இராமானுஜரின் வழியில் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடும் இஸ்கான்
–கலைஞர் கருணாநிதியிடம் தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி
கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜரைப் பற்றிய நாடகம் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். அக்டோபர் 5, 2016 அன்று இஸ்கான் இயக்கத்தின் மூத்த சந்நியாசிகளில் ஒருவரான தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள், தமிழக முன்னாள் முதல்வர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்களைச் சந்தித்து இராமானுஜரையும் வைஷ்ணவ சித்தாந்தத்தையும் பரப்பும் இந்த நாடகத்திற்காக நன்றி தெரிவித்தார். வைஷ்ணவ தர்மத்தின் உலகளாவிய சகோதரத்துவம், இராமானுஜரின் பெருமைகளை உலகெங்கிலும் எடுத்துரைப்பதில் ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் இஸ்கானின் முக்கிய பங்கு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.
தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் பலவற்றையும் கலைஞர் அவர்களுக்கு பரிசளித்தார். அவர்களுடைய உரையாடலின் மொழிபெயர்ப்பு இங்கே.
ஸ்வாமி: இராமானுஜரின் செல்வாக்கு ஆயிரம் வருடங்களைக் கடந்தும் தொடர்ந்து பரவி வருகிறது. நாங்களும் (இஸ்கான் அமைப்பினரும்) அந்த ஆன்மீக சமுதாய ஒற்றுமையினை தெளிவான புரிந்துணர்வுடன் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம். ஆன்மீக ரீதியில் பார்த்தால், நாம் அனைவரும் முழுமுதற் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தவர்கள், இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆயினும், நாம் அனைவரும் உயர்ந்த சக்தியின் கீழ் உள்ளோம் என்பது ஒற்றுமையை போதிக்கும் மாபெரும் தத்துவமாகும். மதம் என்பது பல வழிகளில் தவறாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். நாங்கள் அதனை இராமானுஜர் செய்ததைப் போலவே தூய வடிவில் வழங்க விரும்புகிறோம். இராமானுஜரின் மீது தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தமைக்கு நன்றி.
கலைஞர்: இராமானுஜர் ஒரு மிகப்பெரிய மகான், அவரை இன்றும் மக்கள் வழிபடுகிறார்கள். அதனால்தான், நான் இந்த நாடகத்தை வழங்குவதற்கு முனைந்தேன்.
ஸ்வாமி: ஆம், அவர் மிகப்பெரிய மகான். நான் தமிழகத்தின் பல்வேறு திவ்ய தேசங்களுக்குச் சென்றுள்ளேன். அங்கு சென்று இராமானுஜரின் முன்பு தலைவணங்குவதில் நான் மாபெரும் இன்பமடைகிறேன். இன்று ஹரே கிருஷ்ண இயக்கத்தின் மூலமாக இராமானுஜர் உலகெங்கிலும் அறியப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள எங்களது பக்தர்கள் இராமானுஜரின் மீதான மாபெரும் மரியாதையினால், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்கு யாத்திரையாக வருகின்றனர். இராமானுஜர் மற்றவர்களின் நன்மைக்காகவே வாழ்ந்தார். மக்கள் தங்களது வாழ்வை சிறந்த முறையில் பக்குவப்படுத்திக்கொள்வதற்கு அவர் ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கினார்.
இந்தியாவின் உண்மையான ஆன்மீகப் பண்பாட்டினால் உலகின் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்பதில் நான் பூரண நம்பிக்கைக் கொண்டுள்ளேன். இராமானுஜர் மற்றும் இதர ஆச்சாரியர்களின் போதனைகளை முறையாக செயல்படுத்தாத காரணத்தினால்தான், உலகில் இன்று எல்லா இடங்களிலும் சமுதாய வேற்றுமைகள், வஞ்சித்தல், ஏமாற்றுதல் போன்றவை நிகழ்கின்றன. சில மக்கள் அவர்களின் போதனைகளை தவறாக உபயோகிக்கின்றனர், சிலர் அவற்றைப் புறக்கணிக் கின்றனர். ஆனால் அவர்களின் போதனைகள் தூய்மையானவை, பக்குவமானவை. எங்களின் குரு ஸ்ரீல பிரபுபாதர் அதே செய்தியினை முழு உலகிற்கும் கொண்டு வந்தார். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மையான செய்தியினைப் பரப்புவதற்கு உதவி செய்வதால், உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
எங்களுக்கு ஏதேனும் தகவல் சொல்ல விரும்புகிறீர்களா?
கலைஞர்: தொண்டை பிரச்சனை இருப்பதால், சரியாக பேச முடியவில்லை.
ஸ்வாமி: (அருகில் நின்ற பக்தரை அறிமுகம் செய்து வைத்து) இவர் கிருஷ்ண தாஸ், இஸ்கான் தமிழ்நாட்டின் சிறந்த ஆன்மீக தலைவர்களில் ஒருவர். சராசரி மக்கள் எதனை மிகவும் தாழ்ந்த ஜாதி என்று கூறுவார்களோ, அந்த ஜாதியிலிருந்து வந்தவர் இவர். நாங்கள் ஜாதியின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. இதில் நாங்கள் உங்களுடன் ஒத்து வருகிறோம். ஜாதி அமைப்பு வெறும் பிறப்பினால் மட்டுமே என்பது மாபெரும் தவறான புரிந்துணர்வாகும். உண்மையான ஜாதி முறை தகுதிகளின் அடிப்படையிலானது, நாங்கள் இதனை வெளிப்படுத்தி வருகிறோம். எனவே, எல்லா ஜாதியைச் சார்ந்தவர்களும் எங்களது கோயில்களில் பூஜாரிகளாக பிரச்சாரகர்களாக உள்ளனர். ஜாதிப் பாகுபாடு ஏதும் கிடையாது. இராமானுஜரும் அதனை போதித்துள்ளார். நீங்கள் அதனை நன்கு அறிவீர். அவர் ஆன்மீகத் தளத்திலிருந்து சமுதாய சீர்திருத்தத்தில் ஈடுபட்டவர். தங்களது பௌதிகத் தேவைகள் பூர்த்தியடைவதால் மட்டும் மக்களால் திருப்தியடைய முடியாது, ஆன்மீக வாழ்வும் அவசியம்.
நீங்கள் புத்தகங்களை அதிகம் விரும்புபவர் என்பதால், உங்களுக்காக சில புத்தகங்கள். தங்களது நேரத்தை ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி.
இந்த சந்திப்பில், இஸ்கான் சேலத்தைச் சார்ந்த திரு. கிருஷ்ண தாஸ், இராமானுஜர் தொடரின் தயாரிப்பாளர் திருமதி. குட்டி பத்மினி, அத்தொடரின் இயக்குநர் திரு. தனுஷ் (தாமோதர கௌராங்க தாஸ்) உட்பட இதர சில பக்தர்களும் கலந்து கொண்டனர்.
பின் குறிப்பு: கலைஞர் கருணாநிதி அவர்களின் பல்வேறு செயல்களினால், இந்து மத பிரியர்கள் சிலர், இஸ்கான் பக்தர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களை ஏன் சந்திக்க வேண்டும் என்று நினைக்கலாம். இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், நற்செயலை யார் செய்தாலும், அதனைப் பாராட்டுவது நமது மரபு. மேலும், ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களின் மூலமாக யார் வேண்டுமானாலும் இதயத்தில் மாற்றத்தைப் பெற முடியும். எனவே, அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்த சந்திப்பு.