உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்
இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லை, அவர்கள் எவ்வாறு நாம உச்சாடனத்தில் ஈடுபடுவது என்பதை அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்குடன் ஸ்ரீல பிரபுபாதர் உரையாடுகிறார்.
ஆலன் கின்ஸ்பெர்க்: நீங்கள் “அன்பானவர்” என்னும் சொல்லை கிருஷ்ணருடன் அடையாளப்படுத்துகிறீர்; ஆயினும், அதனை அல்லாவுடன் அடையாளம் காண்பவர்களைப் பற்றி உங்களது கருத்து என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு சொல்லின் பொருள் கடவுளைச் சுட்டிக்காட்டக்கூடியதாக இருந்தால், எந்தச் சொல்லிலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்: நாம்நாம் அகாரி பஹுதா நிஜ–ஸர்வ–ஷக்திஸ், கடவுள் பல்வேறு திருநாமங்களைக் கொண்டுள்ளார், அவர் தமது தெய்வீக சக்திகளை அந்தத் திருநாமங்களில் நிரப்பியுள்ளார். அவர் அனைவரையும் வசீகரிப்பவர், தமது திருநாமத்திலிருந்து வேறுபடாதவர்; எனவே, அவரது திருநாமமும் வசீகரமானதாகும். உங்களிடம் கிருஷ்ண நாமத்தினைப் போன்று வசீகரமான பெயர் இருந்தால், நீங்கள் அதனை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
எங்களின் கூற்று, “கடவுளின் திருநாமங்களை உச்சரியுங்கள். அதன் மூலம் நீங்கள் தூய்மையடைவீர்.” இதனை மட்டுமே நாங்கள் கூறுகிறோம், செய்கிறோம். நீங்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து மாற வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. உங்களது புனித நூலில் வசீகரமான சிறந்த நாமம் இருக்குமானால் அதை உச்சரியுங்கள்.
ஆயினும், அஃது உங்களது புனித நூலில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர புதிதாக உருவாக்கப்பட்ட நாமமாக இருத்தல் கூடாது.
ஆலன் கின்ஸ்பெர்க்: நீங்கள் கிருஷ்ண நாம உச்சாடனத்தை கிறிஸ்துவர்களுக்கு எவ்வாறு வழங்குவீர்கள்? கிறிஸ்துவை கிருஷ்ணராகக் காண்பதின் மூலமாகவா, கிருஷ்ணரை கிறிஸ்துவாகக் காண்பதின் மூலமாகவா? அல்லது கிறிஸ்துவை கிருஷ்ணரின் பெயரில் அழைப்பதன் மூலமாகவா?
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணரையும் கிறிஸ்துவையும் பற்றிய இந்த வினா பலமுறை என்னிடம் எழுப்பப்பட்டுள்ளது.
கிறிஸ்து, “நான் கடவுளின் மகன்” என்று கூறுகிறார்; கிருஷ்ணரோ, “நான் கடவுள்” என்று கூறுகிறார். கடவுளுக்கும் கடவுளின் மகனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
நாங்கள் அனைவரையும் மதிக்கின்றோம். உங்களது தந்தைக்கு மதிப்பளித்தால், உங்களுக்கும் நான் மதிப்பளிப்பேன். உங்களது தந்தையை நான் அவமதித்தால், நீங்கள் என்னிடம் திருப்தியடைவீர்களா? இல்லை. இதுவே எங்களது தத்துவம்.
“நான் கிருஷ்ணரின் சேவகருடைய சேவகருடைய சேவகருடைய சேவகருடைய சேவகன்,” என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அதுபோல, கிருஷ்ணரை முழுமையாக நேசிக்கும் எவரும் இயேசு கிறிஸ்துவையும் நேசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை முழுமையாக நேசிப்பவன் கிருஷ்ணரையும் நேசிக்க வேண்டும். “ஏன் கிருஷ்ணரை நேசிக்க வேண்டும்? நான் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நேசிப்பேன்,” என்பது அறிவீனம்.
ஆலன் கின்ஸ்பெர்க்: அப்படியெனில், ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனம் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் சிந்தனைகளை இணைக்கும் பாலமாக அமையும் என்று எண்ணுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஹரே கிருஷ்ண மந்திரம் எந்த மதத்தினரையும் இணைக்கக்கூடியது, மதத்தைப் பற்றி அறிவதில் அவர்கள் உண்மையான அக்கறையுடன் இருக்க வேண்டியது அவசியம். மதத்தினை பலிகடாவாக்கி, மதத்தின் பெயரில் அபத்தமான செயல்களைச் செய்தால், அந்த நிலை முற்றிலும் வேறுபட்டதாகும். மாறாக, மதத்தைப் புரிந்துகொள்ளவும் தீவிரமாகப் பின்பற்றவும் ஒருவன் விரும்பினால், அப்போது அவனால் எங்களைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகு தீவிரமான நபர்களே எங்களுக்குத் தேவை.
ஸ்ரீமத் பாகவதத்தின்படி, மதம் என்றால் இறைவனால் வழங்கப்பட்ட கட்டளைகள் என்று பொருள், தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம். உங்களுக்கு கிறிஸ்துவம், இஸ்லாம் அல்லது வேறு ஏதேனும் ஒரு மதத்தின் மீது பற்றுதல் இருக்கலாம். ஆனால், மதம் என்றால், “இறைவனால் வழங்கப்பட்ட கட்டளைகள்” என்பதை யாரால் மறுக்க முடியும்? “கடவுள் யார்?” என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதற்கான எளிய விடை: “அனைத்திற்கும் ஆதிமூலமாக இருப்பவரே கடவுள்.”
எனவே, இந்த பரந்த மனப்பான்மையுடன் கடவுளைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். குறுகிய மனப்பான்மை மற்றும் பிரிவினைவாதக் கருத்துகளுக்கு அப்பால் செல்ல விரும்பாதவர்களுக்கு இது மிகவும் கடினமே. திறந்த மனதுடனும் ஆய்ந்தறியும் திறனுடனும் இருக்கும்போது, அனைத்தும் சரியாக அமையும். சைதன்ய மஹாபிரபு கூறியபடி, “கிருஷ்ண” நாமத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்று நாங்கள் வரம்புகளை ஏற்படுத்தவில்லை; ஆயினும், உங்களிடம் கடவுளுக்கென்று பொருத்தமான பெயர் ஏதும் இல்லாவிடில், நீங்கள் கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்! இறைவனின் நாமங்களுக்
கிடையில் வேறுபாடுகளைக் காண்பது ஏன்? எல்லா நாமங்களும் ஒன்றே.
ஆலன் கின்ஸ்பெர்க்: அப்படியென்றால், வேறு பொருத்தமான பெயர் இல்லாவிடில், “கிருஷ்ண” நாமத்தைச் சொல்லுங்கள் என்று கூறுகிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். “கிருஷ்ண” நாமத்தைச் சொல்லுங்கள்.
ஆலன் கின்ஸ்பெர்க்: அதுவே சைதன்ய மஹாபிரபுவின் செய்தியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், ஆமாம்.
ஆலன் கின்ஸ்பெர்க்: பொருத்தமான வேறு பெயர்கள் இருப்பதாக சைதன்ய மஹாபிரபு கருதினாரா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கடவுள் கோடிக்கணக்கான பெயர்களைக் கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார். நீங்கள் பகவானைப் பற்றி அறிவதில் தீவிரமாக இருந்தால், அந்த கோடிக்கணக்கான பெயர்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு அவரை அழைக்கலாம். உங்களுக்கு பல பெயர்கள் இருந்தாலும், உங்களது நண்பர்கள் எந்தப் பெயரைக் கொண்டு அழைத்தாலும், அது போதுமல்லவா.
ஆலன் கின்ஸ்பெர்க்: நான் முன்பு கூறிய அதே பிரச்சனையை மீண்டும் முன்வைக்கிறேன். இந்த பௌதிக உலகில் இறைவனுக்குப் பொருத்தமான மிகவும் வசீகரமான பெயர் என்ன என்பதை நான் அறியாவிடில், என்ன செய்வது?
ஸ்ரீல பிரபுபாதர்: உதாரணமாக, “அல்லா” என்னும் இஸ்லாமிய பெயரை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லா என்னும் சொல்லிற்கு “மிகப் பெரியவர்” என்று பொருள். ஆம். கடவுள் மிகவும் பெரியவர்தான். “பெரியவர்” என்னும் கருத்து, கடவுளின் ஆரம்பநிலையான பிரம்மனைப் பற்றிய கருத்தாகும். கிறிஸ்துவ மதத்தில் கடவுளுக்கு குறிப்பிட்ட பெயர் இல்லை என்றே நான் நினைக்கிறேன்; அவர்கள் கடவுளுக்கு “கடவுள்” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர்.
ஆலன் கின்ஸ்பெர்க்: ஆம். “கடவுள்”, “தேவன்” என்று மட்டுமே அவர்கள் கூறுகின்றனர். நான் வளர்ந்த யூத வழியில்…
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் ஜெஹோவா என்பார்கள்.
ஆலன் கின்ஸ்பெர்க்: ஆம், யூதர்கள் கடவுளை ஜெஹோவா என்று கூறுகின்றனர். ஆயினும், அவர்கள் கடவுளை உருவமற்றவராக எண்ணுவதால், கடவுளின் பெயர்களை உச்சரிப்பதற்கும் அவரை சித்திரமாக வரைவதற்கும் அவர்கள் தடை
விதிக்கின்றனர். அதனை அருவவாதம் என்று கூறலாம்.
ஒரு பெண்: ஆம். அவர்கள் அருவவாதிகள். உயரிய பரம்பொருளை நம்புகின்றவர், வேறு எதையும் அறியாதவர்கள்.
ஆலன் கின்ஸ்பெர்க்: பண்டைய ஹீப்ருக்கள், இறைவனின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்றும், இறைவனின் படங்களை வரையக் கூடாது என்றும் போதிக்கின்றனர்; ஏனெனில், மனிதனின் சிந்தனை என்னும் வட்டத்திற்குள் அது கடவுளை அடைத்து விடும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அத்தகைய சிந்தனை இஸ்லாமிய வழக்கத்திலும் உள்ளது. கடவுள் பௌதிகமானவர் அல்ல என்ற அடிப்படைக் கருத்தின் காரணத்தினால், நாங்கள் படத்தை வரையும்போது, அது பௌதிகமானது என்று அவர்கள் நினைக்கின்றனர். எனவே, கடவுளை பௌதிகப் பொருளாக ஏற்பதற்கு தடை விதிக்கின்றனர். இருப்பினும், நீங்கள் உயர்ந்த உணர்வின் நிலைக்குச் செல்லும்போது, கடவுளே எல்லாமாக இருப்பதால், “பௌதிகம்” என்று ஏதுமில்லை என்பதை உணர முடியும். அதுவே வைஷ்ணவ தத்துவம்.
கடவுளே எல்லாமாக இருக்கும் பட்சத்தில், அவரது சக்திகளை பௌதிகமானவை என்று எவ்வாறு கூறவியலும்? கடவுள் ஆன்மீகமானவர் என்பதால், ஒரு விதத்தில் பார்த்தால், “பௌதிகம்” என்று ஏதும் கிடையாது; அவ்வாறு “பௌதிகம்” என்று எதையேனும் கூறினால், கடவுளைப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருளாகிறது.
வானத்தின் ஒரு பகுதி மேகத்தால் மறைக்கப்படும்போது, “வானம் மேகமூட்டமாக உள்ளது” என்கிறோம். மேகம் எல்லைக்குட்பட்டதும் தற்காலிகமானதும் ஆகும், அது வானத்தின் சிறு பகுதியினை சிறிது நேரத்திற்கு மட்டுமே மறைக்கின்றது. ஆனால் வானமோ எல்லையற்றதும் நீடித்திருப்பது
மாகும்.
அதுபோலவே, கடவுள் எல்லையற்றவரும் நித்தியமானவருமாவார். மேகம் என்னும் மாயையினால் நாம் மறைக்கப்படும்போது கடவுளை சரியாகக் காண முடியாது. இதுவே பௌதிகம். மற்றபடி, பௌதிகம் என்ற ஒன்று கிடையாது. கடவுளே எல்லாம் எனும்பட்சத்தில் பௌதிகம் எங்கிருந்து வரும்? ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம, அனைத்தும் இறைவனின் ஆன்மீக சக்தி என்று கூறப்பட்டுள்ளது.
வானத்தை மறைக்கும் மேகத்தைப் போன்று, மக்கள் கடவுளை தங்களது அபத்தமான எண்ணங்களினால் மறைத்து விடுகின்றனர்; இதுவே பெளதிகம். இத்தகு பௌதிகக் கருத்துகளில் அளவுக்கு அதிகமாக ஆழ்ந்திருப்பவர்கள், “இறைவனின் திருநாமம், எனது மகன் அல்லது மகளின் பெயரைப் போன்றது,” என நினைத்து விட வாய்ப்பு இருப்பதால், “கடவுளின் நாமத்தைச் சொல்லக் கூடாது” என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு விதிக்கப்படுகிறது.
எனவே, பௌதிகம் என்ற ஒன்று இல்லை என்பதை உணர்தல் தேவை. அனைத்தும் ஆன்மீகமயமானது. நான் ஆன்மீக சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டால், அஃது எனது அதிர்ஷ்டம். எனவே, மஹாத்மானஸ் து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதா:, என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. மஹாத்மாக்கள் ஆன்மீக சக்தியிடம் சரணடைந்து, கிருஷ்ண சேவையில் ஈடுபடுகின்றனர்.