வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
“ஐயா பசிக்குது,” என்று தழுதழுத்த குரலுடன் ஒட்டிப்போன வயிற்றுடன் பிச்சைக் கேட்பவர்களையும், “எனக்கு அப்பா, அம்மா இல்லை; நான் ஓர் அநாதை” என்று ஏக்கத்துடன் சொல்லும் பச்சிளம் குழந்தைகளையும் காணும் இதயங்கள் இயற்கையாக இரக்கப்படுகின்றன. இவர்களுக்கு தம்மால் முடிந்த ஏதேனும் ஓர் உதவியை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றன. அத்தகு இளகிய நெஞ்சம் கொண்டோர், கோவிலுக்குச் சென்று பெருமாளுக்கு செலவளிக்கும் பணத்தில் நான்கு ஏழைகளுக்கு உதவலாமே என்று நினைக்கின்றனர். அப்போது அவர்கள் உரைக்கும் வாசகம், மக்கள் தொண்டு மகேசன் தொண்டு.
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்னும் வாசகம், மானவ சேவா மாதவ சேவா என்னும் வாசகத்தின் தமிழாக்கமாகும். மூல வாசகத்தில் இருக்கும் மாதவ என்னும் பெயர் பகவான் கிருஷ்ணரை அல்லது விஷ்ணுவைக் குறிப்பதாகும்; இதன் தமிழாக்க வாசகத்தில் இருக்கும் மகேசன் என்னும் பெயர் (விஷ்ணுவிற்கும் பொருந்தும் என்றபோதிலும்) பெரும்பாலும் சிவபெருமானைக் குறிப்பதாகும். இந்த கவர்ச்சியான வாசகத்தைப் பின்பற்றுவோர் மாதவனுக்கும் மகேசனுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அடிப்படையில், இந்த வாசகம், “மக்களுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யப்படும் தொண்டு” என்னும் பொருளில் அறியப்படுகிறது.
வாசகத்தின் விளக்கங்கள்
நாத்திக எண்ணத்துடன் மக்கள் தொண்டு புரிவோர் ஒருபுறம் இருக்க, “மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்பதை மேற்கோள் காட்டி சமூக நலத் தொண்டுகளில் ஈடுபடுவோர் பலர். அவர்கள் இந்த வாசகத்திற்கு கூறும் விளக்கத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்: (1) தெரியாத கடவுளுக்கு தொண்டு செய்வதைக் காட்டிலும் கண்களுக்குத் தெரிந்த நபருக்கு தொண்டு செய்யலாம், (2) கடவுளின் பிள்ளைகளுக்குத் தொண்டு செய்யும்போது அது கடவுளை மிகவும் திருப்திப்படுத்தும், (3) உலகிலுள்ள எல்லோரும் கடவுள்; அந்த கடவுள் கஷ்டப்படும்போது (அதாவது, கடவுள் ஏழையாக இருக்கும்போது) அவருக்குத் தொண்டு செய்ய வேண்டும்.
இவை ஒவ்வொன்றையும் சற்று ஆராயலாம்.
கண்களுக்குத் தெரிந்தவருக்கு தொண்டு
“கடவுள் யார் என்று எங்களுக்குத் தெரியாது, கண்களில் தெரிந்தவர்களுக்கு தொண்டு செய்கிறோம்”–இதனை நாம் அடிக்கடி கேட்கிறோம். கடவுள் யார் என்பதையே அறியாத இவர்கள், கடவுளுக்கு எவ்வாறு தொண்டு செய்வது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில், மக்களுக்குத் தொண்டு செய்வதே மாதவனுக்கு செய்யும் தொண்டு என்று கூறுவதில் என்ன நியாயம்? மாதவன் யார் என்றே தெரியாது, ஆனால் மாதவனுடைய சேவை இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்?
உண்மையில், கடவுள் யார் என்று தெரியாதவர்கள் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதில் தவறில்லை; மாதவனின் தூய்மையான தொண்டில் ஈடுபட இயலாதோர் மக்களின் தொண்டில் ஈடுபட வேண்டும் என்பதை கீதையில் (12.11) கிருஷ்ணரும் உரைக்கின்றார். மாதவனின் தொண்டில் ஈடுபட இயலாதோர்–நன்றாக கவனியுங்கள்! வேறு விதமாகக் கூறினால், மாதவனின் தொண்டில் ஈடுபடுவோர் மக்களின் தொண்டில் ஈடுபடத் தேவையில்லை என்றும், மக்களின் தொண்டில் ஈடுபடுதல் ஒருபோதும் மாதவனின் தொண்டாக முடியாது என்றும் இது பொருள்படும்.
மாதவனுக்கு பூரணமான அன்புத் தொண்டாற்றுவதே எல்லாவற்றிலும் சிறந்ததாகும்; அதைச் செய்ய இயலாதவர்கள் பக்தித் தொண்டின் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்; அதையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கிருஷ்ணர் கோவிலுக்கு அர்ப்பணிக்கலாம்; அப்படியும் அர்ப்பணிக்க இயலாதவர்கள் ஞானம், தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்; அதிலும் ஈடுபட இயலாதோர் தமது செல்வத்தில் ஒரு பகுதியை மருத்துவமனை, கல்விக்கூடம் போன்றவற்றில் செலவிடலாம்–இதை நாம் பகவத் கீதையிலிருந்து (12.8-12) அறிகிறோம். எனவே, மிகவும் உன்னதமானதாகக் கருதப்படும் மாதவனின் தொண்டினையும், கடைநிலையாகக் கருதப்படும் சமூகத் தொண்டினையும் சமமாகக் கருதுதல் தகுமோ!
சிறு உதாரணம்: பென்ஸ் கார் வாங்க இயலாதோர் ஹுன்டாய் கார் வாங்கலாம், ஹுன்டாய் கார் வாங்க இயலாதோர் நானோ கார் வாங்கலாம், நானோ கார் வாங்க இயலாதோர் பைக் வாங்கலாம், பைக் வாங்க இயலாதோர் சைக்கிள் வாங்கலாம்–இஃது இயற்கையான ஒன்று. சைக்கிள் வாங்குவதும் பென்ஸ் கார் வாங்குவதும் சமம் என்று கூறினால் அஃது எந்த விதத்தில் நியாயம்? சைக்கிள் வாங்குவோரை (சமூகத் தொண்டில் ஈடுபடுவோரை) யாம் குறை கூறவில்லை, ஆனால் சைக்கிள் வாங்கிவிட்டு பென்ஸ் கார் வாங்கிவிட்டதாக (மாதவனின் தொண்டில் ஈடுபட்டுவிட்டதாக) கூறுவோரை என்னவென்று சொல்வது? அறிவுப் பற்றாக்குறை என்றே கூற முடியும்.
கடவுளைப் பற்றி தெரியாது என்பதால், அதை அப்படியே விட்டுவிடுவது புத்திசாலித்தனமல்ல; அறியாதவற்றை அறிந்துகொள்ள முயற்சி செய்வதே அறிவு. ஒரு விஷயத்தைப் பற்றி அறியாமலேயே பேசுவது அறிவல்ல.
கடவுளின் பிள்ளைகளுக்கான தொண்டு
மற்றொரு தரப்பினர், மக்கள் அனைவரையும் இறைவனின் பிள்ளைகளாக ஏற்று, ஏழைகளுக்கு சேவை செய்வதாகக் கூறுகின்றனர். இவர்கள் ஆன்மீக இயக்கம் என்ற பெயரில் சமூக சேவை செய்பவர்கள். “கடவுளுக்கு நாம் தொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை, துன்பப்படும் அவரது பிள்ளைகளுக்குத் தொண்டு செய்தால் போதும்”–இதுவே இவர்களின் கொள்கை. மேலோட்டமாகப் பார்த்தால் இஃது இறையுணர்வு கொண்ட செயலாகத் தோன்றினாலும், ஆழமாகப் பார்த்தால் “இறைவன் தமது பணியை ஒழுங்காகச் செய்வதில்லை” என்று குற்றம் சாட்டுவதுபோல உள்ளது. இவர்களின் கருத்து, பிள்ளைகளை ஈன்றெடுத்த கடவுள் அவர்களைப் பராமரிக்க இயலாமல் (அல்லது தெரியாமல்) இருப்பதுபோல உள்ளது.
ஒருமுறை ஸ்ரீல பிரபுபாதர் தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகக் கொடுத்தார். அவர் கொல்கத்தாவில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி தனது இளைய மகனை அடித்துக் கொண்டிருந்தாள். விசாரணையில் தெரிய வந்தது என்னவெனில், டைபாய்டு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய அண்ணனுக்கு, அம்மா வெளியே சென்றிருந்த நேரத்தில், அச்சிறுவன் பரோட்டா கொடுத்தான் என்பதே. டைபாய்டு நேரத்தில் திடமான உணவு ஏதும் சாப்பிடக் கூடாது, ஆனால் தனது அண்ணனின் பத்திய உணவைக் கண்டு மனமுருகிய சிறுவன் அவனுக்கு பரோட்டா கொடுத்தான். மிகவும் ஆபத்தான அச்செயலைக் கேள்விப்பட்ட தாய், தனது இளைய மகனை நைய புடைத்தாள்.
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது யாதெனில், அனைவருக்கும் அன்னையாக, தந்தையாக விளங்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது குழந்தைகளைப் பராமரிப்பதில் வல்லவர்; அவர் யாருக்கேனும் பத்திய சாப்பாடு கொடுத்திருந்தால், அதற்கென்று சில காரணங்கள் இருக்கும். சிறுவர்களான நம்மால் அதனை அறிய முடியாமல் இருக்கலாம். அம்மா கொடுக்க மறுக்கிறாள் என்பதற்காக, பரோட்டாவைக் கொடுத்து நமது சகோதரர்களுக்கு பிரச்சனையை விளைவித்துவிடக் கூடாது.
கடவுளால் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை, உடையளிக்க முடியவில்லை, பாதுகாப்பு தர இயலவில்லை என்னும் எண்ணங்கள் கடவுளைப் பற்றிய அறிவின்மையைக் காட்டுகின்றன.
ஆன்மீக இயக்கம் என்ற பெயரில், ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் எடுத்துரைப்பதற்கு பதிலாக, சமூக சேவை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இன்றைய பொதுமக்கள், “ஆன்மீகம் என்றால் சமூக சேவை” என்று நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்த அவலமான அறியாமையைப் பரப்பி ஆன்மீகத்தை அடியோடு அழிக்கும் அத்தகு போலி ஆன்மீக இயக்கங்கள் நிச்சயம் கண்டனத்திற்குரியவை. சமூக சேவை செய்ய வேண்டும் என்றால் “சமூக சேவை” என்ற பெயரில் செய்யலாமே, ஏன் ஆன்மீகம் என்று அழைக்க வேண்டும்?
எல்லோரும் கடவுள்
இவை ஒருபுறம் இருக்க, மற்றொரு தரப்பினர், “நாம் அனைவருமே கடவுள்; நம்மில் சிலர் (அதாவது சில கடவுள்கள்) ஏழைகளாக உள்ளனர், அவர்களுக்கு பணக்கார கடவுள்கள் உதவி செய்ய வேண்டும்,” என்று கூறுகின்றனர். இப்பிரிவினரில் சிலர், ஏழைக் கடவுள்களுக்கு தரித்ர-நாராயணர்கள் என்று பெயரும் கொடுத்துள்ளனர்.
அடிப்படையான கேள்வி: கடவுள் எப்படி ஏழையாக இருக்க முடியும்? அவர் ஏன் இந்த உலகில் துன்பப்பட வேண்டும்?
கடவுள் என்பவர் உலகிலுள்ள அனைத்திற்கும் உரிமையாளராக இருக்க வேண்டும், மற்றவரிடம் கையேந்துபவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்பவர் அனைவருக்கும் உணவளிப்பவர், மற்றவரிடம் உணவிற்காக நிற்பவர் அல்ல. கடவுள் என்பவர் எல்லாவற்றையும் படைத்தவர், யாராலும் படைக்கப்பட்டவர் அல்ல. கடவுள் என்பவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர், பசியாலும் பட்டினியாலும் கட்டுப்படுத்தப்படுபவர் அல்ல. உண்மையில், ஏழைகள் மட்டுமல்ல, உலகின் மிகச்சிறந்த பணக்காரர்கள் உட்பட யாரும் கடவுளாக முடியாது.
ஏழைகளை தரித்ர-நாராயணர்கள் என்று அழைத்தல், கவர்ச்சியான வாசகமாக இருக்கலாம். ஆனால் இதில் எள்ளளவும் அர்த்தமில்லை. இது பகவான் நாராயணரை அவமதிக்கும் செயலாகும். செல்வத்தின் அதிபதியாகத் திகழும் லக்ஷ்மியின் கணவரான நாராயணரை யாருடனும் ஒப்பிட முடியாது, ஏழைகளுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன? நாட்டின் பிரதமர் என்று ஒருவர் இருக்கும்போது, சாதாரண குடிமக்களில் யாரையேனும், தரித்ர-பிரதமர் என்று நாம் அழைத்தால், அதை சட்டம் ஏற்குமா?
ஏழைகளைக் கடவுள் என்று கூறி, அவர்களுக்கு உணவளிப்பதற்காக கோழி, ஆடு போன்ற விலங்குகளைக் கொன்று அசைவ உணவு படைக்கின்றனர். எல்லாரும் கடவுள் என்றால், அந்த ஆடு, கோழி போன்றவையெல்லாம் கடவுள் இல்லையா? எல்லோரும் கடவுள் என்ற எண்ணத்தில் சமூக சேவை செய்வது முற்றிலும் அபத்தமானது.
கேவலம் என்னவெனில், இவையனைத்தும் ஆன்மீகம் என்ற பெயரில் அரங்கேற்றப்படுவதே.
சற்று யோசித்துப் பார்க்கலாம்
மக்கள் தொண்டு மாதவன் தொண்டு என்று கூறுவதில் எந்தவொரு பொருளும் இல்லை என்பதை மேற்குறிப்பிட்ட மூன்று விளக்கங்களிலிருந்து அறிந்தோம். மேலும், மானவ சேவா மாதவ சேவா என்னும் வாசகம் சாஸ்திரங்களில் எங்கும் காணப்படவில்லை. அப்படியெனில், மக்களுக்கு செய்யப்படும் தொண்டிற்கும் இறைவனுக்கு செய்யப்படும் தொண்டிற்கும் என்ன சம்பந்தம்?
முன்னரே கூறியபடி, மாதவனின் தொண்டில் ஈடுபட முடியாதவர்கள், மக்களின் தொண்டில் ஈடுபடலாம். அவ்வாறு மக்கள் தொண்டில் (புண்ணிய செயல்களில்) ஈடுபடுவோர், காலப்போக்கில் ஸத்வ குணத்தை (நற்குணத்தை) வளர்ப்பர். ஏதேனும் அதிர்ஷ்டத்தினால் அவர்கள் தூய பக்தர்களைச் சந்திக்க நேரிட்டால், அந்த பக்தர்களின் கருணையினால், மாதவனின் தொண்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிட்டும்.
புண்ணிய காரியங்கள் (மக்கள் தொண்டுகள்) நம்மை ஸ்வர்க லோகங்களுக்கு அழைத்துச் செல்பவை, புண்ணியத்தின் பலன்கள் தீர்ந்தவுடன் நாம் மீண்டும் இவ்வுலகில் பிறக்க வேண்டும். ஆனால் பக்தியானது (மாதவனின் தொண்டானது) நம்மை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது, அங்கு சென்ற பின்னர் நாம் மீண்டும் இவ்வுலகில் பிறக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மக்கள் தொண்டையும் மாதவன் தொண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
சமூக சேவையில் இருக்கும் பிரச்சனைகள்
சமூக சேவைகள் புண்ணிய செயல்களாக கருதப்படுவதாகக் கூறினோம். இருப்பினும், “சமூக சேவைகள்” என்ற பெயரில் இன்றைய உலகில் செய்யப்படும் பல்வேறு செயல்கள், பாவ காரியங்களாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
ஏழைகளில் பெரும்பாலானோர் ஏழைகளாக இருப்பது பணப் பற்றாக்குறையினால் அல்ல, குடிப்பழக்கத்தினாலேயே. அவர்களுக்கு நாம் உணவளித்தால், உணவிற்கு செலவளிக்க வேண்டிய தொகையை குடியில் கழிப்பர். அதற்கான பாவம் நம்மை வந்து சேரும்.
ஏழைகளுக்கு உணவளிக்கின்றேன் என்ற நல்ல(?) எண்ணத்தில், பல இடங்களில் அவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால், அசைவ உணவை அணுக முடியாமல் (குறைந்த பாவத்துடன்) வாழ்பவர்களுக்கு, அசைவ உணவு கொடுப்பதன் மூலமாக பாவத்தைக் கொடுக்கின்றனர். அசைவ உணவு கொடுப்பவரும் சரி, அதை வாங்கி உண்பவர்களும் சரி–நரகத்திற்குச் செல்லப் போகிறார்களே! நரகத்திற்கு அனுப்புவது சமூக சேவையா?
கண் தெரியாதவருக்கு சிகிச்சை வழங்கிய பின்னர், அவர் தனது நல்ல கண்களால் செய்யும் பாவங்களுக்கு நாமும் பொறுப்பாளியாக வேண்டுமே! எய்ட்ஸ் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு கருத்தடை முறைகளை விளம்பரப்படுத்தி, தகாத பாலுறவை ஊக்குவிக்கும் சமூக சேவகர், அந்த பாலுறவின் பாவத்தில் ஒரு பகுதியை நிச்சயம் பெற வேண்டும்.
இரயிலில் பிச்சைக் கேட்பவரில் பலர் உணவை வாங்க மறுப்பதையும், காசு கொடுத்தால், அதைக் கொண்டு சிகரெட் வாங்குவதையும் கண்டுள்ளோம்; நமது பணத்தில் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு, நாமும் பங்கு கொள்ள நேரிடும். போதையிலும் சூதாட்டத்திலும் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உதவிகள் கீழ்த்தரமான உதவிகள் என்று அறியப்படுகிறது. பாத்திரமறிந்து பிச்சையிடுதல் அவசியம், பாகுபாடின்றி தானம் வழங்குதல் நல்லதல்ல.
முறையான நபருக்கு, முறையான இடத்தில், பலன்களை எதிர்பார்க்காமல் வழங்கப்படுவதே சரியான தானம் என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து (17.20) அறிகிறோம். அத்தகைய முறையான தானம் மட்டுமே புண்ணியமாகக் கருதப்படும்.
தொண்டு நிறுவனங்களில் இருக்கும் பிரச்சனைகள்
கறுப்புப் பணம், வருமான வரி ஏய்ப்பு போன்ற பிரச்சனைகளில் அவ்வப்போது தொண்டு நிறுவனங்கள் சிக்குவதை பத்திரிகைகளில் காண்கிறோம். தொண்டு செய்வதன் பேரில் பணத்தை வசூலித்து, அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை தமது சொந்த செலவிற்கு உபயோகிப்போர் பலர். தாங்கள் கட்டும் சிறிய நிழற்குடை போன்ற தொண்டிற்காக, வாரந்தோறும் கூடி குடித்துவிட்டுக் கும்மாளம் போடுவோரையும் நாம் காண்கிறோம். பத்தாயிரம் ரூபாய்க்கு தொண்டு செய்து, அதை விளம்பரப்படுத்துவதற்காக அதைவிட அதிகமான பணத்தை செலவிடுவோரும் உள்ளனர்.
தொண்டு செய்வதால் பிரச்சனைகள் முடிந்து விடுமா?
ஒருவருக்கு ஒருவேளை உணவளித்தால், அடுத்த வேளை பசிக்காதா? ஒருமுறை நோயை குணப்படுத்தி விட்டால், அடுத்த நோய் வராதா? கல்வி மட்டும் கொடுத்தால் போதுமா, வேலை வேண்டாமா? வேலையை வாங்கிக் கொடுத்தால், வேலையில் பிரச்சனைகள் இருக்காதா? அலுவலக பிரச்சனை, வீட்டு சண்டை, நிலத் தகராறு, பணப் பிரச்சனை, மனப் பிரச்சனை–என எத்தனையோ பிரச்சனைகள் நம்மை மொய்த்துக் கொண்டுள்ளன.
பிரச்சனைகள் இவ்வுலகில் என்றும் நீடித்திருப்பவை; அதுவே இவ்வுலகின் தன்மை–இதை நாம் பகவத் கீதையிலிருந்து (8.15) அறிகிறோம். இந்த உலகம் துன்பங்களால் நிறைந்தது, தற்காலிகமானது என்று கிருஷ்ணர் கூறுவதை நாம் மறக்கலாமா?
மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம் உண்மையாக விரும்பினால், அவர்களுக்கு ஆன்மீக அறிவை வழங்க வேண்டும். இல்லையேல், ஒரு பிரச்சனை தீர்வதற்கு முன்பாக மறு பிரச்சனை உருவெடுத்து நிற்கும். பௌதிக ரீதியில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சி, ஒரு தோளில் உள்ள சுமையை மறுதோளிற்கு மாற்றுவதைப் போன்றது; சுமையை இறக்கினாலொழிய பிரச்சனைகள் என்றும் முடியாதவை.
சமூக சேவையின் இறுதி பிரச்சனை
கீழ்நிலை சிறையில் இருப்பவரை நல்ல சிறைக்கு மாற்றுவதால் என்ன பயன்? ஒருபுறம் பார்த்தால், அது நல்ல செயல் என்று சொல்லலாம்; ஆனால் கீழ்நிலை சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி அதற்குத் தகுந்த குற்றத்தைச் செய்தவன். அவனை மேலே கொண்டு வருவதால், தனது குற்றம் பெரிதல்ல என்று அவன் நினைப்பான்; திருந்துவதற்கான வாய்ப்பை இழந்துவிடுவான்.
ஒவ்வொருவரும் தான் செய்த குற்றத்திற்கு ஏற்றாற்போல வாழ்கின்றனர், கடவுள் அவர்களுக்கு உகந்த தண்டனையையும் பரிசையும் கொடுத்து வைத்துள்ளார். அவற்றை மாற்ற நினைப்பது கடவுளின் ஏற்பாட்டை சோதிப்பதாகும். ஒரு பிள்ளைக்கு விருந்தையும் மற்றொரு பிள்ளைக்கு பத்திய சாப்பாட்டையும் ஒரு தாய் வழங்கினால், அதில் நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும். அதனைப் புரிந்துகொள்ளாமல் அனைவருக்கும் விருந்து வழங்க நினைப்பது முட்டாள்தனம்.
ஒரு கொப்பளத்தினை வெறுமனே ஊதினால் மட்டும் போதாது; கொப்பளத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைப் போக்க முயற்சி செய்ய வேண்டும், அதுவே புத்திசாலித்தனம்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு என்ன?
ஓர் அநாதை சிறுவனைக் காண நேர்ந்தால், நாம் அவனுக்கு உணவு கொடுக்கலாம், உடை கொடுக்கலாம், அல்லது கல்வி கொடுக்கலாம். ஆனால் அவனது தந்தை யாரென்று நமக்குத் தெரிந்தால், அந்த தந்தையிடம் அவனை அழைத்துச் செல்வதே அவனுக்கு செய்யும் மிகச்சிறந்த சேவையாக அமையும். அவனது தந்தை பணக்காரராக இருந்தால், அவனது எல்லா தேவைகளும் அதனால் பூர்த்தியடையும்.
அதுபோல, இவ்வுலகில் இருப்போர் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிள்ளைகள், அவரை மறந்து இவ்வுலகில் அநாதைகளாகத் துன்பப்படுகின்றனர். இந்த உண்மையை அறிந்த ஆன்மீகவாதிகள், அவர்களை பணக்கார தந்தையிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவர். அப்படி ஒப்படைத்துவிட்டால், அவர்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
மக்களை பணக்கார தந்தையான இறைவனிடம் அழைத்துச் செல்வதற்கான வழிமுறை, பக்தித் தொண்டு, அல்லது மாதவ சேவா எனப்படுகிறது. மாதவனுக்குச் செய்யப்படும் அத்தகு தொண்டினால் அனைவரும் திருப்தியடைய முடியும். தொண்டு செய்பவரும் சரி, தொண்டை ஏற்பவரும் சரி–நிச்சயம் திருப்தியடையலாம். இல்லையேல் யாரும் திருப்தியடைய முடியாது.
மாதவனுக்கு தொண்டு செய்து அவரை திருப்தி செய்வதன் மூலமாக உலகத் தேவைகள் அனைத்தையும் திருப்தி செய்ய முடியும். மாதவனுக்கு செய்யும் சேவைகள், மனிதர்களுக்கு மட்டுமின்றி, எல்லா உயிர்களுக்கும் மிகவுயர்ந்த நன்மையை வழங்குபவை. ஓர் ஆரம்ப நிலை பக்தர் கோவிலிலுள்ள மணியை அடித்தால், அச்செயல் நூற்றுக்கணக்கான மருத்துவ மனைகள், கல்விக்கூடங்களை நிறுவுவதைக் காட்டிலும் மக்கள் அனைவருக்கும் பௌதிக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நன்மை பயக்கும் செயல் என்று ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் கூறுவதுண்டு. ஏனெனில், அச்செயல் ஜீவனை அவனது நித்திய தந்தையான ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைக்கக் கூடியதாகும்.
உண்மையில், மாதவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் எதற்கும் பஞ்சம் இல்லை. தற்போதைய மக்கட்தொகையைக் காட்டிலும் முப்பது மடங்கு அதிகமான மக்களுக்கு நமது பூமியினால் உணவளிக்க முடியும். துளியளவு உண்ணும் எறும்பு முதல், டன் கணக்கில் உண்ணும் யானை வரை அனைவருக்கும் அவரே உணவளிக்கின்றார். “நாம் அனைவரும் ஆத்மாக்கள், நமது தற்போதைய நிலை பூர்வ ஜன்ம கர்மத்தை அடிப்படையாகக் கொண்டது” என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால், இருப்பதை வைத்து நம்மால் மகிழ்வுடனும் இறையுணர்வுடனும் வாழ முடியும்; இல்லையேல் பிரச்சனைகளுக்கு முடிவு ஏதும் இருக்காது. மக்கள் இறையுணர்வுடன் வாழ்ந்த காலத்தில் பிரச்சனைகள் அதிக அளவில் இல்லை. கடவுளை ஒதுக்கிவிட்டு பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது கண்களை விற்று அழகான வரைபடத்தை வாங்குவதைப் போன்றது.
ஒருமுறை ஸ்ரீல பிரபுபாதரிடம் ஒருவர் சவால் விடுத்தார்: “மக்கள் சாப்பிடுவதற்கு உணவு இல்லாதபோது, கடவுளைப் பற்றியும் ஆன்மீகத்தைப் பற்றியும் பேசுவது ஆடம்பரமாகவும் அவசியமற்றதாகவும் தெரியவில்லையா?” ஸ்ரீல பிரபுபாதரோ அவருக்கு மறுசவால் விடுத்தார்: “உங்களால் எவ்வளவு பேரை அழைத்து வர முடியுமோ அழைத்து வாருங்கள், நாங்கள் அவர்களை எங்களது கோவிலில் தங்க வைத்து, உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் தர தயாராக உள்ளோம். அவர்கள் தினமும் பதினாறு மாலை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்; மேலும், அசைவ உணவு, சூதாட்டம், போதைப் பொருட்கள், தகாத பாலுறவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அழைத்து வாருங்கள்.”
உண்மை அதுவே. கிருஷ்ண பக்தியில் பங்காற்றுவதால், மக்களின் அன்றாட அவசியத் தேவைகள் உட்பட எல்லா பிரச்சனைகளையும் வெற்றிகொள்ள முடியும். கிருஷ்ண பக்தியை வழங்குதல் என்னும் தொண்டினை நாம் மக்களுக்கு ஆற்றும்போது, அத்தகு மக்கள் தொண்டு மாதவனின் தொண்டாக முடியும். (பார்க்க, பக்கம் 20)
பூரண திருப்தியை நல்கும் மாதவன் தொண்டு
மக்கள் தொண்டு என்பது நாட்டைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ள அரசியல் தலைவர்களின் பணி, ஆன்மீக இயக்கங்களின் பணி அல்ல. மக்கள் தொண்டு முறையாகச் செய்யப்படும்போது புண்ணிய செயலாக கருதப்படும், அவை என்றும் மாதவனின் தொண்டாக முடியாது. மக்களின் பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வை வழங்கும் சமூக நலத் திட்டங்களை ஆன்மீகத்துடன் கலக்க வேண்டாம் என்று கூறி, மக்கள் தொண்டின் எல்லைகளைப் புரிந்துகொண்டு மாதவனின் தொண்டில் ஈடுபட அனைவரையும் அழைக்கின்றோம்.
ஸ்ரீமத் பாகவதத்தின் கீழ்காணும் ஸ்லோகம் (1.2.6), மாதவனுக்கு செய்யப்படும் தொண்டு மட்டுமே ஜீவனுக்கு பூரண திருப்தியை நல்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அஹைதுக்யப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி “எல்லாவற்றிலும் மிகவுயர்ந்த தர்மம், முழுமுதற் கடவுளுக்குச் செய்யப்படும் பக்தித் தொண்டே. இடையூறுகள் ஏதுமின்றி, பௌதிக ஆசைகளின்றி செய்யப்படும் அத்தகு பக்தித் தொண்டு மட்டுமே ஜீவனை முழுமையாக திருப்திப்படுத்தும்.”