வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பிறகு, மிக விகாரமான தோற்றம், அவலட்சணமான உடல் அம்சங்கள், பயங்கரமான முகம், மற்றும் கூரான முடியைக் கொண்ட உடலுடன் கூடிய மூன்று உருவங்களை அஜாமிளன் கண்ணுற்றான். அவர்கள் தங்களது கைகளில் கயிறுகளுடன் அவனை எமராஜரிடம் எடுத்துச் செல்ல வந்திருந்தனர். அஜாமிளன் அவர்களைப் பார்த்தபோது பெரும் பயமும் தடுமாற்றமும் அடைந்தான். அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தையின் மீதான பாசத்தினால், குழந்தையின் பெயரை உரத்த குரலில் அழைக்கலானான். இவ்வாறாக, கண்களில் கண்ணீர் மல்க, அவன் எவ்வாறோ பகவான் நாராயணரின் புனித நாமத்தை உச்சரித்தான். (ஸ்ரீமத் பாகவதம் 6.1.28-29)
அஜாமிளனின் நல்லதிர்ஷ்டம்
அஜாமிளன் மரணத்தை அணுகிய தருணத்தில், கொடிய பீதியளிக்கக்கூடிய நபர்களைக் கண்டான். கைகளில் கயிறுகள், கூரான தலைமுடி, மற்றும் முள்ளம்பன்றியின் உடலில் உள்ளதைப் போன்ற ரோமங்களுடன் அந்த மூன்று நபர்கள் காட்சியளித்தனர். எமராஜரின் உதவியாளர்களான அவர்கள் அஜாமிளனை அவனுடைய உடலிலிருந்து இழுத்து எமராஜரின் அரசவைக்குக் கொண்டு செல்ல வந்திருந்தனர். சில சமயங்களில், மரண நேரத்தில் இருப்பவர்கள் எமதூதர்களைக் கண்டவுடன் பயத்தினால் கதறுவதைப் பார்க்கின்றோம். அஜாமிளனும் அதுபோன்று மிகுந்த பயத்திற்கு ஆளானான்.
அதிர்ஷ்டவசமாக, அஜாமிளன் தன்னுடைய மகனை அழைத்தபோதிலும், அவனது பெயர் நாராயணன் என்று இருந்த காரணத்தினால் பகவான் நாராயணரின் திருநாமத்தை தன்னை அறியாமலேயே உச்சரித்தான். இதனால், நாராயணரின் சேவகர்களான விஷ்ணு தூதர்களும் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தனர். அஜாமிளன் எமதூதர்களின் கயிறுகளைக் கண்டு பயத்தினால் அஞ்சியபோது, கண்களில் கண்ணீர் மல்க பகவானின் திருநாமங்களை உச்சரித்துள்ளான். உண்மையில், நாராயணரின் திருநாமத்தை உச்சரிப்பதாக அவன் நினைக்கவில்லை, அவன் தன்னுடைய மகனை அழைப்பதாகவே கருதினான். இருப்பினும், அவன் அதனால் பெரும்பேறு பெற்றான்.
பக்தர்களின் மரணமும் மற்றவர்களின் மரணமும்
மரண நேரத்திலுள்ள மனிதர்கள், குறிப்பாக, பாவகரமான வாழ்க்கையை வாழ்ந்த மக்கள் தங்களை எப்படியாவது மரணத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஆவலுடன் உள்ளனர். உண்மையில், ஆத்மா மரணத்திற்கு உட்படுவதில்லை, ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே, உடல் மட்டுமே மரணமடைகிறது (பகவத் கீதை 2.20). இருப்பினும், தற்போதைய உடலை விட்டு நீங்குவதும் வேறு உடலில் நுழைவதும் மிகவும் துன்பகரமானதாக உள்ளது. இறப்பின் போது, பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு மரண வலி தீவிரமானதாக இருக்கும். அந்த வலியின் காரணத்தினால், சிலர் உரிய நேரம் வருவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் தற்கொலை என்பதும் ஒரு பாவச் செயல் என்பதை அவர்கள் உணர்வதில்லை, அது மற்றுமொரு கொடிய குற்றமாகும்.
“பக்தர்களும் இறக்கின்றனர், பக்தரல்லாத பாவிகளும் இறக்கின்றனர். இதில் என்ன வித்தியாசம்?” என்று ஒருவர் கேட்கலாம். இரண்டிற்கும் இடையில் மிகுந்த வேறுபாடு உண்டு. இதனைப் பின்வருமாறு விளக்கலாம். பூனை ஒன்று தன்னுடைய வாயில் ஓர் எலியைக் கவ்விப் பிடித்துச் செல்லலாம், அதே வாயினால் அது தன் குட்டிகளைக்கூட கவ்வி எடுத்துச் செல்கிறது. வாய் ஒன்றுதான்; ஆனால் அந்த வாயில் குட்டிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளன, எலியோ மரணத்தின் வாயிலில் நிற்கிறது. அதுபோலவே, மரணத்தைச் சந்திக்கும் பக்தர்கள் ஆன்மீக இராஜ்ஜியமான வைகுண்டத்திற்கு மாற்றப்படுவதை உணர்கின்றனர், சாதாரண பாவகரமான மனிதர்களோ நரக லோகத்திற்கு எமதூதர்களால் இழுத்துச் செல்லப்படுவதை உணர்கின்றனர். ஒருவர் மரணமடைவதை மட்டும் வைத்து யாரும் எந்த முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. எமதூதர்களால் இழுத்துச் செல்லப்பட வேண்டியது அஜாமிளனின் விதியாக இருந்தது. பக்தர்களின் வழிமுறை வேறுபட்டதாகும்.
பக்தர்களின் வாழ்க்கை தெய்வீகமானது
பகவத் கீதையில் (4.9) கிருஷ்ணர் கூறுகிறார்: ஜன்ம கர்ம ச மே திவ்யம், “என்னுடைய தோற்றமும் செயல்களும் உன்னதமானவை, ஆன்மீகமானவை.” கிருஷ்ணருடைய தோற்றம், மறைவு என அனைத்தும் ஆன்மீகமானவை, அவை சாதாரணமானவை அல்ல. அதுபோலவே, பகவானின் புகழை பிரச்சாரம் செய்வதற்காக இந்த பௌதிக உலகத்திற்கு அவரால் அனுப்பப்படும் கிருஷ்ண பக்தர்களின் தோற்றமும் செயல்களும்கூட உன்னதமானவையே. அத்தகு வைஷ்ணவர் களின் தோற்றம், மறைவு என எல்லாமே மங்களகரமானவை. எனவே, அவர்களது தோன்றிய நாள், மறைந்த நாள் என இரண்டு நாள்களையும் அவர்களை கௌரவப்படுத்துவதற்காக வருடந்தோறும் நாம் கொண்டாடுகிறோம்.
உண்மையில், சாதாரண உயிர்வாழிகள்கூட பிறப்பது மில்லை, இறப்பதுமில்லை. அப்படியிருக்க கிருஷ்ணரைப் பற்றியும் அவரது பக்தர்களைப் பற்றியும் கூற என்ன இருக்கிறது? சில சமயங்களில் கடவுள் இறந்துவிட்டார் என்று நாஸ்திகர்கள் கூறுவதுண்டு. ஆனால் மிகச்சிறிய உயிர்வாழிகூட இறப்பதில்லை என்பது அந்த அயோக்கியர்களுக்குத் தெரிவதில்லை. அவ்வாறு இருக்க கடவுள் அல்லது கிருஷ்ணர் எவ்வாறு இறக்க முடியும்? அதனால்தான் பகவத் கீதையில் இத்தகு நபர்கள், மூடர்கள் அல்லது அயோக்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் எந்த அறிவும் கிடையாது. இருப்பினும், கற்றறிந்த மனிதர்கள்போல தங்களைக் காட்டிக் கொண்டு, யாருக்கும் பயன் தராத விஷயங்களை முணுமுணுக்கின்றனர்.
கிருஷ்ணரை எண்ணியபடி முக்தியடைதல்
எப்படியோ அஜாமிளன் இறக்கும் தருவாயில் நாராயணரின் திருநாமத்தில் மூழ்கியதால், அவன் தனது வாழ்க்கை முழுவதும் பாவகரமான செயல்களில் ஈடுபட்டிருந்தபோதிலும், முக்திக்கான தகுதியை உடனடியாக பெற்றுவிட்டான். கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர். அஜாமிளன் “நாராயண” என்று அழைப்பதைக் கேட்டபோது, உடனடியாக அவர் தனது தூதர்களை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தார். எனவே, ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத், “இப்பாதையில் மேற்கொள்ளப்படும் சிறு முயற்சியும் மாபெரும் பயத்திலிருந்து காப்பாற்றும்,” என்று பகவத் கீதை (2.40) கூறுகின்றது. அஜாமிளன் என்ற அந்த மனிதன் மாபெரும் சிக்கலில் இருந்தான், எமதூதர்கள் அவனைக் கொண்டு செல்ல வந்து விட்டனர். அந்த சூழ்நிலை மிகவும் அபாயகரமானதாகவும் அச்சத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது. ஆனால் “நாராயண” என்னும் எளிய உச்சரிப்பினால் அவன் பாதுகாக்கப்பட்டான்.
எனவே, இப்பயிற்சி மிகவும் அவசியம். ஹரி கீர்த்தனம் மிகவும் புகழத்தக்கதாகும். வங்காளத்தில் ஒரு பழமொழி உண்டு: பஜன கர ஸாதன கர முர்தே ஜான்லே ஹய, “நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மீகச் செயல்களும் மரண நேரத்தில் சோதிக்கப்படும்.” நீங்கள் செய்யும் ஜபங்கள் அனைத்தும் மரண நேரத்தில் சோதிக்கப்படும். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைவு கூர்ந்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள். கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர் என்பதால், அஜாமிளன் அவரது பெயரைச் சொன்னவுடன், உடனடியாக தனது தூதர்களை அனுப்பி வைத்தார்.
அனுகூலமான முறையில் கிருஷ்ணரை நினைத்தல்
ஒருவர் கிருஷ்ணரை எந்த விதத்திலும் நினைவுக் கூறலாம். கோபியர்கள் கிருஷ்ணரின் மீதான காதலின் காரணத்தால் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தனர்; சிசுபாலன் கோபத்தின் காரணத்தால் கிருஷ்ணரையே எண்ணிக் கொண்டிருந்தான்; கம்சன் பயத்தின் காரணத்தால் கிருஷ்ணரை இடைவிடாது எண்ணிக் கொண்டிருந்தான். கம்சனும் சிசுபாலனும் அரக்கர்களாக இருந்தனர்; ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரம புருஷ பகவானை நினைத்திருந்ததோடு அல்லாமல், இறக்கும் தருவாயிலும் பகவானை நினைவு கூர்ந்தபடியால் கிருஷ்ணராலேயே அவர்களுக்கு முக்தி வழங்கப்பட்டது.
இருப்பினும், பகவான் கிருஷ்ணரை அனுகூலமான முறையில் நினைத்தல் நன்று. பக்தித் தொண்டு என்பது கிருஷ்ணருக்கு அனுகூலமாகச் செய்யப்படுவதாகும். சிசுபாலனும் கம்சனும் பக்தர்கள் அல்ல; பக்தன் என்னும் சொல் கிருஷ்ணருக்கு அனுகூலமாகச் செயல்படுபவர் என்று பொருள்படும். அனுகூலமாக அன்றி எதிர்நிலையில் கிருஷ்ணரை நினைத்தாலும் அதுவும் கிருஷ்ணரால் ஏற்கப்படுகிறது. அவர் மிகவும் கருணை வாய்ந்தவராக இருப்பதால், தன்னை ஓர் எதிரியைப் போன்று நினைப்பவர்களுக்கும் முக்தி கொடுக்கிறார். கிருஷ்ணரை எல்லா நேரத்திலும் எண்ணுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மிகச்சிறந்த யோகிகளே. எனவே, கிருஷ்ணரின் எதிரிகளும் அவரை நினைத்த காரணத்தினால் யோகிகளாகி விடுகின்றனர்.
பிரம்மஜோதியில் அடையப்படும் முக்தி வேண்டாம்
இவ்வாறாக, யோகப் பயிற்சி, தவங்கள் போன்றவற்றின் மூலமாகக் கிடைக்கும் பயன்கள், கிருஷ்ணருடன் விரோத மனப்பான்மை கொண்டிருந்த கம்சன் மற்றும் சிசுபாலனால்கூட அடையப்பட்டன. அந்த எதிரிகள் கிருஷ்ணரின் கருணையால் அருவ பிரம்மஜோதியில் கலந்து முக்தி பெற்றனர். கற்றறிந்த ஞானிகளும் பிரம்மஜோதி எனப்படும் அந்த ஆன்மீக ஒளி வெள்ளத்தையே இறுதியில் அடைவதை நாம் காண்கிறோம். அதாவது, ஞானிகள் அடையும் இலக்கு கிருஷ்ணரின் எதிரிகளாலும் அடையப்படுகிறது; எனவே, பிரம்மஜோதியில் அடையப்படும் அத்தகைய முக்தி விரும்பத்தக்கதல்ல.
ஓர் உயிர்வாழி சிறிய ஆன்மீகப் பொறியாக பிரம்மஜோதியில் நிலைத்திருக்க முடியும். சூரிய ஒளியில் பல்வேறு மூலக்கூறுகள் துகள்களாக இருப்பதுபோல், பிரம்மஜோதியில் ஆன்மீக பிரகாசமுடைய பல்வேறு உயிர்வாழிகள் சிறிய துகள்களாக வாழ முடியும். ஆனால் பிரம்மஜோதியை அடைபவர்கள் மீண்டும் இந்த பௌதிக உலகினுள் இழிவதற்கு வாய்ப்பு உள்ளது. இயற்கையாகவே இந்த உயிர்வாழிகள் பல தரப்பட்ட புலன் திருப்தியை விரும்புகின்றனர். ஆனால் அந்த அருவ பிரம்மஜோதியில் அனுபவிப்பதற்கு ஏதுமில்லை என்பதால், அவர்கள் அம்மாதிரி சுகிக்க விருப்பப்படும்போது, மீண்டும் இந்த பௌதிக உலகிற்கு இறங்கி வர வேண்டியுள்ளது. எனவே, பிரம்மஜோதியில் ஐக்கியமான ஒருவர் எந்த நேரமும் இழிந்து போக (மீண்டும் இந்த பௌதிகப் படைப்பிற்கு வர) வாய்ப்புள்ளது. பிரம்மஜோதிக்கு அப்பாலுள்ள வைகுண்ட லோகங்களை அடைபவன் அதுபோன்று இழிவடைவதில்லை.
இருப்பினும், கிருஷ்ண பக்தர்கள் எந்தவொரு முக்தியையும் வேண்டுவதில்லை; ஏனெனில், பௌதிக உலகமானாலும் ஆன்மீக உலகமானாலும், பக்தர்களின் ஒரே விருப்பம் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுவதே! பக்தர்களின் விருப்பம் இவ்வாறிருக்க, கிருஷ்ணரோ தனது கருணையினால் அவர்களை தனது வாசஸ்தலமான கோலோக விருந்தாவனத்திற்கு ஏற்றம் பெறச் செய்து முக்தி கொடுக்கின்றார். அங்கு பிறப்பு, இறப்பு, நோய், முதுமை போன்ற பௌதிகத் துன்பங்கள் இல்லை.
இவ்வாறாக, ஒரு பக்தனின் நிலை அருவவாதிகள் அல்லது ஞானிகளின் நிலையிலிருந்து வேறுபட்டது, அது மிகவும் உன்னதமானது. பக்தன் அந்த பிரம்மஜோதியைக் கடந்துதான் செல்கிறான், ஆனால் அவன் அதனால் கவரப்படுவதில்லை. அவன் வைகுண்ட கிரகங்களால், கோலோக விருந்தா வனத்தினால் கவரப்படுகின்றான். அங்குதான் பரம புருஷ பகவானான கிருஷ்ணர் தன்னுடைய சகாக்களுடன் நித்தியமாக வாழ்கின்றார்.