கிருஷ்ணரிடம் பற்றுதலை வளர்த்தல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஸ்ரீ-பகவான் உவாச

மய்யாஸக்த-மனா பார்த:

யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:

அஸம்ஷயம் ஸமக்ரம் மாம்

யதா ஜ்ஞாஸ்யஸி தத் ச்ருணு

புருஷ பகவான் கூறினார்: பிருதாவின் மகனே, என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில், யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகம் ஏதுமின்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.” (பகவத் கீதை 7.1)

யாரிடமிருந்து கேட்பது?

உயர் அதிகாரியிடமிருந்து கற்பதே பக்குவமான அறிவாகும். தவறு செய்தல், மாயையின் வசப்படுதல், குறைபாடுள்ள புலன்கள், ஏமாற்றுதல் என நான்கு வித குறைபாடுகள் மனிதர்களிடம் உள்ளன. எனவே, இறந்த, நிகழ், எதிர்காலம் ஆகிய முக்காலமும் அறிந்த ஒருவரிடமிருந்து நாம் அறிவைப் பெற வேண்டும். கிருஷ்ணர் மற்றும் அவரது பிரதிநிதியிடமிருந்து அறிவைப் பெறுவது மிகச்சிறந்ததாகும். கிருஷ்ணர் பக்குவமானவர், கிருஷ்ணர் கூறிய செய்தியை மாற்றமின்றி கூறும் அவரது பிரதிநிதியின் செய்தியும் பக்குவமானதே. சாதாரண மனிதன் அல்லது உயிர்வாழிகள் கிருஷ்ணரைப் போன்று பக்குவ மானவர்கள் அல்ல. அது சாத்தியமும் இல்லை. ஆனால், கிருஷ்ணரின் உபசேதங்களில் நீக்குதல், இடைச்செருகுதல் ஆகியன ஏதுமின்றி உபதேசங்களை பிறழாது பின்பற்றும்போது ஒருவன் பக்குவமானவனாகிறான்.

துரதிர்ஷ்டவசமாக, பலரும் கிருஷ்ணரின் செய்தி களைத் திரித்துக் கூறுகின்றனர். பெயரளவிலான பண்டிதர்களும் அரசியல்வாதிகளும் பகவத் கீதைக்குத் தவறான விளக்கம் அளிக்கின்றனர். உதாரணமாக,

பகவத் கீதையில் (1.1) தர்ம-க்ஷேத்ரே குரு-க்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:, குருக்ஷேத்திரம் என்னும் இடத்தில் போர்புரிய ஒன்று கூடியவர்கள்,” என்னும் வாக்கியத்தில், குரு-க்ஷேத்ரம் என்பது நமது உடலைக் குறிப்பதாக சிலர் தவறான விளக்கம் அளிக்கின்றனர். எதற்காக இவ்வாறு திரித்துக் கூற வேண்டும்? பொருள் தெளிவாக இல்லாதபோது மட்டுமே விளக்கம் தேவைப்படுகிறது. குருக்ஷேத்திரம் என்னும் இடம் இன்றும் உள்ளது. தர்மம் ஆசரேத், மக்கள் சடங்குகள் செய்வதற்காக இன்றும் குருக்ஷேத்திரத்திற்குச் செல்கின்றனர். பின் எதற்காக தர்ம-க்ஷேத்ர என்பதற்கு உடல்” என்று தவறான விளக்கமளிக்க வேண்டும்? தர்ம-க்ஷேத்ர என்றால் உடல்” என்று விளக்கக்கூடிய அகராதி எங்கேனும் உள்ளதா?

பகவத் கீதைக்கு தவறான விளக்கமளித்து, அவர்கள் தம்மை சீரழித்துக்கொள்வதோடு மட்டு மல்லாமல் மற்றவர்களையும் சீரழிக்கின்றனர். பகவத் கீதையை அதன் உண்மையுருவில், கிருஷ்ணர் கூறியுள்ளபடி ஏற்க வேண்டும்.

கிருஷ்ணரின் மீதான பற்றுதல்

இங்கே முழுமுதற் கடவுள் கூறுவதை நாம் எவ்வித வியாக்கியானமும் இன்றி உள்ளது உள்ளவாறு ஏற்க வேண்டும். பரம அதிகாரியான கிருஷ்ணர், உனது ஆஸக்தியை (பற்றுதலை) என்னிடம் வைப்பாயாக,” என்று கூறுகிறார். அனைவருக்கும் ஆஸக்தி உள்ளது. சிலர் குடும்பத்தினரிடம் பற்றுதல் கொண்டுள்ளனர், சிலர் சமுதாயத்திடம் பற்றுதல் கொண்டுள்ளனர், சிலர் தேசத்திடம் பற்றுதல் கொண்டுள்ளனர். நம்மிடம் ஆஸக்தி உள்ளது, ஆனால் அந்த ஆஸக்தியை கிருஷ்ணரிடம் வைக்கும்போது நமது வாழ்வு பக்குவமடைகிறது. மேற்கத்திய நாட்டு மக்கள் குடும்பம் ஏதுமின்றி இருந்தாலும் பற்றுதலின் காரணமாக நாயை வளர்க்கின்றனர். அவர்களிடம் ஆஸக்தி இருக்கின்றது, அதை அவர்கள் நாய்களிடமும் பூனைகளிடமும் காட்டுகின்றனர்.

நம்முடைய ஆஸக்தி எனப்படும் பற்றுதலை கிருஷ்ணரிடம் மாற்ற வேண்டும், அதுவே விருந்தாவன வாழ்க்கை. விருந்தாவனத்தில் ஆஸக்தியின் (பற்றுதலின்) மையம் கிருஷ்ணரே. நந்த மஹாராஜரும் யசோதையும் கிருஷ்ணரின் மீது பற்றுதல் (ஆஸக்தி) வைத்துள்ளனர். கோபியர்கள், கோபர்கள், மரங்கள், பூக்கள், பழங்கள், யமுனை என அனைத்தும் கிருஷ்ணரிடமே பற்றுதல் கொண்டுள்ளன. கிருஷ்ணரை நமது பற்றுதலின் மையமாக வைத்தால், நம்மால் விருந்தாவனத்தை எங்கும் உருவாக்க இயலும். இதுவே வாழ்வின் வெற்றியாகும். நமது ஆஸக்தி, பற்றுதலை கிருஷ்ணரிடம் வைக்க வேண்டும். இதுவே தலைசிறந்த யோகம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

நந்த மஹாராஜர், யசோதை, விரஜவாசிகள் என அனைவருமே கிருஷ்ணரின் மீது பற்றுதலுடன் இருந்தனர்

கிருஷ்ணரிடம் சரணடைதல்

நமது கிருஷ்ண பக்தி இயக்கம் மக்கள் கிருஷ்ணரின் மீது பற்றுதல்கொள்வதற்கு பயிற்சி அளிக்கின்றது. கிருஷ்ணர் யார் என்பதை ஒருவன் அறியாத வரை, அவரிடம் பற்று வைத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆகவே, நாம் அவரை அறிந்துகொள்வதற்காக அவர் கருணையுடன் தோன்றி நமது கவனத்தைப் பெறுகிறார். போராட்டம் நிறைந்த பௌதிக வாழ்விற்கு காரணம் கிருஷ்ணருடனான நமது உறவை மறந்திருப்பதே. இதை கிருஷ்ணர் கீதையில் (4.7) கூறுகிறார்.

யதா யதா ஹி தர்மஸ்யக்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்யததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

தர்மஸ்ய க்லானி என்பது நமது விதிக்கப்பட்ட கடமையிலிருந்து விலகுவதைக் குறிக்கின்றது. நமது கடமையிலிருந்து நாம் விலகும்போது, கிருஷ்ணர் தமது காரணமற்ற கருணையினால் நமது கவனத்தையும் நமது பற்றுதலையும் அவரிடம் திருப்புவதற்கான முறையினை எடுத்துரைக்கிறார்.

கிருஷ்ணருடனான நமது நித்திய உறவை மறத்தலே, தர்மஸ்ய க்லானி, அதாவது, தர்மத்தி லிருந்து விலகுதல் எனப்படுகிறது. ஆகவே, நமது தர்மம்குறித்து கிருஷ்ணர் பகவத் கீதையின் இறுதியில், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, அனைத்து தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டுமே சரணடைவாயாக,” என்று கூறுகிறார்.

கிருஷ்ணர் பெயரளவு தர்மங்களான இந்து தர்மத்தையோ இஸ்லாமிய தர்மத்தையோ கிறிஸ்துவ தர்மத்தையோ நிலைநாட்டுவதற்கு வரவில்லை. தம்மிடம் சரணடைதல் என்னும் உண்மையான தர்மத்தை வலியுறுத்தவே அவர் வந்தார்.

ஏமாற்றக்கூடிய போலியான தர்மங்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் விரட்டி அடிக்கப்படுகின்றன. கிருஷ்ணரால் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையான தர்மத்தை ஸ்ரீமத் பாகவதம் விளக்குகின்றது. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. சில சாஸ்திரங்களின்படி, ஒருவன் தர்மத்திலிருந்து அர்த்தத்திற்கும், அர்த்தத்திலிருந்து காமத்திற்கும், காமத்திலிருந்து மோக்ஷத்திற்கும் முன்னேற வேண்டும். ஆனால், பாகவத தர்மம் இதைவிட உயர்ந்ததாகும்.

பக்தி முக்தியைக் காட்டிலும் உயர்ந்தது

பாகவதத்தின் சிறந்த கருத்துரையாளரான ஸ்ரீதர ஸ்வாமி, இது தொடர்பாக கூறுகிறார்: அத்ர மோக்ஷ-வாஞ்ச அபி நிரஸ்த, ஸ்ரீமத் பாகவதத்தில் முக்தியைப் பற்றிய யோசனைக்குகூட இடமில்லை.” கிருஷ்ணரிடம் ஒருவன் முழுமையாக சரணடையும்போது, அவன் உடனடியாக முக்தியடைகிறான் என்பது இதன் பொருள். முக்தி ஸ்வயம் முகுலிதாஞ்ஜலி ஸேவதே ’ஸ்மான், பக்தன் முக்திக்காக பிரயத்தனப்பட தேவையில்லை, முக்தி தேவி பக்தனின் வீட்டு வாசலில் இருகரம் கூப்பி வணங்கியபடி அவனுக்கு சேவை செய்ய காத்து நிற்கிறாள் என்று பில்வமங்கள தாகூர் கூறுகிறார்.

ஒருவன் செல்வந்தனாகும்போது அவனது ஏழ்மை அவனைவிட்டு தானாக விலகுகின்றது, ஏழ்மையை விரட்ட செல்வந்தன் தனியாக முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. அதுபோல, பக்தன் முக்திக்காகத் தனியாக பிரயத்தனப்பட வேண்டிய அவசியமில்லை, பக்தன் பக்தித் தொண்டில் ஈடுபடும்பொழுது இயற்கையாகவே முக்தியின் நிலையில் இருக்கின்றான்.

பக்தரிடம் சரணடைதல்

ஆகவே, கிருஷ்ணருடைய உபதேசத்தின் மையக் கருத்து, உனது பற்றுதலை (ஆஸக்தியை) என்மீது வளர்த்துக்கொள். மற்றவை அனைத்தும் தானாகவே வரும்.” இந்த ஸ்லோகத்தில் மத்-ஆஷ்ரய: (கிருஷ்ணரிடம் தஞ்சமடைதல்) என்னும் வார்த்தை மிக முக்கியமானதாகும். ஏனெனில், கிருஷ்ணரிடம் தஞ்சமடையாமல் அவர் மீதான உங்களது பற்றுதலை அதிகரிக்க இயலாது. நேரடியாக கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் இருத்தல் அல்லது கிருஷ்ணரிடம் சரணடைந்தவரின் வழிகாட்டுதலின் கீழ் இருத்தல் என்பதே மத்-ஆஷ்ரய: என்பதன் பொருளாகும். எனவே கிருஷ்ணர் மத்-ஆஷ்ரய: நிலையினை சிபாரிசு செய்கிறார். கிருஷ்ணரது கட்டுப்பாட்டில் உள்ளவரது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்ய இயலாது. தூய பக்தரிடம் சரணடைந்தால் நாமும் தூய்மை அடைய இயலும்.

யே  ச பாப யத்-அபாஷ்ரயாஷ்ரயா:

ஷுத்யந்தி தஸ்மை ப்ரபவிஷ்ணவே நம:

தூய பக்தரிடம் சரணடைவதன் மூலம் கீழ்நிலை பிறவியைச் சார்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களும் தூய்மை பெற இயலும். (ஸ்ரீமத் பாகவதம் 2.4.18)

பகவானின் திருநாமத்தை இடைவிடாது ஜபிப்பதன் மூலம், அவர் மீது பற்றுதல் கொள்ள முடியும்.

உறங்கிய நிலையிலுள்ள பற்றுதல்

கிருஷ்ணருக்கான பற்றுதலை அதிகரிப்பதே நமது நோக்கமாகும். கிருஷ்ணருக்கான பற்றுதல் நம்மிடம் இயற்கையாகவே உள்ளது. அது செயற்கையானதல்ல. சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய 22.107) கூறப்பட்டுள்ளது:

நித்ய-ஸித்த க்ருஷ்ண-ப்ரேம ’ஸாத்ய கபு நய

ஷ்ரவணாதி-ஷுத்த-ஸித்தே கரயே உதய 

கிருஷ்ண பக்தி இயற்கையானதாகும். அஃது ஏற்கனவே உள்ளது. உறங்கிய நிலையில் உள்ள அதனை நாம் எழுப்பினால் போதும். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதன் மூலம் இதயம் தூய்மையடைந்து கிருஷ்ண உணர்வானது எழுப்பப்படுகின்றது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதன் மூலமாகவே அனைத்தும் தானாகவே வரும். எந்தளவிற்கு அதிகமாக ஜபிப்பீர்களோ அந்த அளவிற்கு உங்களது பௌதிகப் புலனின்பம் என்னும் இதய நோய் குறைந்து போகும். பிறகு உங்களது நிலையை நீங்களே உணர்வீர்கள், கிருஷ்ணரின் மீது பற்றுதல் கொள்வீர்கள். ஆகவே, சைதன்ய மஹாபிரபு, பரம் விஜயதே ஸ்ரீ-க்ருஷ்ண-ஸங்கீர்தனம். ஸங்கீர்த்தன இயக்கத்திற்கு அனைத்து புகழும் உண்டாகட்டும்,” என்று கூறுகிறார். இருபத்து நான்கு மணி நேரமும் பக்தித் தொண்டில் ஈடுபட்டால், நீங்கள் உடனடியாக முக்தியின் தளத்தில் இருப்பீர்கள். இதுவே பக்திக்கான சோதனையாகும். பௌதிகப் புலனின்பத்தின் மீதான விருப்பமின்மையே முக்தியாகும்.

பௌதிக ஆசைகள் இருந்தால்…

கிருஷ்ணரின் மீதான பற்றுதல் மிக இனிமையானது. ஆரம்பத்தில் துருவ மஹாராஜர் பௌதிக இன்பத்தில் பற்றுதல் கொண்டிருந்தார். தமது தந்தையைக் காட்டிலும் உயர்ந்த ராஜ்ஜியத்தைப் பெற விரும்பினார், அதனைப் பெறுவதற்காக அவர் காட்டிற்கு பரம புருஷ பகவானைக் காணச் சென்றார். ஆயினும், பகவானை தரிசித்த மாத்திரத்தில், அவர் எந்த வரத்தையும் ஏற்க மறுத்துவிட்டார். இதுவே கிருஷ்ணரின் மீதான ஆஸக்தியின் (பற்றுதலின்) பயனாகும். கிருஷ்ணரின் மீது உண்மையில் நீங்கள் பற்றுதல் கொண்டால், நீங்கள் முழுமையடைந்து விட்டதை உணர்வீர்கள், பௌதிகத் தேவைகளே இருக்காது. எனவே, சாஸ்திரம் கூறுகிறது,

அகாம: ஸர்வ-காமோ வாமோக்ஷ-காம உதார-தீ:

தீவ்ரேண பக்தி-யோகேனயஜேத புருஷம் பரம் 

உங்களிடம் பௌதிக ஆசைகள் இருந்தாலும், நீங்கள் கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்டால் உங்களது பௌதிக விருப்பங்களும் முழுமை பெறும், அதே சமயம் கிருஷ்ணரையும் அடைவீர்கள்.

துருவ மஹாராஜர் வரங்களை ஏற்க மறுத்தபோது, பகவான் விஷ்ணு, கவலைகொள்ள வேண்டாம். பௌதிகத் தேவை உனக்கு இருந்தது. எனவே, உனக்கான லோகமான துருவ லோகத்தைப் பெறுவாயாக. அங்கு வாழ்ந்த பின்னர் வைகுண்டத் திற்குத் திரும்புவாயாக,” என்று கூறினார்.

துருவ மஹாராஜர் பகவானின் தரிசனத்தை அடைதல்.

பற்றுதலை வளர்த்தல்

கிருஷ்ணர் மிக இனிமையானவர், மிக தாராளமானவர், உங்களிடம் சிறிதளவு விருப்பம் இருந்தால்கூட, அவர் அதனை நிறைவேற்றுவார். அதே சமயத்தில் நீங்கள் பகவானிடமும் திரும்பிச் செல்வீர்கள். எனவே, யஜேத புருஷம் பரம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உங்களிடம் பௌதிக ஆசைகள் இருந்தாலும், கிருஷ்ணரை வழிபடுங்கள். அவர் உங்களது விருப்பங்களை பூர்த்தி செய்வார். மேலும், நீங்கள் வைகுண்டத்திற்கும் செல்ல இயலும்.

கிருஷ்ணர் சர்வ சக்தி படைத்தவர், சர்வ வல்லமை உடையவர், ஆறு ஐஸ்வர்யங்களை முழுமையாகக் கொண்டவர். கிருஷ்ணரால் அவற்றை நிறைவேற்ற இயலும். ஆகவே, கிருஷ்ணரைப் பற்றிக் கொள்ளுங்கள், உங்களது ஆஸக்தி அதிகரிக்கும். உங்களது கவனத்தை தேவர்களிடம் திருப்பினால், அப்போது உங்களது ஆஸக்தி குறையும்.

கிருஷ்ணரிடம் நம்பிக்கை கொண்டிருப்பவன் தேவர்களை வழிபடுவது சாத்தியமில்லை. கிருஷ்ணரைத் தவிர்த்து மற்றவரை வழிபடுவது ஆஸக்தியை வளர்ப்பதற்கு உதவாது. நமது அனைத்து பௌதிக விருப்பங்களையும் கைவிட்டு, கிருஷ்ணரிடம் மட்டுமே உறுதியுடன் இருந்து அவருக்கு எப்போதும் சேவை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.

எனவே, பக்தித் தொண்டு என்னும் வழிமுறையை நாம் பயிற்சி செய்ய வேண்டும். கிருஷ்ணர், மத்-ஆஷ்ரய,  என்னிடம் தஞ்சமடை” என்று பகவத் கீதையில் உபதேசிக்கின்றார். நாம் அவரது உபதேசங்களை ஏற்று வாழ்வை வெற்றி பெறச் செய்வோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives