வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் கிருஷ்ணருடன்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அர்ஜுன உவாச

ஸேனையோர் உபயோர் மத்யேரதம் ஸ்தாபய மே ‘ச்யுத

யாவத் ஏதான் நிரிக்ஷே ‘ஹம் யோத்து காமான்

அவஸ்திதான் கைர் மயா ஸஹ யோத்தவ்யம்

அஸ்மின் ரண-ஸமுத்யமே

“அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும் என்பதைப் பார்க்கும்படி, தயவுசெய்து எனது ரதத்தை இரு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்தவும்.” (பகவத் கீதை1.21-22)

அர்ஜுனனின் பிரச்சனைகள்

அர்ஜுனன், இங்கே பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றான். பாட்டனார்கள், மாமன்கள், மகன்கள், நண்பர்கள் என அர்ஜுனனின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அவனுக்கு முன்பாக இருந்தனர். அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டியிருந்தது. குருக்ஷேத்திர போர் ஒரே குடும்பத்தினுள் நடைபெற்ற சண்டையாகும். குடும்பத்தில் பலர் மறுபக்கமும் சிலர் அர்ஜுனனின் பக்கமும் குழுமியிருந்தனர். பீஷ்மதேவர், சோமதத்தர் போன்ற பெரியவர்கள், குரு துரோணாசாரியர் மற்றும் பலரையும் அவன் போர்க்களத்தில் சந்திக்க நேர்ந்தது.

 

போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ஜுனன் துரோணாசாரியரின் திருப்பாதங்களுக்கு முன்பாக அம்பை எய்தி வணக்கம் செலுத்தினான். அதுவே பண்பாடாகும். “அன்புள்ள குருநாதரே, நீங்கள் எனக்கு போர்க்கலையைக் கற்றுக் கொடுத்தீர்கள், ஆனால் அஃது இன்று உங்களுக்கு எதிராக பயன்படப் போகிறது.” இதுவே கடமை உணர்வாகும். பதிலுக்கு துரோணரும் அர்ஜுனனுக்கு அம்பின் மூலமாக ஆசிகளை வழங்கினார்.

பௌதிக பந்தத்திற்கான காரணம்

இந்த பௌதிக உலகமும் அதுபோன்ற பிரச்சனைகள் நிரம்பியதாகும். குறிப்பாக, குடும்பம், சமுதாயம், நட்பு, காதல் போன்றவற்றில் நாம் ஈடுபடும்போது, இது நம்மை பந்தப்படுத்துகிறது. ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது காண்டத்தில் கூறப்படுகிறது: தேஹாபத்யகலத்ராதிஷ்வ் ஆத்மஸைன்யேஷ்வ் அஸத்ஸ்வ் அபி. முதலில் ஜீவன் தனது உடலின் மீது கவர்ச்சி கொண்டுள்ளான். அடுத்ததாக, உடலினால் பெறப்படும் சந்ததியினர், மனைவி என பற்றுதலை விரிவுபடுத்திக்கொள்கிறான். பெண்களை பொதுவாக ஸ்திரீ என்பார்கள்; ஏனெனில், அவள் ஆணின் விஸ்தாரத்திற்கு உதவுகின்றாள்.

 

பௌதிக உலகம் என்றால் பந்தமாகும்; இது தேவையானதல்ல. ஏனெனில், நாம் இயல்பாகவே ஆன்மீகமயமானவர்கள். அஹம் ப்ரஹ்மாஸ்மி ஆயினும், நாம் இந்த பௌதிக இயற்கையை ஆள விரும்பியதால், கிருஷ்ணர் நமக்கு இந்த உடலினை வழங்கியுள்ளார். அவர் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு மிகவுயர்ந்த தேவரான பிரம்மா முதல் மிகச்சிறிய எறும்பு வரையுள்ள உடல்களை வழங்குகிறார். புலியின் உடலை நாம் விரும்பினால், கிருஷ்ணர் அதை வழங்குகிறார். பிரம்மா போன்ற உயர்ந்த தேவர்களின் உடல்களை விரும்பினால், அவர் அதையும் வழங்குகிறார். அமெரிக்க, இந்திய அல்லது ஆங்கிலேய உடல்களை விரும்பினால், கிருஷ்ணர் அதையும் வழங்குவார்.

 

அவர் மிகவும் கருணையானவர். மகன் தானாக சிலவற்றை அனுபவிக்கும் சமயங்களில் தந்தையுடன் கருத்து வேறுபாடு கொண்டு கீழ்ப்படியாமல் இருக்கலாம். அப்போதும்கூட, தந்தை, “சரி, இந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏதேனும் வாங்கிக்கொள்,” என்று கூறுகிறார். தந்தை கருணையான முறையில் அவரால் அனுமதிக்கப்படாத காரியங்களிலும் மகனுக்கு உதவுகின்றார். கிருஷ்ணர் உண்மையில் நமது பௌதிக பந்தத்தினை விரும்பவில்லை.

ஆன்மீக உறவினை வளர்த்தல்

ஒரு தனி மனிதன் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெறுவது ஏன்? அவன் தனித்து வாழும்போது அவனுக்கு கடமைகள் ஏதும் கிடையாது. இருப்பினும், அவன் ஏன் மனைவி, குடும்பம், வீடு என்ற சூழலில் சிக்கிக்கொள்கிறான்? ஏன் நண்பர்களை ஏற்கிறான்? ஏன் பிரச்சனைக்குரிய காரியங்களில் ஈடுபடுகிறான்? பதில் என்னவெனில், நாம் அனைவரும் மகிழ்ச்சியை விரும்புகிறோம். குழந்தைகள், சமுதாயம், நண்பர்கள், அன்பு போன்றவற்றால் இன்பமடைவோம் என்று எண்ணுகிறோம். இந்த எண்ணம் எங்கிருந்து தோன்றியது? இவை அனைத்தும் கிருஷ்ணரிலும் உள்ளன. கிருஷ்ணரே அன்பின் தோற்றுவாய், அவர் ராதாராணியிடம் அன்பு செலுத்துகிறார். அன்பு செலுத்துதல் என்ற தன்மை கிருஷ்ணரிடமிருந்தே தோன்றுகிறது. நமது அனுபவத்திற்கு உட்பட்ட அனைத்து விஷயங்களும் கிருஷ்ணரிடமும் உள்ளன. ஆகையால், கிருஷ்ணர் அருவமானவரல்ல, அவரும் நம்மைப் போன்ற ஒரு நபர். ஆனால் வேறுபாடு என்னவெனில், அவர் எல்லையற்ற சக்திகளைக் கொண்டவர்.

 

கிருஷ்ணரும் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கின்றார். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் நாம் மீண்டும் கிருஷ்ணரின் குடும்பத்தோடு வாழ்வதற்கான பயிற்சியையும் வசதியையும் அளிக்கின்றது. இந்த உலகின் பௌதிக குடும்பங்கள் நமக்கு துன்பத்தை வழங்குகின்றன. குடும்ப வாழ்க்கை எனும் இந்த கருத்து பௌதிக உலகில் காணப்பட்டாலும், கிருஷ்ணரால் மட்டுமே இதனை செம்மையாகச் செய்ய இயலும். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம் என்பதால், குடும்ப வாழ்விற்கும் அவரே மூலம். நாம் எதையெல்லாம் இந்த பௌதிக உலகில் காண்கிறோமோ, அவையனைத்திற்கும் கிருஷ்ணரே மூலம். ஆனால் இங்கு அவை திரிபடைந்துள்ளன. நாம் ஒரு மரத்தைக் காணும்போது, அது நமக்கு நேராகக் காட்சியளிக்கிறது. ஆனால் அதன் பிம்பத்தை ஏரியில் காணும்போது, அது நமக்கு தலைகீழாகக் காட்சியளிக்கிறது. அதே போன்று இந்த பௌதிக உலகமும் ஆன்மீக உலகின் திரிபடைந்த தோற்றமாகும். ஆன்மீக உலகிலுள்ள அனைத்து விஷயங்களும் இந்த பௌதிக உலகில் திரிபடைந்து காணப்படுகின்றன.

கிருஷ்ணர் ஏன் போரிடச் சொல்கிறார்?

அர்ஜுனன் போர்க்களத்தில் தனது உறவினர்களை நேருக்கு நேராக சந்தித்தவுடன், தனது கடமைகளை மறந்து, தான் எதற்காக தந்தையின் ஸ்தானத்தில் உள்ளவர்களையும் இதர பெரியவர்களையும் கொல்ல வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வினவினான். அர்ஜுனன் அத்தகைய கருணையில் மூழ்கியது இயல்பானதே. அர்ஜுனன் ஏன் அந்த உணர்வில் இருந்தான்? எதிர்தரப்பினர் அவ்வாறு இல்லையே. அர்ஜுனன் பக்தனாக இருந்ததே அவனது வருத்தத்திற்கான காரணமாகும். பக்தன் யாரையும் கொல்ல விரும்புவதில்லை, சிறு எறும்பைக்கூட கொல்வதற்கு அவன் விரும்பமாட்டான். எனவே, அர்ஜுனனுடைய வருத்தம் பக்தியினால் ஏற்பட்டது.

 

அர்ஜுனனுடைய அனைத்து உடைமைகளும் பறிக்கப்பட்டன, அவனது மனைவி அவமதிக்கப்பட்டாள், பதின்மூன்று ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டான். இவ்வாறு பல கொடுமைகளுக்கு ஆளானபோதிலும், போர்க்களத்தில் அக்கிரமக்காரர்களை அழிக்கும் சமயத்தில், அவன் அதனை விரும்பவில்லை. கொடூரமான எதிரிகளையும் மன்னிப்பதற்கு அவன் தயாரானான். ஆனால் கிருஷ்ணர் அதை விரும்பவில்லை.

 

பக்தனுக்கு அவமானம் ஏற்பட்டால், அதை அந்த பக்தன் மன்னிக்கலாம், ஆனால் கிருஷ்ணர் அதை மன்னிக்க மாட்டார்; எனவே, நாம் பக்தர்களை அவமதிக்காமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பக்தன் மன்னித்தாலும் கிருஷ்ணர் அதை மன்னிக்க மாட்டார். கிருஷ்ணர் இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர், தன்னுடைய பக்தர்கள் நிந்திக்கப்படுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. இதனால்தான் குருக்ஷேத்திர யுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. “நான் போர் செய்யப்போவதில்லை, அவர்களை மன்னித்துவிடுகிறேன்,” என அர்ஜுனன் கூற, “இல்லை, நீ கட்டாயம் போர் செய்து அவர்களைக் கொல்ல வேண்டும்,” என்று கிருஷ்ணர் கூறினார்.

கிருஷ்ணரே அன்பின் தோற்றுவாய், அவரிடம் அன்பு செலுத்துவதே நமது இயற்கையாகும்.

பிரம்மசரிய பயிற்சி

இதுவே உண்மையான பிரச்சனை, நாம் கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். வேத கலாச்சாரம் குடும்ப பந்தத்தில் ஈடுபடுபவர்களும் பந்தமின்றி வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். முதலில் ஒருவர் பிரம்மசாரியாக தவ வாழ்வை மேற்கொள்ள வேண்டும். பிரம்மசாரி தனது குருவின் இல்லத்தில் தங்கி அவருக்கு சேவைகள் செய்து பழக வேண்டும். சீடன் அரச குமரனாக இருந்தாலும் சரி, அல்லது மிகச்சிறந்த பிராமணருடைய மகனாக இருந்தாலும் சரி, அவன் ஆன்மீக குருவிற்கு துச்சமான சேவகனாகவே சேவை செய்ய வேண்டும். ஆன்மீக குரு என்ன கட்டளையை இடுகிறாரோ, அதை அப்படியே செய்தாக வேண்டும். இதுவே பிரம்மசரிய வாழ்க்கை.

 

பொதுவாக பிரம்மசாரிகள் ஐந்து வயதிலிருந்தே பயிற்றுவிக்கப்படுவதால், ஆன்மீக குரு என்ன கட்டளையை இடுகிறாரோ அதனை அப்படியே செய்து முடிப்பார்கள். ஆன்மீக குரு வீடுதோறும் சென்று யாசகம் செய்யச் சொன்னாலும் அதைச் செய்வார்கள். பிரம்மசாரி தனது உடைமைகள் அனைத்தையும் ஆன்மீக குருவிற்கு சமர்ப்பிக்கின்றான், பிரம்மசாரி யாசகம் பெற்று பொருட்களை வாங்கி வருவதால், அப்பொருட்கள் அவனுடையது என்பது அர்த்தமல்ல. அவன் அவற்றை ஆன்மீக குருவிற்காகச் செய்கிறான். ஆன்மீக குரு, அந்த பிரம்மசாரியை அழைத்து, “மகனே பிரசாதம் ஏற்பாயாக,” என்று கூறுவார். அதன் பின்னரே அவன் உணவருந்துவான். ஒருவேளை ஆன்மீக குரு பிரம்மசாரியை அழைக்க மறந்தால், அந்த பிரம்மசாரி அன்று விரதம் இருக்க வேண்டும். இதுவே பிரம்மசரிய வாழ்க்கை.

பண்டிதனின் தகுதிகள்

 

இவ்வாறாக, ஒருவன் தவ வாழ்க்கை வாழவும் பணிவாக வாழவும் பயிற்சியளிக்கப்படுகிறான். அவன் எல்லாப் பெண்களையும் தனது அன்னையாகக் கருதும்படி பயிற்சியளிக்கப்படுகிறான். உண்மையாகவே, அவன் தனது மனைவியைத் தவிர எல்லாப் பெண்களையும் அன்னை என்று அழைக்கின்றான். சாணக்கிய பண்டிதர் பின்வருமாறு ஒரு பண்டிதரை வரையறுக்கின்றார்:

 

மாத்ருவத் பர-தாரேஷுபர-த்ரவ்யேஷு

லோஷ்ட்ரவத் ஆத்மவத் ஸர்வ-பூதேஷுய: பஷ்யதி ஸ பண்டித:

 

ஒரு பண்டிதர் தனது மனைவியைத் தவிர அனைத்து பெண்களையும் அன்னையாகக் காண்கிறார். இதுவே கல்வியின் பக்குவநிலையாகும். மனைவியைத் தவிர எல்லாப் பெண்களையும் அன்னையாகக் காண வேண்டும். மேலும், பண்டிதர் என்பவர், தன்னுடைய உடைமைகளைத் தவிர மற்றவர்களது உடைமைகளை தெருவில் கிடக்கும் குப்பைகளுக்கு சமமானதாகக் கருத வேண்டும், தன்னைப் போலவே எல்லா ஜீவன்களையும் கருத வேண்டும். நாம் எவ்வாறு இன்பதுன்பத்தை அனுபவிக்கின்றோமோ அதே போல விலங்குகளும் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றன. நம்முடைய தலையை வெட்டும்போது எவ்வாறு நமக்கு வலி ஏற்படுகின்றதோ, அதே போன்ற வலி விலங்குகளுக்கும் ஏற்படுகின்றது. இந்த மூன்றும் கல்வியில் தேர்ச்சி பெற்ற நிலையாகும். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய காலத்தில் அத்தகு பண்டிதர்களே இல்லை.

குடும்பம், சமூகம், நட்பு, அரசியல், விஞ்ஞானம் போன்றவற்றின் துணையோடு பாதுகாக்கப்படுவோம் என்று நாம் எண்ணினால், நம்மைக் காட்டிலும் தவறு செய்பவர் யாருமில்லை.

மாயையிலிருந்து விடுபடுதல்

வேத கலாசாரம் நமது பௌதிகப் பற்றுதல்களை அறுக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்ல வேண்டுமெனில், நம்முடைய பௌதிக பந்தங்களான பெயரளவு சமூகம், நட்பு, அன்பு போன்றவற்றை அவசியம் துண்டிக்க வேண்டும். பௌதிகப் பற்றுதல் சிறிதளவு இருப்பினும், நம்மால் ஆன்மீக உலகத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது. எனவே, ஆன்மீக ஞானத்தாலும் முறையான பயிற்சியாலும் பௌதிகத்தின் மீது பற்றின்மையை நாம் அடைய வேண்டும். பக்திவினோத தாகூர் பின்வருமாறு விளக்குகின்றார், “நாம் மாயையால் எப்போதும் அலைக்கழிக்கப்படுகின்றோம்.” மாயார வஸே, ஜாச்சோ பேஸே, காச்சோ ஹாபுடுபு பாய். மழைக்காலங்களில் மரங்கள், காய்கறிகள், மரத்துண்டுகள் என பல பொருட்கள் நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்க்கின்றோம், அதுபோன்றே, நாமும் மாயையின் அலைகளால் அடித்துச் செல்லப்படுகிறோம். சில நேரங்களில் நீரில் மூழ்கியும், சில நேரங்களில் நீரின் மேற்பரப்பிலும், சில நேரங்களில் கரையிலும் என நாம் துன்புறுகிறோம். சில சமயங்களில் நாம் அரசனாக இருக்கலாம், வேறு சமயங்களில் நாயாகக்கூட இருக்கலாம், இதுவே நமது நிலை.

 

ஆகவே, நாம் மாயையால் அலைக்கழிக்கப்பட்டு இங்கே ஒன்று கூடியுள்ளோம். “இவர் எனது தந்தை, இவள் எனது தாய், இவர் எனது தமையன்,” எனப் பல விதங்களில் நாம் நினைக்கலாம், ஆனால் இவையெல்லாம் உண்மையில் மாயையின் பிணைப்புகளே. யாரும் நமது தந்தையாகவோ தாயாகவோ தமையனாகவோ இருக்க இயலாது. இவை அனைத்தும் மாயையின் தற்காலிக பந்தங்களே. இந்த தற்காலிகமான பந்தங்களால் நாம் ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்ல மறுக்கின்றோம். ஆகையால், இந்த வகையான மாயையிலிருந்து விடுபடுவதற்கு நாம் பற்றின்மையை வளர்க்க வேண்டும்.

பாதுகாப்பது யார்?

இந்த பௌதிக உலகின் குடும்பம், சமூகம், நட்பு, அரசியல், விஞ்ஞானம் போன்றவற்றின் துணையோடு பாதுகாக்கப்படுவோம் என்று நாம் எண்ணினால், நம்மைக் காட்டிலும் தவறு செய்பவர் யாருமே இருக்க முடியாது. இந்த பௌதிக பந்தங்களை வைத்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இயலாது. ஒவ்வோர் உயிர்வாழியும் தன்னுடைய பாதுகாப்பில் அக்கறைக் காட்ட வேண்டும். நம்முடைய குடும்பமோ நண்பர்களோ தேசமோ நம்மைப் பாதுகாக்காது. நாம் அனைவரும் மாயையின் பிடியின் கீழ் இருக்கின்றோம். நமக்கு சுதந்திரம் கிடையாது, நம்மைப் பாதுகாக்கவும் யாருக்கும் சுதந்திரம் கிடையாது.

 

ஆகையால், இந்த பௌதிக உலகிலுள்ள ஒவ்வொருவரும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் மாயையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது குறித்து அக்கறை செலுத்த வேண்டும். இந்த பௌதிக உலகிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதைப் பற்றி குருமார்கள் உபதேசிக்கலாம், ஆனால் இங்கிருந்து விடுபடுவதற்கான முயற்சி ஒவ்வோர் உயிர்வாழியின் கையில் உள்ளது. நாம் நமது ஆன்மீகக் கடமைகளை சரியாக செய்யும்போது, காப்பாற்றப்படுவோம். குருமார்களுடைய உபதேசங்களைப் பின்பற்றாவிடில், நாம் எவ்வாறு காப்பாற்றப்படுவோம்?

கிருஷ்ணரிடம் சரணடைவோம், அவரால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்.

கிருஷ்ணரே பாதுகாவலர்

நாம் நம்முடைய குடும்பத்தினரால், புத்திரர்களால், தந்தையால் மற்றும் பாட்டனார்களால் காப்பாற்றப்படுவோம் என்று நினைத்துக் கொண்டுள்ளோம். அல்லது, தன்னுடைய நாடு, சமூகம், கொள்கைகள், அரசியல் போன்றவற்றால் காப்பாற்றப்படுவோம் என்று நினைத்துக் கொண்டுள்ளோம், ஆனால் இவையனைத்துமே நிரந்தரமற்றது, தற்காலிகமானது. ஒருவரை அவருடைய தந்தை சிறுவயதில் பாதுகாத்திருக்கலாம், ஆனால் அவர் எப்போதுமே பாதுகாப்பார் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. மனைவியும் மகன்களும் பாதுகாப்பளிப்பதாகத் தோன்றலாம், ஆனால் அவர்கள் எவ்வளவு காலம் உடன் வாழ்வார்கள்? உண்மையில் கிருஷ்ணரால் மட்டுமே நமக்கு பாதுகாப்பளிக்க முடியும். அவரால் நம்மை எப்போதும் பாதுகாக்க முடியும். ஆகையால் நாம் அவரிடம் மட்டுமே சரணடைய வேண்டும்.

ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

“எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.” (பகவத் கீதை 18.66)

 

மேலும், கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி, “குந்தியின் மகனே, எனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிப்பாயாக.” (பகவத் கீதை 9.31) நாம் கிருஷ்ண உணர்வைப் பயின்று கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைவதே இந்த பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். கிருஷ்ணரிடம் சரணடைந்தால் நாம் காப்பாற்றப்படுவோம், இல்லாவிடில் வேறு பாதுகாப்பே கிடையாது, மாயையினால் தொடர்ந்து அலைகழிக்கப்படுவோம். நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives