ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
நிக்ஸன்: உங்கள் வாழ்வைப் பற்றி சிறிது கூற முடியுமா? கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆன்மீக குரு தாங்களே என்பதை எப்படி அறிந்தீர்கள் என்பதையும் சொல்ல முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: எனது வாழ்வு எளிமையானது. எனது ஆன்மீக குரு மேலை நாடுகளுக்குச் சென்று கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்யும்படி எனக்குக் கட்டளையிட்டபோது, நான் மனைவி குழந்தைகளுடன் குடும்பஸ்தனாக இருந்தேன். இப்போது எனக்கு பேரக் குழந்தைகளும் உள்ளனர். என் குருநாதரின் ஆணையின்படி நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரின் கட்டளையையும் கிருஷ்ணரின் கட்டளையையும் நிறைவேற்ற முயன்று வருகிறேன்.
நிக்ஸன்: மேலை நாடுகளுக்குச் செல்லும்படி அவர் உங்களிடம் கூறியபோது உங்களுக்கு எத்தனை வயது?
ஸ்ரீல பிரபுபாதர்: எங்களின் முதல் சந்திப்பிலேயே மேலை நாடுகளில் கிருஷ்ண உணர்வைப் பரப்பும்படி அவர் எனக்குக் கட்டளையிட்டார். அப்போது எனக்கு வயது இருபத்தைந்து, திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. என்னால் இயன்றவரை அவரின் கட்டளையைச் செயல்படுத்த முனைந்தேன். குடும்ப வாழ்விலிருந்தபடியே, 1944இல் Back to Godhead (பகவத் தரிசனத்தின் மூல ஆங்கில பத்திரிகை) என்ற பத்திரிகையை நடத்தி வந்தேன். குடும்ப வாழ்விலிருந்து விலகிய பிறகு, 1959இல் புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன். 1965இல் அமெரிக்காவிற்கு வந்தேன்.
நிக்ஸன்: நீங்கள் கடவுள் அல்ல என்று என்னிடம் கூறினீர்கள்; இருப்பினும், வெளிநபரான எனக்கு உங்களின் சீடர்கள் உங்களைக் கடவுளாகவே கருதுவதாகத் தோன்றுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அஃது அவர்களின் கடமை. ஏனெனில், ஆன்மீக குரு கடவுளின் கட்டளையைச் செயல்படுத்துபவர் என்பதால், கடவுளுக்குத் தரப்படும் மரியாதை அவருக்கும் அளிக்கப்பட வேண்டும். இஃது அரசாங்கத்தின் கட்டளை களை அமல் செய்யும் அரசாங்க அதிகாரிக்கு அரசாங்கத்திற்குரிய மரியாதை வழங்கப் படுவதைப் போன்றதாகும். ஒரு சாதாரண காவலர் வந்தாலும், அவர் அரசாங்க நபர் என்பதால், அவரை நீங்கள் மதிக்க வேண்டும். ஆயினும், அவரே அரசாங்கம் என்றாகி விடாது. ஸாக்ஷாத்-தரித்வேன ஸமஸ்த-ஷாஸ்த்ரைர் / உக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி:, பகவானின் அந்தரங்க சேவகர் என்பதால், ஆன்மீக குருவினை முழுமுதற் கடவுளைப் போல மதிக்க வேண்டும். இஃது எல்லா சாஸ்திரங்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, எல்லா அதிகாரிகளாலும் பின்பற்றப்படுகிறது.
நிக்ஸன்: மிக நேர்த்தியான இகவுலகப் பொருட்களை உங்களின் சீடர்கள் உங்களுக்காக கொண்டு வருவதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக, விமான நிலையத்திலிருந்து வரும்போது நீங்கள் ஓர் அழகான வசீகரமான காரில் வந்தீர்கள். அஃது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால்…
ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக குருவை கடவுளுக்கு சமமாக மதிக்க வேண்டுமென்பதை அஃது அவர்களுக்குக் கற்பிக்கிறது. அரசாங்கத்தின் பிரதிநிதியை அரசாங்கத்திற்கு சமமாக நீங்கள் மதிப்பீர்களானால், அவரை சகல வசதிகளுடன் சிறப்பாக நடத்த வேண்டும். ஆன்மீக குருவினை கடவுளுக்கு சமமாக நீங்கள் கருதினால், கடவுளுக்கு நீங்கள் என்ன வசதிகளை வழங்குவீர்களோ, அதே வசதிகளை அவருக்கும் வழங்க வேண்டும். கடவுள் தங்க ரதத்தில் பவனி வருகிறார். சீடர்கள் ஆன்மீக குருவிற்கு ஒரு சாதாரண மோட்டார் காரை ஏற்பாடு செய்தால், அது போதாது. ஏனெனில், ஆன்மீக குரு கடவுளுக்கு சமமாக நடத்தப்பட வேண்டியவர். கடவுள் உங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தால், அவரை நீங்கள் சாதாரண மோட்டார் காரில் அழைத்து வருவீர்களா, தங்க ரதத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்வீர்களா?
நிக்ஸன்: ஒரு வெளி மனிதனுக்கு, கிருஷ்ண உணர்வை ஏற்பதில் இருக்கும் சிரமமான அம்சங்களில் ஒன்று, கோவிலிலுள்ள விக்ரஹம். விக்ரஹம் எவ்வாறு கிருஷ்ணரைப் பிரதிபலிக்கின்றது? அதுபற்றி சற்று கூற இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், தற்போதைய சூழ்நிலையில், கிருஷ்ணரைக் காண்பதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் பெறாத காரணத்தினால், அவர் கருணை கூர்ந்து நீங்கள் காண்பதற்கு உகந்த வடிவில் தோன்றுகிறார். உங்களால் மரத்தையும் கல்லையும் காண முடியும், ஆனால் ஆன்மீக விஷயங்களை உங்களால் காண முடிவதில்லை. உங்கள் தந்தை மருத்துவமனையில் இருக்கும்போது இறந்துவிடுவதாக எடுத்துக்கொள்வோம். அவரது படுக்கையின் அருகில் அமர்ந்து, என் தந்தை போய்விட்டாரே என்று நீங்கள் அழுகிறீர்கள். அவர் போய் விட்டார் என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? போய்விட்ட பொருள் என்ன?
நிக்ஸன்: அவரின் ஆத்மா போய்விட்டது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆத்மாவை நீங்கள் பார்த்தது உண்டா?
நிக்ஸன்: இல்லை
ஸ்ரீல பிரபுபாதர்: ஆக, ஆத்மாவை உங்களால் காண முடியாது, கடவுளோ பரமாத்மா. உண்மையில், ஆன்மீகம், பௌதிகம் என எல்லாம் அவரே; ஆனால் உங்களால் அவரது ஆன்மீக உருவைக் காண முடியாது. எனவே, உங்கள்மீது அருள்கொண்டு, அவர் தனது எல்லையற்ற கருணையால், கல் அல்லது மரத்தாலான வடிவத்தில் உங்கள்முன் தோன்றுகிறார். இப்போது நீங்கள் அவரைக் காண முடியும்.
நிக்ஸன்: மிக்க நன்றி.
ஸ்ரீல பிரபுபாதர்: ஹரே கிருஷ்ண!