உண்மையான மகிழ்ச்சியை அடைதல்
கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில், தனது சிஷ்யர்களுடன் நிகழ்ந்த கீழ்காணும் உரையாடலில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் உடலுறவு வாழ்வின் உண்மை நிலையினையும் துன்பமயமான வாழ்விலிருந்து இன்பமான வாழ்விற்கு வருவதைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.
சிஷ்யர்: ஸ்ரீல பிரபுபாதரே, கலிபோர்னியாவில் விவாகரத்து கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உள்ளது. அஃது ஏன் என்பது பற்றி தங்களின் கருத்து என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: கல்யாணம் ஆனவனும் புலம்புகிறான், கல்யாணம் ஆகாதவனும் புலம்புகிறான் என இந்தியாவில் சொல்வதுண்டு. கல்யாணம் ஆன மனிதன், “ஏன் கல்யாணம் பண்ணிக் கொண்டேன்? சுதந்திரமாக இருந்திருக்கலாமே” என புலம்புகிறான். கல்யாணம் ஆகாதவன், “நான் ஏன் மனைவியை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேனே” என புலம்புகிறான். (சிரிப்பு)
உடலுறவு கொள்வதால் ஒருவன் குழந்தையைப் பெறுகிறான், குழந்தைப் பிறந்தவுடன் துன்பம் தொடங்குகிறது. குழந்தை துன்பப்படுகிறது, அதனைப் பாதுகாக்க பெற்றோர்களும் துன்பப்படுகிறார்கள். ஆனால் மறுபடியும் அவர்கள் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதுவே ஸ்ரீமத் பாகவதத்தில் (7.9.45), த்ருப்யந்தி நேஹ க்ருபணா பஹு-து:க-பாஜ: எனப்பட்டுள்ளது. இந்த குழந்தையை உற்பத்தி செய்வதில் பல கஷ்டங்களும் இடர்பாடுகளும் உள்ளன; ஆனால் இவற்றை அறிந்தும் ஒருவன் அதையே மீண்டும் செய்கிறான்.
இந்த ஜடவுலகில் உடலுறவே முக்கியமான இன்பம். அதுவே முக்கியமான இன்பம் என்றாலும், அது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். இந்த இன்பம் எத்தகைய இன்பம்? கண்டூயனேன கரயோர் இவ து:க-து:கம். இஃது அரிப்பைப் போக்குவதற்காக இரண்டு கைகளையும் ஒன்றாக தேய்த்துக் கொள்வதற்கு ஒத்ததாகும். உடலுறவு பல்வேறு தீய விளைவுகளைத் தருகிறது, ஆயினும் ஒருவன் திருப்தியடைவதில்லை. தற்போது கருத்தடை முறைகள், கருக்கலைப்பு என பல வழிகள் உள்ளன. மாயை மிகவும் வலிமையானவள்; “இதனைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்,” என்று அவள் கூறுகிறாள்.
ஆகவே, கண்டூதிவன் மனஸிஜம் விஷஹேத தீர: என்று பாகவதம் கூறுகிறது. தீரனாக, அதாவது விவேகத்துடன் நிதான புத்தி கொண்டவனாக இருப்பவன் காம இச்சையின் அரிப்புகளைப் பொறுத்துக் கொள்கிறான். இந்த அரிப்பு உணர்வுகளைப் பொறுத்துக் கொள்பவன் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான், அதைச் செய்ய முடியாதவன் உடனடியாக துன்பத்தில் சிக்கித் தவிக்கிறான். முறையானதானாலும் சரி, முறையற்றதாயினும் சரி, உடலுறவு என்பது பிரச்சனையே.
சிஷ்யர்: ஸ்ரீல பிரபுபாதரே, இந்த வழியில் நாம் இன்றுதான் முதல்முறையாக நடக்கிறோம். இங்குள்ளவை எல்லாம் புதியதாகவும் மாறுபட்டதாகவும் தெரிகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: (சிரித்துக் கொண்டே) இதுவே பௌதிக வாழ்க்கை. நாம் சிலநேரம் இவ்வழியிலும் சிலநேரம் அவ்வழியிலும் திரிகிறோம். “ஓ, இது புதியது” என நினைக்கிறோம். பிர:மாண்ட ப்ரமிதே, நாம் பிரபஞ்சம் முழுவதும் திரிந்து கொண்டு புதியதாக எதையாவது காண விரும்புகிறோம். ஆனால் எதுவும் புதியதல்ல, அனைத்தும் பழையவையே.
ஒரு மனிதன் முதுமையடையும்பொழுது, பொதுவாக, “ஓ, இந்த வாழ்க்கை மிகவும் துன்பகரமானது” என எண்ணுகிறான். அதனால் புதிதாக ஒரு குழந்தையின் உடலைப் பெற அவன் அனுமதிக்கப்படுகிறான். குழந்தையின் தேவைகளை மற்றவர்கள் பூர்த்தி செய்கின்றனர். அப்போது அவன், “இப்பொழுது எனக்கு எவ்வளவு வசதியான வாழ்க்கை கிடைத்துள்ளது” என நினைக்கிறான். ஆனால் மீண்டும் அவன் மூப்பெய்தி வாழ்க்கையில் சலிப்படைகிறான். கிருஷ்ணரும் மிகவும் கரிசனத்துடன், “சரி. உன் உடலை மாற்றிக்கொள்” என்கிறார். இதுவே புன: புனஷ் சர்வித-சர்வணானாம், மென்றதையே மெல்லுதல் எனப்படுகிறது. உயிரினங்களுக்காக கிருஷ்ணர் பல்வேறு வசதிகளைத் தருகிறார்: “சரி, நீ மரமாக ஆவாயாக. சரி, நீ பாம்பாக ஆவாயாக. சரி, நீ தேவனாக ஆவாயாக. சரி, நீ அரசனாக ஆவாயாக. சரி, நீ செருப்புத் தைப்பவனாக ஆவாயாக. ஸ்வர்கத்திற்குச் செல், நரகத்திற்குச் செல்.” இவ்வாறாக வாழ்வில் பல்வேறு வகையறாக்கள் உள்ளன, ஆயினும் அவன் இவ்வெல்லா வாழ்விலும் இந்த ஜடவுலகத்திலேயே அடைக்கப்பட்டுள்ளான். அவன் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறான், ஆனால் கிருஷ்ணரின் பாதுகாப்பில் மட்டுமே தனக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதை அவன் உணர்வதில்லை. அதனை அவன் ஏற்பதில்லை.
இப்பௌதிக உலகிலுள்ள துன்பங்களைக் கண்டு, வகையறாக்கள் இல்லாத (நிர்விசேஷ) வாழ்க்கை வேண்டும் என்று மாயாவாதிகளும், சூன்யமான வாழ்க்கை வேண்டும் என்று பௌத்தர்களும் விரும்புகின்றனர். ஆனால் இவ்விரு கூற்றுகளும் சாத்தியமானதல்ல. வகையறாக்கள் இல்லாமல் நீங்கள் சில காலம் இருக்கலாம், ஆனால் மீண்டும் நீங்கள் வகையறாக்களைத் தேடுவீர். பெரிய பெரிய சந்நியாசிகள், ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா (அருவமான பரம்பொருளே உண்மை, இந்த ஜடவுலகம் பொய்) என்று பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அவர்கள் மறுபடியும் பிரம்மன் நிலையிலிருந்து இறங்கி, சமூகப் பணிகளிலும் அரசியலிலும் ஈடுபடுகின்றனர். அவர்களால் பிரம்மன் நிலையில் நீண்ட காலம் இருக்க முடியாது. ஆகவே, அவர்கள் இந்த வகையறாக்களை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏனெனில், வகையறாக்களே இன்பத்தின் தாயாகும். எனவே, எங்களது தீர்வு இதுவே: உண்மையான வகையறாக்களைக் கொண்ட கிருஷ்ண உணர்விற்கு வாருங்கள், அப்போது உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.
சிஷ்யர்: பெரும்பாலான மக்கள் மறுபிறவியைப் பற்றி நினைத்துக்கூட பார்க்காமல், இப்பிறவியிலேயே அதிக இன்பத்தைத் துய்க்க முயற்சி செய்கிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: மறுபிறவி என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது, அதனால் அவர்கள் அதனை சூன்யமாக மாற்றுகின்றனர். “மறுபிறவி என்பது இல்லை” என்று கூறி, அதனால் அவர்கள் திருப்தியடைய முயல்கின்றனர். தனக்கு ஆபத்து ஏற்படும்பொழுது முயல் கண்களை மூடிக் கொண்டு அபாயம் இல்லை என நினைத்துக் கொள்ளும். இந்த அயோக்கியர்களும் அதுபோன்றுதான் இருக்கின்றனர். இவையனைத்தும் அறியாமையே.
சிஷ்யர்: ஸ்டோய்சிசம் (stoicism) என்னும் தத்துவம் ஒன்று உள்ளது. வாழ்க்கை துன்பப்படுவதற்காகவே உள்ளது என்றும், அதனால் ஒருவன் மிகப் பொறுமையுடன் பெருமளவு துன்பங்களை ஏற்க வேண்டும் என்றும் அதில் கூறப்படுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் எவனொருவன் துன்பப்படுகிறானோ அவனே முதல்தர மனிதன் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த மாதிரி தத்துவத்தை ஒருவன் நம்புகிறான் என்றால், துன்பத்தை எவ்வாறு தடுப்பது என்பது அவனுக்குத் தெரியாது. ஒருவகையான தத்துவவாதிகள், துன்பத்தைப் புறக்கணிக்க முடியாது என்றும், ஆதலால் அதனைப் பொறுத்துக்கொள்ளும் வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். மற்றொரு வகையான தத்துவவாதிகள், வாழ்க்கை என்பது முழுவதும் துன்பம் நிறைந்ததாக இருப்பதால் அதனை சூன்யமாக்கி விட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் துன்பமற்ற உண்மையான வாழ்க்கை உள்ளது என்பதை இந்த இரு தரப்பினரும் அறியார். அதுவே கிருஷ்ண உணர்வு. அங்கே வாழ்க்கை உண்டு, ஆனால் துன்பம் இல்லை. ஆனந்தமயோ ’ப்யாஸாத், ஆனந்தம் தவிர வேறு எதுவுமில்லை. பாடுதல், ஆடுதல், சாப்பிடுதல்–இதில் எவ்வித துன்பமும் இல்லை. இதை யாராவது மறுக்க முடியுமா? அவ்வாறு மறுக்கும் முட்டாள் யாரேனும் உண்டா?
சிஷ்யர்: அதுபோன்றதொரு வாழ்க்கை இருப்பதை மக்கள் மறுக்கின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் அப்படியொரு வாழ்க்கை இருப்பின், அதாவது பாடி, ஆடி, உண்டு, மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய வாழ்க்கை இருப்பின் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?
சிஷ்யர்: யாராக இருந்தாலும் அதனை ஏற்பார்கள். ஆனால் அதுபோன்ற வாழ்க்கை இல்லை என்று மக்கள் நினைக்கின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: நம்முடைய கூற்று இதுவே. துன்பங்கள் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியை மட்டுமே கொண்ட வாழ்க்கை உள்ளது என்பதை நாம் அறுதியிட்டுக் கூற வேண்டும். “ஆம். நான் அதை விரும்புகிறேன்,” என்று ஒவ்வொருவரும் கூறுவர், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வர். துரதிர்ஷ்டவசமாக, மக்கள் மீண்டும்மீண்டும் ஏமாற்றப்பட்டிருப்பதால், கிருஷ்ண உணர்வு முறையையும் மற்றுமோர் ஏமாற்று முறையாக நினைக்கிறார்கள். எனவே, துன்பங்கள் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியை மட்டுமே முழு வாழ்க்கையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை மக்களிடம் உறுதியாக ஏற்கச் செய்வதே கிருஷ்ண உணர்வின் பிரச்சாரமாகும்.
சிஷ்யர்: நாம் ஏமாற்றவில்லை என்பதை அவர்களுக்கு எப்படி உணர்த்த முடியும்?
ஸ்ரீல பிரபுபாதர்: நமது கோயில்களுக்கு அவர்களை அழைத்து நமது பக்தர்களைப் பார்க்க வைக்க வேண்டும். நாம் அனைவரும் பாடுகிறோம், ஆடுகிறோம், நன்கு உண்டு மகிழ்கிறோம். இஃது அனுபவரீதியான நிரூபணமாகும்.
சிஷ்யர்: ஆனால் ஒருவர் இதை உணர்வதற்கு முன் மனத் தூய்மை பெற வேண்டுமல்லவா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. “எங்களுடன் இணைந்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரியுங்கள்; நீங்கள் தூய்மையடைவீர்கள். உங்களிடம் நாங்கள் எதையும் கேட்கவில்லை. நாங்கள் உங்களுக்கு உணவளிக்கிறோம், உங்களுக்கு அனைத்தையும் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்களுடன் சேர்ந்து மஹா மந்திரத்தை உச்சரியுங்கள், அது போதும்.” இதுவே நமது செய்தி.