கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர்
உலகிலுள்ள பல்வேறு சமயங்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆன்மீக இயக்கத்திற்கான தேவைகுறித்து வினவிய கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்கிற்கு தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அளித்த ஆர்வத்தைத் தூண்டும் பதில்கள்
ஆலன் கின்ஸ்பெர்க்: கிருஷ்ண பக்தி இயக்கமோ வேறு எந்த சமய இயக்கமோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது. ஆனால், அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆன்மீக இயக்கத்திற்கான தேவை அமெரிக்காவில் உள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவர் கிருஷ்ணரே. “நான் ஏன் கிருஷ்ணரை ஏற்க வேண்டும்?” என்று நீங்கள் வினவலாம். “ஏன் ஏற்கக் கூடாது?” என்பதே எனது பதிலாகும். அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியைப் பெற்றவர் யார் என்னும் வினா எழும்போது, கிருஷ்ணர் மட்டுமே அதற்கு பதிலாக அமைகிறார்.
முதலில், உன்னத உயிர்வாழியான அந்த ஒருங்கிணைப்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? செல்வம், அழகு, அறிவு, புகழ், துறவு, வலிமை என அனைத்தும் கிருஷ்ணரிடம் உள்ளது. உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கிருஷ்ணரிடமிருந்து பெற முடியும். அவரே அனைவரையும் ஒருங்கிணைக்கும் மையம். இதனை நீங்கள் ஏற்குமாறு என்னால் மெய்ப்பிக்க இயலும்.
பகவத் கீதையில் (3.23) கிருஷ்ணர் கூறுகிறார், மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வஷ:, “அனைவரும் என்னிடம் வருவதற்கு முயல்கின்றனர்.” அனைவரும் கிருஷ்ணரிடம் செல்வதற்கு முயல்கின்றனர். கிருஷ்ணர் மேலும் கூறுகிறார், யே யதா மாம் ப்ரபத்யந்தே, “ஆனால், சிலர் என்னை நேரடியாக உணராமல், எனது பல்வேறு சக்திகளின் மூலமாக மறைமுகமாக உணர்கின்றனர். இருப்பினும், அனைவரும் என்னிடம் வரவே முயல்கின்றனர்.”
நாங்கள் கிருஷ்ணரை சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்கிறோம். அவரது ஒருங்கிணைப்பு சக்தியைப் பொறுத்த வரை, அவர் தமது பல்வேறு தோற்றங்களின் மூலம், மெய்ப்பொருளைத் தேடும் எல்லா பிரிவினரையும் கவர்ந்திழுக்கிறார். பரம்பொருளைத் தேடுபவர்களை மூன்று வகைப்படுத்தலாம்: மன அனுமானிகள், தியான யோகிகள் மற்றும் பக்தர்கள். மன அனுமானிகள் பரம்பொருளை உருவமற்ற அருவமாக உணர முயல்கின்றனர். தியான யோகிகளோ தியானத்தின் மூலம் தங்களது மனதிற்குள் கிருஷ்ணரைக் காண விழைகின்றனர். இறுதியாக பக்தர்கள் பரம்பொருளை அன்பு பரிமாற்றத்துடன் சேவை செய்வதன் மூலம் காண முற்படுகின்றனர்.
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அருவத்தன்மை, உயிர்வாழிகளின் இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மா, நேரடி அன்பு பரிமாற்றத்தில் ஈடுபடும் பகவான் ஆகிய மூன்று தோற்றங்களையும் கிருஷ்ணரில் காணலாம். பரம்பொருளை இவ்வாறு தேடுவதே மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தில், பரம்பொருளைக் குறித்த விளக்கம் உள்ளது, வதந்தி தத் தத்த்வ-விதஸ் தத்த்வம் யஜ் ஜ்ஞானம் அத்வயம். பரம்பொருள் ஒரே வஸ்துவாக இருக்க வேண்டும், இரண்டாக இருக்கும்பட்சத்தில் அது பரம்பொருளாக இருக்க முடியாது. எனவே, பரம்பொருளைப் பற்றிய ஞானமும் ஒன்றுதான். பரம்பொருளின் தத்துவத்தை அறிந்தவர்கள் பரம்பொருள் ஒன்றே என்று உறுதி செய்வதாக இந்த ஸ்லோகம் கூறுகிறது.
ஆயினும், அந்த பரம்பொருள் மூன்று நிலைகளில் உணரப்படுகிறது. ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி ஷப்த்யதே. பிரம்மன் என்பது பரம்பொருள் ஜோதி ரூபமாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அருவத்தன்மையைக் குறிக்கிறது. பரமாத்மா என்பது தனிப்பட்ட உயிர்வாழியின் இதயத்தினுள் வீற்றிருக்கும் தன்மையைக் குறிக்கிறது. பகவான் என்பது பரம்பொருளின் ரூபத்தைக் குறிக்கிறது. இவ்வாறாக, பரம்பொருளை நம்மால் பல நிலைகளில் உணர முடியும்.
எடுத்துக்காட்டாக, சூரியனை நாம் பல நிலைகளில் உணருகிறோம்! முதல் நிலையில், ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கும் அருவமான பிரகாசமாக உணர்கிறோம். ஆயினும், சூரிய கோளத்திலிருந்தே சூரிய ஒளி வருவதால், சூரிய ஒளியைவிட சூரிய கோளமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்வர். உங்களால் ஒருவேளை விஞ்ஞானத்தின் உதவியைக் கொண்டு சூரிய கோளத்தினுள் செல்ல முடிந்தால், அங்கே நீங்கள் சூரியதேவனைக் காணலாம். சூரியதேவனைப் பற்றிய தகவலை நாம் பகவத் கீதையிலிருந்து பெறுகிறோம். இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம், “இறைவனை அறியும் இந்த அறிவியலை நான் முதலில் சூரியதேவன் விவஸ்வானுக்கு கற்பித்தேன்.” எனவே, சூரிய ஒளிக்கும் சூரிய கோளத்திற்கும் பின்னால் ஒரு நபர் இருக்கிறார்.
இப்போது இந்த மூன்று நிலைகளையும் வைத்து பார்க்கும்போது—சூரிய ஒளி, சூரிய கோளம், சூரியதேவன்—இவற்றில் எது மிக முக்கியமானது?
ஆலன் கின்ஸ்பெர்க்: நபரா, சூரிய கோளமா, சூரிய ஒளியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
ஆலன் கின்ஸ்பெர்க்: (சிரித்துக்கொண்டே) எனக்குத் தெரியவில்லையே!
ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் தெரியவில்லை? இந்த மூன்று தோற்றங்களில் எது முதன்மையானது என்று உங்களால் கூற இயலாதா? சூரிய ஒளி, சூரிய கோளம், சூரிய கோளத்திலுள்ள சூரியதேவன். இப்போது சொல்லுங்கள், இதில் எது முக்கியமானது?
ஆலன் கின்ஸ்பெர்க்: நபர் என்ற முறையில் பார்த்தால் சூரியதேவனே முக்கியமானவர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம்.
ஆலன் கின்ஸ்பெர்க்: ஆனால் கோளம் என்ற முறையில் மட்டுமே பார்த்தால் சூரியகோளம்தான்.
ஸ்ரீல பிரபுபாதர்: சூரிய கோளம் வரை மட்டுமே நம்மால் உணர முடிந்தால், அது முழுமையான புரிந்துணர்வாக இருக்காது.
ஆலன் கின்ஸ்பெர்க்: ஆம்.
ஸ்ரீல பிரபுபாதர்: நாம் இன்னும் முன்னேற வேண்டும். உபநிஷதம் கூறுவதுபோல, “பகவானே! உமது பிரகாசம் என்னும் திரையினை அகற்றுவீராக! அப்போதுதான் நான் உமது உண்மையான முகத்தைக் காண முடியும்.” நாமும் அவ்வாறு பிரார்த்திக்க வேண்டும். ஸ்ரீ ஈஷோபநிஷத்தில் இது கூறப்பட்டுள்ளது.
பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம், அதாவது, இந்த பிரம்மஜோதி என்னும் அருவத்தன்மை பகவானின் ரூபத்தை ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது.
பிரம்ம சம்ஹிதையில் (5.40) கூறப்பட்டுள்ளது,
யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி–
கோடிஷ்வஷேஷ-வஸுதாதி விபூதி-பின்னம்
தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி
“ஆதி புருஷரான கோவிந்தரை நான் வணங்குகிறேன், பிரம்மஜோதியானது அவருடைய தெய்வீகத் திருமேனியிலிருந்து வரும் ஒளியே.”
எனவே, இந்த பிரம்மஜோதி என்பது கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் வெளிச்சமே! கிருஷ்ணரின் உடலுக்கு சக்திவாய்ந்த பிரகாசம் உண்டு. அந்த பிரகாசத்தினுள் எல்லா படைப்புகளும் வெளிப்படுகின்றன. இதனை சூரிய ஒளியின் எல்லைக்குள் கோள்கள் சுற்றுவதற்கும் செடிகொடிகள் வளர்வதற்கும் ஒப்பிடலாம். அனைத்து செயல்களும் எவ்வாறு சூரிய ஒளியினுள் நிகழ்கின்றனவோ, அவ்வாறே ஸர்வம் கலெள இதம் ப்ரஹ்ம:, அனைத்தும் பிரம்மஜோதி எனப்படும் கிருஷ்ணரின் ஒளியினுள் அமைந்துள்ளன. பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், மயா ததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த-மூர்தினா:, “பிரபஞ்சத்தின் இந்த அருவமான தோற்றம் நானே!” மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி, ந சாஹம் தேஷ்வவஸ்தித:, “வாழும் அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் இருந்தும் நான் அவற்றில் நேரடியாக இல்லை.”
எனவே, நாம் புத்திக்கூர்மையுடன் அனைத்தையும் கற்றறிய வேண்டும். இந்த உயர்ந்த அறிவியலைப் பயின்று முழு உலகிற்கும் எடுத்துரைக்க சில புத்திசாலி அமெரிக்கர்கள் எனக்கு தேவை. அதன் பிறகு அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.
(1) பரம்பொருளை அருவமாக உணருவோர், (2) பரம்பொருளை உள்ளிருக்கும் பரமாத்மாவாக உணருவோர், (3) அன்பு பரிமாற்றத்துடன் பகவானுக்கு சேவை செய்வோர்