பிரம்மஜோதியில் கலப்பது உண்மையான முக்தியா?
இந்திய வழக்கறிஞருடனான பின்வரும் உரையாடலில், ஆத்மா இவ்வுலகில் ஏன் துன்புறுகிறான் என்பதையும் இவற்றிலிருந்து எவ்வாறு நிரந்தரமாக விடுபடுவது என்பதையும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை.
வழக்கறிஞர்: நம்மால் மரணத்தை வெல்ல இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். பூரண கிருஷ்ண உணர்விற்கு மாறுவதால் மரணத்தை வெல்ல இயலும்.
வழக்கறிஞர்: அவ்வாறு மாறினால் மரணமும் மறுபிறவியும் கிடையாதா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கிடையாது. நீங்கள் நித்தியமானவர், உங்களது உண்மையான வீடு ஆன்மீக உலகத்தில் உள்ளது. ஆனால் கர்மாவினால் நீங்கள் இந்த பெளதிக உலகில் வைக்கப்பட்டுள்ளீர்கள். நீரிலிருந்து வெளியேறிய மீனைப் போல, பெளதிக உலகில் நீங்கள் போராடுகிறீர்கள். மீனை நீரிலிருந்து எடுத்து நிலத்தில் விட்டால், அதன் வாழ்க்கை ஒரு போராட்டமே; மீண்டும் நீரில் விட்டால் அதனுடைய வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும்.
வழக்கறிஞர்: நமது இயற்கையான நிலை கடவுளின் திருநாட்டிற்குத் திரும்புதலா?
ஸ்ரீல பிரபுபாதா: ஆம்.
வழக்கறிஞர்: நாம் ஆன்மீக உலகிலிருந்து பெளதிக உலகிற்கு எவ்வாறு வந்தோம் என்பது மர்மமாக உள்ளதே?
ஸ்ரீல பிரபுபாதர்: இதில் என்ன மர்மம் உள்ளது? இஃது ஒரு குற்றவாளி குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுவதைப் போன்றதாகும்.
பக்தர்: இதற்கு காரணம் நமது கர்மா.
வழக்கறிஞர்: ஆனால், அந்த கர்மா எங்கிருந்து துவங்கியது?
ஸ்ரீல பிரபுபாதர்: குற்றவாளி எங்கிருந்து துவங்குகிறான்? சட்டத்தை மீற விரும்பி, முதல் குற்றத்தைச் செய்வதால், அவன் குற்றவாளியாகிறான். நீங்கள் ஒரு கண்ணியவான்; இருப்பினும், நீங்கள் விரும்பினால், சட்டத்தை மீறி குற்றவாளியாகலாம், சட்டத்தை மீறாமல் குற்றமற்றவராகவும் இருக்கலாம்.
அது போல, நீங்கள் கடவுளின் கட்டளைகளை மீறி சுதந்திரமாகச் செயல்பட முயலும்போது, உங்களது கர்மா துவங்குகிறது, அப்போது உடனடியாக ஜடவுலகிற்கு வருகிறீர்கள். நீங்கள் மீண்டும் கடவுளிடம் சரணடைந்தால், கர்மாவை நிறுத்திவிடுவீர்கள். எனவே, கர்மாவை நிறுத்துவதும் துவங்குவதும் உங்கள் கையில்தான் உள்ளது. பெளதிக உலகில் உங்களது வாழ்க்கையை நீங்களே தொடங்கினீர், உங்களால் இதனை நிறுத்தவும் முடியும்.
வழக்கறிஞர்: அப்படியெனில், ஆத்மா என்றோ ஒருநாள் கண்ணியவானாக இருந்தவனா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆத்மா நித்தியமாகவே கண்ணியவான் தான்.
வழக்கறிஞர்: மிருகப் பிறவியெடுக்கும் ஆத்மாவும் கண்ணியவானா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இயற்கையில் அவனும் கண்ணியவானே, ஆனால் செயற்கையான முறையில் அவன் குற்றவாளியாக உள்ளான்.
வழக்கறிஞர்: முக்தியடைதல் என்பதும் ஆன்மீக உலகிற்குத் திரும்புதல் என்பதும் ஒன்றா?
ஸ்ரீல பிரபுபாதர்: இரண்டு வகையான முக்தி உள்ளது. ஒன்று, அருவமான பிரம்மஜோதியில் இரண்டறக் கலந்துவிடுதல். ஆயினும், அந்த நிலையில் ஒருவனால் நித்தியமாக வாழ இயலாது. பிரம்மஜோதியானது ஆகாயத்தைப் போன்றது, நீங்கள் ஆகாயத்திற்குள் செல்லலாம், ஆனால் அங்கேயே தங்கிவிட இயலாது. அங்கு புகலிடம் ஏதும் கிடைக்காவிடில், நீங்கள் மீண்டும் கீழிறங்கி வர வேண்டும். உயிர்வாழியான நீங்கள் இன்பத்தை விரும்புகிறீர், ஆனால் ஆகாயத்தில் என்ன இன்பம் கிடைக்கும்? இன்பத்தை அனுபவிப்பதற்கு சமூகம், நண்பர்கள், அன்பு என அனைத்தும் தேவைப்படுகின்றன, இவற்றில் ஒன்றுகூட பிரம்மஜோதியில் கிடைக்காது.
எனவே, அருவவாதிகளின் முக்தி தற்காலிகமானது. அருவ பிரம்மனில் கலந்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணினாலும், அங்கே அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் தத: பதந்த்யத:, அருவமான பிரம்மஜோதிக்குச் செல்லும்போதிலும், அங்கே ஆனந்தம் இல்லை என்பதால், அவர்கள் மீண்டும் பெளதிக உலகிற்கு ஆனந்தத்தைத் தேடி கீழிறங்கி வருகின்றனர்.
வழக்கறிஞர்: பிரம்மனில் கலப்பது ஆனந்த
மில்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. அங்கே நித்தியத்துவம் என்னும் தன்மை உள்ளபோதிலும், ஆனந்தம் இல்லை என்பதால், ஆனந்தம் இல்லாமல் நித்தியமாக இருக்க முடியுமா? முடியாது. எனவே, இந்த பெளதிக உலகத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும். பௌதிக உலகம் தற்காலிகமானது என்றாலும், இங்கே ஆனந்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்று உள்ளது.
எனவே, (இரண்டாவது வகையான முக்தியான) கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் சென்று அவருடன் நடனமாடினால் தவிர, நீங்கள் இவ்வுலகிற்குத் திரும்பி வந்தே ஆக வேண்டும்.
ஆயினும், கடவுள் எவ்வாறு ஒரு நபராக இருக்க இயலும் என்பதில், அருவவாதிகள் எங்களை ஏற்பதில்லை. அவர்கள் இவ்வுலகில் ஒரு நபராக வாழ்ந்து கெட்ட அனுபவங்களைப் பெற்றதன் காரணத்தினால், பூரண உண்மை ஒரு நபராக இருக்க முடியாது என்றும் அருவமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர். அவர்கள் முட்டாள்கள், புத்தியுடையவர்கள் அல்லர்.
வழக்கறிஞர்: ஆத்மா எந்த நிலையில் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கிறான்?
ஸ்ரீல பிரபுபாதர்: இதை நான் ஏற்கனவே விளக்கினேன். நீங்கள் ஒருபோதும் இரண்டறக் கலந்துவிட முடியாது, கலந்து விட்டதாக கற்பனை செய்யலாம். ஆனந்தம் இல்லாத இடத்தில், உங்களால் நிரந்தரமாகத் தங்கியிருக்க இயலாது, இந்த ஜடவுலகிற்குத் திரும்பியாக வேண்டும்.
இந்த பெளதிக உலகில் நாம் ஏதோ ஒரு மகிழ்ச்சியைப் பெற முயல்கிறோம். ஆனால் இந்த மகிழ்ச்சி தற்காலிகமானது. இது நமக்கு திருப்தியளிப்பதில்லை. ஆகவே, வெறுப்புற்ற நாம் பெளதிக வாழ்க்கையை நிறுத்திவிடுவதற்காக பிரம்மனில் கலந்துவிட விரும்புகிறோம். ஆனால், அந்த வாழ்க்கையும் தற்காலிகமானதே.
நாம் முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லாவிடில், நிறைவான வாழ்க்கை என்பது கிடையாது. எனவே, உண்மையான ஆனந்தத்தை எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் காண்பிப்பதற்காக, கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரித்து தமது ஆன்மீகச் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார். அவர் இளம் கோபர்களுடன் விளையாடுகிறார், இளம் கோபியர்களுடன் நடனமாடுகிறார், அசுரர்களைக் கொல்கிறார், இதர பல செயல்களைச் செய்கிறார். இதுவே ஆனந்தம். நீங்கள் கிருஷ்ணரைப் பற்றிய எங்களது நூலைப் படித்திருக்கிறீர்களா? இந்தியாவின் சிறப்பு மிக்க ஆன்மீகக் களஞ்சியமான ஸ்ரீமத் பாகவதத்தினுடைய பத்தாவது காண்டத்தின் சுருக்க உரையான கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்னும் நூலில் கிருஷ்ணரின் லீலைகள் விளக்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளன. சாஸ்திரங்களிலிருந்து உண்மையான அறிவை மக்களுக்கு வழங்க நாங்கள் முயல்கிறோம், இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது மக்களது கையில் உள்ளது.
உண்மையான ஆனந்தம் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிக்காட்டவே கிருஷ்ணர் அவதரிக்கிறார்