திருமணம், ஒரு புனிதமான பந்தம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஸ்தாபக ஆச்சாரியரின் ஆன்மீக உரை மான்ட்ரியல், கனடா ஜுலை 22, 1968. கிருஷ்ண பக்தர்களுக்கு இடையிலான திருமணம், ஆன்மீக உணர்வில் படிப்படியாக முன்னேற்றம் பெற உதவும்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஆலோல-சந்த்ரக-லஸத்-வனமால்ய-வம்ஷீ-
ரத்னாங்கதம் ப்ரணய-கேலி-கலா-விலாஸம்
(பிரம்ம ஸம்ஹிதை 5.31)

இந்த ஸ்லோகத்தில் முழுமுதற் கடவுள் கோவிந்தனைப் பற்றிய வர்ணனை கொடுக்கப்பட்டுள்ளது. கோவிந்தன் உருவமற்றவர் அல்ல. “பூமாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவர் தமது கைகளில் புல்லாங்குழலை ஏந்தியுள்ளார்” என்று இங்கு கூறப்பட்டுள்ளது. பிரணய-கேலி-கலா விலாஸம், “அவர் ராதாராணியுடன் தெய்வீக அன்பில் ஈடுபட்டுள்ளார்.” எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் அன்பு இயல்பானதல்ல என்று கருதத் தேவையில்லை. இந்த அன்பு கடவுளிடமும் உள்ளது. வேதாந்த சூத்திரத்தின் துவக்கத்தில், அதாதோ பிரஹ்ம ஜிக்ஞாஸா, “பரம்பொருள் என்பது யாது?” என்ற கேள்விக்கு, ஜன்மாத்யஸ்ய யத:, “எங்கிருந்து எல்லாம் தோன்றியதோ, அதுவே பரம்பொருள்,” என்று விளக்க மளிக்கப்பட்டுள்ளது. பரம் பொருளே எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்குகிறார் என்பதே இதன் பொருளாகும்.

இந்த ஜடவுலகில் ஆண்-பெண் உறவு மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. மனித சமுதாயத்தில் மட்டுமின்றி, பூனைகள், நாய்கள், பறவைகள் என எல்லா உயிரினங்களிலும் ஆண்-பெண் ஈர்ப்பு உள்ளது. அஃது ஏன்? அதற்கான பதில், ஜன்மாத்யஸ்ய யத:, என்று வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு பரம்பொருளிடம் இருக்கும் காரணத்தினால், இந்த ஜடவுலகிலும் அஃது உள்ளது. பரம்பொருளிடம் ஈர்ப்பு இல்லாவிடில், இவ்வுலகத்தில் எவ்வாறு அது வெளிப்பட்டிருக்க முடியும்?

வேத வழக்கத்தின்படி ஒவ்வொரு வரும் வேதாந்த சூத்திரத்தைக் கடை பிடிக்க வேண்டும். அருவவாதிகள், உருவவாதிகள் என இருவகையான தத்துவவாதிகள் உள்ளனர். உருவவாதி களான வைஷ்ணவர்கள், பரம்பொருள், உருவமுடைய ஒரு நபர் என்று ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அருவவாதிகளான மாயாவாதிகள் பரம்பொருள் அருவமானது (உருவம் இல்லாதது) என்று கூறுகிறார்கள். இதுவே வித்தியாசம். நமது வைஷ்ணவ தத்துவவாதிகள், பரம்பொருள் எவ்வாறு உருவமின்றி இருக்க முடியும்? என்று வாதிடுகின்றனர். இவ்வுலகில் நாம் காணும் அனைத்திற்கும் உருவம் உள்ளது. எனவே, உருவம் எனப்படும் குறிப்பிட்ட தனித்துவம் பரம்பொருளிடம் இல்லாவிடில், அவரிடமிருந்து தோன்றிய இவ்வுலகில் எவ்வாறு உருவங்கள் இருக்க முடியும்?

நாங்கள் சொல்ல வருவது யாதெனில், கணவன் மனைவிக்கு இடையிலுள்ள இந்த அன்பு இயல்பானதல்ல என்று கூற முடியாது. ஏனெனில் இத்தகு அன்பு பரம்பொருளிடமும் உள்ளது. பரம்பொருளான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ராதாராணியுடன் தெய்வீக அன்பில் ஈடுபட்டிருப்பதாக வேதங் களிலிருந்து நாம் அறிகிறோம். ராதா கிருஷ்ணரின் அந்த அன்புப் பரிமாற்றம் இந்த ஜடவுலகத்திலும் வியாபித்திருக்கிறது; ஆனால் இங்கு அது நெறிதவறிய பிம்பமாக உள்ளது. இந்த ஜடவுலகத்திலுள்ள அன்பு உண்மையான அன்பு அல்ல. இது காமம் எனப்படுகிறது. இங்கு ஆண்களும் பெண்களும் அன்பினால் கவரப்படவில்லை; காமத்தினால் கவரப்படுகிறார்கள். கிருஷ்ண பக்தி இயக்கத்திலுள்ள நாங்கள் பரம்பொருளை அணுக முயற்சி செய்வதால். காம எண்ணத்தை தூய்மையான அன்பாக மாற்ற முயற்சிக்கிறோம். இன்றும்கூட வேதக் கோட்பாடுகளை சிரத்தையுடன் கடைபிடிப்பவர்களிடம், இந்த காமம், ஆன்மீகமாக ஒழுங்குபடுத்தப்படுகிறது. அஃது எவ்வாறு? திருமணத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் கட்டுப்பாடற்ற முறையில் பழகுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நம்முடைய மாணவர்களில் ஒருவர் இந்தியா சென்றிருந்தபோது, ஓர் இளம் பெண்ணுடன் தெருவில் பேச முற்பட்டார், அச்செயல் குற்றமாகக் கருதப்பட்டது. அவருக்கு ஒரே ஆச்சரியம். இளவயது ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வழக்கம் இந்தியாவில் கிடையாது. ஆனால் உண்மையில் தற்போது நிலைமை மாறிவிட்டது. நாங்கள் பார்த்துள்ளோம்—எங்கள் இளமைக்காலம் வரை—திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் கலந்திருக்க முடியாது. இதன் மூலம் காமம் என்னும் கவர்ச்சி ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பெண்ணின் பெற்றோரும் பையனின் பெற்றோரும் துணையைத் தேர்வு செய்வார்கள். சுயமாகத் தேர்வு செய்தல் என்பது கிடையாது. பெற்றோர்களின் தேர்வு ஜாதகத்தின் அடிப்படையில் விஞ்ஞானப் பூர்வமாகக் கணித்து செய்யப்படும். “இப்பெண்ணிற்கும் பையனுக்கும் பொருத்தம் எப்படி உள்ளது? அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா?” என பல விஷயங்கள் ஆலோசிக்கப்படுவது வழக்கம். அவையனைத்தும் சரிபார்க்கப் பட்ட பிறகே திருமணம் நடைபெறும். இதுவே பண்டைய இந்திய வேதக் கோட்பாடாகும்.

சுதந்திரமான காதல் என்பது நமக்குத் தெரிந்தவரை அரச குடும்பங்களிலும் உயர் குடும்பங்களிலும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது; ஏனெனில், அப்பெண்கள் அறிவில் முதிர்ந்தவர்களாக இருந்தனர். கணவனைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்டது, ஆனால் அதுவும் நேரிடையாக அல்ல. “நான் அந்த பையனைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்,” என்று அப்பெண்கள் தங்களது விருப்பங்களை பெற்றோரிடம் வெளிப்படுத்தலாம்—இதை நாம் வேத இலக்கியங்களில் சரித்திரப்பூர்வமான பல ஆதாரங்களின் மூலம் காணலாம். இவை அரச குடும்பத்தினர் மத்தியில் நடப்பவை, மற்றவர்கள் மத்தியில் இவை நடைபெறுவதில்லை. மேலும் பெண்ணின் தகப்பனார் ஒரு போட்டியை வைப்பார்; அப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தகப்பனார் தனது பெண்ணை வழங்குவார்.

யுக்த வைராக்யம்

வைஷ்ணவ கலாச்சாரத்தில் திருமணம் அனுமதிக்கப்படுகிறது. ஆண் இருக்கிறான், பெண் இருக்கிறாள்; அவர்கள் இருவரும் ஏன் சேர்ந்து இருக்கக் கூடாது? ஆனால் அது சட்டவிரோதமாக இருக்கக் கூடாது. நான் முதலில் நியூயார்க் நகருக்கு வந்தபோது, பல இளைஞர்களும் பெண்களும் என்னுடைய சிஷ்யர்களாக மாற விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெண் தோழியையும் ஆண் தோழரையும் கொண்டிருந்தனர். எனவே, நான் அவர்களிடம், “ஆன்மீக வாழ்வில் நீங்கள் முன்னேற வேண்டுமானால், நான்குவிதமான பாவச் செயல்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். தகாத உடலுறவு, அசைவ உணவு, போதை வஸ்துக்கள், சூதாட்டம்—இந்நான்கு பாவச் செயல்களி லிருந்து விலகவில்லையெனில் ஒருவர் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது,” என்று கூறினேன். கடவுள் புனிதமானவர், பவித்ரம் பரமம் பவான், எந்த ஒரு தூய்மையற்ற ஆத்மாவும் அவரை அணுக முடியாது. நமது உடல், அசுத்தத்தின் அடையாளமாகும்; ஏனெனில், ஆத்மாவிற்கு ஜடவுடல் கிடையாது. எனவே, இந்த ஜடவுலகில் ஜடவுடலை உடையவர்களாக யாரெல்லாம் இருக்கின்றார்களோ, அவர்கள் அனைவருமே பாவப்பட்டவர்கள் என்று கருதப்படுகின்றனர். இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவது? எல்லா வற்றையும் ஆன்மீக வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்துவதன் மூலம் நாம் விடுபட முடியும். நிர்பந்த: க்ருஷ்ண-ஸம்பந்தே யுக்தம் வைராக்யம் உச்யதே (பக்தி ரஸாம்ருத ஸிந்து 1.2.255).

பாலை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகமான பாலை அருந்தினால் வயிற்றுக் கோளாறு உண்டாகும். ஆனால் அதற்காக ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் அவர் சில மருந்துகளுடன் தயிரை சேர்த்துக் கொடுப்பார். பால் குடித்ததினால் உண்டான நோய், ஒரு மருத்துவரின் கண்காணிப்பில் பால் சம்பந்தப்பட்ட பொருளுடன் கலந்த மருந்தினால் குணப்படுத்தப்படுகிறது. “நான் பால் குடித்ததால் நோய்வாய்ப்பட்டேன், நீங்கள் பாலால் தயாரிக்கப்பட்ட வேறொரு பொருளை மருந்தாக அளிக்கிறீர்களே,” என்று நோயாளி மருந்துவரிடம் கேட்க முடியாது. மருத்துவர் சிபாரிசு செய்கிறார், நோயும் குணமடைகிறது. அதுபோலவே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடை யிலுள்ள காமத்திற்குச் சரியான முறையில் சிகிச்சை அளித்தோமெனில், அதுவே கடவுளின் மீதான அன்பாக மாறும்.
நான் ஒரு சந்நியாசி, குடும்ப வாழ்க்கையைத் துறந்தவன். எனக்குக் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் உள்ளனர், மனைவியும் உயிருடன் உள்ளாள். ஆனால் நான் அவர் களிடமிருந்து பிரிந்துவிட்டேன். இதுவே சந்நியாஸம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு நான் ஏன் எனது சீடர்களின் குடும்ப வாழ்வில் அக்கறை காட்டுகிறேன்? ஏனெனில் அவர்கள் தங்களது ஆன்மீக வாழ்க்கையில் சரியான முறையில் முன்னேற்றமடைவதை நான் காண விரும்புகிறேன். ஆகவே, திருமணச் சடங்குகளில் பங்கேற்பது ஒரு சந்நியாசியின் வேலையல்ல என்ற போதிலும், பாவச் செயல்களிலிருந்து என்னுடைய மாணவர்களைக் காப்பதற் காக நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகிறேன். அவர்கள் நன்னடத்தை யுள்ள பையன்களாகவும் பெண்களாகவும் திருமணத்தின் மூலம் மாறுவார்கள் என்பது தெளிவு. அவ்வாறு திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் அத்தகைய பெண்களையும் பையன் களையும் பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இக்கூட்டத்தில் அவ்வாறு பலரும் வந்துள்ளனர். அவர்களின் முகத்தையும் செயல்களையும் பார்த்தாலே, அவர்கள் ஆனந்தமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

திருமண வாழ்வின் நோக்கம்

இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திலுள்ள பையனோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அதற்கு நான் உதவி செய்கிறேன். ஆனால் இத்திருமணமானது புலனின்பத்திற்காக அல்ல என்பதை பெண்ணும் பையனும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இத்திருமணம், வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொள்வதற்காகவே. எனவே, விவாகரத்து என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகு மனோபாவம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. கிருஷ்ண பக்தியை அடைவதே நமது அடிப்படைக் கொள்கை, மற்றவை அனைத்தும் இரண்டாம் தரமானவை. உங்களால் கிருஷ்ண உணர்வுடன் கூடிய நல்ல குழந்தைகளை பெற்றெடுக்க முடிந்தால், மனித சமுதாயத்திற்கு அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும். ஏனெனில், தற்போதைய மனித சமுதாயம் நாய்களையும் பூனைகளையும் போன்று குழந்தைகளை பெற்றெடுத்து பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இத்தகு விலங்குகளின் சமுதாயத்தில் எவ்வாறு நீங்கள் அமைதியையும் அபிவிருத்தியையும் நல்லதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்க முடியும்? எனவே, கிருஷ்ண உணர்வுடன் கூடிய குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்சி கொடுப்பது அவசியமாகிறது. நம்முடைய மாணவர்களில் சிலர், சான்பிரான்ஸிஸ்கோ நகரத்திலுள்ள எமது குருகுலத்தில் பயிற்சி அளிக்கப்படு கின்றனர் என்பதை அறிய நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். அவர்கள் ஆச்சரியமான முறையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்குள்ள பையன்கள் மீதும் பெண்கள் மீதும் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் சரியான முறையில் பயிற்றுவிக்கப்படவில்லை. இங்கு மட்டுமல்ல; உலகின் எந்தப் பகுதியிலும் கல்விமுறை திருப்திகரமான தாக இல்லை. ஆரம்பக் காலத்தி லிருந்தே அவர்கள் தாராளமாகப் பழகு வதற்கும், கட்டுப்பாடற்ற உறவை அனுபவிப்பதற்கும் அனுமதிக்கப்படு கிறார்கள். இஃது அவர்களுடைய உடல் நலத்திற்கோ படிப்பிற்கோ நல்லதல்ல. தற்போதைய கல்விமுறையின் விளைவு களை ஹிப்பிகளின் வடிவில் நாம் காண் கின்றோம். எனவே, சமுதாயத்தின் பாதுகாவலர்களாக உள்ளவர்கள், இவற்றை ஆழ்ந்த யோசனையுடன் சிந்தித்து, வாழ்க்கையைக் கட்டுப்பாடுள்ள தாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

* 1968இல், வேத முறையிலான திருமணத்தைப் பற்றிய தகவலும் வழிமுறையும் அமெரிக்க மக்களிடம் கிடையாது என்பதும், அவ்வழிமுறையை ஸ்ரீல பிரபுபாதர் அறிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாம் இந்த ஜடவுடலை பெற்றிருப்ப தால், உண்ண வேண்டும், உறங்க வேண்டும், பாலுறவில் ஈடுபட வேண்டும்—இவையனைத்தும் உடலின் தேவைகள், அமைதியைக் குலைப்பவை. ஆனால் இவை கிருஷ்ண உணர்வின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டால், அமைதியைக் குலைக்கும் விஷயங்களாக அல்லாமல், கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதில் நம்மை முன்னேற்று பவையாக மாறும். நல்ல குழந்தைகளை பெறுதல், மனித குலத்திற்கான உயர்ந்த சேவையாக அமையும். பூனைகளையும் நாய்களையும் பெற்றெடுக்காதீர்கள். இதுவே என்னுடைய வேண்டுகோள். நல்ல குழந்தைகளைப் பெறாவிடில், குழந்தைகளைப் பெறாமல் இருப்பதே நல்லது. திருமணம் செய்யாமல் பிரம்மசாரியாக வாழுங்கள். பிதா ந ஸ ஸ்யாஜ் ஜனனீ ந ஸ ஸ்யாத், “மரணத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியாதவர்கள், தாயாகவோ தந்தையாகவோ ஆகக் கூடாது,” என்று ஸ்ரீமத் பாகவதம் (5.5.18) கூறுகின்றது.

இதன் பொருள் என்ன? நீங்கள் உங்கள் குழந்தைகளை கிருஷ்ண பக்திக்கு வருவதற்கு தயார்படுத்தினால், இப்பிறவியிலேயே உங்கள் குழந்தைகள் இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும். இதுவே குறிக்கோளாக இருக்க வேண்டும். நீங்கள் இப்பிறவியிலேயே இறைவனிடம் திரும்பிச் செல்ல முயற்சிப்பதுபோல, உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், அவர்களும் இப்பிறவியிலேயே இறைவனிடம் திரும்பிச் செல்ல முடியும். “இக்குழந்தை என்னுடைய கர்ப்பத்திலிருந்து பிறவி எடுத்துள்ளது. இதுவே இவனது இறுதிப் பிறவியாக இருக்க வேண்டும். எந்த ஒரு விலங்கு, அல்லது மனித உடலின் கர்ப்பத்திலும் இவன் மீண்டும் பிறவியெடுக்கக் கூடாது,” என்று தாயானவள் நினைக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு தாய் தந்தையின் பொறுப்பாகும்.
உண்ணுதல், உறங்குதல், இனவிருத்தி செய்தல், தற்காத்தல் ஆகிய வற்றிற்கு நாங்கள் தடை விதிப்பதில்லை. ஆனால் அவற்றை கிருஷ்ணரின் தொடர்பில் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதன் மூலம் இவ்வாழ்விலும் மறுவாழ்விலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!
மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives