—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
எப்போது பார்த்தாலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த உலகம்—நினைத்த இடத்திற்குப் பயணிக்கலாம், நினைத்ததை வாங்கலாம், நினைத்ததைச் செய்யலாம்—ஆனால், தற்போது கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் எதிரி அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது.
ஊரடங்கு விதிகள் தளர்ந்துள்ளபோதிலும், இதன் பின்விளைவுகளாக இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் எங்கும் காணப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக பெரியபெரிய ஆயுதங்களை உருவாக்கி, எதிரியை சமாளிக்க தயாராக இருந்தோம். ஆனால், இந்த எதிரியோ அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு, உலகம் முழுவதையும் வெற்றி கொண்டுள்ளான், அனைத்து நாடுகளும் சரணடைந்துள்ளன. எப்படியிருந்த உலகம் இப்படி மாறிவிட்டது.
இந்த உலகம் தற்காலிகமானது என்றும், இங்கே ஒவ்வோர் அடியிலும் அபாயம் உள்ளது என்றும் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய சாஸ்திரங்கள் கூறுவதை நாம் பலமுறை படித்திருக்கலாம், கேட்டிருக்கலாம். ஆனால், அதைப் பற்றி ஆழமாக சிந்தித்துள்ளோமா? சாஸ்திர கூற்றுகள் எந்த அளவிற்கு உண்மை என்பதை கொரோனா அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இனியும்கூட, இவ்வுலகின் தற்காலிகத் தன்மையினை நாம் உணராவிடில், நம்முடைய முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது.
“நிச்சயம் மீண்டு வருவோம்,” என்று பலரும் உயர்ந்த தன்னம்பிக்கையுடன் பேசி வருகின்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், இந்த உலகம் இன்னும் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் தனது பழைய நிலைக்குத் திரும்பினாலும்கூட, நாம் யோசித்துப் பார்க்காத மற்றொரு பிரச்சனை நம்மிடையே எழுந்து நிச்சயம் வருங்காலத்திலும் நம்மைக் கலங்கடிக்கும். அதில் துளியளவும் ஐயம் கிடையாது.
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், புத்தம்புது இன்னல்களை அவ்வப்போது சந்தித்து வருகிறோம். 2004 சுனாமி (அந்த வார்த்தையே அதற்கு முன்பு நமக்குத் தெரியாது), 2015 சென்னை மகா வெள்ளம், 2016 வர்தா புயல், 2020 கொரோனா—இவற்றை நன்கு கவனித்தால், பெயர்களும் வழிகளும் மட்டுமே மாறுகின்றன, இன்னல்களின் காட்சி மாறவில்லை என்பதை உணரலாம்.
எனவே, இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதை நன்கு உணர்ந்து, இதிலிருந்து வெளியேறி ஆன்மீக உலகிற்குச் செல்ல முயல்வதே புத்திசாலி மனிதர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்! அந்த நோக்கத்தை அடைவோம்!