சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?
குற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் உலகில் பெருமளவிலான பணம் செலவு செய்யப்படுகிறது. எனினும், இம்முயற்சிகளையும் மீறி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகாகோ போலீஸ் துறையின் தகவல் தொடர்பு அதிகாரியான டேவின் மோஸீயுடன் நடந்த பின்வரும் உரையாடலில், கட்டுப்படுத்த முடியாததுபோல தோன்றும் குற்றங்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் வியக்கத்தக்க அளவிற்கு எளிதானதும் நடைமுறைக்கு சாத்தியமானதுமான தீர்வை முன்வைக்கின்றார்.
(சென்ற இதழின் தொடர்ச்சி)
மோஸீ: செல்வந்தனான ஒருவன் கடவுளை அடைவதைக் காட்டிலும், ஒட்டகம் ஒன்று ஊசித் துவாரத்தின் வழியாக புகுந்து வெளிவருவது எளிது என்று ஒரு கிறிஸ்துவப் பழமொழி உண்டு. அதன்படி, அமெரிக்கா மற்றும் மேல்நாடுகளின் செல்வம் அவர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மிக அதிகமான செல்வம் ஒரு தடையே. பகவத் கீதையில் (2.44) கிருஷ்ணர் கூறுகிறார்:
போகைஷ்வர்ய–ப்ரஸக்தானாம்தயாபஹ்ருத–சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி:ஸமாதௌ ந விதீயதே
வாழ்க்கை வசதிகள் மிக அதிகமாகும்போது நாம் கடவுளை மறக்கிறோம். எனவே, மிக அதிகமான செல்வம் கடவுளை அறிவதில் நமக்குத் தடையாக விளங்குகிறது. ஏழையால்தான் கடவுளை அறிய முடியும் என்ற திட்டவட்டமான விதி எதுவும் இல்லை; இருப்பினும், அளவிற்கு அதிகமாக செல்வம் படைத்தவன், அதனை மேலும் அதிகப்படுத்துவதிலேயே கருத்தாக இருப்பான் என்பதால், ஆன்மீக போதனைகளைப் புரிந்துகொள்வது அவனுக்கு சிரமமாக இருக்கும்.
மோஸீ: அமெரிக்காவிலும் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் இக்கருத்துக்களை ஆதரிக்கிறார்கள். மதத்திற்கு மதம் ஆன்மீக நம்பிக்கைகளில் மிக அதிகமான வித்தியாசம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். எல்லா மதங்களின் சாராம்சமும் ஒன்றே. எந்த மதத்தைப் பின்பற்றினாலும் கடவுளைப் புரிந்து கொண்டு அவரிடம் அன்பு செலுத்த வேண்டுமென்பதே எங்கள் கொள்கை. “நீங்கள் கிறிஸ்துவரா? கூடாது. நீங்கள் எங்களைப் போல் ஆக வேண்டும்” என்று நாங்கள் சொல்லவில்லை. கிறிஸ்துவரானாலும் முஸ்லிமானாலும் இந்துவானாலும் கடவுளைப் புரிய முயற்சித்து, அவரிடம் அன்பு செலுத்துங்கள் என்பதே எங்களது வேண்டுகோள்.
மோஸீ: நான் தங்களிடம் வந்துள்ளதற்கான மூல காரணத்தை நினைவூட்ட விரும்புகிறேன். குற்றங்களைக் குறைப்பதற்குத் தாங்கள் எங்களுக்கு என்ன ஆலோசனை கூற முடியும்? தாங்கள் கூறுவது போல், கடவுளைச் சென்றடைவதே முதலாவதும் முதன்மையானதுமான வழி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் குற்ற மனப்பான்மை பெருகி வருவதைக் குறைப்பதற்கு உடனடியாக நாங்கள் செய்யக் கூடியது ஏதாவது உண்டா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நான் பேச ஆரம்பித்தபோது குறிப்பிட்டபடி, நாங்கள் கடவுளின் திருநாமத்தினை கீர்த்தனம் செய்து பிரசாதம் விநியோகிக்க நீங்கள் வசதிகள் செய்து தர வேண்டும். அப்போது மக்களிடையே பிரமிக்கத்தக்க மாறுதல் ஏற்படும். நான் இந்தியாவிலிருந்து தனியாக வந்தேன். இப்போது என்னைப் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். நான் செய்தது என்ன? அவர்களை உட்காரச் செய்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்யச் சொன்னேன். அதன்பின் சிறிது பிரசாதம் விநியோகித்தேன். இதை மக்களிடையே பெரிய அளவில் செய்ய முடியுமானால், சமுதாயம் முழுவதிலும் இனிய மாற்றம் ஏற்படும். இஃது உண்மை.
மோஸீ: இந்தத் திட்டத்தை வசதி மிக்கவர்கள் வாழும் பகுதியில் ஆரம்பிக்க விரும்புவீர்களா, ஏழைகள் வசிக்கும் இடத்திலா?
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படி நாங்கள் வித்தியாசம் பாராட்டுவதில்லை. எல்லா வகையானவர்களும் எளிதில் வந்து சேர்ந்து ஸங்கீர்த்தனம் செய்ய வசதியாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கே பயன் தேவை, பணக்காரர்களுக்குத் தேவையில்லை என்ற வரையறை எதுவுமில்லை. எல்லாருமே பரிசுத்தமடைய வேண்டும். ஏழைகளிடம் மட்டுமே குற்ற மனப்பான்மை உள்ளது என்று எண்ணுகிறீர்களா?
மோஸீ: இல்லை. ஆனால், இந்தத் திட்டம் வசதி மிக்கவர்கள் வாழும் பகுதிகளை விட ஏழைகள் வாழும் இடங்களில் நடத்தப்பட்டால் அதிகமான நல்விளைவு, அதிகமான சமூக ஒருமைப்பாடு ஏற்படக்கூடுமோ என்று கேட்க விரும்பினேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: எங்கள் வைத்தியம் ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்காக ஏற்பட்டது. ஒருவனை நோய் தாக்கும்போது, அவன் ஏழையா பணக்காரனா என்று பார்ப்பதில்லை. இருவரும் ஒரே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். ஏழையும் பணக்காரனும் வந்து போவதற்கு ஏற்றாற்போல வசதியான இடத்தில் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. அது போலவே, ஸங்கீர்த்தனம் செய்வதற்கான இடமும் அனைவரும் வந்து போவதற்கு வசதியான இடத்தில் இருக்க வேண்டும்.
இதில் சிரமமென்னவென்றால், பணக்காரன் தான் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக எண்ணுகிறான். உண்மையில் எல்லாரையும் விட அவனே அதிகமாய் நோய் பீடித்திருப்பவன். போலீஸ் அதிகாரி என்ற முறையில், ஏழை, பணக்காரர் ஆகிய இருபான்மையரிடமும் குற்றம் செய்யும் மனப்பான்மை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால், எங்கள் கீர்த்தன முறை அனைவருக்கும் உரியது. ஒருவன் ஏழையா, பணக்காரனா என்ற வித்தியாசம் பாராட்டாமல், அனைவரின் இதயத்தையும் இது தூய்மைப்படுத்துகிறது. குற்ற மனப்பாங்கை நிரந்தரமாக மாற்றுவதற்கான ஒரே வழி, குற்றவாளியின் இதயமனப்பான்மை மாற்றுவதாகும். பல திருடர்கள் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். திருடினால் சிறைக்குப் போக வேண்டுமென்பது அவர்களுக்குத் தெரிந்தாலும், அவர்களின் இதயம் அசுத்தமாக இருப்பதால், திருடும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, குற்றம் புரிபவர்களின் இதயத்தைத் தூய்மைப்படுத்தாமல், சட்டத்தை மட்டும் தீவிரமாக அமல் செய்வதால் குற்றங்களைத் தடுக்க முடியாது. திருடனும் கொலையாளியும் சட்டத்தை அறிந்தவர்களே; எனினும், அவர்கள் கடும் குற்றங்களைத் தொடர்ந்து செய்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் தூய்மையற்ற இதயம். எனவே, நாங்கள் இதயத்தைப் பரிசுத்தப்படுத்த முயற்சிக்கிறோம். அப்போது ஜடவுலகின் எல்லா தொல்லைகளும் தீர்க்கப்படும்.
மோஸீ: அது மிகவும் கடினமான காரியம், ஐயா.
ஸ்ரீல பிரபுபாதர்: அது கடினமானதல்ல. அனைவரையும் அழையுங்கள். “வாருங்கள், ஹரே கிருஷ்ண என்ற கீர்த்தனம் செய்யுங்கள், நிறைய பிரசாதம் சாப்பிடுங்கள்” என்று அழையுங்கள். இதில் என்ன கஷ்டம்? இதை நாங்கள் எங்கள் மையங்களில் செய்து வருகிறோம், மக்களும் வருகிறார்கள். ஆனால், எங்களிடம் பணம் மிகக் குறைவாக இருப்பதால், சிறு அளவிலேயே ஸங்கீர்த்தனம் செய்ய முடிகிறது. நாங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். நாளடைவில் மக்கள் எங்கள் மையங்களுக்கு வந்து பக்தர்களாகிறார்கள். அரசாங்கம் எங்களுக்குப் பெருமளவில் வசதிகள் செய்து தருமானால், நாங்கள் இந்த இயக்கத்தை அளவின்றி விரிவுபடுத்தக் கூடும். பிரச்சனை மிகவும் பெரியது. இல்லாவிடில், என்ன செய்வது என்ற கேள்வி தேசிய அளவில் கட்டுரைகளில் ஏன் எழுப்பப்படுகிறது? எந்த நாகரிக நாடும் குற்றங்கள் நிகழ்வதை விரும்புவதில்லை. இஃது உண்மை. ஆனால் அதை எப்படி தடுப்பதென்று தலைவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் பேச்சை அவர்கள் கேட்பதாக இருந்தால், நாங்கள் அதற்கு விடை கூறுகிறோம்.
குற்றம் ஏன் நிகழ்கிறது? ஏனெனில், மக்கள் கடவுளைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்? ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கீர்த்தனம் செய்து பிரசாதம் பெறுங்கள். உங்களுக்கு விருப்பமானால் இந்த ஸங்கீர்த்தன முறையை நீங்கள் மேற்கொள்ளலாம். இல்லாவிடில், சிறிய அளவிலாவது நாங்கள் இதைத் தொடர்ந்து நடத்துவோம். எங்களது நிலை ஏழை வைத்தியர் ஒருவர் சிறிய அளவில் மருத்துவத் தொழில் நடத்துவதைப் போன்றதாகும். வசதிகள் செய்து தரப்பட்டால் அவரும் ஒரு பெரிய மருத்துவமனை வைத்து நடத்தக்கூடும். நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அவர்கள் எங்கள் ஆலோசனையை ஏற்று, ஸங்கீர்த்தன முறையை மேற்கொண்டால் குற்றப் பிரச்சனை தீர்ந்து விடும்.
மோஸீ: பரிசுத்த ஆசிர்வாத கூட்டங்களை நிகழ்த்தும் பல கிறிஸ்துவ அமைப்புக்கள் அமெரிக்காவில் உள்ளன. அவை ஏன் பலனளிக்கவில்லை? அவை ஏன் இதயத்தை சுத்தப்படுத்தவில்லை?
ஸ்ரீல பிரபுபாதர்: மனம் விட்டுச் சொல்வதானால், உண்மையான கிறிஸ்துவர் ஒருவரைக் கூடக் காண்பது கடினமாக இருக்கிறது. கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பைபிளின் கட்டளைப்படி நடப்பதில்லை. “கொல்லாதிருப்பாயாக” என்பது பைபிளின் பத்துக் கட்டளைகளில் ஒன்று. ஆனால் பசுவை கொன்று அதன் மாமிசத்தை உண்ணாத கிறிஸ்துவன் எங்கிருக்கிறான்? மதத்தை நடைமுறையில் பின்பற்றுபவர்கள் கடவுளின் திருநாமத்தைக் கீர்த்தனம் செய்து பிரசாத விநியோகம் செய்தால் பலன் கிடைக்கும். எனது சீடர்கள் மதக் கோட்பாடுகளின்படி நடப்பதற்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் கடவுளின் திருநாமத்தைக் கீர்த்தனம் செய்வதிலும், மற்றவர்கள் செய்வதிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் பெயரளவில் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் அல்ல. திருநாமத்தின் பரிசுத்தப்படுத்தும் சக்தியை அவர்கள் பயிற்சி செய்து பெற்றிருக்கிறார்கள்.
மோஸீ: ஐயா, ஒரு சிறிய வட்டத்திலுள்ள போதகர்களும் பக்தர்களும் மதக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தாலும், வரம்புக் கோட்டிலுள்ளவர்கள் விலகிச் சென்று தொல்லைகளை விளைவிப்பது நிலைமையைக் கடினமாக்குகிறதல்லவா? உதாரணமாக, கிறிஸ்துவ மதத்தைப் போல் ஹரே கிருஷ்ண இயக்கமும் மிகப் பெரிய அளவில் விரிவடைகிறதென்று வைத்துக் கொள்வோம். இயக்கத்தின் எல்லைக் கோட்டிலுள்ளவர்கள், தங்களின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு, உண்மையில் தங்கள் கோட்பாடுகளைப் பின்பற்றாமல் போனால் தங்களுக்கு அதனால் சிரமங்கள் ஏற்படலாமல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: அந்தச் சாத்தியக்கூறு இருக்கவே இருக்கும். ஆனால் நான் சொல்வதெல்லாம் நீங்கள் உண்மையான கிறிஸ்துவராக நடந்துகொள்ளாவிட்டால், உங்கள் பிரச்சாரம் பயன்தராது. நாங்கள் மதக் கோட்பாடுகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பதால், எங்கள் பிரச்சாரம் கடவுள் உணர்வைப் பரப்புவதில் வெற்றியடைந்து, குற்றங்களை நீக்குவதில் நிச்சயமாக உதவும்.
மோஸீ: ஐயா, எங்களுக்காக தாங்கள் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது பேச்சின் ஒலிப்பதிவு நாடாவை எனது மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதனால் பலன் ஏற்படுமென்று நம்புகிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: மிக்க நன்றி.