கிருஷ்ண உணர்வு: இந்துக்களின் கோட்பாடா, தெய்வீக கலாச்சாரமா?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

கிருஷ்ண பக்தி அனைவருக்கும் பொதுவானது; இதனை இந்து மதம் என்று கூறி ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்துவிடக் கூடாது. இன்றைய இந்து மதத்தில் காணப்படும் பல தெய்வ வழிபாடு, ஜாதி உணர்வு ஆகியவற்றை கண்டிக்கும் ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ண உணர்வின் கோட்பாடுகள் புராதன வேத கலாச்சாரத்திலிருந்து தோன்றியவை என்றும், மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய இயக்கம் என்றும் விளக்குகிறார்.

இந்து என்பதற்கான விளக்கம்

கிருஷ்ண பக்தி இயக்கம் இந்து மதத்தைச் சார்ந்தது என்னும் தவறான கருத்து நிலவி வருகிறது. உண்மை என்னவென்றால், கிருஷ்ண உணர்வு ஒரு நம்பிக்கையோ மதமோ அல்ல–மற்ற நம்பிக்கைகள் அல்லது மதங்களை முறியடிக்கும் நோக்கத்தோடு ஏற்பட்டதல்ல. மாறாக, அது மனித சமுதாயம் முழுமைக்குமான பண்பாட்டு இயக்கம். மேலும், எந்த குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டதல்ல. கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதை மக்களுக்குக் கற்றுத் தருவதே இந்த கலாச்சார இயக்கத்தின் முக்கிய சேவையாகும்.

சில வேளைகளில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள், நாங்கள் இந்து மதத்தை பிரச்சாரம் செய்வதாக எண்ணுகிறார்கள். உண்மையில் நாங்கள் செய்வது அதுவல்ல. ஹிந்து என்ற சொல்லை பகவத் கீதையில் காண முடியாது. உண்மையில், முழு வேத இலக்கியங்களிலும் ஹிந்து என்றொரு சொல் இல்லை. இச்சொல் இந்தியாவின் அண்டை தேசங்களான ஆப்கானிஸ்தான், பெர்சியா, பலுசிஸ்தான் போன்ற இடங்களில் வசித்தவர்கள் உண்டாக்கியதாகும். இந்தியாவின் வடமேற்கு எல்லையில் ஸிந்து என்ற பெயருள்ள நதி ஓடுகிறது. அங்கிருந்த முஸ்லீம்கள் அப்பெயரைச் சரியாக உச்சரிக்க இயலாத காரணத்தால் அந்த நதியை ஹிந்து என்றழைத்தனர். அந்நதியின் மறுகரையில் வாழ்ந்தவர்களை ஹிந்துக்கள் (இந்துக்கள்) என்றனர். இந்தியாவில், வேத கால மொழியின்படி, ஐரோப்பியர்களை மிலேச்சர்கள் அல்லது யவனர்கள் என்று அழைத்து வந்தனர். அதுபோல, ஹிந்து என்ற பெயர் முஸ்லீம்களால் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டதாகும்.

நாகரிகத்தின் அடிப்படை–வர்ணாஷ்ரமம்

இந்தியாவின் உண்மையான கலாச்சாரம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இயற்கையின் வெவ்வேறான தன்மைகள் அல்லது குணங்களையொட்டி வெவ்வேறு வகையான மனிதர்கள் ஏற்பட்டுள்ளனர். அவர்கள் பொதுவாக நான்கு வகையான சமுதாயப் பிரிவுகளிலும், நான்கு ஆன்மீகப் பிரிவுகளிலும் அடங்குவார்கள். இத்தகைய சமுதாய மற்றும் ஆன்மீகப் பிரிவுகள் அடங்கிய முறை வர்ணாஷ்ரம தர்மம் எனப்படுகிறது. வர்ணம் எனப்படும் நான்கு சமுதாயப் பிரிவுகளாவன: பிராமணர், சத்திரியர், வைசியர், மற்றும் சூத்திரர். நான்கு ஆஷ்ரமங்களாவன: பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், மற்றும் சந்நியாஸம். வேத இலக்கியங்களில் வர்ணாஷ்ரம முறை விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் கிருஷ்ண உணர்வில், அதாவது கடவுள் உணர்வில், முன்னேறுவதற்கு பயிற்சியளிப்பதே இந்த வேத கலாச்சாரத்தின் நோக்கம். இதுவே முழுமையான வேத முறை.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பெரும் பக்தரான இராமானந்த ராயருடன் உரையாடியபோது, “மனித வாழ்வின் அடிப்படை கொள்கை என்ன?” என்று கேட்டார். வர்ணாஷ்ரம தர்மம் ஏற்கப்படும்போது மனித நாகரிகம் ஆரம்பமாகிறது என்று இராமானந்த ராயர் விடை கூறினார். வர்ணாஷ்ரம தர்ம நிலையை அடையாமல் மனித நாகரிகம் உருப்பெறுவதில்லை. எனவே, கிருஷ்ண உணர்வு அல்லது தைவ வர்ணாஷ்ரமம் அல்லது தெய்வீக கலாச்சாரம் என்ற முறையான மனித நாகரிகத்தை ஏற்படுத்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயற்சிக்கிறது.

இந்தியாவில் இப்போது இந்த வர்ணாஷ்ரம முறை தலைகீழாக மாறியுள்ளது. அதன்படி, பிராமண குடும்பத்தில் பிறந்துள்ள காரணத்தால் தான் பிராமணனாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டுமென்று ஒருவன் உரிமை கொண்டாடுகிறான். ஆனால் இப்படிப்பட்ட உரிமையை சாஸ்திரங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. கோத்திரத்தின்படி அவனது மூதாதையர் பிராமணராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான வர்ணாஷ்ரம தர்மம், அவன் அடைந்துள்ள உண்மையான குணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது; பிறப்பு அல்லது கோத்திரத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, நாங்கள் கற்பிப்பது இன்றைய இந்து தர்மத்தை அல்ல, குறிப்பாக சங்கரரைப் பின்பற்றுபவர்கள் அனுசரிக்கும் இந்து தர்மத்தை அல்ல; ஏனென்றால், அவர் பூரண சத்தியம் அருவமானது என்று கூறும்போது, கடவுள் இருப்பதை மறைமுகமாக மறுக்கிறார்.

இந்து மதம் மாயாவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது

புத்த மதத்தின் பாதிப்பிலிருந்து வேதங்களை மீட்டு, அவற்றின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டுவது சங்கரரின் பிரதான அவதார நோக்கமாக இருந்தது. இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தை ஆதரித்ததால், இந்தியா முழுவதும் பரவும் வாய்ப்பை அது பெற்றிருந்தது. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக, கிருஷ்ணர் சிறப்பான சக்தியைக் கொண்ட புத்தராக அவதரித்தார் என்பதை வேத இலக்கியங்களில் காண்கிறோம். அவரது கொள்கைகள் பெருமளவில் ஏற்கப்பட்டன. ஆயினும், புத்தர் வேதங்களின் அதிகாரத்தை நிராகரித்த காரணத்தினால், புத்த மதம் பரவியபோது இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் வேத கலாச்சாரம் தடைபட்டது. எனவே, புத்த மதத் தத்துவங்களை முறியடிக்கும் நோக்கத்தோடு, மாயாவாதம் என்னும் புதிய முறையை சங்கரர் கொண்டு வந்தார்.

சரியாகப் பார்த்தால், மாயாவாதக் கொள்கை நாத்திகமே. ஏனெனில், அதன்படி கடவுளின் இருப்பு வெறும் கற்பனையே. இந்த மாயாவாதம் பன்னெடுங் காலமாக இருந்து வந்துள்ளது. இன்றைய இந்து மதம், புத்த மதத்தோடு சமரசம் செய்வதாக அமைந்துள்ள சங்கரரின் மாயாவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மாயாவாதக் கொள்கையின்படி, உண்மையில் கடவுள் இல்லை, அவ்வாறே அவர் இருந்தாலும் அவர் அருவமானவர், எங்கும் நிறைந்திருப்பவர். எனவே, அவரை எந்த வடிவிலும் கற்பனை செய்து கொள்ளலாம். இந்த முடிவு வேத இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. வேத இலக்கியங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழிபடப்படும் பல்வேறு தேவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. இருப்பினும், பரம புருஷ பகவானான விஷ்ணு எல்லா சூழ்நிலைகளிலும் உயர்ந்த ஆளுநராக ஏற்கப்பட்டுள்ளார். இதுவே உண்மையான வேதப் பண்பாடு.

தேவர்களின் உண்மையான நிலை

கிருஷ்ண உணர்வு தத்துவம் பகவானின் இருப்பையும் மற்ற தேவர்களின் இருப்பையும் மறுக்கவில்லை. ஆனால் மாயாவாதமோ இந்த இரண்டையுமே மறுக்கின்றது. பகவானும் இல்லை, வேறு தேவர்களும் இல்லை என்று கூறுகின்றது. அவர்களைப் பொறுத்தவரையில், இறுதியில் எல்லாம் சூன்யமே. விஷ்ணு, துர்கை, சிவபெருமான், சூரியதேவன் என ஏதாவதொரு கடவுளை கற்பனை செய்து கொள்ளலாம் என அவர்கள் கூறுகின்றனர். மக்கள் இந்த தெய்வங்களை வழிபடுவதால் அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர்; ஆனால், இந்த தெய்வங்களில் யாருமே உண்மையில் இருப்பதாக மாயாவாதக் கொள்கை அங்கீகரிக்கவில்லை. அருவமான பிரம்மனில் மனதை நிலைநிறுத்துவது சாத்தியமல்ல என்பதால், ஏதாவதோர் உருவத்தை கற்பனை செய்துகொள்ளலாம் என்பதே மாயாவாதிகளின் கூற்று. இது சங்கரரால் புதியதாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சோபாஸன முறையாகும். ஆனால் பகவத் கீதை இப்படிப்பட்ட எந்த கொள்கையையும் கற்பிக்கவில்லை. எனவே, மாயாவாதிகளின் கொள்கைகளை நாம் அதிகாரப்பூர்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

தேவர்கள் இருப்பதை பகவத் கீதை ஏற்கின்றது, வேதங்களும் வர்ணிக்கின்றன; அவர்களின் இருப்பை யாராலும் மறுக்க இயலாது. இருப்பினும், அவர்களை சங்கரர் கூறியுள்ள வழிமுறைப்படி ஒப்புக்கொள்வதோ வழிபடுவதோ சரியல்ல. தேவ வழிபாடு பகவத் கீதையில் நிராகரிக்கப்படுகிறது. கீதை (7.20) தெளிவாகக் கூறுகிறது:

காமைஸ் தைஸ் தைர் ஹ்ருதஜ்ஞானா:ப்ரபத்யந்தே தேவதா:

தம் தம் நியமம் ஆஸ்தாயப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா

“ஜட ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனதை உடையவர்கள் தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கேற்ற வழிபாட்டு முறைகளையும் விதிகளையும் பின்பற்றுகின்றனர்.”

மேலும், பகவத் கீதையில் (2.44) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

போகைஷ்வர்ய ப்ரஸக்தானாம்தயாபஹ்ருதசேதஸாம்

வ்யவஸாயாத்மிகா புத்தி:ஸமாதௌ விதீயதே

“புலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கியுள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.” பல்வேறு தேவர்களைப் பின்பற்றுபவர்கள் ஹ்ருதஜ்ஞானா: (அலைக்கழிக்கப்பட்ட மனதினர்) என்று வர்ணிக்கப்பட்டுள்ளனர். பகவத் கீதையில் (7.23) மேலும் இது விளக்கப்பட்டுள்ளது

அந்தவத் து பலம் தேஷாம்தத் பவத் யல்பமேதஸாம்

தேவான் தேவயஜோ யாந்திமத்பக்தா யாந்தி மாம் அபி

 “தேவர்களை வணங்கும் சிற்றறிவு படைத்த மக்களது பலன்கள், தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுமாகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்குச் செல்வர், ஆனால் எனது பக்தர்கள் இறுதியில் எனது உன்னத உலகை அடைகின்றனர்.”

தேவர்களால் வழங்கப்படும் வெகுமதிகள் தற்காலிகமானவை; ஏனெனில், பௌதிக வசதிகள் யாவும் தற்காலிகமான உடலைச் சார்ந்துள்ளன. ஒருவர் பெறும் பௌதிக வசதிகள்–நவீன விஞ்ஞானம் வழங்கினாலும் சரி, தேவர்களிடமிருந்து பெறப்படும் வரங்களானாலும் சரி–இந்த உடலோடு அழிந்து போகும். ஆனால் ஆன்மீக முன்னேற்றத்திற்கு என்றும் முடிவில்லை.

ஜட ஆசைகளால் மயங்கிய மக்கள் பல்வேறு தேவர்களை பூஜிக்கின்றனர், அந்த தேவர்கள் வழங்கும் நன்மைகள் யாவும் உண்மையில் கிருஷ்ணரால் வழங்கப்படுபவையே.

அனைத்தும் கடவுளின் கட்டுப்பாட்டில்

நாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்த மதத்தையும் பிரச்சாரம் செய்வதாக மக்கள் எண்ணக் கூடாது. கடவுளை எப்படி நேசிப்பது என்பதை மட்டுமே நாங்கள் கற்பிக்கிறோம். கடவுளைப் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. உதாரணமாக, நாத்திகன் ஒருபோதும் கடவுளை நம்ப மாட்டான். நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜாக்குவஸ் மோனோட் போன்ற நாத்திகர்கள், எல்லாம் தற்செயலாக நடைபெறுவதாகக் கருதுகின்றனர். இதே கொள்கையை இந்தியாவில் சார்வாகர் போன்ற நாத்திகவாதிகள் நெடுங் காலத்திற்கு முன்பே மொழிந்துள்ளனர். மேலும், கர்மமீமாம்ஸா போன்ற கொள்கைகளின்படி, ஒருவன் தன் பணியைச் சரிவர உண்மையுடன் செய்து வந்தால் போதும், பலன் தானாகவே கிட்டும், கடவுளை எண்ண வேண்டியதில்லை என்று கருதப்படுகிறது. இதற்கு உதாரணமாக, நோய்க்குத் தேவையான மருந்தை உட்கொண்டால் நோய் தானாகவே குணமடைவதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் சிறந்த மருந்துகளை உட்கொண்டும் ஒருவன் மரணமடைய நேரிடலாம் என்பதே இதற்கான எமது பதில் வாதம். பலன்களை ஒருபோதும் உறுதியுடன் எதிர்பார்க்க முடியாது. எனவே, தைவநேத்ரேண, உன்னதமான அதிகாரி ஒருவர் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. இல்லாவிடில், மதப்பற்றுள்ள தனவந்தரின் மகன் தெருவில் ஹிப்பியாகத் திரிவது எப்படி? அல்லது, மிகவும் கடினமாக உழைத்து செல்வந்தனாக மாறிய மனிதனிடம், “மற்ற உணவுகளை உண்ணக் கூடாது, கஞ்சி மட்டுமே குடிக்க வேண்டும்,” என்று மருத்துவர் கூறுவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

கர்மமீமாம்ஸா கொள்கையின்படி, “கடவுளின் உன்னத மான வழிகாட்டுதல் ஏதுமின்றி இவ்வுலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாம் காமத்தின் காரணமாக (காமஹைதுகம்) நடைபெறுகின்றன. காமத்தின் காரணமாகவே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் ஆசை கொள்கிறான், தற்செயலாக உடலுறவு ஏற்படுகிறது, அப்பெண் கருத்தரிக்கிறாள். ஆனால் அவள் கருவுற வேண்டுமென்று எந்தவொரு திட்டமும் இருப்பதில்லை, ஆணும் பெண்ணும் ஒன்று சேரும்போது அவ்விளைவு இயல்பாக ஏற்படுகிறது.” எல்லாம் சந்தர்ப்பவசமாக இயற்கை ஈர்ப்புகளின் விளைவாக நடைபெறுவதாகக் கூறும் இத்தகைய நாத்திகவாதம், பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தில் அசுரத் தன்மையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த அசுரக் கொள்கை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் கருத்தடை முறைகளைக் கையாளலாமென்ற கருத்தை ஆதரிக்கிறது.

உண்மை நிலை என்னவெனில், எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய திட்டம் உண்டு–வேத முறையிலான திட்டம். ஆணும் பெண்ணும் எவ்வாறு இணைய வேண்டும், எவ்வாறு குழந்தைகளைப் பெற வேண்டும், காம வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதற்கெல்லாம் வேத இலக்கியங்கள் வழிகாட்டுகின்றன. வேத முறை அனுமதிக்கும் காம வாழ்க்கை, அதாவது, வேதங்களின் விதிமுறைப்படியும் நியமப்படியும் நடத்தப்படும் காம வாழ்க்கை நேர்மையானது என்றும், தமது ஒப்புதலைப் பெற்றுள்ளது என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். ஆனால் தற்செயலாக நடைபெறும் காம வாழ்க்கை ஏற்புடையதல்ல. தற்செயலாக காம வசப்பட்டு, அதன் விளைவாகப் பிறக்கும் குழந்தைகள், வர்ணஷங்கர, வேண்டாத மக்கள் என கருதப்படுகிறார்கள். அது கீழ்நிலையிலுள்ள விலங்குகளின் செயல், மனிதர்களுக்கு ஏற்றதல்ல. மானிடர்களுக்குத் திட்டம் உண்டு. “மனித வாழ்விற்குத் திட்டம் ஏதும் இல்லை, அனைத்தும் தற்செயலாக பௌதிகத் தேவையின் அடிப்படையில் நடைபெறுகிறது” எனக் கூறப்படுவதை ஏற்க இயலாது.

ஜாதி என்பது பிறப்பினால் அல்ல

“கடவுள் இல்லை; ஆயினும், ஒவ்வொருவரும் தனது அலுவலை கவனித்துக் கொண்டு, ஏதாவதொரு கடவுளை கற்பனை செய்து வழிபட்டால், சமுதாயத்தில் அமைதி நிலவும்,” என்ற சங்கராசாரியரின் கொள்கையும் ஏறக்குறைய இந்த சந்தர்ப்பம் மற்றும் தேவையின் அடிப்படையில் பிறந்ததுவே. ஆனால் எங்களது முறை முற்றிலும் வேறுபட்டதாகும், இஃது அதிகாரப்பூர்வமானதாகும். ஸ்ரீ கிருஷ்ணரால் பரிந்துரைக்கப்படும் தெய்வீகமான வர்ணாஷ்ரம தர்மமே எங்களது முறை. அஃது இன்று பழக்கத்தில் இருக்கும் ஜாதி முறை அல்ல. இன்றைய ஜாதி முறை இந்தியாவிலும் கண்டனம் செய்யப்படுகிறது. அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியதே. ஏனெனில், பிறப்பின் அடிப்படையில் ஒருவனின் ஜாதியை (தன்மையை) வகைப்படுத்துவது வேத முறையிலான தெய்வீக ஜாதி முறையல்ல.

சமுதாயத்தில் பல வகையான மனிதர்கள் உள்ளனர்; சிலர் பொறியியல் நிபுணர்கள், சிலர் மருத்துவர்கள், சிலர் இரசாயன நிபுணர்கள், சிலர் வியாபாரிகள், இத்யாதி. இத்தகைய வேறுபாடுகள் பிறப்பாலன்றி அவரவர்களின் குணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டியவை. பிறப்பின் அடிப்படையிலான ஜாதி முறையை வேதங்கள் ஆதரிக்கவில்லை, அதிகாரப்படுத்தவில்லை, நாமும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தற்சமயத்தில் இந்தியாவின் பொதுமக்களாலும் நிராகரிக்கப்படக் கூடிய இந்த ஜாதி முறைக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மாறாக, நாங்கள் ஒவ்வொருவருக்கும் பிராமணராகும் வாய்ப்பை அளித்து, வாழ்வின் மிகவுயர்ந்த நிலையை அடைய உதவுகிறோம்.

ஆன்மீகப் பண்பாட்டை வளர்ப்போம்

தற்போதைய உலகில், பிராமணர்களும் (ஆன்மீக வழிகாட்டிகளும்) சத்திரியர்களும் (ஆட்சியாளர்களும்) மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், உலகம் முழுவதும் சூத்திரர்களால், அதாவது உழைப்பாளி வர்க்கத்தினரால் ஆளப்படுகின்றது. அதனால் சமுதாயத்தில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த முரண்பாடுகளைக் களைவதற்காகவே நாங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தைத் துவக்கியுள்ளோம். பிராமணத் தன்மையினர் மீண்டும் ஏற்படுத்தப்பட்டால், மற்ற சமுதாய நலன்கள் தாமாகவே ஏற்படும்; இது, மூளை சரியாக இருந்தால், உடலின் மற்றப் பகுதிகளான கை, கால், வயிறு போன்ற உறுப்புகள் சரியாக இயங்குவதைப் போன்றதாகும்.

கடவுளை நேசிப்பது எப்படியென்பதைக் கற்றுத் தருவதே இவ்வியக்கத்தின் இறுதி நோக்கம். கடவுளிடம் அன்பு செலுத்தக் கற்றுக் கொள்வதே மனித வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவநிலை என்ற முடிவை சைதன்ய மஹாபிரபு ஆமோதிக்கிறார். கிருஷ்ண பக்தி இயக்கம் இந்து மதத்துடனோ வேறெந்த மதத்துடனோ சம்பந்தப்பட்டதல்ல. கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்த எந்த கனவானும் இந்து மதத்திற்கு மாற விரும்ப மாட்டார். அதுபோலவே இந்து மதப் பண்பாட்டில் தோன்றிய எவரும் கிருஸ்துவத்திற்கு மாறத் தயாராக இருக்கமாட்டார்கள். இவ்வாறு மதம் மாறுவதெல்லாம் சமுதாயத்தில் கௌரவம் இல்லாதவர்கள் செய்யும் காரியம். ஆனால், கடவுள் தத்துவத்தையும் கடவுள் விஞ்ஞானத்தையும் புரிந்துகொள்வதில் அனைவரும் விருப்பம் கொண்டு, அதனை உண்மையுடன் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கிருஷ்ண பக்தி இயக்கம் பெயரளவிலான இந்து மதத்தை பிரச்சாரம் செய்ய ஏற்பட்டதல்ல என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வின் பிரச்சனைகளையெல்லாம் தீர்க்கக்கூடிய ஆன்மீகப் பண்பை நாம் வழங்குகிறோமென்பதால், இஃது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

கடவுளை நேசிப்பதற்கான எளிய வழியை கிருஷ்ண பக்தி இயக்கம் கற்றுத் தருகின்றது

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives