அறிவு எப்போது தோன்றியது?
ஸ்ரீல பிரபுபதாதருடன் ஓர் உரையாடல்
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது. அஃது இந்த ஜடவுலகைச் சார்ந்தது அல்ல. அதனால் சில சமயம் இதனை மனிதர்கள் தவறுதலாக புரிந்துகொள்ளக் கூடும். எனவே, நாம் அவர்களுக்கு இதனைத் தெளிவாக விளக்க வேண்டும். ஆத்மா என்றால் என்ன என்பதைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. பெரிய பெரிய விஞ்ஞானிகளும் பெரிய பெரிய தத்துவவாதிகளும்கூட ஆத்மாவைப் பற்றியும் ஆன்மீக உலகைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றனர். அதனால் சில நேரங்களில் அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதை மிகவும் கடினமாக உணர்கின்றனர்.
மாணவன்: வேதங்கள் தோன்றிய நாளை அறிய நான் சமீபத்தில் ஆராய்ச்சி செய்து வந்தேன். சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஹராப்பா, மொகஞ்சதாரா காலத்து சாட்சியங்களின்படி, வேதங்கள் முன்பு நினைத்ததை விட வெகுகாலத்திற்குப் பின்னரே தோன்றியதாகத் தெரிவிக் கின்றனர். இக்கூற்றானது வேதங்களின் அதிகாரத் தன்மையைக் குறைப்பதாக உள்ளது; ஏனெனில், உலகின் பழமை வாய்ந்த மத நூல்கள் என்னும் நிலையை இக்கூற்றின் மூலம் அவை இழந்துவிடுகின்றன.
ஸ்ரீல பிரபுபாதர்: வேதம் என்றால் மத நூல் என்று பொருளல்ல. வேதம் என்றால் “அறிவு” என்று பொருள். எனவே, அறிவின் வரலாற்றினை உங்களால் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடிந்தால், வேதங்களின் ஆரம்ப காலத்தை உங்களால் அறிந்துகொள்ள முடியும். அறிவு என்று தொடங்கியது என்பதை உங்களால் ஆராய முடியுமா? உங்களால் அதனைக் கண்டுபிடிக்க இயலுமா?
மாணவன்: நம்மால் இயலும் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியானால் வேதங்களின் வரலாற்றை உங்களால் எப்படி அறிய முடியும்? வேதம் என்பது அறிவாகும். எனவே, அறிவு தோன்றிய நாள் எது என்பதை நீங்கள் கண்டு பிடித்தீர்களானால் வேதங்களின் காலத்தை அறிய முடியும்.
வேதங்களின் வரலாறு இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து தொடங்குகின்றது. உலகம் என்று துவங்கியது என்பதை யாராலும் கூற இயலாது. பிரம்மாவின் பிறப்புடன் படைப்பு தொடங்குகிறது, ஆனால் பிரம்மாவின் ஒரு நாளின் அளவைக்கூட உங்களால் கணக்கிட முடியாது. பிரம்மாவின் இரவில் இப்பிரபஞ்சம் ஓரளவிற்கு அழிக்கப்படுகிறது. பின்னர் அவரது பகலில் மறுபடியும் அது படைக்கப்படுகிறது. அழிவு (பிரளயம்) என்பது இரு வகைப்படும்; ஒன்று, பிரம்மாவின் இரவில் ஏற்படுகிறது; மற்றொன்று மொத்த பிரபஞ்சத்தையும் அழிக்கும் இறுதி பிரளயம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், வேதத்தின் நாளைப் பற்றி இந்த சின்னஞ்சிறு மனிதர்கள் கற்பனை செய்கின்றனர். இது எள்ளி நகையாட வேண்டியதாகும்.
மாலை நேரத்தில் தோன்றி காலைப் பொழுதின் ஆரம்பத்திலேயே மடிந்து விடக்கூடிய பல்வேறு நுண்கிருமிகள் உள்ளன. ஓர் இரவு மட்டுமே அவற்றின் வாழ்நாளாகும். நமது வாழ்வும் அவ்வாறே. அப்படியிருக்க உங்களால் எந்த வரலாற்றை எழுத முடியும்? எனவே, நாங்கள் வேத அறிவை வேத அதிகாரிகளிடமிருந்து பெறுகின்றோம்.
ஒருவன் தவளையைப் போன்ற தத்துவவாதியாக இருக்கக் கூடாது. தவளையின் தத்துவம் உங்களுக்குத் தெரியுமா? அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒருபோதும் கண்டிராத டாக்டர் தவளை ஒன்றிடம் ஒருவர், “அது மிகப்பெரிய நீர்ப்பரப்பு” என்று கூறினார்.
டாக்டர் தவளையோ, “ஓ, அஃது இக்கிணற்றைவிடப் பெரியதா?” என்று கேட்டதாம்.
மாணவன்: ஆம். அட்லாண்டிக் சமுத்திரம் அதன் அறிவிற்கு அப்பாற்பட்டது.
ஸ்ரீல பிரபுபாதர்: சரியாகச் சொன்னாய். இந்த அறிஞர்கள் அனைவரும் தங்களது கிணற்றிலேயே சுற்றித் திரியும் தவளைகளைப் போன்றவர்கள். வேத அறிவைப் பற்றி அவர்களால் என்ன புரிந்துகொள்ள முடியும்?
மாணவன்: உம், அப்படியா. வேறு விஷயத்திற்கு வருவோம். நகர அமைப்பில் இயற்கைக்கு முரணாக நாம் வாழ்வதைப் போல் வாழாமல், இயற்கையுடன் ஒத்து வாழும் வாழ்வே உண்மையான தூய்மையான வாழ்வு என்று வேதங்கள் உறுதிப்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அவ்வாறே. உடற் தேவைகளைக் குறைத்து, நேரத்தை மீதமாக்கி, ஆன்மீக அறிவைப் பெறுவதில் உங்களை நீங்கள் அர்ப்பணிப்பதே உண்மையான வாழ்க்கையாகும். அதுவே உண்மையான வாழ்க்கை. உடல் சார்ந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய நாகரிகம், மிருகங்களின் நாகரிகமாகும். இது நாகரிக வாழ்வே அல்ல. அதாதோ பிரஹ்ம-ஜிக்ஞாஸா, ஆன்மீக ஆத்மாவைப் பற்றி கேள்வி கேட்கும் நிலைக்கு ஒருவன் முன்னேறும்போதுதான் நாகரிக வாழ்க்கை தொடங்குகின்றது. ஆனால் அத்தகு கேள்விகள் இல்லாதபோது, அதாவது மக்கள் ஆன்மீக ஆத்மாவைப் பற்றி கேட்க இயலாதபோது, அவர்கள் நாய்களையும் பூனைகளையும் போன்றவர்கள். உடலின் இடர்பாடுகளிலிருந்து முடிந்த அளவு விடுபட்டிருக்க வேண்டும் என்று வேத வாழ்க்கை கற்றுத் தருகின்றது. எனவே, வேதக் கல்வி பிரம்மசரியத்துடன் தொடங்குகின்றது. ஆனால் இந்த அயோக்கியர்களால் காம வாழ்வைக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்பாடின்றி உடலுறவில் ஈடுபடலாம் என்பதும், கர்ப்பம் நேரிட்டால் குழந்தையைக் கொல்லலாம் என்பதும்தான் இவர்களது கொள்கை.
மாணவன்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே இவர்களது அயோக்கிய கொள்கை. பயிற்சியின் மூலம் உடலுறவு வாழ்க்கையை மறக்க இயலும் என்பது குறித்து எந்த கருத்தும் இவர்களுக்கு இல்லை. உடலுறவை நீங்கள் மறந்துவிட்டால், கருக்கலைப்பு என்ற கேள்விக்கு இடமில்லை. ஆனால் அவர்களால் அப்படிச் செய்ய இயலாது. எனவேதான், அதாந்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம், கட்டுப்பாடற்ற புலனின்பத்தின் மூலம் அவர்கள் படிப்படியாக மிருக வாழ்வை நோக்கிச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.
குழந்தையைக் கருவிலேயே கொல்பவன், அதாவது கருக்கலைப்பில் ஈடுபடுபவன், தனது அடுத்த பிறவியில் வேறொருவரால் கருவிலேயே கொல்லப்படுவான். எத்தனை குழந்தைகளை அவன் கொன்றானோ அத்தனை முறை அவன் கருவிலேயே கொல்லப்படுவான். எனவே, நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு அவனால் வெளிச்சத்தைப் பார்க்கவே இயலாது. அவன் வயிற்றிலேயே இருந்து அங்கேயே கொல்லப்படுவான். மக்களுக்கு இயற்கையின் சட்டங்கள் தெரிவதில்லை. அரசாங்கத்தின் சட்டங்களை மீறுவது போன்று இயற்கையின் சட்டங்களை மீற முடியாது. உதாரணமாக, நீங்கள் யாரையாவது கொன்றுவிட்டால், ஏதேனும் தந்திரம் செய்து அதிலிருந்து தப்பிவிடலாம். ஆனால் இயற்கையின் சட்டத்திலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. எத்தனை முறை நீங்கள் கருவை கொலை செய்தீரோ அத்தனை முறை நீங்கள் கருவிலேயே கொல்லப்படுவீர்கள். அதுவே இயற்கையின் சட்டம்.
மாணவன்: இலண்டனின் முக்கியமானதொரு மருத்துவ மனையின் கருச்சிதைவு பிரிவில் பணிபுரியும் ஒரு நர்ஸிடம் நான் சென்ற வாரம்தான் பேசிக் கொண்டிருந்தேன். அது மிகவும் கொடூரமானது. மிகவும் வளர்ச்சி பெற்ற கருக்களைக்கூட சிதைக்கின்றனர், அவற்றில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் உள்ளன.
ஸ்ரீல பிரபுபாதர்: சாத்தியக்கூறுகள் என்ற கேள்விக்கு இடமே இல்லை. உடலுறவின் ஆரம்பத்திலிருந்தே உயிர் அங்கு இருக்கின்றது. ஆத்மா மிகவும் சிறியது. ஒவ்வொருவரின் கர்மத்தின் அடிப்படையில், இயற்கையின் விதிப்படி, ஒருவன் தனது தந்தையின் விந்துக்குள் செலுத்தப்பட்டு, தாயின் கருவினுள் புகுத்தப்படுகிறான். ஆணின் விந்துவும் பெண்ணின் முட்டை அணுக்களும் இணைந்து பட்டாணியைப் போன்ற ஓர் உடலை உருவாக்குகின்றன. பின்னர் அது படிப்படியாக வளர்ச்சி பெறுகின்றது. இவையனைத்தும் வேத சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. காதுகள், கண்கள், மூக்கின் இரு துவாரங்கள், வாய், ஜனன உறுப்பு, குதம் ஆகிய ஒன்பது துளைகளும் ஆரம்ப நிலையில் தோன்றுகின்றன.
பின்னர் புலன்கள் படிப்படியாக வளர்ந்து, ஆறரை மாதங்களில் அனைத்தும் முழுமை பெறுகின்றன. அப்போது அக்குழந்தைக்கு உணர்வு திரும்புகின்றது. உடல் முழு வடிவத்தைப் பெறுவதற்கு முன்பு, அவன் மயக்க மருந்தில் இருப்பதைப் போன்று உணர்வற்று இருக்கின்றான். பின்னர், கனவு காண ஆரம்பித்து படிப்படியாக சுய உணர்வைப் பெறுகின்றான். அச்சமயத்தில் வெளியே வருவதற்கு அவன் மிகவும் தயங்குகிறான்; இருப்பினும், இயற்கையின் உந்துதலால் வெளியேறுகிறான். இதுவே பிறப்பின் வழிமுறையாகும்.
இதுவே வேத அறிவு. வேத இலக்கியங்களில் இவையனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். எனவே, வேதங்கள் எவ்வாறு வரலாற்றிற்கு உட்பட்டதாகும்? ஆனால், நாம் ஆன்மீகத்தைப் பற்றி பேசுவதுதான் இதிலிருக்கும் சிரமமாகும். எனவே, ஜட வாழ்வில் மூழ்கியிருப்பவர்களுக்கு சில சமயங்களில் இதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. அதனை அறிய இயலாத அளவு அவர்கள் மந்த புத்தியைப் பெற்றுள்ளனர்.