ணர், மாயை என்று அழைக்கப்படும் தனது சக்தியைக் கொண்டு கையாள்கின்றார். ஜீவன்களின் பல்வேறு விதமான ஆசைகளை நிறைவேற்ற கிருஷ்ணர் மூன்று குணங்களை படைத்துள்ளார். இந்த மூன்று குணங்கள் என்ற கயிறுகளைக் கொண்டு மாயையின் மூலமாக கிருஷ்ணர் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார். மூன்று குணங்களாவன: தமோ குணம் எனப்படும் அறியாமை குணம், ரஜோ குணம் எனப்படும் தீவிர குணம், மற்றும் ஸத்வ குணம் எனப்படும் சாந்த குணம். இந்த மூன்று குணங்களும் வெவ்வேறான விகிதாசாரத்தில் ஜீவராசிகளின் வாழ்வோடு பிணைந்துள்ளது.

இம்மூன்று குணங்களில் தமோ மற்றும் ரஜோ குணங்களில் நிலை பெற்றவர்கள் மந்த புத்தி உடையவர்களாகவும், தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதில் தீவிரமானவர்களாகவும் இருப்பர். இந்த இரண்டு குணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளுக்கு உகந்த காரியங்கள் அல்லது பிறருக்கு நன்மை தரும் காரியங்களைச் செய்திட மாட்டார்கள். இவர்களால் இவர்களுக்கும் இவர்கள் இருக்கின்ற சமுதாயத்திற்கும் துன்பமே. கொஞ்சம் ஸத்வ குணம் தலையெடுக்கும்போது நன்மை தரும் காரியங்களை செய்ய விழைகின்றனர்.

ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்தின்படி குணங்களில் சிக்கி மாயையினால் வசப்படுத்தப்பட்டுள்ளனர், இதில் இறைவனின் சதியும் இல்லை, இறைவனது போட்டியாளரது (சாத்தானது) சதியும் இல்லை–ஜீவனின் ஆசையே காரணமாக அமைந்துள்ளது. மாயை என்பது இறைவனின் கட்டுப்பாட்டில் செயல்படும் சக்தியே தவிர, இறைவனுக்கு போட்டியாக செயல்படும் சாத்தான் அல்ல. தங்களின் உள்ளே ஏராளமான ஜட ஆசைகளைக் கொண்டுள்ள ஒருவன், தன்னுள்ளே ஏராளமான குப்பைகளை வைத்துக் கொண்டு, உண்மையான தத்துவ நிலைகளை அறிந்திடாமல், சாத்தானின் மேல் கல்லெறிவதும் யாரேனும் ஒருவனை சாத்தான் எனக் குறிப்பிடுவதும் உசிதமான செயல்கள் அல்ல.

நமது துன்பத்திற்கு நாமே காரணம் என்பதை உணர்ந்து, கிருஷ்ணரிடம் சரணடைவோமாக. அவ்வாறு நாம் சரணடைந்தால், மாயை உடனே நம்மைவிட்டு விலகிவிடும். மாயையை வெல்வது மிகவும் கடினம் என்றபோதிலும், கிருஷ்ணரிடம் சரணடைவோர் அதனை எளிதில் வெல்லலாம் என்று பகவத் கீதை (7.14) நமக்கு உறுதியளிக்கின்றது. எனவே, வீண் குழப்பங்கள் ஏதுமின்றி, மற்றவர் மீது பழி போடாமல், பக்தித் தொண்டில் ஈடுபடுவோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives