தவத்தினால் கடவுளை உணர்தல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கடவுளை உணர்வதற்கு எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் தவம் எவ்வாறு இன்றியமையாத ஒன்று என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

தபஸைவ பரம் ஜ்யோதிர்  பகவன்தம் அதோக்ஷஜம்

ஸர்வ-பூத-குஹாவாஸம்  அஞ்ஜஸா விந்ததே புமான்

பரம்பொருள் மூன்று நிலைகளில் உணரப்படுகிறது. அருவ பிரம்மன் எனும் பிரம்மஜோதியை உணர்வது முதல் நிலை, அனைத்து உயிர்வாழிகளின் இதயத்திலும் வசிக்கும் பரமாத்மாவை உணர்வது இரண்டாவது நிலை, பரம புருஷ பகவானை உணர்வது இறுதி நிலை.”

பரபிரம்மனின் மூன்று நிலைகள்

பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.

சூரிய கிரகத்தை அணுகுவதற்கே நம்மால் இயலாதபோது, சூரிய கிரகத்தினுள் நுழைவதைப் பற்றி என்ன சொல்வது? அதற்கு நமக்கு மற்றோர் உடல் தேவைப்படுகிறது. சூரிய கிரகத்திலும் உயிர்வாழிகள் இருக்கின்றனர், அவர்களை ஆட்சி செய்யும் ஆளுநரும் இருக்கின்றார். அமெரிக்காவிற்கு அதிபர் இருப்பதைப் போல சூரிய கிரகத்திற்கும் அதிபர் இருக்கின்றார். இவை அனைத்தும் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. சூரிய கிரகத்தின் அதிபதி விவஸ்வான் என்பவராவார். கீதையில் கிருஷ்ணர் தாம் இந்த ஞானத்தை விவஸ்வானுக்கு உபதேசித்ததாகக் கூறுகிறார். இவை கட்டுக்கதை அல்ல; உண்மையானவை.

நாம் வாழும் இப்பூமியின் பெரும்பகுதி நிலத்தாலானது, நமது உடலிலும் நிலத்தின் பங்கு அதிகமாக உள்ளது. சூரிய கிரகவாசிகள் நமது உடலைக் காட்டிலும் மாறுபட்ட உடலைக் கொண்டுள்ளனர். சூரிய கிரகத்தில் வசிப்பவர்களின்  உடலில் நெருப்பின் பங்கு அதிகமாக உள்ளது. பூமி பஞ்ச பூதங்களாலானது; இருப்பினும், இதில் நிலம் அதிக பங்கு வகிக்கிறது. அதுபோலவே, சூரிய கிரகமும் பஞ்ச பூதங்களாலால் ஆனது என்றாலும், அதன் பெரும் பகுதி நெருப்பாலானது.

பூமி, சூரியன் உட்பட ஜடவுலகில் உள்ள அனைத்து கிரகங்களும் பகவானது படைப்பாகும். நம்மால் நீரில் வாழ இயலாது, மீன்களால் நிலத்தில் வாழ இயலாது. அதுபோலவே, உலகில் பல்லாயிரக்கணக்கான கிரகங்கள் உள்ளபோதிலும், நீங்கள் எங்கு வாழ வேண்டியவர்களோ அங்கு மட்டுமே உங்களால் வாழ இயலும். இதுவே நமது கட்டுண்ட நிலை எனப்படுகிறது. சூரிய கிரகத்திற்கோ சந்திர கிரகத்திற்கோ சென்று வாழ்வதற்கான சுதந்திரம் நமக்கு வழங்கப்படவில்லை.

விஞ்ஞானிகள் நிலவிற்குச் செல்லும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர், அங்குச் சென்றதை யாம் சந்தேகிக்கின்றோம். எப்படி இருப்பினும் நிலவிற்கு செல்லும் அவர்களது முயற்சியால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. அவர்கள் வெறுமனே நேரம், பணம், சக்தி முதலியவற்றை விரயமாக்குகின்றனர். கட்டுண்ட வாழ்வில் இயற்கையின் விதிகளை மீற இயலாது, அது சாத்தியமில்லை. ஆனால், விஞ்ஞானிகளோ தாங்கள் விரும்பிய எதையும் செய்ய இயலும் என்று நினைக்கின்றனர். இஃது அவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது.

பூமியில் எவ்வாறு உயிர்கள் வாழ்வது உண்மையோ அதுபோலவே, சூரிய கிரகத்திலும் உயிர்கள் வாழ்வது சாஸ்திர பூர்வமான உண்மையே. அங்குள்ளவர்களின்  உடலின் தன்மை மட்டும் மாறுபடுகிறது.

தவ வாழ்வின் அவசியம்

விஞ்ஞானிகள் தங்களை சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றனர். ஆனால் எங்கே இருக்கிறது சுதந்திரம்? ப்ரக்ருதே க்ரியமானானி குணை கர்மாணி ஸர்வஷ, அனைத்தும்–பௌதிக குணங்களினால் செயல்படுகின்றன என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அயோக்கியத்தனமான நாகரிகம் இதனை ஒப்புக்கொள்வதில்லை. ஒவ்வொரு அடியிலும் கட்டுண்டு வாழும்போதிலும், மக்கள் தங்களை சுதந்திரமானவர்கள் என்று நினைக்குமளவிற்கு

மூடர்களாக உள்ளனர். நாம் கட்டுண்ட வாழ்விலிருந்து விடுபடுவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். விடுதலை என்பது தானாகக் கிடைத்துவிடக் கூடியது அல்ல. எடுத்துக்காட்டாக, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவன் அதிலிருந்து விடுபடுவதற்கு சில தவங்களை மேற்கொள்ள வேண்டும், உடலில் ஏற்பட்டுள்ள கட்டியினால் துன்பப்படுபவன் அதிலிருந்து விடுபடுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதுபோலவே, கட்டுண்ட வாழ்விலிருந்து விடுபடுவதற்கு தவம் இன்றியமையாததாகும். முன்பெல்லாம் சாதுக்கள் பல கடும் தவங்களில் ஈடுபடுவது வழக்கம். தகிக்கும் வெயிலில் தங்களைச் சுற்றிலும் நெருப்பை மூட்டி அதன் நடுவே அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவர், அல்லது இமயமலைக்குச் சென்று உறைய வைக்கும் நீரில் கழுத்தளவு இறங்கி தியானம் செய்வர்.

இவ்வாறாக, மக்கள் இறைவனை உணர்வதற்காக முன்பெல்லாம் கடும் தவங்களை மேற்கொண்டனர். தற்போதைய நிலையிலோ மக்களால் புலால் உண்ணுதல், தகாத பாலுறவு, போதை வஸ்துக்கள், சூதாட்டம் ஆகிய நான்கு பாவச் செயல்களைக்கூட கைவிட இயலவில்லை. இந்த நான்கு விதிமுறைகளே கிருஷ்ண பக்தியிலுள்ள தவங்களாகும். இவை மிகவும் கடினமானவையா? இல்லையே. கடுங்குளிரில் உறைய வைக்கும் நீரில் கழுத்தளவு இறங்கி நிற்பதை விட மாமிசம் உண்ணாமை, போதை வஸ்துக்களைத் தவிர்த்தல், தவறான பாலுறவைத் தவிர்த்தல் ஆகியவை கடினமானவையா? பாலுறவு வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை, தவறான பாலுறவு கூடாது” என்றுதான் கூறுகிறோம். இதில் என்ன சிரமம்?

வீழ்ச்சியுற்றவர்களான நம்மால் இந்த ஆரம்பநிலை தவங்களைக்கூட மேற்கொள்ள இயலவில்லை. தபஸைவ, தவத்தினால் மட்டுமே இறைவனை உணர இயலும், வேறு வழிகளில் சாத்தியமில்லை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏகாதசி போன்ற சிறுசிறு தவங்களை மேற்கொள்ளலாம். ஏகாதசி தினத்தன்று நாம் எவ்வித உணவையும் ஏற்கக் கூடாது, நீர்கூட அருந்தக் கூடாது. இருப்பினும், நமது இயக்கத்தில் இதனை அவ்வளவு கண்டிப்புடன் நாம் பின்பற்றுவதில்லை. மாறாக, ஏகாதசியன்று தானியங்களைத் தவிர்த்து பழங்களையும் பாலையும் உண்ணுமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். இதுவே தவமாகும். இந்த தவத்தினைக்கூடவா உங்களால் செய்ய இயலாது? இந்த மிகச்சிறிய தவத்தைக்கூட நம்மால் மேற்கொள்ள இயலவில்லை எனில், நாம் வைகுண்டத்தை அடைய இயலும் என்று எவ்வாறு எதிர்பார்க்கவியலும்? அது சாத்தியமே இல்லை.

இத்தகைய தவங்களை மேற்கொள்வதால் நாம் எதையும் இழக்கின்றோமா? நிச்சயமாக இல்லை. வெளியில் உள்ளவர் எவரும் நமது இயக்கத்திலுள்ள உறுப்பினர்களைக் கண்டு, மிகவும் பிரகாசமான முகத்தைக் கொண்டுள்ளனர்.” என்று கூறுவதை நாம் காண்கின்றோம். ஒருமுறை லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஹவாய் நகரத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பாதிரியார் ஒருவர் என்னை அணுகி, உங்களது சீடர்களின் முகம் மிகவும் பிரகாசமாக உள்ளதே, இஃது எவ்வாறு சாத்தியம்?” என்று வினவினார்.

பாவச் செயல்களை கைவிட்டு தவங்களில் ஈடுபடுவதன் மூலம் மிக எளிய மகிழ்ச்சிகரமான வாழ்வை வாழலாம். நாம் தரையில் அமரலாம், தரையில் படுத்து உறங்கலாம், நமக்கு அதிகப்படியான தட்டுமுட்டு சாமான்கள் எதுவும் தேவையில்லை. ஆடம்பர ஆடைகளும் தேவையில்லை. கடவுளை உணர்வதில் நாம் தீவிரமாக இருக்கிறோம் எனில், இத்தகைய சிறிய தவங்கள் அவசியமாகின்றன.

பகவானின் திருமேனியிலிருந்து வரக்கூடிய ஒளியானது பிரம்மஜோதி எனப்படுகிறது. மாயாவாதிகளும் அருவவாதிகளும் இந்த பிரம்மஜோதியே எல்லாம் என்று எண்ணுகின்றனர். யோகிகள் தங்களது இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மாவைக் காண்கின்றனர். மேலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் ஸர்வ-பூத-குஹாவாஸம், இதயக் குகையில் வீற்றிருப்பவர் என்று கூறப்பட்டுள்ளது. பகவான் அனைத்து இடங்களிலும் வீற்றிருக்கிறார். அண்டாந்தரஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம்.

நெருப்பை மூட்டி அதனுள் அமர்ந்து புரியும் கடும் தவங்களைக்காட்டிலும், பக்தியின் தவங்கள் மிகவும் எளிமையானவை .

பகவான் கிருஷ்ணரின் அர்ச்சா மூர்த்தி

இறைவன் எங்கும் நிறைந்தவர்; அனைத்தையும் அறிந்தவர். கோயில்களில் அவர் அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். விக்ரஹ வடிவில் எழுந்தருளி நமது சேவைகளை ஏற்றுக்கொள்கிறார். கிருஷ்ணருக்கும் அவரது விக்ரஹத்திற்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை.

கோலோக விருந்தாவனத்தில் வீற்றிருப்பவரும், அனைவரது இதயத்தில் எழுந்தருளியிருப்பவருமான கிருஷ்ணரே தமது பக்தர்களின் சேவையை ஏற்பதற்காக பல்வேறு வடிவங்களில் எழுந்தருள்கிறார். கிருஷ்ணர் அதோக்ஷஜ, பௌதிகப் பார்வைக்கு அப்பாற்பட்டவர் என்று அறியப்படுகிறார். நம்மால் கிருஷ்ணரைக் காண இயலாது. கல், உலோகம், மரம் போன்ற பௌதிகப் பொருட்களையே நம்மால் காண இயலும் என்பதால், பகவான் மரம், கல், உலோகத்தில் அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருள்கிறார். ஆனால் அர்ச்சா மூர்த்தி மரமோ கல்லோ அல்ல. இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விக்ரஹம் கிருஷ்ணரே. நாம் அவரைக் காண வேண்டும் என்பதற்காக அவர் கருணையோடு அர்ச்சா மூர்த்தியாகத் தோன்றுகிறார். இதுவே தத்துவமாகும்.

உயர்ந்த நிலையில் கல்லும் கிருஷ்ணரே; ஏனெனில், கல்லானது கிருஷ்ணரது பௌதிக சக்தியின் விரிவாக்கமாகும். இதுவே அசிந்திய-பேத-அபேத, பகவான் தமது சக்திகளுடன் ஒன்றாகவும் அதே சமயத்தில் வேறாகவும் இருக்கிறார்; இது நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இதனை சூரியனை எடுத்துக்காட்டாகக் கொண்டு அறியாலாம். சூரிய ஒளியில் வெப்பமும் ஒளியும் உள்ளது. அவ்வாறெனில், சூரியனும் அங்கு உள்ளது. சூரிய ஒளி அறையில் நுழையும்போது சூரியனும் நுழைகிறார். இதுவே சைதன்ய மஹாபிரபுவின் தத்துவமாகும். ஒரு வஸ்து தன்னுடைய நிலையிலிருந்து துளியும் மாறாமல், மற்றொரு நிலையில் எவ்வாறு தோன்ற முடியும் என்பதை நம்மால் பொதுவாகப் புரிந்துகொள்ள முடியாது. நமது அறிவுப் பற்றாக்குறையின் காரணமாக நமக்கு இதன் அனுபவம் கிடையாது. ஆனால், ஒரே சமயத்தில் ஒன்றாகவும் வேறாகவும் இருத்தல் கிருஷ்ணரிடத்தில் சாத்தியமாகும். நாஸ்திகனுக்கு கோயிலில் இருக்கும் கிருஷ்ணரது விக்ரஹம், கல், மரம் முதலியவற்றாலான ஒரு சாதாரண உருவமாகவே தோன்றும். என்ன இவர்கள் பைத்தியம்போல கல்லை வழிபடுகின்றனரே?” என்று அவன் நினைக்கிறான். ஆனால் பக்தனுக்கு விக்ரஹமும் கிருஷ்ணரே. அவர் எப்பொழுதுமே கிருஷ்ணர்தான். ஒருவன் கிருஷ்ண விக்ரஹத்தை கல்லாக நினைத்தாலும் கல்லானது கிருஷ்ணரது சக்தியின் விரிவாக்கம் என்பதால், கல்லும் கிருஷ்ணரே என்பதை பக்தன் அறிவான். கல்லை வழிபடும் அளவிற்கு நாம் என்ன முட்டாள்களா? மனம்போன போக்கில் நாம் விக்ரஹத்தை வழிபடவில்லை, முந்தைய ஆச்சார்களின் வழிகாட்டுதலின்படி விக்ரஹத்தை வழிபடுகிறோம். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரால் கோலோக விருந்தாவனத்திலும், ஆயிரக்கணக்கான கோயில்களிலும் ஒரே சமயத்தில் இருக்க இயலும். அதுவே கிருஷ்ணரது ஸர்வ சக்தியாகும்.

கருணையுடன் கிருஷ்ணர் பல்வேறு கோயில்களில் எழுந்தருளியுள்ளார். நாம் தவறிழைத்தாலும் விக்ரஹ வடிவில் இருக்கும் பகவான் நம்மை எதுவும் எதிர்க்க மாட்டார். அதற்காக நாம் தவறிழைக்கக் கூடாது. எவ்வித குற்றத்திலும் ஈடுபடக் கூடாது. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?” போன்ற விஷயங்கள் சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதால் நாம் குற்றத்தைத் தவிர்க்கலாம். குற்றமற்ற சேவையானது நம்மை ஆன்மீகத்தில் மேன்மேலும் உயரச் செய்கிறது.

பகவான் கிருஷ்ணர் மற்றும் ஆன்மீக குருவின் மீது நம்பிக்கை கொண்டு, ஆன்மீக குருவின் உபதேசங்களைப் பின்பற்றும்போது உங்களால் பரம்பொருளின் பல்வேறு தோற்றங்களான பிரம்மஜோதி, பரமாத்மா, பகவான் ஆகியவற்றை உணர இயலும். இந்தத் தோற்றங்களை உணரும் வழியில் தவமும் இன்றியமையாதது. நாம் பரிந்துரைத்துள்ள சிறுசிறு தவங்களைப் பின்பற்றுவதன் மூலம் படிப்படியாக நீங்கள் பகவான் கிருஷ்ணரை அறிவீர்கள். கிருஷ்ணரை அறிந்துகொள்ளும்போது உங்களது வாழ்வு வெற்றியடைகின்றது

பக்தர்களின் சேவையை ஏற்பதற்காகவே பகவான் அர்ச்சா விக்ரஹமாக தோன்றுகிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives