வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஏவம் மன: கர்ம-வஷம் ப்ரயுங்க்தே
அவித்யயாத்மன்யுபதீயமானே
ப்ரீதிர் ந யாவன் மயி வாஸுதேவே
ந முச்யதே தேஹ-யோகேன தாவத்
“உயிர்வாழி தமோ குணத்தினால் மறைக்கப்படும் போது, அவனால் தனிப்பட்ட உயிர்வாழியையும் பரம உயிர் வாழியையும் புரிந்து கொள்ள முடிவதில்லை, அவனுடைய மனம் பலன்நோக்கு கர்மத்தில் வயப்படுகிறது. எனவே, என்னிடமிருந்து (ரிஷபதேவரிடமிருந்து) வேறுபடாதவரான பகவான் வாஸுதேவரிடம் அன்பு ஏற்படாதவரை, மீண்டும் மீண்டும் பௌதிக உடலை ஏற்பதிலிருந்து அவன் விடுதலை அடையமாட்டான் என்பது உறுதி.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.6)
பக்தி வாழ்வின் தொடக்கம்
மனம் பலன்நோக்குச் செயல்களால் மாசுபடும்போது, உயிர்வாழி ஒரு பௌதிக நிலையிலிருந்து மற்றொன்றிற்கு உயர விருப்பப்படுகிறான். பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்காக அல்லும்பகலும் அரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். ஒருவன் வேதச் சடங்குகளைப் புரிந்து கொண்டால்கூட, ஸ்வர்க லோகத்திற்குச் செல்லவே ஆசைப்படுகிறான், வாழ்வின் உண்மையான குறிக்கோள் பகவானின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதில் உள்ளது என்பதை அவன் அறிவதில்லை. பலன்நோக்குச் செயலின் தளத்தில் செயல்பட்டு, பல்வேறு ரூபங்களிலும் உயிரினங்களிலும் இந்த பிரபஞ்சம் முழுவதுமாக அவன் சுற்றித் திரிகின்றான். பகவத் பக்தரான குருவின் தொடர்பிற்கு அவன் வராத வரை வாஸுதேவரின் தொண்டில் அவனுக்கு பற்றுதல் வராது. வாஸுதேவரைப் பற்றிய ஞானத்தைப் புரிந்து கொள்வதற்கு பல பிறவிகள் தேவை. இது பகவத் கீதையில் (7.19) பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது: வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:. பற்பல பிறவிகளின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு பிறகு, வாஸுதேவரான கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஒருவர் தஞ்சமடைகிறார். இச்சமயத்தில்தான் ஒருவர் உண்மையான புத்திசாலியாகிறார், பகவானிடம் சரணடைகிறார். இதுவே பிறப்பு இறப்பின் சுழற்சியை நிறுத்துவதற்கான ஒரே வழி. தஷாஷ்வமேத-காட் என்னும் இடத்தில் ஸ்ரீல ரூப கோஸ்வாமிக்கு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழங்கிய உபதேசத்தில் (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 19.151) இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ
குரு க்ருஷ்ண ப்ரஸாதே பாய பக்தி லதா பீஜ
பல்வேறு வடிவங்களிலும் உருவங்களிலும் பல்வேறு கிரகங்களில் உயிர்வாழி சுற்றித் திரிகிறான், ஆனால் அதிர்ஷ்டவசமாக ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அவன் சந்தித்தால், ஆன்மீக குருவின் கருணையால் பகவான் கிருஷ்ணரின் அடைக்கலத்தைப் பெறுகின்றான், அவனுடைய பக்தி வாழ்க்கை தொடங்குகிறது.
ஸத்வ குணத்தின் நன்மை
பௌதிக உடலோடு ஏற்படும் தொடர்பே பௌதிக வாழ்க்கையில் உயிர்வாழிக்கு இருக்கும் பிரச்சனையாகும். ஆனால் யாரும் இதை அறிவதில்லை. குறிப்பாக, இந்த பௌதிக உடல் நம்மிலிருந்து வேறுபட்டது, நாம் அதனுள் சிக்குண்டு இருக்கின்றோம், அதனால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பதை தற்போதைய மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. இதுவே நமது உண்மையான பிரச்சனை. ஆனால், அவித்யா, அதாவது அறியாமையின் காரணத்தால் மக்களுக்கு இது தெரியவில்லை. ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் அவித்யா மிகவும் வலுவாக இருக்கும். ஸத்வ குணத்தில் தெளிவு இருக்கும், இதுவே ஒருவர் பிராமணத் தகுதிகளை அடைந்து விட்டார் என்பதற்கான ஆதாரம். அந்த நிலையிலிருப்பவர், “நான் இந்த உடல் அல்ல, இதிலிருந்து வேறுபட்டவன்,” என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பக்தி வாழ்வில் முன்னேற்றமடைவது ஸத்வ குணத்தில் இருப்பவர்களுக்கு எளிதாகும்.
நாகரிகமல்ல, மிருக வாழ்க்கை
மனித நாகரிகமானது ஸத்வ குணத்தில் இருப்பவரை கீழே தமோ குணத்திற்கு இழுக்கக் கூடாது. ஆனால் நவீன நாகரிகம் அதைச் செய்கிறது. தங்களின் பூர்வீக புண்ணியச் செயல்களால் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட பாவகரமான நடத்தைக்கு இழுக்கப்படுமளவிற்கு, நவீன நாகரிகத்தின் பௌதிக மயக்கம் வலுவாகவும் மோசமாகவும் உள்ளது. எவ்வாறு குடிப்பது, எவ்வாறு மாமிசம் சாப்பிடுவது, எவ்வாறு முறையற்ற உடலுறவு கொள்வது–இதைத்தான் இவர்கள் கற்கிறார்கள். இவை கடைநிலை அறியாமையின் அறிகுறிகளாகும். உயர்வு பெறுவதே உண்மையான நாகரிகம். வேறுவிதமாக கூறினால், மனித நாகரிகம் என்பது ஒவ்வொருவரையும் படிப்படியாக ஸத்வ குணத்திற்கு இழுத்து வரும் வகையில் அமைக்கப்பட வேண்டும், தமோ குணத்திற்கு இழுத்துச் செல்லப்படும் வகையில் அல்ல. ஆனால், இன்றைய சமுதாயம், அரசியல், பொருளாதார ஏற்பாடுகள் என அனைத்தும் ஒவ்வொருவரையும் தமோ குணத்திற்கு இழுத்துச் செல்லுமளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. இது நாகரிகம் அல்ல, இழிநிலை. பௌதிக உடலிலிருந்து விடுதலை பெறுவதே மனித வாழ்வின் குறிக்கோள். அந்த தளத்திற்கு மக்களை உயர்த்தக்கூடிய நாகரிகமே உண்மையான மனித நாகரிகம். இல்லையெனில், அது நாகரிகமல்ல, மிருக வாழ்க்கை.
உண்மையான நாகரிகம்
இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மனித சமுதாயத்தை உண்மையான நாகரிகத்தின் தளத்திற்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. இது மிகவும் விஞ்ஞானபூர்வமான இயக்கம். இங்கே பகவான் ரிஷபதேவர் கூறுகிறார்: ப்ரீதிர்ன யாவன் மயி வாஸுதேவே ந முச்யதே தேஹ-யோகேன தாவத், “வாஸுதேவனான என்னிடத்தில் அன்பை வளர்த்துக் கொள்ளாவிடில் பௌதிக உடலிலிருந்து விடுதலையடைய முடியாது.” பௌதிக உடலில் சிக்குண்டு இருப்பதே நமது பிரச்சனை என்பதால், வாஸுதேவர் அல்லது கிருஷ்ணரிடத்தில் அன்பை வளர்த்து, உடலிலிருந்து விடுதலையடைவதற்கு நமக்கு ஒரு வழிமுறை தேவைப்படுகிறது. அந்த வழிமுறை பக்தி அல்லது பக்தித் தொண்டு எனப்படுகிறது. பக்தித் தொண்டைக் கடைப்பிடிப்பவர் படிப்படியாக கிருஷ்ணரை நேசிக்கும் தளத்திற்கு வருகிறார். அதுவே நாகரிகம், கிருஷ்ணரை நேசிக்கும் தளத்திற்கு கொண்டு வருவதே நாகரிகம்.
மனித நாகரிகம் மனிதனை ஸத்வ குணத்தை நோக்கி அழைத்துச் செல்லும்படி இருக்க வேண்டும்.
வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவம்
உண்மையான அன்பு என்பது அன்பிற்குரியவரை எல்லாமாக பார்ப்பதாகும் (வாஸுதேவம் ஸர்வம் இதி). இந்த பௌதிக உலகில் ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பினை உண்மையான அன்பிற்கு சற்றே நெருக்கமானது என்று கருதலாம். அவள் தனது குழந்தையை கவனித்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளாள், அவளுடைய முழு கவனமும் குழந்தையின் மீதே உள்ளது–அந்த அளவிற்கு குழந்தையின் மீதான தாயின் அன்பு தீவிரமானதாகும். இதுபோன்ற உதாரணத்திலிருந்து, உண்மையான அன்பைப் பற்றி, அதாவது கிருஷ்ணருக்கான அன்பைப் பற்றி சிறிதளவு புரிந்துகொள்ளலாம். பெயரளவிலான பௌதிக அன்பு நீடிப்பதில்லை. ஆயினும், உனது குழந்தையை நேசி, கணவனை நேசி, நாட்டை நேசி, சமுதாயத்தை நேசி என பலரையும் நேசிக்க இயற்கை ஒருவரைத் தூண்டுகிறது. அன்பில் பலவகை உண்டு. ஆனால் அந்த அன்பினை வாஸுதேவரான கிருஷ்ணரின் மீது ஒருமுகப்படுத்தும்போது, அது வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவமாகிறது.
கிருஷ்ணரின் மீதான அன்பு
“கிருஷ்ணரே எனது வாழ்க்கை,” என்னும் திடமான நிலைக்கு நீங்கள் வர வேண்டும். இந்த உணர்வின் மிகவுயர்ந்த பக்குவநிலை, விருந்தாவனத்தில், குறிப்பாக கோபியர்களால் வெளிப்படுத்தப்படுகிறது. விருந்தாவனத்திலுள்ள அனைவரும் கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்டுள்ளனர்–மரங்கள், செடிகள், ஏன் மண் துகள்கள்கூட கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்டுள்ளன. அத்தகு மிகவுயர்ந்த நிலையினை திடீரென்று அடைய இயலாது. ஆயினும், நாங்கள் கற்றுக் கொடுக்கும் விதத்தில் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்தால், படிப்படியாக அந்நிலைக்கு வளர்ச்சியடைய முடியும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் வெற்றியே இதற்கு நிரூபணம். கிருஷ்ணரைப் பற்றி ஒருபோதும் கேட்டிராதவரும் அறியாமையின் கீழ்நிலைகளில் இருந்தவர்களுமான மக்கள் உலகெங்கிலும் கிருஷ்ண பக்தியை ஏற்று வருகின்றனர், கிருஷ்ணரின் மீதான அவர்களின் அன்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அஃது இயற்கையே. சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய லீலை 22.107) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
நித்ய-ஸித்த க்ருஷ்ண-ப்ரேம ஸாத்ய கபு நய
ஷ்ரவணாதி-ஸுத்த-சித்தே கரயே உதய
“உயிர்வாழிகளின் இதயங்களில் கிருஷ்ணருக்கான தூய அன்பு நித்தியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது வேறொரு மூலத்திலிருந்து பெறக்கூடியது அல்ல. கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாலும் அவரது புகழைப் பாடுவதாலும் இதயம் தூய்மையடையும்போது, அந்த அன்பு இயற்கையாக விழிப்படைகிறது.” உயிர்வாழிகளான நாம் அனைவரும் எவ்வாறு நித்தியமானவர்களோ, அதுபோல கிருஷ்ணருக்கான நமது பக்தியும் நித்தியமானதாகும். அது தற்போது அறியாமையால் (அவித்யாவினால்) மூடப்பட்டுள்ளது. நாம் கிருஷ்ணரை மறக்கும்போது, அந்த நிலை அவித்யா; கிருஷ்ணரே எல்லாம் என்பதை ஏற்றுக்கொண்டால், அந்த நிலை வித்யா. அவித்யா என்பது இருளையும் வித்யா என்பது ஒளியையும் குறிக்கும். தமஸி மா ஜ்யோதிர் கம, என்பது வேத வாக்கு: “அறியாமையின் இருளில் இருக்க வேண்டாம், கிருஷ்ண பக்தியின் ஒளிக்கு (ஜ்யோதிக்கு) வாருங்கள்.”
கிருஷ்ணர்மீதான தூய அன்பு எல்லா உயிர்களிலும் இருப்பதாகும், அது புதுப்பிக்கப்பட வேண்டும்.
கிருஷ்ணரைப் பற்றிக் கேளுங்கள்
ஜ்யோதி என்பது இறுதியில் கிருஷ்ணருக்கான அன்பையும் ஆன்மீக உலகில் கிருஷ்ணருடனான அன்பான உறவுகளையும் குறிக்கும். அந்த உலகமானது, ஜ்யோதிர்மய-தாம, கிருஷ்ணரின் சுய பிரகாசம் கொண்ட வாசஸ்தலம் எனப்படுகிறது. சூரியனில் இருள் என்னும் கேள்விக்கு இடமில்லாததைப் போலவே, ஆன்மீக உலகிலும் இருள் அல்லது அறியாமை என்னும் கேள்விக்கு இடமே இல்லை. அங்குள்ள அனைவரும் அனைத்து பொருள்களும் ஸுத்த-ஸத்வ நிலையில், தூய்மையான ஸத்வ குணத்தில் இருக்கின்றன(ர்). சாதாரண ஸத்வம் அல்ல, ஸுத்த-ஸத்வம். இந்த பௌதிக உலகில் முக்குணங்கள் உள்ளன–ஸத்வம், ரஜோ, தமோ. இவற்றில் எந்த குணமும் தூய்மையானதல்ல: ஒன்று மற்றொன்றோடு கலந்துள்ளது. அந்த கலவையினால் பல தரப்பட்ட உயிரினங்களைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் ஸுத்த-ஸத்வ, தூய்மையான ஸத்வத்தின் தளத்திற்கு வர வேண்டும். இதற்கான மிகச்சிறந்த வழி, அதிகாரபூர்வமான மூலத்திலிருந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாகும். இதனை ஸ்ரீமத் பாகவதம் (1.2.17) பின்வருமாறு விளக்குகின்றது:
ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண
புண்ய-ஷ்ரவண-கீர்தன:
ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி
விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம்
“அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை முறையாகக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தரக்கூடியதாகும். அச்செய்தி களைக் கேட்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அவரே அகற்றிவிடுகிறார்.” ஆகையால், “கிருஷ்ணரிடத்தில் அன்பை வளர்ப்பதில் மட்டுமே நான் இப்பிறவியில் பெருமுயற்சி செய்வேன்,” என்று நினைத்து, கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதிலும் அவரது புகழைப் பாடுவதிலும் நீங்கள் தீவிரமாக இருந்தால், அது சாத்தியமாகும். மேலும், நீங்கள் கிருஷ்ணரிடத்தில் முழுமையான அன்பை வளர்த்துக் கொண்ட உடனேயே பௌதிக உடலில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பின்றி போய்விடும்.