கடவுளை அறிவது எப்படி?

Must read

கடவுள் இருக்கின்றாரா? என்ற தலைப்பில் கடவுளின் இருப்பை சென்ற இதழில் பல்வேறு வழிகளில் விளக்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, கடவுளை எவ்வாறு அறிவது என்பது குறித்து இந்த இதழில் காணலாம்.

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்

அறிவைப் பெறுவதற்கு பொதுவாக மூன்று முக்கிய வழிகள் உள்ளன.

(1) பிரத்யக்ஷ பிரமாணம்–புலன்களைக் கொண்டு நேரடியாக அடையப்படும் அறிவு

(2) அனுமான பிரமாணம்–முந்தைய தகவல்களைக் கொண்டு யூகத்தின் மூலம் பெறப்படும் அறிவு

(3) சப்த பிரமாணம்–அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்படும் அறிவு

கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு பிரத்யக்ஷ பிரமாணமும் அனுமான பிரமாணமும் பயன்தராதவை. சப்த பிரமாணத்தினால் மட்டுமே இறைவனை அறிய இயலும்.

பிரத்யக்ஷ பிரமாணம்

நேரடியாகப் புலன்களால் அறிவைப் பெறக்கூடிய வழிமுறை பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதில் சில பிரச்சனைகள் உள்ளன. நமது புலன்கள் எல்லைக்குட்பட்டவை. நமது கண்களால் எல்லாவற்றையும் காண இயலாது. அவற்றின் பார்வை அளவு 400 முதல் 700 மில்லிமைக்ரான். நமது காதுகள் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ்க்கு இடைப்பட்ட ஒலியலைகளை மட்டுமே கேட்கும் திறன் கொண்டவை. மேலும், நமது புலன்கள் மாயையின் வயப்படுபவை. அதாவது ஒன்றை மற்றொன்றாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவை. இவை நமக்கு முழுமையான ஞானத்தைத் தராது. எனவே, இறைவனை அடைவதற்கான முயற்சியில் பிரத்யக்ஷ பிரமாணம் முழுப் பலனைத் தராது.

அனுமான பிரமாணம்

புலன்களால் பெற்ற அறிவைக் கொண்டு மனதால் யூகித்து அறிந்து கொள்ளும் வழிமுறை அனுமான பிரமாணம் எனப்படும். அனுமான பிரமாணமானது பிரத்யக்ஷ பிரமாணத் தின் அறிவை அடிப்படையாகக் கொண்டதால் இந்த அறிவும் பூரணமானதாக இருக்க முடியாது.

 

சப்த பிரமாணம்

அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து கேட்பதால் பெறப்படும் அறிவு சப்த பிரமாணம் எனப்படும். உதாரணமாக, உலகச் செய்திகளை அறிந்துகொள்ள நாம் பி.பி.சி சேனலை பார்ப்போம். அவர்கள் பலகாலமாக தவறில்லாமல் ஒளிபரப்பு செய்வதால் அதை நாம் நம்புகிறோம். அதே போன்று மிக முக்கிய விஷயங்களைப் பற்றி அறிய நாம் வேதங்களை அணுக வேண்டும். வேதம் என்றால் ‘அறிவு’ என்று பொருள். இஃது இந்துக்களுக்கு மட்டும் என்றோ, சமஸ்கிருதம் அறிந்தவர்களுக்கு மட்டும் என்றோ கிடையாது. வேதங்கள் பரம்பொருளான இறைவனைப் பற்றியவை, எல்லாருக்கும் உரித்தானவை. இன, மத, பேதத்திற்கு அப்பாற்பட்டவை. வேதத்தின் வார்த்தைகள் பழமையானவை. எந்தவித மாற்றமும் இல்லாதவை. சில உதாரணங்கள்:

(1) பூமி கோள வடிவமானது.

(2) மலத்தை அசுத்தமானதாக உரைக்கும் வேதங்கள், பசுஞ்சாணத்தை மிகவும் தூய்மையானதாகக் கூறுகின்றன. பசுஞ் சாணம் ஒரு கிருமி நாசினி என்பது 1940களில் மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால் வேத கலாச்சாரத்தில் பசுஞ்சாணம், தூய்மைபடுத்துவதற்காக உபயோகப்பட்டதை நாம் எளிதில் காணலாம்.

(3) ஸ்ரீமத் பாகவதத்தின் மூன்றாவது காண்டத்தில் கருவின் வளர்ச்சியானது கருத்தரிப்பின் காலத்திலிருந்து குழந்தை பிறக்கும் நாள்வரை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

(4) புராணங்களில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய முன்னறிவிப்பினைக் காணலாம்: புத்தர், ஏசு, நபிகள் நாயகம், சந்திர குப்தர், அசோகர் போன்றவர்களைப் பற்றிய குறிப்பு புராணங்களில் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பே இடம் பெற்றுள்ளது.

(5) கலி யுகத்தின் நிலைமை பற்றியும் பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

வேதங்கள் ஸ்ருதி, கேட்டறியப்படும் ஞானம் என்று அழைக்கப்படுகின்றன. கலி யுகத்திற்கு முன்பு வேதங்கள் எழுத்து வடிவத்தில் கிடையாது. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு, வேத வியாசர் இவற்றை எழுத்து வடிவத்தில் அளித்தார். கடவுளைப் பற்றி நாம் வேதங்களிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். வேதங்களையும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். அதாவது முறையான குரு-சீடப் பரம்பரையில் வரும் ஓர் அதிகாரியிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர்களிடமிருந்து அல்ல.

வேத சாஸ்திரங்களைப் பக்குவமான நபர்களிடமிருந்து பெற்றால், கடவுளை அறிவதற்கான வழிமுறையில் நம்மால் ஈடுபட முடியும். அம்முறையில் படிப்படியாக முன்னேறி, காலப்போக்கில் கடவுளை உணர முடியும்.

மேலும் பார்க்க  : கடவுள் இருக்கின்றாரா?

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives