வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
தச் ச்ரத்ததானா முனயோஜ்ஞான-வைராக்ய-யுக்தயா
பஷ்யந்த்யாத்மனி சாத்மானம்பக்த்யா ஷ்ருதா-க்ருஹீதயா
அறிவும் துறவும் நன்கு பெற்று, பகவானை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ள மாணவர் அல்லது முனிவர், வேதாந்த ஸ்ருதியிலிருந்து தாம் கேள்வியுற்றதற்கு ஏற்ப பக்தித் தொண்டாற்றுவதன் மூலம் அந்த பரபிரம்மத்தை அறிகிறார்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.12)
கடவுளைக் காண்பிக்க இயலுமா?
நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர் பெற்றுள்ளார். அதனால், அவர் பழுதைச் சரி செய்ததும் கார் இயங்குகின்றது. ஒரு காரைக் காண்பதற்கே தகுதி தேவைப்படும்பொழுது, கடவுளைக் காண்பதற்குத் தகுதி ஏதும் தேவையில்லை என்று நாம் நினைக்கின்றோம்! என்னே மூடத்தனம்! மக்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாக அயோக்கியர்களாக இருக்கின்றனர் என்றால் தங்களது கற்பனையான தகுதிகளைக் கொண்டு கடவுளைக் காண அவர்கள் முயல்கின்றனர்.
கீதையில் கிருஷ்ணர், நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருதா:, நான் அனைவருக்கும் என்னை வெளிப்படுத்துவதில்லை, யோக மாயையின் மூலமாக என்னை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்கிறேன்,” என்று கூறுகிறார். ஆகவே, கடவுளை உங்களால் எவ்வாறு காண இயலும்? நிலைமை இவ்வாறு இருக்கையில், நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என்பன போன்ற மடத்தனமான கேள்விகள் அவ்வப்போது கேட்கப்படுகின்றன. கடவுள் அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகிவிட்டார்; ஆகவே, இந்த ஏமாற்று பேர்வழிகள் யாரோ ஒரு சாதாரண மனிதனைக் காண்பித்து, கடவுள் இங்கு இருக்கிறார், இவரே கடவுளின் அவதாரம் என்று பிரகடனப்படுத்துகின்றனர்.
ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:, கடவுளைக் காண்பிக்க முடியுமா என்னும் கேள்வியை கீழ்நிலையோர், முட்டாள், அயோக்கியன் முதலியவர்களே கேட்பர். கடவுளைக் காண்பதற்கு முதலில் உங்களிடம் என்ன தகுதி இருக்கின்றது? அவரைக் காண்பதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றுள்ளீர்களா? அந்த தகுதியானது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தச் ச்ரத்ததானா முனய:, ஒருவன் முதலில் நம்பிக்கை உடையவனாக இருக்க வேண்டும், அதுவே கடவுளைக் காண்பதற்கான முதல் தகுதி. அதை விடுத்து, கடவுளை எனக்குக் காட்ட முடியுமா?” என்று வீம்புக்கு சவால் விடுத்தல் நல்லதன்று. கடவுளைக் காண்பது என்பதை அவர்கள் ஏதோ ஒரு மேஜிக் மாதிரி நினைக்கின்றனர். இல்லை. கடவுளைப் பற்றி தொடர்ந்து செவியுற்று, அவரைக் காண வேண்டும் என்பதைப் பற்றி ஒருவன் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
கிருஷ்ணரைக் காண்பதற்கான தகுதி
இது தொடர்பான சுவாரஸ்யமிக்க கதை ஒன்றினை கவனமுடன் கேளுங்கள். பாகவத உபன்யாசகர் ஒருவர் தமது உபன்யாசத்தில், பகவான் கிருஷ்ணர் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு காட்டில் மாடுகளை மேய்க்கச் செல்வதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அந்த உபன்யாசத்தில் ஒரு திருடனும் இருந்தான். உபன்யாசத்தைக் கேட்ட அவன், நான் ஏன் விருந்தாவனக் காட்டிற்கு சென்று கிருஷ்ணரிடமுள்ள நகைகளைக் கொள்ளையடிக்கக் கூடாது?” என்று யோசிக்கலானான். அவன் இதைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தான், கிருஷ்ணரைக் கண்டு அவர் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடித்தால், ஒரே நாளில் நான் கோடீஸ்வரனாகி விடுவேன்” என்று தீவிரமாக சிந்திக்கலானான்,
கிருஷ்ணரைக் காண வேண்டும் என்ற உணர்வு திருடனிடம் இருந்தது, அதுவே அவனது தகுதி. அவனது அந்த ஆர்வமிகுதியுடன் விருந்தாவனத்திற்குச் செல்ல, அங்கே அவன் பகவான் கிருஷ்ணரை நேரில் கண்டான். பாகவத உபன்யாசகர் விவரித்த விதத்திலேயே அவன் கிருஷ்ணரைக் கண்டான். அப்போது, அவன் கிருஷ்ணருக்கு அருகில் சென்று, கிருஷ்ணா! நீ மிகவும் நல்ல பையன், செல்வந்த குடும்பத்தைச் சார்ந்தவன், நான் உனது நகைகளைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று கூறினான்.
கிருஷ்ணர், இல்லை, இல்லை. என் அம்மா கோபம் கொள்வாள்! ஆகையால், என்னால் தர இயலாது,” என்றார். இவ்வாறாக, கிருஷ்ணர் ஒரு குழந்தையைப் போல லீலை செய்தார். கிருஷ்ணரின் குழந்தைத்தனத்தினால் கவரப்பட்ட அவனுக்கு கிருஷ்ணரின் மீதான ஆர்வம் மேன்மேலும் வளரத் துவங்கியது. இறுதியில், கிருஷ்ணர் நகைகளை எடுத்துக்கொள்ள அவனை அனுமதித்தார். ஆயினும், அச்சமயத்தில் அவன் கிருஷ்ணரது சங்கத்தினால் தூய்மை அடைந்திருந்தான். அதனால் அவன் உடனடியாக பக்தனாக மாறினான். இவ்வாறாக, எவ்வகையிலாவது நாம் கிருஷ்ணரின் சங்கத்தைப் பெற்றால் நாமும் தூய்மை பெறுவோம்.
கோபியர்களே முதல்தர பக்தர்கள்
இதற்கு கோபியர் மற்றுமோர் உதாரணம். பகவான் கிருஷ்ணரின் அழகினால் கவரப்பட்டு இளம் பெண்களான கோபியர்கள் அவரிடம் வந்தனர். கிருஷ்ணர் அழகிய வாலிபனாக இருந்தார். அவர்கள் கிருஷ்ணரை காம எண்ணத்துடன் அணுகினர். இருப்பினும், கிருஷ்ணர் மிகவும் தூய்மையானவர் என்பதால், அவரின் சங்கத்தைப் பெற்று அவர்களும் தூய்மையடைந்து முதல்தர பக்தர்களாயினர். கோபியர்களின் அன்பிற்கு ஈடுஇணையே கிடையாது, ஏனெனில், அவர்கள் கிருஷ்ணரை ஆத்மார்த்தமாக விரும்பினர். அதுவே அவர்களின் தகுதி. அவர்கள் தங்களது குடும்பம், நற்பெயர் என எதையும் பொருட்படுத்தாது, கிருஷ்ணரைக் காண்பதற்காக நள்ளிரவில் அவரைத் தேடிச் சென்றனர். கிருஷ்ணரது குழலோசையைச் செவியுற்ற மாத்திரத்தில் அவர்கள் தங்களது வீடுகளை விட்டு கிருஷ்ணரை நோக்கி ஓடினர். அவர்களுடைய தந்தை, கணவன், சகோதரர்கள் என அனைவரும், இந்த நள்ளிரவில் எங்கே செல்கிறாய்?” என்று வினவினர். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் தங்களது குழந்தைகள், குடும்பம் என அனைத்தையும் கைவிட்டுச் சென்றனர். தான் கிருஷ்ணரிடம் செல்ல வேண்டும் என்பதே அவர்களது ஒரே எண்ணம்.
இந்த ஆர்வம் நமக்கும் தேவைப்படுகிறது. கிருஷ்ணரைக் காண்பதற்கு நாம் மிகுந்த ஆர்வத்துடன் இருக்க வேண்டும். கிருஷ்ணரைக் காண்பதிலிருந்து சில கோபியர்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டனர், அந்த கோபியர்கள் கிருஷ்ணரைக் காணாததாலும் அவரது பிரிவினாலும் மரணத்தைத் தழுவினர். ஆகவே, இவ்விஷயத்தில் ஆர்வம் என்பது மிகவும் அவசியமாகிறது. இந்த ஆர்வம் உங்களிடம் இருக்கும்போது, உங்களால் கிருஷ்ணரைக் காண இயலும். நீங்கள் கொள்ளைக்காரனாக, காம எண்ணம் உடையவனாக, அல்லது கொலைகாரனாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உங்களிடம் கிருஷ்ணரைக் காண்பதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். அப்போது உங்களால் கிருஷ்ணரைக் காண இயலும்.
கிருஷ்ணரைக் காணுதல்
கிருஷ்ணரைக் காண்பதற்கு நாம் எந்தளவிற்கு ஆர்வமாக உள்ளோம் என்பதைப் பொறுத்து கிருஷ்ணர் நமக்கு பலனளிக்கிறார். கிருஷ்ணரைக் காண்பதற்கான ஆர்வம் உங்களிடம் இருந்தால், அதற்கான உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும்.
ஸ்மேராம் பங்கீ-த்ரய-பரிசிதாம் ஸாசி-விஸ்தீர்ண-த்ருஷ்டிம்
வம்ஷீ-ந்யஸ்தாதர-கிஷலயாம் உஜ்ஜ்வலாம் சந்த்ரகேண
கோவிந்தாக்யம் ஹரி தனும் இத: கேஷீ-தீர்தோபகண்டே
மா ப்ரேக்ஷீஷ்டாஸ் தவ யதி ஸகே பந்து-ஸங்கே ரங்க:
ஒரு கோபி மற்றொரு கோபியிடம் கூறுவதாக அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள்: அன்புள்ள தோழியே, யமுனையின் கேசி படித்துறைக்கு அருகே குழல் ஏந்தியபடி கோவிந்தன் எனும் பாலகன் நின்று கொண்டுள்ளான். அவன் பூர்ண சந்திரனைப் போன்ற அழகுடையவன். குடும்பம், கணவன், குழந்தைகளுடன் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உனக்கு இருந்தால், நீ அந்தப் பக்கம் செல்லாதே.” பங்கீ-த்ரய, கிருஷ்ணர் மூன்று வளைவுகளுடன் புல்லாங்குழலை ஏந்தியடி நிற்கிறார். அது கிருஷ்ணரின் திரி-பங்க ரூபம் என்று அறியப்படுகிறது. ஆகவே, இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், தயவுசெய்து கிருஷ்ணரைப் பார்ப்பதற்குச் செல்ல வேண்டாம். இதன் பொருள் என்னவெனில், நீங்கள் ஒருமுறை கிருஷ்ணரை தரிசித்துவிட்டீர்கள் எனில், அதன் பின்னர், நீங்கள் இந்த அபத்தமான பௌதிக இன்பங்களை மறந்து விடுவீர்கள். இதுவே கிருஷ்ணரைக் காணுதல் என்பதாகும்.
துருவ மன்னர் கிருஷ்ணரை தரிசித்தபோது கூறினார், ஸ்வாமின் க்ருதார்தோ வரம் ந யாசே:, அன்புள்ள பகவானே, நான் எதையும் விரும்பவில்லை.” துருவ மன்னர் ஆரம்பத்தில் தமது தந்தையின் ராஜ்ஜியத்தைப் பெறும் நோக்கத்துடன் கிருஷ்ணரை அணுகினார். ஆயினும், கிருஷ்ணர் அவருக்கு முன்பாகத் தோன்றி, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்,” என்று கூறியபோது, துருவ மன்னர். பகவானே, நான் எதையும் விரும்பவில்லை,” என்று கூறினார். இதுவே கிருஷ்ணரைக் காணுதல் என்பதாகும்.
உங்களுடைய நோக்கம் எதுவாக இருந்தாலும், கிருஷ்ணரை அவ்வாறு காண்பதற்கு நீங்கள் விரும்பினால், எவ்வகையிலாவது நீங்கள் கிருஷ்ணரைக் காண்பீர்கள். உங்களது பேரார்வத்தின் காரணமாக நீங்கள் கிருஷ்ணரை தரிசிப்பீர்கள். இந்த பேரார்வமே கிருஷ்ணரைக் காண்பதற்கான தகுதியாகும்.
பேராசை எனும் விலை
ரூப கோஸ்வாமி கூறுகிறார், க்ருஷ்ண-பக்தி-ரஸ-பாவிதா மதி: க்ரீயதாம் யதி குதோ பி லப்யதே. அதாவது, கிருஷ்ண பக்தி எங்கேனும் கிடைக்கின்றது எனில், தாமதிக்காமல் அதனை உடனே வாங்கிக் கொள்ளுங்கள் என்றும், அது மிகவும் இனிமையானது என்றும் இங்கே ரூப கோஸ்வாமி அறிவுறுத்துகிறார்.
கிருஷ்ண பக்தியை நீங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம், இதற்கு நீங்கள் ஒன்றை கட்டணமாகச் செலுத்த வேண்டும். என்ன அது? பேராசை, ஆம் நீங்கள் பேராசைகொள்ள வேண்டும். தத்ர லௌல்யம் அபி மூல்யம் ஏகலம். பேராசை என்பதே அதற்கான விலை. இதன் மூலம் கிருஷ்ணரை நீங்கள் எளிதாக வெகு விரைவில் அடையலாம். கிருஷ்ணர் ஒன்றும் ஏழை அல்ல, கிருஷ்ணரை மற்றவர்களுக்கு வழங்கும் கிருஷ்ண பக்தனும் ஏழையல்ல. கிருஷ்ண பக்தர் கிருஷ்ணரை இலவசமாக விநியோகிக்கிறார். நீங்கள் பேராசை என்னும் விலைகொடுத்து கிருஷ்ணரை வாங்க வேண்டும், அவ்வளவே.
பேராசைதானே, அதுதான் என்னிடம் இருக்கின்றதே என்று ஒருவர் கூறலாம், ஆனால் அஃது அவ்வளவு எளிதல்ல. ஜன்ம கோடி ஸுக்ருதைர் ந லப்யதே, கோடிக்கணக்கான ஆண்டுகளின் புண்ணியச் செயல்களாலும் இந்த பேராசையை அடைய இயலாது. இந்த ஆர்வத்தை பக்தர்களின் சங்கத்தினால் மட்டுமே எழுப்பவியலும். கிருஷ்ணரைக் காணும் ஆர்வத்தை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்கள் அனைவருக்கும் சங்கத்தினை வழங்குகிறோம். இவ்வாறாக, நீங்கள் கிருஷ்ணரை நேருக்கு நேராக சந்திக்கவியலும்.
இந்த வாழ்க்கை கிருஷ்ணரை தரிசிப்பதற்காகவே உள்ளது. நாய்களையும் பூனைகளையும் போன்று ஆவதற்கல்ல. துரதிர்ஷ்டவசமாக நவீன நாகரிகம் மக்களை நாய்களாகவும் பூனைகளாகவும் மாறுவதற்கு பயிற்சி அளிக்கின்றது. கிருஷ்ணரை எவ்வாறு காண்பது என்பதற்கான பயிற்சியை இந்த ஓர் இயக்கம் மட்டுமே மக்களுக்கு அளிக்கின்றது. ஆகவே இந்த இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தச் ச்ரத்ததானா முனயோ ஜ்ஞான-வைராக்ய-யுக்தயா. ஆர்வத்தின் மூலமாக நீங்கள் உடனடியாக அறிவு மற்றும் துறவின் தளத்தினை அடைவீர்கள். அணுகுண்டுகளை தயாரிப்பது அறிவல்ல. மக்கள் ஏற்கனவே இறந்து கொண்டுள்ளனர், நீங்கள் அவர்களின் இறப்பை துரிதப்படுத்தும் வகையில் அணுகுண்டை தயாரித்துள்ளீர்கள். இதனை அறிவு என்று எவ்வாறு கூறவியலும்? ஆனால், நாங்கள் அந்த இறப்பைத் தடுக்கும் அறிவான கிருஷ்ண பக்தியை வழங்குகிறோம். இதுவே சிறந்த அறிவாகும். ஜ்ஞான-வைராக்ய-யுக்தயா. இந்த அறிவைப் பெற்றவுடன், நீங்கள் இந்த அபத்தமான பௌதிக இன்பத்தின் மீதான பற்றுதலை இழப்பீர். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.