மலிவான பொருளை வாங்கி விட்டு, அது வீணாகி, மீண்டும்மீண்டும் அதையே வாங்குதல் சரியல்ல; அதுபோல, மலிவான பௌதிக உடலை மீண்டும்மீண்டும் பெறுதல் சரியல்ல என்றும், தரமான ஆன்மீக உடலைப் பெற வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் அறிவுறுத்துகிறார்.
விருந்தினர்: ஆத்மா எப்போதும் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறுகிறது என்றால், அஃது எவ்வாறு முக்தி பெறுகின்றது?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆத்மா இந்த ஜடவுலகில் ஜடவுடலை ஏற்கின்றது. அவன் கிருஷ்ணரது அங்கீகரிக்கப்பட்ட சேவகனாக மாறும்போது, அவனுக்கு ஆன்மீகமான உடல் அளிக்கப்படும். உதாரணமாக, ஒருவன் போர் வீரனாக மாறாத வரை அவனுக்கு போர் வீரர்களுக்குரிய சீருடை வழங்கப்படாது. ஆயினும், போர் வீரனாக சேவை செய்ய அவன் ஒப்புக்கொள்ளும்போது, உடனடியாக அவனுக்கு சீருடை வழங்கப்படுகிறது. அதுபோலவே, இப்பௌதிக உலகில் நீங்கள் வெவ்வேறு உடல்களை ஏற்கின்றீர். இது பூத்வா பூத்வா ப்ரலீயதே எனப்படுகிறது. அதாவது, மீண்டும்மீண்டும் ஓர் உடலை விடுத்து மற்றோர் உடலை ஏற்கின்றீர். நீங்கள் பூரண கிருஷ்ண உணர்வுடையவனாக மாறிவிட்டால், இந்த உடலை நீத்த பின்பு, நீங்கள் இந்த பௌதிக உலகிற்குத் திரும்பி வர மாட்டீர்கள், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி, நீங்கள் உடனடியாக ஆன்மீக உலகிற்கு மாற்றப்படுவீர். அங்கு நீங்கள் ஆன்மீக உடலை ஏற்பீர்.
இஃது உங்களுக்குப் புரிகின்றதா? தற்போது நீங்கள் பிறவிதோறும் பௌதிக உடலையே ஏற்று வருகின்றீர். இதுவே உடல் மாற்றம் எனப்படுகிறது. நீங்கள் சில வேளையில் மனித உடலை ஏற்கின்றீர், வேறு சில வேளையில் நாயின் உடலையோ, அரசனின் உடலையோ ஏற்கின்றீர். இன்னும் சில வேளையில் வேறு ஏதாவது ஓர் உடலை ஏற்கின்றீர். ஆனால் கிருஷ்ண உணர்விற்கு வந்த பிறகு, நீங்கள் மீண்டும் ஒரு பௌதிக உடலை ஏற்க வேண்டியதில்லை. நீங்கள் நேரடியாக கிருஷ்ணரிடம் செல்கிறீர்கள்; அங்கு ஆன்மீக உடலை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதன்பிறகு உங்கள் வாழ்க்கை நித்தியமானதாகின்றது.
விருந்தினர்: நீங்கள் மீண்டும் ஒரு பௌதிக உடலை ஏற்க மாட்டீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி, கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்ட பிறகு, அதற்கு மேலும் நீங்கள் ஒரு பௌதிக உடலை ஏற்க வேண்டியதில்லை. கிருஷ்ணர், மாம் ஏதி என்று கூறுகின்றார். அதாவது அந்த ஆத்மா என்னிடம் (கிருஷ்ணரிடம்) வருகின்றது. மாம் ஏதி என்றால், கிருஷ்ணரை அடைபவருக்கு கிருஷ்ணரைப் போன்றதோர் உடல் கிடைக்கும் என்று பொருள்.
விருந்தினர்: அப்படியெனில், “நானும் நீயும் இல்லாமல் இருந்த காலம் ஏதும் கிடையாது,” என்று கிருஷ்ணர் கீதையில் கூறுவதன் பொருள் என்ன?
பிரபுபாதர்: கிருஷ்ணரும் அர்ஜுனனும் எப்போதும் இருக்கின்றனர்; நீங்களும் இருக்கின்றீர்கள். அதாவது, நீங்கள் நித்தியமானவர், தற்போது வெறும் உடலை மட்டும் மாற்றிக் கொண்டுள்ளீர். இவ்வுண்மையைப் புரிந்துகொள்வது கடினமா? அதே சமயத்தில், கிருஷ்ணர் தமது உடலை ஒருபோதும் மாற்றிக்கொள்வதில்லை. இதுவே கடவுளுக்கும் நமக்குமுள்ள வேறுபாடு.
விருந்தினர்: அந்த ஆத்மா கிருஷ்ணரின் ஒளியில் ஒன்றாகக் கலந்துவிடுவதில்லையா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஒன்றாகக் கலப்பது என்றால் என்ன? ஆத்மா உடலை மாற்றிக் கொண்டே வருகின்றது. நீங்கள் ஒன்றாகக் கலப்பதைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? நீங்கள் உங்களது உடலை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருகிறீர்கள்; நான் என்னுடைய உடலை மாற்றிக் கொண்டு வருகின்றேன்; ஆயினும், நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். நான் ஒரு நாயின் உடலுக்கு என்னை மாற்றிக்கொள்ளலாம்; நீங்கள் ஒரு தேவரின் உடலைப் பெறலாம்; இந்தத் தொடர்ச்சி நிகழ்ந்து கொண்டே வருகின்றது. கர்ம வினைக்குத் தக்கவாறு ஒருவன் தன் உடலை மாற்றிக்கொள்கிறான். இப்போது நீங்கள் முழு கிருஷ்ண உணர்வை அடையும்போதுகூட, ஓர் உடல் மாற்றம் நிகழ்கின்றது. ஆனால் அந்த புதிய உடல் ஆன்மீகமானதாக இருக்கும். நீங்கள் பௌதிக உடலை ஏற்கும் வரையில், ஒன்று மாற்றி ஒன்று, ஒன்று மாற்றி ஒன்று என பௌதிக உடல்களை மாற்றிக் கொண்டே செல்வீர். உதாரணமாக, நீங்கள் ஏதாவது ஒரு மலிவான பொருளை வாங்கி விட்டால், அது தவறாகி விடுகின்றது; சில நாள்கள் கழித்து அதற்கு பதிலாக வேறு ஒன்றை புதியதாக வாங்கியாக வேண்டும். அதையும் மலிவானதாக வாங்கினால், அடுத்தடுத்து வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஆயினும், நீங்கள் மிகவும் அருமையான, சரியான, உண்மையான பொருளை வாங்கி விட்டால், அது நீண்ட நாள் நன்மையளிக்கும். அதுபோல, நீங்கள் மலிவான பௌதிக உடலை எத்தனை முறை பெற்றாலும், அத்தனை முறை உடலை மாற்றிக் கொண்டே இருந்தாக வேண்டும். அதே சமயத்தில், மிகவும் மதிப்பு வாய்ந்த உடலை நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர், எந்தவித உடல் மாற்றமும் உங்களுக்கு அவசியமில்லை.
கிருஷ்ணர் என்றால் என்ன என்பதை அறியாதவர்கள் கிருஷ்ணரைவிட உயர்ந்தவர் யாரேனும் இருக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் கிருஷ்ணரைவிட உயர்ந்தவர் யாருமில்லை. கிருஷ்ணரை உள்ளது உள்ளபடியே அறிந்தவர், அவ்வாறு அறிந்திருப்பதன் மூலமாக, அந்த நித்தியமான, நிரந்தரமான உடலை உடனடியாகப் பெறுகின்றார்.
“என்னுடைய தோற்றம், செயல்கள் ஆகியவற்றின் உன்னத இயற்கையை தெரிந்து கொண்டவன் இவ்வுடலை நீத்த பிறகு, இந்த பௌதிக உலகில் மீண்டும் பிறவியெடுப்பதில்லை; அர்ஜுனா! அவன் என்னுடைய நித்திய வாசஸ்தலத்தை அடைகின்றான்.” (பகவத் கீதை 4.9)
எனவே, நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது, எல்லா பிரச்சனைகளும் முழுமையாகத் தீர்க்கப்பட்டு விடும். கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயலுங்கள்; பக்தித் தொண்டின் மூலமே கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியும், பக்த்யா மாம் அபி ஜானாதி என்று கிருஷ்ணர் கூறுகிறார். அந்த பக்தித் தொண்டு கிருஷ்ணரிடம் சரணடைவதிலிருந்து தொடங்குகிறது. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய, உங்களுக்குத் தெரிந்த எல்லாவித அபத்தங்களையும் தூக்கி எறியுங்கள். இதுவே பகவத் கீதையின் சாரம். ஹரே கிருஷ்ண!