கண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

வாகனங்களின் சீரான இயக்கத்திற்குப் பின்னால் ஒரு நபர் இருப்பதைப் போல, பிரபஞ்சத்திலுள்ள எல்லா கிரகங்களின் சீரான இயக்கத்திற்குப் பின்னால் ஒரு நபர் உள்ளார் என்பதையும், அவரே இறைவன் என்பதையும் ஸ்ரீல பிரபுபாதர் தெள்ளத்தெளிவாக விளக்குகிறார்.

நாத்திகர்களின் எண்ணம்

அஸத்யம் அப்ரதிஷ்டம் தேஜகத் ஆஹுர் அனீஷ்வரம்

அபரஸ்பரஸம்பூதம்கிம் அன்யத் காமஹைதுகம்

“அசுரத்தன்மை உடையவர்கள், இவ்வுலகம் பொய் என்றும் அஸ்திவாரம் இல்லாதது என்றும் கட்டுப்படுத்தும் கடவுள் எவரும் இல்லை என்றும் கூறுகின்றனர். அது காம இச்சையால் உண்டாக்கப்பட்டதாகவும் காமத்தைத் தவிர இதற்கு வேறு காரணம் இல்லை என்றும் கூறுகின்றனர்.” (பகவத் கீதை 16.8)

இது நாத்திகர்களின் வாதமாகும். அஸத்யம், அவர்கள் இந்த பௌதிக உலகம் பொய் என்று கூறுகிறார்கள். ஜகத் என்னும் சமஸ்கிருத சொல்லிற்கு “நிலையில் இருப்பது” என்று பொருள். கச்சதி என்றால், “எப்போதும் பயணித்துக் கொண்டிருப்பது” என்று பொருள். இந்த உலகம் எப்போதும் பயணித்துக் கொண்டுள்ளது. உங்களது ஊரில் நீங்கள் காணும் வாகனங்களும்கூட இங்கும்அங்கும் எப்போதும் பயணித்துக் கொண்டே இருக்கின்றன, இது கச்சதி என்று அறியப்படுகிறது. முழு பிரபஞ்ச அமைப்பும் பயணித்துக் கொண்டே உள்ளது. ஒவ்வொரு கிரகமும் தனது சுற்றுவட்டப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. சூரியன் நிமிடத்திற்கு பல்லாயிரம் மைல் பயணிக்கின்றது. எனவே, இவ்வுலகம் ஜகத் என்று அறியப்படுகிறது.

வாகனங்களின் சீரான இயக்கம்

நமது ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன, தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும். அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை. இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?

வாகனங்கள் குறிப்பிட்ட தடத்திற்குள் செல்லுமாறு முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறையை உருவாக்கியது யார்? காவல் துறை, அரசாங்கம். அதுபோலவே அனைத்து கிரகங்களும் அதிவேகத்தில் சுற்றும்போதும் தத்தமது சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகுவதில்லை; ஏனெனில், பிரபஞ்சத்திற்கென்று ஒரு நிர்வாகம் செயல்படுகிறது.

சாலையில் செல்லும் வாகனங்கள் அரசு மற்றும் காவல் துறையின் உதவியுடன் சீரமைக்கப்படுகின்றன. அவ்வாறிருக்க, திறந்தவெளியிலுள்ள கிரகங்களின் பயணத்திற்கான தடத்தினை அமைத்தது யார்?

அதிவேகத்திலும் அசையாத பூமி

ஒரு கார் மணிக்கு எழுபது மைல் வேகத்தில் செல்கிறது; ஆனால், பூமி அதைவிட பல மடங்கு வேகமாகச் சுற்றுகிறது. பூமியின் அமைப்பு அருமையாகவும் பக்குவமாகவும் உள்ளது. இஃது எவ்வளவு பக்குவமாகச் செயல்படுகிறது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள இயலாது.

ஆகாய விமானங்களும் பயணிக்கின்றன. ஆனால், எத்தனை ஆட்டம், எத்தனை இரைச்சல். ஆகாய விமானங்கள் பக்குவமானவை அல்ல, மாறாக பூமி மிகவும் பக்குவமாக வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பூமி மணிக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில் சுற்றினாலும், எந்தவொரு ஆட்டமோ இரைச்சலோ இல்லை. நாம் அமர்ந்த இடத்திலேயே இருப்பதுபோல உணர்கிறோம். இதற்கு பின்னால் எந்தவொரு மூளையும் இல்லையா?

பிரபஞ்சத்தை நிர்வகிப்பது யார்?

நமது ஊரிலுள்ள வாகனங்கள் தெருக்களில் சீராகச் செல்வதற்கு காவல் துறை, அரசு, விஞ்ஞானிகள் என எவ்வளவோ புத்தி தேவைப்படுகிறது. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் கோடிக்கணக்கான கிரகங்கள் உள்ளன, அவற்றைக் கணக்கிட இயலாது. ஒவ்வொரு கிரகத்தின் தட்பவெட்ப நிலையும் மாறுபட்டது. எல்லா கோள்களும் ஒன்று போலவே இருப்பதில்லை. ஒரு கோளின் வளிமண்டல நிலை மற்றொன்றிலிருந்து மாறுபட்டே இருக்கும். சூரியன் நெருப்பே உருவானது; பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்தும்கூட அதன் வெப்பம் நம்மை எத்தனை அதிகமாகத் தாக்குகிறது! அதே சமயம் சந்திரனோ மிகவும் குளிர்ச்சியானது. எனவே, ஒவ்வொரு கிரகமும் தனிப்பட்ட வளிமண்டல நிலையைக் கொண்டு தனது பாதையில் செவ்வனே சுற்றுகிறது. இவை ஒரு சிறந்த ஏற்பாட்டின் கீழ் அமைந்துள்ளன. இந்த ஏற்பாடுகளைப் பார்த்த பின்னரும், இவற்றிற்குப் பின்னால் யாருடைய மூளையும் இல்லை என்று நாம் சொல்லப் போகிறோமா? அஃது எவ்வாறு சாத்தியம்?

நீரின் சுவை, சந்திரனின் ஒளி என கடவுளின் இருப்பை பல பொருட்கள் வெளிப்படுத்துகின்றன.

சூரியனுக்கு கட்டளையிட்டது யார்?

ஆனால் இராட்சஸர்களான அசுரர்கள், அஸத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகத் ஆஹுர் அனீஸ்வரம், “கட்டுப்படுத்துபவர் என்று எவரும் இல்லை, இந்த உலகம் வெறும் பொய்” என்று கூறுகின்றனர். பொய்யா? இத்தனை துல்லியமாகப் பின்பற்றப்பட்டு வரும் சட்டதிட்டங்கள் பொய்யானவையா? சூரியன் தன் சுற்றுப் பாதையில் சீராகச் சுற்றிக் கொண்டிருக்கிறது, அஃது ஒருவேளை அங்குமிங்கும் சாய்ந்தால், உலகம் முழுவதும் உறையக்கூடும் அல்லது தீயில் கருகக்கூடும். விஞ்ஞானிகளும் இதனை ஏற்கின்றனர்.

சூரியன் தன்னைக் கட்டுப்படுத்துபவர் அளித்த வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் நகர வேண்டும். முழுமுதற் கடவுளின் ஆணைப்படியே சூரியன் நகர்கிறது என்று ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம சம்ஹிதையிலும் இது கூறப்பட்டுள்ளது. யஸ்யாஜ்ஞயா ப்ரமதி ஸம்ப்ருதகாலசக்ரோ.

கட்டளை என்று வரும்போது கட்டளையைப் பிறப்பிப்பவர் இருக்க வேண்டுமே! இல்லையேல், கட்டளைக்கு என்ன பொருள்? யஸ்ய ஆஜ்ஞயா என்பது கட்டளை பிறப்பிக்கும் உயர்ந்த நபரைக் குறிக்கிறது. சூரியன் அந்த ஆணையை சிரமேற்கொண்டு செயல்படுகிறது. எனவே, கட்டளையைப் பிறப்பிப்பவர் இருக்கிறார், கட்டுப்படுத்துபவர் இருக்கிறார்—அவரே முழுமுதற் கடவுள். கட்டுப்படுத்துபவர் இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்? பிரபஞ்சத்தில் கட்டுப்படுத்துபவர் இல்லை என்பதற்கு தர்க்கரீதியான காரணத்தை யாரால் கூற முடியும்? இந்த இராட்சஸர்கள் கடவுள் இல்லை, கட்டுப்படுத்துபவரும் இல்லை என்கின்றனர். ஆனால், அதற்கான விளக்கம் எங்கே? கடவுள் இல்லை என்பதற்கு உங்களது விளக்கம்தான் என்ன? (ஒரு பக்தரைப் பார்த்து) இதுகுறித்து விஞ்ஞானிகளின் விளக்கம் என்ன?

கடவுளைக் காண முடியுமா?

பக்தர்: நாம் கட்டுப்படுத்துபவரை [கடவுளை] ஒருபோதும் பார்த்ததில்லையே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவரை நீங்கள் பார்த்ததில்லை. ஆயினும், அரசாங்கத்திற்குத் தலைவர் இருக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு முடிவு செய்கிறீர்? ஒரு தலைவரையோ உயர் அதிகாரியையோ பார்க்காதபோது “அவர் உள்ளார்” என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? தலைவர் இல்லாமல் இத்தனையும் சீராகச் செயல்பட முடியாது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர். நாம் பலவற்றைப் பார்க்கலாம், பார்க்காமலும் இருக்கலாம். “நான் பார்க்கவில்லை” என்பதால், ஒரு நபர் இல்லவே இல்லை என்று சொல்வது சரியான வாதம் அல்ல.

நம் ஜன்னலுக்கு வெளியே கார் செல்வதை நான் பார்க்கவில்லை. ஆனால், அதன் ஒலியை வைத்து கார் செல்வதை அறிகிறேன், அங்கு ஓட்டுநர் இருப்பதையும் அறிகிறேன். உங்களால் பார்க்க முடியாவிட்டாலும், அவர் இருக்கிறார் என்பதை ஏற்கத்தான் வேண்டும். காரின் ஒலி காரின் இருப்பையும் ஓட்டுநரின் இருப்பையும் எடுத்துரைக்கின்றது. இவற்றை “பார்க்கவில்லை” என்பதற்காக, அங்கு ஓட்டுநர் இல்லை என்றாகிவிடுமா?

எனவே, “என்னால் பார்க்க இயலவில்லை” என்பது குழந்தைத்தனமான வாதம்.

தற்செயலாக நிகழ்கிறதா?

பக்தர்: அனைத்தும் தற்செயலாக (by chance) நிகழ்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: “தற்செயலாக நிகழ்கின்றன” என்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும். ஒரு குழந்தை வேண்டுமானால், “அது தற்செயலாக வந்தது” என்று கூறலாம். நீங்கள் முறையாக விளக்கமளிக்க வேண்டும். எதை எடுத்துக் கொண்டாலும், தற்செயலாக வந்தது என்று சொல்லிவிடலாம். யார் வேண்டுமானாலும் இவ்வாறு கூறலாம். ஆனால், அது சரியான விளக்கம் அல்ல. எப்படியோ வந்தது என்பது சரியான விளக்கம் ஆகாது. அஃது அறிவுபூர்வமானதல்ல.

“நான் இவ்வுலகில் தற்செயலாக பிறவி எடுத்தேன்,” என்று கூறுவது சரியல்ல. எனக்கு ஒரு தந்தை இருக்க வேண்டும், தாய் இருக்க வேண்டும், இருவரும் இணைந்ததன் விளைவாகவே நான் பிறந்தேன். இதுவே விஞ்ஞானபூர்வமானது. நான் வானத்திலிருந்து குதித்தேன் என்பது சரியல்ல. இப்படிப்பட்ட தர்க்கத்திற்கு மதிப்பில்லை. இந்த முட்டாள்தனமான விளக்கத்திற்கு உங்களால் மதிப்பளிக்க முடியுமா? புத்தியுள்ள எந்த மனிதனும் “நாம் தற்செயலாக வந்தோம்” என்ற விளக்கத்தை ஏற்க மாட்டான்.

எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. “தற்செயலாக நிகழ்கிறது” என்பது அறியாமை. அவ்வாறு கூறும் விஞ்ஞானிகள் அயோக்கியர்கள். “நான் பார்த்ததில்லை, ஆயினும், அனைத்தும் தற்செயலாகவே நிகழ்ந்தன,” “ஒரு துகள் இருந்தது,” என்று அவர்கள் சொல்வதெல்லாம் முட்டாள்தனமான அனுமானங்கள். அனைத்தையும் இயக்குபவர் ஒருவர் உள்ளார் என்பதே சிறந்த அறிவு.

டோக்யோ நகரின் அமைப்பைக் கண்டு இங்கே ஓர் அரசாங்கம் இருக்கிறது என்பதை உங்களால் எவ்வாறு அறிய முடிகிறதோ, அவ்வாறே போதிய அறிவு இருக்குமானால், அனைத்திற்கும் மேலே உயரிய இயக்குநர் ஒருவர் உள்ளார் என்பதையும் உங்களால் அறிய முடியும். அதுவே ஆத்திகம்.

அனைத்திற்கும் பின்னால்

அனைத்தையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். ஓர் இலையைக்கூட ஆராய்ந்து பாருங்கள்; எத்தனை நுண்ணிய நார்கள், நரம்புகள் ஒன்றோடொன்று பின்னி நிற்கின்றன. ஒரு சிறு காயிலும் கனியிலும்கூட எத்தனை வேலைப்பாடுகள் உள்ளன! அவை தற்செயலாக வந்தன என்று சொல்வது தவறு. அதன் பின்னால் ஒரு மூளை வேலை செய்கிறது என்பதை உணர வேண்டும். அந்த மூளைக்குப் பின்னால் இருக்கும் மூளை யார்? அந்த மூளைக்குப் பின்னால் யார்? அதற்கு பின்னால், அதற்கு பின்னால், அதற்கு பின்னால்… பஹுனாம் ஜன்மனாம் அந்தே, அந்த மூளை எது என்று பல பிறவிகளாகத் தேடி, வாஸுதேவ: ஸர்வம் இதி என்ற முடிவிற்கு வருகிறார்கள். கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணமானவர் என்ற முடிவிற்கு வருகிறார்கள்.

கிருஷ்ணரும் பகவத் கீதையில் (10.8) கூறுகிறார், அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, நானே அனைத்திற்கும் மூலம்; என்னிலிருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.” எனவே, “இவரே முழுமுதற் கடவுள், இவரே தலைவர், இவரே கட்டுப்படுத்துபவர், இவரே அனைத்தையும் பராமரிப்பவர்,” என்று யாரொருவர் உணர்கிறாரோ, அவர் கிருஷ்ண பக்தராகி சரணடைகிறார்.

கிருஷ்ணரைக் காணுதல்

கிருஷ்ண பக்தர்கள் முட்டாள்கள் அல்லர். கிருஷ்ணரிடம் சரணடைதல் கண்மூடித்தனமானது அல்ல.

விருந்தினர்: நான் இதுவரை கடவுளைப் பார்த்ததில்லை. குறைந்தபட்சம் கடவுளின் குரலைக் கேட்க விரும்புகிறேன்…

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் பகவத் கீதையைப் பேசுகிறார். நீங்கள் அதனை வாசிக்கும்போது, அவர் உங்களுடன் பேசுகிறார். நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தையும் உச்சரிக்கலாம். அது ஷப்தப்ரஹ்ம, ஆன்மீக ஒலி அதிர்வு. இதுவே கடவுளைக் காண்பதற்கான வழிமுறை.

நீங்கள் கடவுளைக் காண விரும்பினால், காணலாம். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், ப்ரபாஸ்மி ஷஷிஸூர்யயோ:, “நான் சூரிய சந்திரனின் ஒளியாவேன்.” இது கடினமா? கிருஷ்ணர் தம்மை சூரிய ஒளியாகக் கூறுவது பொய்யல்ல. அஃது உண்மை. அவர் உங்களைப் பார்க்கச் சொல்கிறார். நீங்கள் கூர்ந்து பார்த்தால், கிருஷ்ணரைப் பார்க்கலாம்.

நீங்கள் கிருஷ்ணரைக் காண விரும்பினால், அவரது அறிவுரையின்படி அவரைக் காண வேண்டும். கிருஷ்ணர் கூறுகிறார், ரஸோ ’ஹம் அப்ஸு கௌந்தேய, “நானே நீர் மற்றும் திரவங்களின் சுவை.” நீர், பால் முதலிய எந்த திரவத்தைப் பருகினாலும், கிருஷ்ணரது அறிவுரையின்படி சிந்தித்தால், அந்தச் சுவையில் உங்களால் கிருஷ்ணரைக் காண முடியும்.

இதுபோன்ற பல உதாரணங்களை கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். உங்களுடைய சொந்த வழியில் கிருஷ்ணரைக் காண முயலாதீர், அவ்வாறு அவரைக் காண இயலாது. கடவுள் பலவிதமாகத் தோற்றமளிக்கும்போது, நீங்கள் “கடவுளைக் கண்டதில்லை” என்று ஏன் கூறுகிறீர்? சூரிய ஒளியைக் காண்கின்றீர், நிலவொளியைக் காண்கின்றீர், மலர்களின் நறுமணத்தை நுகர்கின்றீர்.

பகவத் கீதையை நாடுங்கள்

எனவே, கிருஷ்ணரை அவரது அறிவுரையின்படி பார்த்தால், மிக விரைவில் அவரைக் காண முடியும்; “காண முடியாது” என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு நொடியிலும் கிருஷ்ணரைப் பார்க்கலாம். ப்ரேமாஞ்சன சுரித பக்தி விலோசனேன ஸந்த: ஸதைவ, நீங்கள் கிருஷ்ணரை 24 மணி நேரமும் பார்க்கலாம். கிருஷ்ணரின் தூய பக்தர்கள் கிருஷ்ணரைப் பார்க்கின்றனர், கிருஷ்ணரைத் தவிர வேறொன்றையும் பார்ப்பதில்லை.

பகவத் கீதையை உன்னிப்பாகப் படிக்கும்போது கிருஷ்ணரைப் பார்க்க முடியும், அப்போது எல்லாம் விளங்கும். இதுவே இறை விஞ்ஞானம். அதையே நாங்கள் வழங்குகிறோம். பகவத் கீதையைத் தவறாகப் பொருள் கொண்டாலோ, சொந்த விளக்கங்களால் அதனை மாசுபடுத்தினாலோ, கடவுளைக் காண முடியாது. அயோக்கியர்களும் விஞ்ஞானிகளும் போலி சாமியார்களும் இதை மாசுபடுத்துகின்றனர்; ஏனெனில், அவர்கள் தங்களை கிருஷ்ணரிலிருந்து தொடங்கும் குரு பரம்பரையில் இணைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பெரும் மேதைகளாக இருந்தாலும், கற்றறிந்தவர்களாக இருந்தாலும், அயோக்கியர்களே ஆவர்.

பெரும் ஆச்சாரியர்கள், கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள். கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டிருந்தான், ஸர்வம் ஏதத் ருதம் மன்யே யன் மாம் வதஸி கேஷவ, “நீங்கள் கூறியவை அனைத்தையும் உண்மை என்று நான் ஏற்கிறேன்.” அசுர குணம் படைத்தவர்களுக்கு கிருஷ்ணரின் தன்மை புலப்படாது. எனவே, கிருஷ்ணரை அறிதல் என்பது ஒரு விஞ்ஞானம், இதற்குரிய வழிகாட்டுதலின்படி இதனை அணுக வேண்டும். அப்போது உண்மையை உணருவீர். நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives