வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமிபிரபுபாதர்
பெரியோர்களே, தாய்மார்களே! இந்த பிலடெல்பியா நகரவாசிகளுக்கு முதற்கண் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த இயக்கத்தில் பங்கு பெற நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளீர்கள். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை மேற்கத்திய நாடுகளில் பரப்ப எனக்கு உதவி புரியும் அமெரிக்க இளைஞர்களுக்கு நான் மிகவும் கடன்பட்டுள்ளேன். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை மேற்கத்திய நாடுகளில் பரப்ப வேண்டும் என்று என்னுடைய ஆன்மீக குரு எனக்குக் கட்டளையிட்டிருந்தார். எனவே, 1965ஆம் ஆண்டு நான் நியூயார்க் நகரத்திற்கு வந்தேன். பிறகு 1966இல் இந்த இயக்கம் நியூயார்க் நகரில் பதிவு செய்யப்பட்டு, 1967 முதல் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, பசிபிக் கடலின் தென்புறம், ஆஸ்திரேலியா, மற்றும் உலகம் முழுவதும் வளர்ந்து வருகின்றது.
ஜடவுலகமும் ஆன்மீக உலகமும்
இந்த இயக்கத்தைப் பற்றிய சில தகவல்களை நான் உங்களுக்கு வழங்குகிறேன். கிருஷ்ண என்னும் வார்த்தைக்கு “மிகவும் வசீகரமானவர்” என்று பொருள். கிருஷ்ணர் எல்லா உயிர்வாழிகளையும் கவரக் கூடியவர். மனிதர்களை மட்டுமல்ல; மிருகங்கள், பறவைகள், தேனீக்கள், மரங்கள், பூக்கள், பழங்கள், தண்ணீர் என அனைத்தையும் ஈர்க்கக்கூடியவர். இதுவே (ஆன்மீகமயமான) விருந்தாவனத்தின் காட்சி. ஆனால் நாம் தற்போது இருப்பதோ ஜடவுலகம். நமக்கு ஆன்மீக உலகைப் பற்றிய அனுபவம் இல்லை. இருப்பினும், ஜடம் என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன? என்பவை குறித்து சில கருத்துகளை நாம் தெரிந்துகொள்ள முடியும். ஓர் உயிருள்ள மனிதனுக்கும் இறந்த மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உயிர், அதாவது ஆத்மா உடலை விட்டு வெளியேறியவுடன் இவ்வுடல் இறந்துபோன ஜட வஸ்துவாகிறது. ஆத்மா இருக்கும் வரை உடல் முக்கியமானதாகும். எனவே, இந்த உடலில், ஜடம், உயிர்சக்தி என்று இரு வேறுபட்ட சக்திகள் இருப்பதை நாம் உணர்கிறோம். அதுபோலவே ஜடவுலகம், ஆன்மீக உலகம் என்று இரு வேறுபட்ட உலகங்கள் உள்ளன. உயிர்வாழிகளான நாம் ஒவ்வொருவரும் ஆன்மீக உலகத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஜடவுலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எப்படியோ நாம் இப்போது இந்த ஜடவுலகத்துடனும் ஜடவுடலுடனும் தொடர்பு கொண்டுள்ளோம். நித்திய உயிர்வாழிகளாக இருந்தபோதிலும், ஜடவுலகத் தொடர்பின் காரணத்தால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்கு விதமானத் துன்பங்களை நாம் அனுபவித்தாக வேண்டும். இந்த ஜடவுலகில் நாம் அடையப்பெறும் உடல், மற்ற ஜடப் பொருள்களைப் போலவே ஒரு காலகட்டத்தில் முடிவிற்கு வருகின்றது. உதாரணமாக உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் அணியக்கூடிய ஆடை, கிழிந்து பயனற்றதாகிவிடும்போது, அதனை நீங்கள் எறிந்து விட்டு வேறொன்றை அணிகிறீர்கள். அதுபோலவே, இந்த ஜடவுடலானது ஆத்மாவின் உடையைப் போன்றதாகும். ஆனால் ஜடவுலகின்பால் நாம் பற்று கொண்டிருப்பதால், அதனை அனுபவிக்க எண்ணுகிறோம். அதனால், விதவிதமான உடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. இத்தகு உடல், ஓர் இயந்திரமாக பகவத் கீதையில் (18.61)கூறப்பட்டுள்ளது:
ப்ராமயன் ஸர்வ–பூதானியந்த்ராரூடானி மாயயா “ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும், அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்.”
ஆன்மீகப் பரிணாம வளர்ச்சி
உயிர்வாழிகளான நாம் ஆசைப்படுகிறோம், அதை இறைவன் முடிவு செய்கிறார். மனிதன் ஆசைப்பட, கடவுள் அனுமதிக்கின்றார் என்று சொல்லப்படுவதுண்டு. கடவுள் மிகவும் கருணையுள்ளவர். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அவர் நிறைவேற்றுவார். “உலக ஆசைகள் உங்களைத் திருப்திப்படுத்தாது,” என்று அவர் நம்மிடம் கூறினாலும், நாம் அவற்றை விரும்புகிறோம். அத்தகு வெவ்வேறு ஆசைகளை நிறைவேற்ற கடவுள் நமக்கு விதவிதமான உடல்களை வழங்குகிறார். இதுவே கட்டுண்ட வாழ்க்கை அல்லது ஜட வாழ்க்கை எனப்படுகிறது.
நமது விருப்பத்திற்கு அப்பாற்பட்ட இந்த உடல் மாற்றம், பரிணாம வளர்ச்சி என்று அறியப்படுகிறது. இலட்சக்கணக்கான உடல்களைத் தாண்டி இறுதியில் நாம் மனித உருவிற்கு வருகிறோம். ஜலஜா நவ–லக்ஷ்னி ஸ்தாவரா லக்ஷ–விம்ஷதி: நாம் தண்ணீரில் ஒன்பது இலட்சம் வகையான உடல்களையும், மரம், செடி, கொடிகளில் இருபது இலட்சம் வகையான உடல்களையும் கடந்து முன்னோக்கி வருகிறோம். இவ்வாறாக, நமது உணர்வுகளை வளரச் செய்யும் ஜட இயற்கை, படிப்படியாக இந்த மனித வாழ்க்கைக்கு நம்மைக் கொண்டுச் செல்கிறது. இந்த மனித வாழ்வில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய உணர்வு நிலை தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. ஆனால் மீண்டும் பரிணாம வளர்ச்சி முறைக்குச் செல்ல நீங்கள் விருப்பப்படுகிறீர்களா? அல்லது உயர் கிரகங்களுக்குச் செல்ல விருப்பப்படுகிறீர்களா? அல்லது கடவுளிடம், கிருஷ்ணரிடம் செல்ல விருப்பப்படுகிறீர்களா? அல்லது இங்கேயே தங்குவதற்கு விருப்பப்படுகிறீர்களா? இதனைத் தேர்ந்தெடுக்க பல்வேறு முறைகள் உள்ளன. பகவத் கீதையில் (9.25),
பூதானி யாந்தி பூதேஜ்யாயாந்தி மத்–யாஜினோ ’பி மாம் “தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடம் செல்வர்; மேலும், என்னை வழிபடுபவரோ என்னுடனே வாழ்வர்.”
இப்போது உங்கள் தேவையை நீங்களே தேர்வு செய்யலாம். நீங்கள் உயர் கிரகங்களுக்குச் செல்ல விருப்பப்பட்டால், அங்கு செல்லலாம், நீங்கள் இங்கேயே இந்த மத்திய கிரகங்களில் வசிக்க விரும்பினால், இங்கேயே இருக்கலாம். கீழ் கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால், அதையும் செய்யலாம். அல்லது நீங்கள் கடவுளிடம் கிருஷ்ணரிடம் செல்ல விரும்பினால், அங்கும் செல்லலாம். அஃது உங்கள் கையில்.
இந்த ஜடவுலகத்திற்கும் கிருஷ்ணரின் ஆன்மீக உலகத்திற்கும் என்ன வித்தியாசம்? ஆன்மீக உலகம் என்றால், அங்கு ஜடம் சம்பந்தப்பட்டவை இல்லை என்று பொருள். அங்கு எல்லாமே ஆன்மீகம்; மரங்கள், பூக்கள், பழங்கள், தண்ணீர், விலங்குகள் என எல்லாமே ஆன்மீகம். அங்கு அழிவு கிடையாது. மேலும், அந்த உலகம் நித்தியமானது. நீங்கள் ஆன்மீக உலகிற்குச் செல்ல விரும்பினால், இந்த மனித வாழ்க்கையை அதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். மாறாக, இந்த ஜடவுலகிலேயே இருக்க விருப்பப்பட்டால், அப்படியும் செய்யலாம்.
துன்பத்தை நிறுத்துங்கள்
நமது வாழ்வில் தொடரும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் கட்டுண்ட நிலையை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தால் என்ன, என்ற கேள்வி எழும்புகிறது. நாம் ஏன் இந்த ஜடவுடலில் இருந்து கொண்டு உடல் மாற்றங்களுக்கு உட்பட வேண்டும்? நாம் நமது உண்மையான, ஆதியான ஆன்மீக உடலைப் பெற வேண்டும், அதுவே நமது தேவை. அதுவே புத்திசாலித்தனம். வேதாந்த சூத்திரம் கூறுகிறது: அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா. மனித வாழ்க்கை பூரண உண்மையைப் பற்றி அறிவதற்காக உபயோகிக்கப்பட வேண்டும், அதுவே மனிதனின் புத்திசாலித்தனம். மாறாக, நாம் நம் வாழ்க்கையை விலங்குகளைப் போல வீணடித்து வருகிறோம். அவை உண்ணுகின்றன; நாமும் உண்ணுகிறோம். அவை உறங்குகின்றன; நாமும் உறங்குகிறோம். அவை ஆண்-பெண் உறவில் ஈடுபடுகின்றன; நாமும் அவ்வுறவில் ஈடுபடுகிறோம். அவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன; நாமும் தற்காப்பில் ஈடுபடுகிறோம். இந்த நான்கும் மனித இனத்திற்கும் விலங்குகளுக்கும் பொதுவானவை. மனிதப் பிறவியின் மிகவும் சாதகமான விஷயம் என்னவெனில், மனிதன் விருப்பப்பட்டால் பிறப்பு இறப்பு சூழ்நிலையிலிருந்து விடுபட்டு இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும். அங்கு செல்வதற்கான விஞ்ஞானத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் திருப்பணியாகும்.
இது சாதாரண ஒரு மத இயக்கம் அல்ல. கடவுளிடம் சம்பந்தம் கொண்ட இயக்கம் என்பதால், மதம் சம்பந்தப்பட்ட இயக்கம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் இது விஞ்ஞானப்பூர்வமான இயக்கமாகும். பெரிய விஞ்ஞானிகள், தத்துவவாதிகள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்த இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்களை உணர வைப்பதற்கு எங்களிடம் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. விஞ்ஞானப்பூர்வமாகவும் தத்துவப்பூர்வமாகவும் நீங்கள் இந்த இயக்கத்தின் மதிப்பைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், எங்களிடம் போதுமான அளவு விஷயங்கள் உள்ளன. இது மிகவும் சுலபமானது.
ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்
ஹரே ராம ஹரே ராமராம ராம ஹரே ஹரே
என்னும் இந்த மந்திரத்தை ஜெபம் செய்தால் போதும், பிறகு எல்லாமே உங்களுக்குப் புலப்படும். சேதோ தர்பண மார்ஜனம், இந்த ஹரே கிருஷ்ண மந்திர ஜெபமானது உங்களுடைய இதயத்தில் உள்ள களங்கங்களைத் தூய்மைப்படுத்துகிறது. நமது இதயம், மனம், மற்றும் உணர்வானது தற்போது பல்வேறு களங்கங்களால் கவரப்பட்டுள்ளது. எனவே, நாம் இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபம் செய்தால், இந்த களங்கங்கள் கழுவப்படுகின்றன. அதன் பிறகு, “நான் யார்? என்னுடைய நிலை என்ன? என்னுடைய வாழ்வின் குறிக்கோள் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?” என்று நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். இதுவே மனித வாழ்வின் கவனிக்கத்தக்க அம்சம்; விலங்குகளால் அவ்வாறு நினைத்துப் பார்க்க இயலாது.
இந்த இளைஞர்கள், உங்கள் நாட்டைச் (அமெரிக்காவைச்) சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஆசியா என பல பகுதிகளைச் சார்ந்த இவர்கள் இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்ட உடனேயே இந்த இயக்கத்தில் சேர்கிறார்கள். இது கடினமானது அல்ல. இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கொடுப்பதற்கு நாங்கள் பணம் கேட்பதில்லை. நாங்கள் எல்லா இடங்களிலும் இம்மந்திரத்தினை கீர்த்தனம் செய்கிறோம். எங்களிடம் இருக்கும் ஒரே உபாயம், இந்த ஹரே கிருஷ்ண மந்திரம் மட்டுமே. ஆயிரக்கணக்கானோர் எங்களைப் பின்பற்றுகிறார்கள். எனவே, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் சக்தி என்ன என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம். எங்களைப் பின்பற்றுவதற்கு இங்குள்ள இளைஞர்களுக்கு நாங்கள் எதுவும் தருவதில்லை. நாங்கள் அனைவரும் இணைந்து ஹரே கிருஷ்ண என்று பாடுகிறோம்.
ஆன்மீக உலகிலிருந்து வரும் தெய்வீக ஒலி
கௌடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவரான நரோத்தமதாஸ தாகூர், கோலோகேர ப்ரேம–தன, ஹரி–நாம–ஸங்கீர்த்தன என்று பாடியுள்ளார். இந்த ஹரே கிருஷ்ண ஜெபம், ஜடத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. இது நேரடியாக ஆன்மீக உலகத்திலிருந்து வருகிறது. எனவே, இதைப் பாடுவதால் சோர்வடைய மாட்டீர்கள். நீங்கள் இதை நடைமுறையில் பார்க்கலாம். இருபத்தி நான்கு மணி நேரமும் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்து கொண்டே போகலாம். நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள். இந்த ஜெபத்தின் ஒலியதிர்வுகள் ஆன்மீக உலகத்திலிருந்து வருகின்றன. எவ்வாறு நீங்கள் தொலைதூரத்தில் இருந்து வரும் ஒலியதிர்வுகளை வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியின் மூலம் கேட்கிறீர்களோ, அதுபோன்று ஆன்மீக உலகத்திலிருந்து வரும் ஒலியதிர்வுகளான ஹரே கிருஷ்ண மந்திரத்தினை நாம் நமது இதயத்தில் பெற முடியும்.
எங்களின் வேண்டுகோள்
இந்த ஜடவுலகம் நமக்குப் பொருத்தமில்லாத இடம். இங்கு ஒவ்வொருவரும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம். நீங்கள் எவ்வளவு செல்வமுடையவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும், உறுதியற்ற நிலைகள் கண்டிப்பாக உண்டு. உங்கள் ஜனாதிபதியான நிக்சனை பலரும் பதவி விலகச் சொன்னபோது, அவர் எவ்வளவு உறுதியற்ற சூழ்நிலையில் இருந்திருப்பார்? இந்த ஜடவுலகில் நீங்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அஃது ஒரு பொருட்டல்ல. அங்கும் உறுதியற்ற நிலை அவசியம் இருக்கும். எனவே, இவ்வுலக வாழ்க்கை கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப் போன்றது. நீங்கள் இந்த வசதியற்ற உறுதியற்ற நிலையிலிருந்தும் மனக் கவலையிலிருந்தும் விடுதலை அடைய விரும்பினால், கண்டிப்பாக ஹரே கிருஷ்ண மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இஃது எங்கள் வேண்டுகோள். இதில் முயற்சி செய்தால், நீங்கள் நேரடி பலனைப் பெறலாம். இதற்காக நீங்கள் செலவிட வேண்டியதில்லை; எந்த இழப்பும் இல்லை.
எனவே, எங்களுடைய அன்பான வேண்டுகோள் இதுவே. இரு கைகளையும் கூப்பி உங்களை வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் எதையும் புகுத்த விரும்பவில்லை. மூன்று மணி நேர ஊர்வலத்தை நீங்கள் தற்போது பார்த்தீர்கள்; எவ்வளவு மக்கள் வந்தார்கள்! ஆனால் எந்தவித அசம்பாவிதமும் இல்லை. உங்கள் நாட்டின் காவல் துறையினர் எங்களைப் பெரிதும் பாராட்டுகின்றனர். ஏனெனில், அவர்களது அனுபவத்தில் எந்தவொரு ஊர்வலமாக இருந்தாலும் அங்கு வன்முறை நிச்சயம், ஆனால் நாங்கள் அத்தகையோர் அல்ல, எங்களின் இந்த ரதயாத்திரைத் திருவிழா, உங்களை அழைப்பதற்கு மற்றொரு சந்தர்ப்பமாகிறது. எங்களுடைய ஒரே வேண்டுகோள்: இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள், நீங்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பீர்கள். உறுதியற்ற சூழ்நிலையோ பயமோ இருக்காது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்தால், மேன்மேலும் சந்தோஷத்தை அடைவீர்கள். ஆன்மீக வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் உங்களுக்குப் புரிய வரும், மிகச் சுலபமாக இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். மிக்க நன்றி.