வல்லான் வகுத்ததே வழியாகுமா?
வல்லமை பொருந்தியவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் சரி என்று எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர் ஒருவருடன் உரையாடுகின்றார்.
சீடர்: நேற்று இரவு தங்களது உரையில், மக்கள் அரசாங்கத்தின் சட்டங்களைப் பின்பற்றாவிடில் எவ்வாறு தண்டிக்கப்படுகிறார்களோ, அவ்வாறே கடவுளின் விதிகளைப் பின்பற்ற மக்கள் தவறினால் அவர்கள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என மேற்கோளிட்டு பேசினீர்கள். எனவே, இளைஞர்கள் உங்களை பொதுவுடைமையை எதிர்ப்பவர் (fascist) என்று நினைக்கின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் இன்று உலகெங்கிலும் இதுதான் நடக்கிறது. அவர்களால் இதனை எவ்வாறு மறுக்க முடியும்? இன்றைய அரசாங்கம் ஒவ்வொன்றும் “வல்லான் வகுத்ததே வழி” என்ற எண்ணத்தில் செயல்படுகின்றது. எப்படியாவது நீங்கள் அதிகாரத்தைப் பெற்றுவிட்டால், நீங்கள் செய்வது சரி. எந்த கட்சியினர் அதிகாரத்தைப் பெறுகிறார்கள் என்பதே கேள்வி.
சீடர்: ஆனால் அவர்கள் மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அஃது எவ்வாறு சாத்தியமாகும்? பல தரப்பட்ட மக்கள் உள்ளனர், அவர்களின் கருத்துகளும் பல தரப்பட்டதாக உள்ளது. உங்களுக்கென்று சில மனிதர்கள் உள்ளதுபோல், அவர்களுக்கென்று சிலர் உள்ளனர். நீங்கள் அதிகாரத்தை உங்களுடைய மக்களுக்கு கொடுக்க விரும்பும்போது, மற்றவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். இதுவே மனிதர்களின் இயற்கை. இதனை உங்களால் மாற்ற முடியாது. மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஒருசாரார் நினைத்தாலும், வேறு பலர் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை. இதுவே ஜடவுலகின் இயற்கை; ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பொறாமை கொள்கின்றனர். ஆனால் இந்த அயோக்கியர்களிடம் இதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் இல்லை. இந்தியாவில் காந்தி இருந்தார்–நற்பண்புகள் பொருந்தியவர், சிறந்த அரசியல்வாதி–இருந்தும் கொல்லப்பட்டார். இதனை உங்களால் நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் அடுத்தவர் மீது பொறாமையுடன் இருப்பதே இந்த ஜடவுலகின் இயற்கையாகும். பௌதிகவாதிகளின் மத்தியில் இந்த கட்சியினர் பக்குவமானவர்கள் என்று எந்தவொரு குழுவையும் அடையாளம் காண முடியாது. அப்படியிருக்க, மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்படி இவர்கள் ஏன் சொல்கிறார்கள்? இவர்கள் அனைவரும் வெறும் அயோக்கியர்களே.
அதனால், ஸ்ரீமத் பாகவதம், பரமோ நிர்மத்-ஸராணாம் ஸதாம், அதாவது, கிருஷ்ண உணர்வானது பக்குவமான வர்களுக்கும் பொறாமையற்றவர்களுக்கும் என்று சொல்கிறது. கிருஷ்ண உணர்வு இல்லாதவர்கள் நிச்சயம் பொறாமைக்காரர்களாக இருப்பர். எங்கு பார்த்தாலும் போட்டி காணப்படுகிறது. கிருஷ்ணருக்கு எதிரிகள் இருந்தனர், கிறிஸ்துவிற்கு எதிரிகள் இருந்தனர். இல்லையேல், அவர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? இதுவே ஜடவுலகம். ஒருவர் பக்குவமானவராக இருந்தாலும், அவருக்கும் எதிரிகள் இருப்பர். இதனை எவ்வாறு நிறுத்த முடியும்? இவர்கள் மக்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கும்படி கூறுகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட குழுவினர் (கட்சியினர்) நாட்டை ஆளும்பொழுது, அடுத்த பிரிவினர் அவர்களுக்கு எதிராக நிற்கின்றனர். அவர்கள், “எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்” என்கின்றனர். உங்களுடைய பக்குவநிலை எங்கே? இது பக்குவநிலை அல்ல. எனவே, இந்த ஜடவுலகுடன் இருக்கும் எல்லா தொடர்புகளையும் நாம் கைவிட வேண்டும்–அதுவே பக்குவநிலை.
சீடர்: ஆனால் உலகத் தொடர்புகள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டால், அராஜகத்தைத் தடுத்து நல்ல அரசினை எவ்வாறு அமைக்க முடியும்?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், இது சரியான கேள்வி: நீங்கள் பக்குவமான அதிகாரியைப் பின்பற்ற வேண்டும்.
சீடர்: இதுவே அவர்களது எதிர்ப்பாக உள்ளது: நீங்கள் உயர்ந்த அதிகாரியைப் பின்பற்ற வேண்டும் என பரிந்துரைக்கிறீர்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்கு பக்குவமான சமுதாயம் வேண்டுமெனில், பக்குவமான அதிகாரியை நீங்கள் பின்பற்ற வேண்டும். பௌதிக அரசியலின் மூலமாக உங்களால் பக்குவத்தை அடைய முடியாது. நீங்கள் உண்மையான, அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளைப் பின்பற்ற வேண்டும்; அவர்கள் பக்குவமான முக்தி பெற்ற ஆத்மாக்களாக இருக்க வேண்டும். இதுவே வேத நாகரிகத்தின் வழிமுறையாகும். பகவான் கிருஷ்ணரும் வேத இலக்கியங்களுமே அந்த பக்குவமான அதிகாரிகளாவர். மேலும், மனித குலத்திற்கு சட்டங்களை நல்கிய மனுவினாலும் மனு-ஸம்ஹிதையினாலும் மக்கள் வழிகாட்டப்பட வேண்டும். மஹாஜனோ யேன கத: ஸ பந்த:, பக்குவமான தன்மையை அடைய நாம் மஹாஜனங்களை, அதாவது பக்குவ மான, தன்னுணர்வு பெற்ற அதிகாரிகளைப் பின்பற்ற வேண்டும்.
சீடர்: ஆனால் ஆன்மீக அதிகாரிகளும் பக்குவமற்றவர்களே என்று இந்த இளைஞர்கள் கூறுகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் சொல்லலாம். ஆனால் நாம் ஏன் அவர்களது அபிப்பிராயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்? அது நெறியற்ற அயோக்கியர்களின் கருத்து. அதிகாரத்தைப் பற்றிய அவர்களது ஒரே கருத்து, “வல்லான் வகுத்ததே வழி” என்பதாகும். உதாரணமாக, அதிகாரத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும்” என்று அந்த கூட்டம் நேற்று வாதிட்டது. அதாவது அவர்களிடம் சற்று வல்லமை இருப்பதால், அவர்களுடைய கருத்தை நீங்கள் ஏற்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இதுவே உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது—“வல்லானின் செயல்கள் சரியானதே.” இங்குள்ள எல்லா அயோக்கியர்களும் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள், அவர்களில் யாரொருவர் சற்று அதிக வல்லமை பொருந்தியவராக உள்ளாரோ அவர் பிரபலமடைகிறார், இதுவே உலகம்.
சீடர்: அதிகாரி என்பவர் தன்னை முன்னிறுத்தி மேலே உயர்ந்த ஒரு தலைவர் என்று அவர்கள் கருதுவதால், எல்லா அதிகாரிகளையும் நிராகரித்து விட்டார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஏனெனில், அவர்களின் பெயரளவு அதிகாரிகள் அனைவரும் பக்குவமற்றவர்களாக இருந்துள்ளனர். ஆனால் பக்குவமான அதிகாரி ஒருவர் உள்ளார்: கிருஷ்ணர், பரம புருஷ பகவான். மேலும், கிருஷ்ணரின் அறிவுரைகளைக் கடைப்பிடித்து அதனை அப்படியே போதிக்கும் எந்தவொரு அதிகாரியும் பக்குவமானவராகவே இருப்பார். அவரே அதிகாரி.
கிருஷ்ண பக்தர்களாகிய நாம் கிருஷ்ணரின் அதிகாரத் தன்மையை அப்படியே கடைப்பிடிக்கிறோம். கிருஷ்ண உணர்வை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்போது, நாம் கிருஷ்ணரின் வார்த்தைகளை அப்படியே கூறி மக்கள் அதனை முழுமையாக ஏற்பதற்கு முயற்சி செய்கிறோம். “இங்குதான் உண்மையான அதிகாரி இருக்கிறார், நீங்கள் அவரைப் பின் பற்றினால் மகிழ்வுடன் இருப்பீர்கள்.” “என்னிடம் சரணடை,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். “கிருஷ்ணரிடம் சரணடை,” என்று நாம் கூறுகிறோம். கிருஷ்ணர் பக்குவமானவர் என்பதையும் கிருஷ்ணரிடம் சரணடைவதே பக்குவமானது என்பதையும் நாம் அறிவோம். மேலும், நாம் எப்போது பேசினாலும், கிருஷ்ணரையும் கிருஷ்ணரின் பிரதிநிதிகளையும் மேற்கோள் காட்டியே பேசுகிறோம்.
சீடர்: ஆனால், ஒருவர் சரணடைய வேண்டும் என்றால், அவரை சரணடையும்படி சொல்பவரிடம் முழு நம்பிக்கை ஏற்பட வேண்டுமே?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். எனவேதான், கிருஷ்ணர் பகவத் கீதையில், தானே பரம்பொருள் என்பதை முதலில் நிரூபிக்கின்றார்; அதன் பிறகே தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார். கிருஷ்ணரே பரம்பொருள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உங்களிடம் சற்று புத்தி இருக்க வேண்டும், அதன் பின்னரே உங்களால் சரணடைய முடியும். பகவத் கீதையின் ஆரம்பத்தில், “நீ சரணடைய வேண்டும்” என கிருஷ்ணர் கூறவில்லை. முதலில் அவர், உடல், ஆத்மா, யோகத்தின் பல்வேறு பிரிவுகள், பலதரப்பட்ட ஞானம் என எல்லாவற்றையும் போதிக்கிறார். அதன் பின்னர், அவர் மிக மிக இரகசியமான ஞானத்தைக் கொடுக்கின்றார்: “மற்ற எல்லாவற்றையும் துறந்து, என்னிடம் மட்டும் முழுமையாக சரணடை.”
இந்த ஜடவுலகிலுள்ள ஒவ்வொருவரும் பக்குவமற்றவரே. பக்குவமான நபரிடம் தன்னை ஒப்படைக்காத வரை, எல்லோரும் பக்குவமற்றவரே. ஆனால், கிருஷ்ணர், அல்லது அவரது பிரதிநிதியிடம் முழுமையாக சரணடைபவன் பக்குவமானவனாக ஆகிவிடுவான். மாறாக, பக்குவமான அதிகாரியிடம் நீங்கள் சரணடையாவிடில், பக்குவமற்ற அயோக்கியனாகவே நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் நெப்போலியனாக இருக்கலாம், சிறு எறும்பாக இருக்கலாம்–ஆனால் நாங்கள் காண விரும்புவது, நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்துள்ளீர்களா இல்லையா என்பதை மட்டுமே. அவ்வாறு சரணடையாவிடில், நீங்கள் அயோக்கியர். அவ்வளவுதான்.