இராமாயணம் கேள்வி பதில்கள்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

இராமாயணம்—பாரத தேசத்தின் பொற்காவியம். பன்னெடுங்காலத்திற்கு முன்பு முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்தபோது, அவரது செயல்களை, மக்கள் எக்காலத்திற்கும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக மாமுனிவர் வால்மீகி, இராமாயணம் என்னும் இதிகாசத்தின் வடிவில் தொகுத்தார். இராம லீலைகள் இப்பூமியில் நடைபெற்று இலட்சக்கணக்கான வருடங்களாகியும், இன்று வரை இராமாயணம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரத தேசத்தின் பண்பாட்டில் இராமாயணத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரதத்தின் பல்வேறு மொழிகளில் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அல்லது வால்மீகி எழுதியதை அடிப்படையாகக் கொண்டும் மற்ற சாஸ் திரங்களை அடிப்படையாகக் கொண்டும் முழுமையாகவே இதர மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் கம்பர் இயற்றிய இராமாயணம் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும், கலி யுகத்தின் தாக்கத்தினாலும், இராமாயணத்தை விளக்குவதற்குத் தகுதிவாய்ந்த ஆச்சாரியர்கள் இல்லாத காரணத் தினாலும், மக்களின் மூடத்தனத் தினாலும், நாத்திகர்களின் அர்த்தமற்ற வாதங்களினாலும், அத்தகு சீர்மிகு இராமாயணத்தின் பொலிவு தற்சமயத்தில் மறைக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுகின்றது. இராமர் கோவிலுக்குச் செல்பவர்கள் கூட, இராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியா, அல்லது எழுதப்பட்ட கதையா என்று கேட்பது மிகவும் வருத்தம் தரும் உண்மை. இராமாயணத்தின் மீது மக்களுக்கு இருக்கும் சில குறிப்பிட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கான ஓர் எளிய முயற்சியே இக்கட்டுரை.

சந்தேகம் ஏன்?

ஆங்கிலேயர்களும் இதர ஐரோப்பியர்களும் பாரத தேசத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பு, பாரதத்தின் சீர்மிகு பண்பாட்டினைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அப்பண்பாட்டின் அடிப்படை வேத சாஸ் திரங்களே என்பதை உணர்ந்த காரணத்தினால், வேத சாஸ் திரங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்காதவரை அவர்களை அடிமைப்படுத்த முடியாது என்பதையும் அறிந்தனர். அந் நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் வேத சாஸ் திரங்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர்; வேத சாஸ் திரங்கள் மனிதனால் எழுதப்பட்டவை என்றும், அவற்றில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். தொடக்கத்தில், அவர்களது கூற்றுகள் முக்கியத்துவம் பெறவில்லை; ஆயினும் காலப்போக்கில் மக்கள் மனதில் அவர்களது தீய பிரச்சாரங்கள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் ஆங்கிலேயர்களின் கருத்துக்களிலிருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறவில்லை. உண்மையில் சொல்லப்போனால், சுதந்திரம் பெற்ற பின்னர், நம் நாடு பண்பாட்டில் மேலும் பின்நோக்கித்தான் சென்று கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாதது. இராமாயணம் என்பது இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்த ஓர் உண்மை வரலாறு, அதில் சந்தேகம் கொள்வது கூடாது.
இராமாயணம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பது என்பது இச்சிறிய கட்டுரையில் சாத்தியமல்ல என்பதால், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் இங்கு விடையளிக்கப்படுகின்றன. இங்கு விளக்கப்படும் கேள்விகள் அனைத்தும் இராமாயணத்தைப் பற்றி ஓரளவு அறிந்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள். இராமாயணத்திலிருந்து ஒருவர் கேள்வி கேட்டால், அவர் இராமாயணத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று பொருள். அவர் இராமாயணத்தை முற்றிலுமாக ஏற்காவிடில், அதிலிருந்து கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை. உதாரணமாக, நமது முதல் கேள்வி, “வாலியை மறைந்து நின்று கொன்றது தர்மமா?” என்பது. இக்கேள்வியைக் கேட்பவர் இராமாயணத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது நிச்சயம். இராமாயணத்தை அவர் நம்பவில்லையெனில், அவரது கேள்வியில் எந்த அர்த்தமும் இல்லை. இராமாயணத்தை நம்பாதவருக்கு இராமரும் கிடையாது, வாலியும் கிடையாது; அப்படியிருக்கையில் வாலியைக் கொன்றது மட்டும் எப்படி வந்தது? அத்தகு யதார்த்தமற்ற குதர்க்கமான வாதங்களை விட்டுவிட்டு தெளிந்த மனதுடன் எமது பதில்களை அறிந்துகொள்ளுங்கள்.

வாலியை மறைந்து நின்று கொன்றது தர்மமா?

அது தர்மமா அதர்மமா என்று நாம் விவாதிப்பதற்கு முன்பு, தன்னை மறைந்து நின்று கொன்றது தர்மமா என்று வாலியே கேட்ட கேள்விக்கு பகவான் ஸ்ரீ இராமரே பின் வருமாறு வாலியிடம் விடையளித்துள்ளார்: “இந்த முழு உலகமும் இக்ஷ்வாகு வம்ச மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. அம்மன்னர்களுக்குத் தங்களது பிரஜைகளிடமும் மிருகங்களிடமும் பூரண அதிகாரம் உண்டு. காமத்தினாலும் பேராசையினாலும் பாவகரமாகச் செயல்பட்டவன் நீயே. சுக்ரீவனின் மனைவியை அபகரித்த பாவத்திற்கு நீ என் கைகளால் மரணமடைய வேண்டியவன். மகள், மருமகள், சகோதரி, அல்லது தம்பியின் மனைவியுடன் உடலுறவு கொள்பவனுக்கு மரணமே உகந்த தண்டனை. ஒரு மன்னன் பாவியை தண்டிக்கத் தவறினால், அவனும் பாவியாகி விடுகிறான். இதன் காரணத்தினால்தான் உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு உறுதியளித்தேன். அதுமட்டுமின்றி, சத்திரியர்கள் மிருகங்களை வேட்டையாடும்போது மறைந்துநின்று வேட்டையாடுவது வழக்கம். நீ ஒரு குரங்கு என்பதால் என்னுடைய செயலில் எந்த வொரு குற்றமும் இல்லை.” இராமரின் இவ்விளக்கத்தை வாலி முற்றிலுமாக ஏற்று மன்னிப்பை வேண்டினான்.

இராமரால் கொல்லப்பட்ட வாலியே அச்செயல் தர்மம் என்று ஏற்றுக்கொண்ட பிறகு சந்தேகத்திற்கு இடமுண்டோ! அச்செயல் தர்மத்திற்கு விரோதமானதாக இருந்திருந்தால் வாலியின் மகன் அங்கதன் இராமருக்காகப் போரில் ஈடு பட்டிருப்பாரா? சிந்தியுங்கள்!
அதுமட்டுமின்றி, ஸ்ரீ இராமர் முழுமுதற் கடவுள் என்பதால், அவரால் கொல்லப்படுவதும் மிகச்சிறந்த நன்மையை நல்கக்கூடியதாகும்.

சீதையைத் தீக்குளிக்கச் சொன்னது சரியா?

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்னும் பண்பாட்டை அறிந்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்வர். ஒரு பெண் தனது கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு ஆணுடன் ஒருநாள் இருந்தால்கூட அது மாபெரும் குற்றமாகும். சமுதாயம் முறையான கற்புள்ள பெண்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவர்களின் கற்பு மிகவும் வலியுறுத்தப்படுகிறது. அத்தகு சமுதாயத்தின் மத்தியில் இராமரால் எவ்வாறு சீதையை ஏற்றுக்கொள்ள முடியும்? சீதையின் மீது இராமருக்குத் துளியளவும் சந்தேகம் கிடையாது, ஆனால் அவதூறு பேசும் மக்களின் வாயை அடைப்பதற்காகவும் சீதையின் உயர்ந்த கற்பை அனைவருக்கும் உணர்த்துவதற்காகவும் மட்டுமே இராமர் சீதையைத் தீயில் இறங்கச் சொன்னார். சீதையைத் தீயில் இறங்க வேண்டாம் என்று இராமர் ஒருவேளை தடுத்திருந்தால், அவர் சீதையை காமத்தினால் ஏற்றுக் கொண்டார் என்று மக்கள் குற்றம் சாட்டியிருப்பர். மேலும், இந்நிகழ்ச்சியின் மூலம் சீதையின் புகழ் மூவுலகிலும் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி, கூர்ம புராணத்திலிருந்து நாம் அறிவது என்னவெனில், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை உண்மையான சீதை அல்ல, மாயா சீதை. உண்மையான சீதையை இராவணனைப் போன்ற அசுரர்களால் தொட முடியுமா என்ன! உண்மையான சீதை அக்னி தேவரின் பாதுகாப்பில் இருக்க, இராவணன் மாயா சீதையை மட்டுமே இலங்கைக்கு எடுத்துச் சென்றான். அந்த மாயா சீதையை ஏற்றுக்கொள்ள விரும்பாத இராமர், அவளை நெருப்பில் இறங்கச் செய்தார்; அக்னி தேவர் உண்மையான சீதையினை இராமரிடம் திருப்பியளித்தார்.

சீதையைக் காட்டிற்கு அனுப்பி வைக்கும் அளவிற்கு இராமருக்கு கல் நெஞ்சமா?

முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் கருணையே வடிவானவர், அவர் கல் நெஞ்சத்துடன் செயல்பட்டார் என்று நினைத்தல் மாபெரும் குற்றம். தன்னுடைய தர்ம பத்தினியான சீதையிடம் ஸ்ரீ இராமர் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டதுபோலத் தோன்றுகின்றது. இருப்பினும், ஒரு சிறப்பான மன்னர் என்ற முறையில், தனது வம்சத்தின் மரியாதையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு நல்ல உதாரணம் அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் ஸ்ரீ இராமருக்கு இருந்தன. ஸ்ரீ இராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பியிருக்காவிடில், அவருக்குப் பின் வந்த மன்னர்கள், தங்களது குடிமக்களின் நிந்தனைகளுக்கு மதிப்பு கொடுக்கத் தவறிவிடுவர். அதையே காரணமாகக் காட்டிவிடுவர். இராமரின் முடிவு கடுமையாகத் தோன்றலாம், ஆனால் மக்களை ஆட்சி செய்ய வேண்டிய மன்னர் சில நேரங்களில் கடுமையாக இருத்தல் அவசியம். மன்னரின் முதல் கடமை மக்களை ஆட்சி செய்வதே; மற்றவை அனைத்தும் இரண்டாம் நிலையே, அது தனது சொந்த மகிழ்ச்சியை அல்லது குடும்பத்தாரின் மகிழ்ச்சியைச் சிதைப்பதாக இருந்தாலும்.

சீதையைக் காட்டிற்கு அனுப்பிய இராமரின் முடிவு, ஒரு சாதாரண சலவைத் தொழிலாளியின் பேச்சை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. உத்தர காண்டத்தின் 43ஆவது ஸர்கத்தில் ஸ்ரீ இராமர் தனது சகாக்களில் ஒருவரான பத்ரனிடம் தன்னைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தினரைப் பற்றியும் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று வினவுகிறார். இராவணனுக்கு எதிரான ஸ்ரீ இராமரின் வெற்றியைப் பற்றி மக்கள் பேசுவதாக பத்ரன் பதிலளிக்க, அவன் ஏதோ விஷயத்தை மறைப்பதை உணர்ந்த இராமர், எதையும் மறைக்காமல் உரைக்குமாறு வேண்டினார். மக்களுடைய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்த பத்ரன், இறுதியில் சீதையைப் பற்றி கூறினான்: “இலங்கையில் இராவணனின் கட்டுப்பாட்டில் இருந்த சீதையை எவ்வாறு ஸ்ரீ இராமர் ஏற்றுக் கொண்டார்? நாமும் நமது மனைவியரை இவ்வாறு விட்டுக் கொடுத்து வாழலாமே. மன்னரைப் பின்பற்றுவது பிரஜைகளான நமது கடமையன்றோ.”

இதைக் கேட்ட ஸ்ரீ இராமரின் இதயம் வெடித்தது. அஃது உண்மையா என்று சபையில் இருந்த இதர ஆலோசகர்களிடம் அவர் வினவ, தங்களது ஆசனங்களிலிருந்து இறங்கி மண்டியிட்ட வண்ணம் தலைகுனிந்த நிலையில் அச்செய்தி உண்மையே என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். கனத்த இதயத்துடன் சபையை விட்டு உடனடியாக வெளியேறிய ஸ்ரீ இராமர் நீண்ட யோசனைக்குப் பின் இலட்சுமணன், பரதன், சத்ருகன் ஆகியோரை அழைத்து கண்களில் கண்ணீர் மல்க தனது முடிவை வெளிப்படுத்தினார். அக்னி, வாயு, சூரியன், சந்திரன் என பல்வேறு தேவர்கள் சீதையின் புனிதத்தன்மையை ஏற்றுக்கொண்டபோதிலும், மக்கள் ஏற்காமல் இருப்பதைக் கண்டு அவர் பெருத்த ஆச்சரியமடைந்தார். இருப்பினும், “மன்னன் மீதுள்ள குற்றங்களின் காரணத்தினால் (போலியானதாக இருந்தாலும்), மக்கள் தங்களது தர்மத்திலிருந்து விலகுவார்களேயானால், அதைவிட துக்கம் தரக்கூடியது எனக்கு எதுவும் இல்லை. சீதையின் பிரிவைக் காட்டிலும் அது துக்கம் தரக்கூடியது,” என்று அவர் அறிவித்தார். வேத காலத்தில் அரசாட்சி புரிந்த மன்னர்களின் உயர்நிலையை இது காட்டுகின்றது.

மிதக்கும் கற்களைக் கொண்டு பாலம் அமைப்பது சாத்தியமா?

சாதாரண மனிதர்களால் சாத்தியமில்லாத செயல்களை செய்யக்கூடியவரே கடவுள். கடவுள் என்பவர் எல்லா சக்திகளும் பொருந்தியவர், அனைத்தும் அறிந்தவர். கற்களை நீரில் மூழ்கச் செய்பவரால் அவற்றை மிதக்கச் செய்ய முடியாதா என்ன! கடவுள் கட்டளையிடும்போது புவிஈர்ப்பு விசையின் விதிகள் மாறிவிடும். தான் ஏற்படுத்திய இயற்பியல் விதியை தனது தேவைக்கேற்ப எவ்வாறு உபயோகிப்பது என்பது அவருக்குத் தெரியும். அதற்காக அவர் யாரிடமிருந்தும் கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஓர் அறிவினை வேறு யாரிடமிருந்தாவது கடவுள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுளின் சக்தியினால் பல கோடி டன்கள் எடையுள்ள அண்ட சராசரங்கள் அனைத்தும் காற்றில் மிதக்கும்போது, பாறைகள் நீரில் மிதப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கடவுள் விரும்பினால் ஒரு பொருள் மிதக்கும், அதே போன்று அவரது விருப்பத்தினால் வேறு பொருள் மூழ்கும். நம்மால் முடியாது என்பதால் கடவுளாலும் முடியாது என்று சொல்வது குழந்தைத்தனமாகும்.

இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வழிபட்ட இராமர், எவ்வாறு முழுமுதற் கடவுளாகக் கருதப்பட முடியும்?

வைஷ்ணவர்களில் சிறந்தவரான சிவபெருமான் ஸ்ரீ இராமரின் திருநாமத்தை சொல்வதில் பேரானந்தம் அடையக்கூடியவர். ஸ்ரீ இராமர் முழுமுதற் கடவுள் என்பதிலும் சிவபெருமான் அவரது மிகச்சிறந்த பக்தர் என்பதிலும் துளியும் சந்தேகம் தேவையில்லை. ஸ்ரீ இராமர் தனது பக்தனான சிவபெருமானை வழிபட்டார்; இதை வைத்து சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்ற முடிவிற்கு வருவதில் அர்த்தமில்லை. பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சாஸ் திரங்களை வைத்து மட்டுமே முழுமுதற் கடவுளை அறிய முடியும்.

அன்னை யசோதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் காதுகளை சில சமயத்தில் திருவுகிறாள், குச்சியைக் காட்டி மிரட்டுகிறாள்; தந்தை நந்தரோ தனது பாதுகைகளை எடுத்துவரும்படி கிருஷ்ணரிடம் கட்டளையிடுகிறார். இவையெல்லாம் எப்படி சாத்தியம்? அன்னை யசோதையும் நந்தரும் கிருஷ்ணரைக் காட்டிலும் உயர்ந்தவர்களா? இல்லை. கிருஷ்ணர் தனது பக்தர்களுடன் நெருங்கிய உறவுமுறையை விரும்புவதால் இத்தகு லீலைகள் நடைபெறுகின்றன. அதுபோல, இராமராக அவதரித்தபோது தனது பக்தனான சிவபெருமானை அவர் வழிபட்டார். தந்தை சில சமயங்களில் தனது மகனை முதுகில் சுமப்பதால், மகன் தந்தையைக் காட்டிலும் உயர்ந்தவனல்ல; இஃது அவர்களின் அன்புப் பரிமாற்றத்தைக் காட்டும் செயல்.

மேலும், ஸ்ரீ இராமர் சிவபெருமானை வழிபட்ட நிகழ்ச்சி, மூல இராமாயணமான வால்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives