வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்துடன் தொடர்பு கொள்ளும் மக்களைக் கவரும் முக்கியமான அம்சங்களில் ஒன்று: இங்கிருக்கும் கிருஷ்ணரின் அழகிய படங்கள். பக்தியுடனும் அன்புடனும் ஆச்சாரியரின் வழிகாட்டுதலின்கீழ் பக்தர்களால் வரையப்பட்ட பல்வேறு சித்திரங்கள் காண்போரின் கண்களை தினம்தினம் கவர்ந்து வருகின்றன. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. இஸ்கானிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, இந்த படங்களை எத்தனை எத்தனையோ முறைகள் பார்த்து விட்டேன். ஆயினும், அவற்றை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவற்றினால் நிச்சயம் கவரப்படுகிறேன். இப்படங்கள் யாவும் ஆன்மீக உலகிற்கான ஜன்னல்கள் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.
இஸ்கானின் அழகிய படங்களால் கவரப்பட்டு அவற்றை வாங்குவதற்காக வருபவர்களில் சிலர், அவ்வப்போது கேட்கும் கேள்வி: “புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணரின் படம் கிடைக்குமா?” புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்பது அவர்களின் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையில் ஏதேனும் உண்மை உள்ளதா, கிருஷ்ணரை புல்லாங்குழலுடன் வைக்கலாமா கூடாதா? சற்று அலசிப் பார்க்கலாம். இதுகுறித்து விரிவாக எழுத வேண்டும் என்று முறையிட்ட பகவத் தரிசனத்தின் சில வாசகர்களுக்கும் இக்கட்டுரை பதிலாக அமைகிறது.
கிருஷ்ணரின் திருமேனி வர்ணனை
கிருஷ்ணரை வழிபட விரும்புவோர் கிருஷ்ணரை கிருஷ்ணராக வழிபட வேண்டும். அதாவது கிருஷ்ணருடைய திருமேனியைப் பற்றிய வர்ணனைகள் சாஸ்திரங்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ, அதன்படி கிருஷ்ணரின் படங்களும் கிருஷ்ணரின் விக்ரஹங்களும் அமைய வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணர் கிருஷ்ணராக இருப்பார்.
வேணும் க்வணந்தம் அரவிந்த-தலாயதாக்ஷம்-
பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத-ஸுந்தராங்கம்
கந்தர்ப-கோடி-கமனீய-விஷேஷ-ஷோபம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி
“புல்லாங்குழலை வாசிப்பவரும், தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரும், மயிலிறகினை தலையில் அணிந்தவரும், கார்மேக நிற மேனி கொண்டவரும், கோடிக்கணக்கான மன்மதர்களை வசீகரிக்கும் பேரழகு கொண்டவரும் ஆதி புருஷருமான கோவிந்தனை நான் வழிபடுகிறேன்.”
கிருஷ்ணரை உள்ளது உள்ளபடி அணுகுவோம்
கிருஷ்ணரை வழிபட விரும்புவோர் அவர் எவ்வாறு உள்ளாரோ அவ்வாறு அவரை வழிபட வேண்டும். கிருஷ்ணரின் நிறம் கார்மேகம் என வர்ணிக்கப்பட்டுள்ளது; அவரை வெள்ளை நிற திருமேனியுடன் வரையலாமோ? கிருஷ்ணர் தனது தலையில் மயிலிறகினைக் கொண்டுள்ளார் என வர்ணிக்கப்பட்டுள்ளது; அவரை மயிலிறகின்றி வரையலாமோ? கிருஷ்ணரின் திருமேனி மூன்று இடங்களில் வளைந்து காணப்படுவதாக வர்ணிக்கப்பட்டுள்ளது; அவரை நேராக வரையலாமோ? கிருஷ்ணரின் அழகு கோடிக்கணக்கான மன்மதர்களையும் வசீகரிக்கக்கூடியது; அவரை அழகற்றவராக வரையலாமோ? இக்கேள்விகளுக்கெல்லாம் “இல்லை” என்று பதில் கூறுவோர், புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணர் வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? புல்லாங்குழல் கிருஷ்ணரின் இணைபிரியா அடையாளம். அதனை விலக்கிவிட்டு கிருஷ்ணரை வழிபட நினைப்பது முற்றிலும் முட்டாள்தனம்.
இந்திய நாட்டின் பிரதமராக திரு. மன்மோகன் சிங் அவர்கள் உள்ளார். சீக்கியர்களுக்கு உரிய தலைப்பாகை, வெள்ளை நிற தாடி போன்றவை அவருக்கென்று உள்ள சில முக்கிய அடையாளங்கள். இந்த அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு
பிரதமரின் படத்தை யாரேனும் வரைந்தால், அதனை நீங்கள் ஏற்பீர்களா?
நாராயணரை வழிபட விரும்புவோர் நான்கு கரங்களுடன் அவரை வழிபட வேண்டும். அக்கரங்களில் அவர் சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரையை வைத்திருப்பார். அவை நாராயணரின் அடையாளங்கள். சிவபெருமான் தனது தலையில் பிறை நிலவையும் ஜடா முடியையும் கழுத்தில் பாம்பினையும் கையில் திரிசூலத்தையும் கொண்டுள்ளார். இராமர் தனது கைகளில் வில்லையும் அம்பையும் வைத்திருப்பார். நாராயணர், சிவபெருமான், மற்றும் இராமரைப் பற்றிய இத்தகு வர்ணனைகள், அவர்களை நேரில் கண்டவர்களால் வழங்கப்படுபவை. அவற்றை மாற்ற நாம் முயலக் கூடாது. நாராயணரின் கைகளில் யாரும் புல்லாங்குழலைக் கொடுப்பதில்லை, இராமரின் கையில் யாரும் கதையைக் கொடுப்பதில்லை, சூலாயுதம் இல்லாத சிவபெருமானின் படம் வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. அவ்வாறு இருக்கும்போது, புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணர் வேண்டும் என்று கேட்பது நியாயமா?
புல்லாங்குழலும் கிருஷ்ணரும்
புல்லாங்குழல் கிருஷ்ணரின் இணைபிரியா அம்சம்; கிருஷ்ணர் எவ்வாறு எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்குகின்றாரோ, அதுபோல அவரது புல்லாங்குழல் ஓசையானது எல்லா வேத மந்திரங்களுக்கும் மூலமாக திகழ்கிறது. வேணுகோபால், வேணுதாரி, முரளிதரர், முரளி மனோகரர், வம்ஸிதாரி, வம்ஸிகோபால் என புல்லாங்குழலுடன் இணைந்து கிருஷ்ணருக்கு பல்வேறு திருநாமங்கள் உள்ளன.
கிருஷ்ணரே பரம அனுபவிப்பாளர் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன; புல்லாங்குழல் அவரது இன்பத்தின் வெளிப்பாடாகும். பரம அனுபவிப்பாளர் என்னும் கிருஷ்ணரின் நிலை அவரது புல்லாங்குழலின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. உயர்ந்த அனுபவிப்பாளரான அவர் செய்ய வேண்டிய காரியம் என்று ஏதுமில்லை, ஆனந்தமாக இருப்பது மட்டுமே அவரது ஸ்தானம் என்பதை புல்லாங்குழல் நிலைநாட்டுகின்றது.
கிருஷ்ணரது உதடுகள் என்னும் அமிர்தத்திற்காக பலரும் ஏங்கும்பட்சத்தில், புல்லாங்குழல் மட்டுமே அதனை எப்போதும் அனுபவித்துக் கொண்டுள்ளது. அதற்கு அந்த புல்லாங்குழல் என்ன புண்ணியம் செய்ததோ என்று கோபியர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர். (ஸ்ரீமத் பாகவதம் 10.21.9) மேலும், புல்லாங்குழலின் மூதாதையரான மூங்கில் மரங்கள் அதன் அதிர்ஷ்டத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன என்றும், (மூங்கிலின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதால்) புல்லாங்குழலின் தாயாகக் கருதப்படும் நதியும் பெருமகிழ்ச்சி கொண்டு தாமரை மலர்களை பூக்கச் செய்து தனது பரவசத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறப்படுகிறது.
புல்லாங்குழலை ஊதியபடி பசுக்களை மேய்க்கச் செல்லும் கிருஷ்ணரைக் காண்பதே கண்களுக்கு மிகவுயர்ந்த பக்குவநிலை என்று ஸ்ரீமத் பாகவதம் (10.21.7) கூறுகின்றது. எல்லா சாஸ்திரங்களின் கனிந்த பழமாக விளங்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணருடைய புல்லாங்குழலைப் புகழ்வதற்காக ஓர் அத்தியாயம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய சாஸ்திரத்தில் ஓர் முழு அத்தியாயமே புல்லாங்குழலிற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்றால், புல்லாங்குழலின் மகத்துவத்தைச் சற்று எண்ணிப் பாருங்கள்.
குழலோசையின் பெருமைகள்
கிருஷ்ணரது குழலிலிருந்து வரும் இனிய மொழிகள் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் தெய்வீக இன்பத்தை வழங்கக் கூடியவை. இந்த தெய்வீக இன்பத்தை அனுபவித்தவர்கள் அருவவாதிகளால் பெருமையாகக் கருதப்படும் பிரம்மானந்தத்தைப் பற்றி பேசக்கூட மாட்டார்கள். அந்த அற்புதமான கருவியின் அதிர்வுகள் மாபெரும் முனிவர்களின் தியானத்தையும் உடைக்கும் திறன் பெற்றவை. கிருஷ்ணர் தனது புல்லாங்குழல் ஓசையைக் கொண்டு மன்மதனையும் மயக்கினார்.
கிருஷ்ணரது குழலோசையின் பெருமைகளில் சில: குழலோசையைக் கேட்கும் மயில்கள் பரவசத்தில் ஆடும், அவற்றின் நடனத்தைக் காணும் இதர உயிர்கள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நிற்கும். விண்ணில் பயணிக்கும் தேவதைகளும் இவ்வொலியினால் கவரப்படுகின்றனர். கிருஷ்ணர் ஊதத் தொடங்கியவுடன் பசுக்கள் தங்களது காதுகளை கூர்மையாக்கி அந்த குழல் அமிர்தத்தை முழுமையாக குடிக்கின்றன; கன்றுகளோ பசுக்களின் மடியிலிருந்து உறிஞ்சிய பால் தங்களது வாயில் அப்படியே இருக்க ஸ்தம்பித்துப் போய் நிற்கின்றன. பறவைகள் கண்களை மூடியபடி முழு கவனத்துடன் கிருஷ்ணரது குழலோசையைக் கேட்கின்றன, ஓடும் நதியானது தனது ஓட்டத்தை நிறுத்திவிட்டு கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளைப் பற்றிக் கொள்கிறது, மேகங்கள் அவருக்கு நிழலைத் தருகின்றன. கோவர்தன மலையானது பெருமகிழ்ச்சியினால் பல தரப்பட்ட பழங்களையும் வேர்களையும் வழங்குகின்றது.
சுருக்கமாகச் சொன்னால், கிருஷ்ணரின் குழலோசை நகரும் உயிரினங்களை நகராமலும், நகராத உயிரினங்களை நகரவும் செய்கின்றது. அத்தகைய அற்புதமான குழலோசையைக் கேட்பதற்குப் பதிலாக அதனை ஒதுக்குதல் மூடத்தனம் இல்லையா?
கிருஷ்ணரின் குழலோசை, நகரும் ஜீவன்கள், நகரா ஜீவன்கள், விண்ணுலகவாசிகள், ஏன் வைகுண்டத்தில் வசிக்கும் லக்ஷ்மியையே வசீகரிக்கின்றது. அந்த ஓசையில் மனதைப் பறிகொடுத்தவர்கள் நிச்சயம் அதிலிருந்து விலக மாட்டார்கள்.
கிருஷ்ணரின் தனித்தன்மைகளில் ஒன்று புல்லாங்குழல்
கிருஷ்ணரும் நாராயணரும் ஒரே நபர்களே. இருப்பினும், முன்னரே குறிப்பிட்டதுபோல, கிருஷ்ணர் இரு கரங்களுடன் புல்லாங்குழலை வாசிப்பவராகவும், நாராயணர் தனது நான்கு கரங்களில் வெவ்வேறு பொருட்களுடனும் வீற்றுள்ளார். கிருஷ்ணரை நாராயணரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சங்கள் நான்கு: (1) கிருஷ்ணரின் அற்புதமான இனிய லீலைகள், (2) கிருஷ்ணரின் மீது பக்தர்கள் கொண்டுள்ள இனிய பிரேமை, (3) கிருஷ்ணரின் அதிஅற்புதமான இனிய ரூபம், மற்றும் (4) மூவுலகையும் கவரும் கிருஷ்ணரின் இனிய புல்லாங்குழல்.
விருந்தாவன கிருஷ்ணரை குறிப்பிட்டுக் காட்டும் புல்லாங்குழலை நாம் எக்காரணம் கொண்டும் ஒதுக்கக் கூடாது. புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ்ணர் நிகழ்த்திய லீலைகள் விருந்தாவன காடுகளில் தினந்தோறும் நடைபெறுபவை.
மனதை அவர்பால் ஒப்படைப்போம்
கிருஷ்ணரின்பால் நாம் நமது மனதை ஒப்படைக்க வேண்டும் என்று பகவத் கீதை (9.34) அறிவுறுத்துகிறது. அவ்வாறு மனதை ஒப்படைப்பதற்கு புல்லாங்குழல் மிகவும் உதவக்கூடியதாகும். கிருஷ்ணரின் குழலோசையில் மனதை பறிகொடுத்துவிட்டால் நமது காதுகள் வேறு எதையும் கேட்க மாட்டா. கிருஷ்ணரின் புல்லாங்குழல் ஓசை பக்தர்களுக்கு அறிவொளி கொடுத்து மகிழ்ச்சியூட்டுகிறது. கிருஷ்ணரின் குழலோசையைக் கேட்ட பக்தன் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் கேட்க பேச மறந்துவிடுகிறான்.
கிருஷ்ணரின் அந்த குழலோசை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த தெய்வீக ஒலியினை பாடிக் கேட்கும் தீவிரமான பக்தன் தனது மனதினை எளிதில் கிருஷ்ணரில் பதிய வைக்கிறான். கிருஷ்ணருடைய நாமம், ரூபம், குணம், லீலைகள் மற்றும் இதர உபகரணங்களைத் தவிர அவனது மனம் வேறு எதை நோக்கியும் செல்லாது. கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை ஊதும்போது, சிவபெருமான், பிரம்மதேவர், இந்திரன் உட்பட அனைத்து சிறந்த நபர்களும் அதில் மனதை இழக்கின்றனர் என்று ஸ்ரீமத் பாகவதம் (10.35.15) கூறுகின்றது.
ஸ்ரீல ரூப கோஸ்வாமி விதக்த-மாதவ என்னும் தனது நூலில் கிருஷ்ணரின் குழலோசையை பின்வருமாறு வர்ணிக்கின்றார்: “கிருஷ்ணரின் புல்லாங்குழலிலிருந்து வரும் இனிய அதிர்வுகள் சிவபெருமானை உடுக்கை வாசிப்பதிலிருந்து தடுத்தன, நான்கு குமாரர்களை அவர்களின் தியானத்திலிருந்து தடுத்தன, பிரம்மதேவரை அவரது படைப்புப் பணியிலிருந்து தடுத்தன, அமைதியாக பிரபஞ்சங்களை தாங்கிவரும் அனந்ததேவர் இசைக்கு தகுந்தாற்போல அசையத் தொடங்கினார். மேலும், அவ்வொலி பிரபஞ்சத்தின் மூடிகளைத் தாண்டி ஆன்மீக வானை அடைந்தது.”
குழலூதும் கிருஷ்ணரின் அழகிய திருமுகத்தைக் காணத் தவறுபவர்கள், ஒரு பூச்சியைப் போன்று குறிக்கோளின்றி வாழ்பவர்கள் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார். (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 2.45) ஆயினும், பூச்சியைப் போன்று வாழ விரும்புபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
கற்பனை விளக்கங்களைத் தவிர்ப்போம்
ருஷ்ணரை வழிபட விரும்புவோர் அவரை புல்லாங்குழலுடன் வழிபடுவதே சாலச் சிறந்ததாகும். அதுவே அவரது பூரண ஸ்வரூபம். அதை விடுத்து எண்ணற்றோர் எண்ணற்ற கற்பனைகளை தினம்தினம் கொண்டு வரலாம். அதற்கு புத்தம்புதிய விளக்கங்களையும் கொடுக்கலாம். ஆனால் அத்தகைய சொந்த விளக்கங்களுக்கு நாம் எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது. குழலூதும் கிருஷ்ணரை வீட்டில் வைக்கக் கூடாது என்று யாரேனும் கூறினால், அவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி: “எந்த சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது?” இந்த கேள்வியை நீங்கள் கேட்டால், அவர்கள் உடனடியாக, “பே, பே” என்று உளறுவார்கள், அல்லது “யாரோ சொன்னார்கள்,” அங்கு படித்தேன், இங்கு படித்தேன்,” என்றெல்லாம் பிதற்றுவார்கள்.
மக்களுக்கு போதிய ஆன்மீக அறிவு இல்லாத காரணத்தினால், அவ்வப்போது பற்பல போலியான தகவல்கள் ஆன்மீக அறிவுரைகள் என்ற போர்வையில் உலா வருவதை யாம் கண்டு வருகிறோம். உண்மையை பொய் என்றும், பொய்யினை உண்மை என்றும் கூறுவோர் வளர்ந்த வண்ணம் உள்ளனர். அதுவும் குறிப்பாக, கலி யுகத்தில் இவை மிக வேகமாக அதிகரிக்கின்றன. மக்களிடையே ஆன்மீக அறிவு இல்லாமல் இருப்பதால், நாத்திகர்களும் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்; பல்வேறு கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு மக்களைக் குழப்புகின்றனர்.
கிருஷ்ணர் ஏன் புல்லாங்குழலை வைத்துள்ளார் என்பதற்கு அவரது சுய விருப்பமே காரணம். சில நேரங்களில் சில அயோக்கியர்கள் அதற்கும் சில கற்பனை காரணங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். புல்லாங்குழலின் உள்ளே எதுவும் இல்லை, கிருஷ்ணருக்குள்ளும் எதுவும் இல்லை, அதனால்தான் கிருஷ்ணர் புல்லாங்குழலை வாசிக்கின்றார் என்ற கற்பனை விளக்கத்தை யாம் சமீபத்தில் கேட்க நேர்ந்தது. தங்களை பண்டிதர்கள் என்று காட்டிக்கொள்ளும் முட்டாள்கள் இதுபோன்று உளறுவதைக் கேட்கும்போது, சுவற்றில் போய் முட்டிக் கொள்ளலாம் போலத் தோன்றுகிறது.
வீட்டில் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வைக்கக் கூடாது என்னும் கற்பனை எங்கிருந்து முளைத்தது என்று தெரியவில்லை. போலி ஆன்மீகவாதிகளிடமிருந்து வந்திருக்கலாம், அல்லது நாத்திகர்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் இத்தகு கற்பனைகளுக்கு நாம் எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது என்பதை குறைந்தபட்சம் பகவத் தரிசன வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மூட நம்பிக்கைகளை மூடி வைப்போம்
கிருஷ்ணர் நமது செல்வத்தைச் சுரண்டுபவர் அல்ல, அதற்கான அவசியம் அவருக்கு இல்லை. அவர் எல்லா செல்வத்தின் அதிபதி, நம்முடைய செல்வத்தைச் சுரண்ட வேண்டிய தேவை அவருக்கு உண்டோ? கிருஷ்ணரின்பால் நம்மை ஈர்ப்பதற்கு உதவும் புல்லாங்குழலை ஒதுக்குதல் மூட நம்பிக்கையாகும்.
கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தவர்களாக தம்மை வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணர் நமக்கு பௌதிகச் செல்வங்களைக் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, எடுத்துக் கொண்டாலும் சரி–எல்லா சூழ்நிலைகளிலும் கிருஷ்ணரே நமது இறைவன், நமது பிராணநாதர் அவரே என்ற எண்ணத்துடன் வாழ்தல் தூய பக்திக்கு அடையாளமாகும். அத்தகைய தூய பக்தியே பகவத் கீதையிலும் பாகவதத்திலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையே சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியர்கள் நமக்குக் கொடுத்துள்ளனர். அந்த தூய பக்தியை பயிற்சி செய்து பல்வேறு திசைகளிலிருந்து வரும் மூட நம்பிக்கைகளை மூடி வைப்போம்.
புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கக் கூடாது என்று மூடர்கள் சொல்லும் வேளையில், புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை தினமும் தரிசிக்காவிடில் கண்கள் இருந்தும் பயனில்லை என்று உரைக்கும் ஸ்ரீமத் பாகவத ஸ்லோகத்துடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.
ஸக்ய: பஷுன் அனுவிவேஷயதோர் வயஸ்யை: வக்த்ரம் வ்ரஜேஷ-ஸுதயோர் அனவேணு-ஜுஷ்டம் யைர் வா நிபீதம் அனுரக்த-கடாக்ஷ-மோக்ஷம் “நண்பர்களே, நந்த மஹாராஜரின் மகன்களுடைய அழகிய திருமுகங்களைக் காணும் கண்கள் நிச்சயம் அதிர்ஷ்டம் வாய்ந்தவை. அவ்விரு மகன்களும் தங்களது நண்பர்களால் சூழப்பட்டு பசுக்களை மேய்த்தபடி காட்டினுள் நுழையும்போது, அவர்கள் தங்களது திருவாயில் புல்லாங்குழல்களை வைத்தபடி விருந்தாவனவாசிகளின் மீது அன்பான பார்வையை செலுத்துகின்றனர். கண்களுடன் வாழ்பவர்களுக்கு அக்காட்சியைத் தவிர சிறந்த காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்று நாங்கள் நினைக்கின்றோம்.” (ஸ்ரீமத் பாகவதம் 10.21.7)
புல்லாங்குழலின் வகைகள்
வேணு, முரளீ, வம்ஸீ ஆகிய மூன்று வகையான புல்லாங்குழலை கிருஷ்ணர் உபயோகிக்கின்றார். மிகச்சிறிய புல்லாங்குழலான வேணு, ஆறு அங்குல நீளத்திற்கு உட்பட்டது, ஊதுவதற்கென்று ஆறு துளைகளைக் கொண்டது. முரளீ என்பது சுமார் பதினெட்டு அங்குல நீளம் கொண்டது; இதன் முடிவில் ஒரு துளையும் நடுவில் நான்கு துளைகளும் உள்ளன. இதனால் உருவாகும் இசை மிகவும் கவரக்கூடியதாக இருக்கும். வம்ஸீ எனப்படும் புல்லாங்குழல் பதினைந்து அங்குல நீளம் கொண்டது, அதில் ஒன்பது துளைகள் உள்ளன. கிருஷ்ணர் இந்த மூன்று புல்லாங்குழலையும் தேவைக்குத் தகுந்தாற் போல உபயோகிப்பார். கிருஷ்ணரிடம் மஹாநந்தா, அல்லது ஸம்மோஹினீ எனப்படும் நீண்ட வம்ஸீ ஒன்று உள்ளது. அது மேலும் நீளமாக இருக்கும்போது, ஆகர்ஷிணீ எனப்படுகிறது. அதைக் காட்டிலும் நீளமாக இருக்கும்போது, ஆனந்தினீ என்று அழைக்கப்படுகிறது. ஆனந்தினீ குழல் கிருஷ்ணரின் கோப நண்பர்களுக்கு மிகவும் பிரியமானது, அது வம்ஷுலீ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த புல்லாங்குழல்கள் சில நேரங்களில் மணிகளால் அலங்கரிக்கப்படுகின்றன, சில நேரங்களில் அவை பளிங்கினாலும் செய்யப்படுகின்றன. புல்லாங்குழல் மணிகளால் செய்யப்படும்போது அது ஸம்மோஹினீ என்றும், தங்கத்தினால் செய்யப்படும்போது ஆகர்ஷிணீ என்றும் அழைக்கப்படுகிறது.