ஸ்ரீ மாதவேந்திர புரி அவர்கள் ஸ்ரீ மத்வாசாரியரின் பரம்பரையில் வந்த மாபெரும் ஆச்சாரியர்களில் ஒருவர். ஸ்ரீ ஈஸ்வர புரியும் ஸ்ரீ அத்வைத ஆச்சாரியரும் இவருடைய இரண்டு முக்கிய சீடர்கள். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவர்கள் ஸ்ரீ ஈஸ்வர புரியிடமிருந்து தீக்ஷை பெற்றார். இவ்வாறாக, ஸ்ரீ மாதவேந்திர புரி அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பரம குருவாவார். பிரேம பக்தியின் உணர்ச்சிகளை முதலில் வெளிப்படுத்தியவர் இவரே.
இவருடைய பக்தியை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலையின் நான்காவது அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அந்த அத்தியாயத்திற்கான ஸ்ரீல பிரபுபாதரின் அறிமுகத்திலிருந்து சில பகுதிகள் பகவத் தரிசன வாசகர்களுக்காக.
“ஒருநாள் கோவர்தனத்தில் இருந்தபோது, கோபால விக்ரஹம் காட்டினுள் இருப்பதாக மாதவேந்திர புரி கனவு கண்டார். மறுநாள் காலை அவர் அக்கம்பக்கத்து நண்பர்களை அழைத்து காட்டினுள் இருந்த விக்ரஹத்தினை தேடி எடுத்து வெளிக்கொணர்ந்தார். அதன் பின்னர் அவர் கோவர்தன மலையின் உச்சியில் ஸ்ரீ கோபால்ஜி விக்ரஹத்தினை வெகு விமரிசையுடன் ஸ்தாபித்தார். கோபாலர் வழிபடப்பட்டார், அன்னக்கூட திருவிழா நிகழ்த்தப்பட்டது. இந்தத் திருவிழா அனைவரும் அறிந்த ஒன்று, அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்த பல்வேறு மக்கள் அதில் இணைந்து கொண்டனர். ஒருநாள் இரவில் மாதவேந்திர புரியின் கனவில் மீண்டும் தோன்றிய கோபால விக்ரஹம் அவரை ஜகந்நாத புரிக்குச் சென்று தனது உடலில் பூசிக்கொள்வதற்காக சற்று சந்தனத்தினை சேகரித்து வருமாறு கேட்டுக் கொண்டார். அக்கட்டளையினைப் பெற்ற மாத்திரத்தில் மாதவேந்திர புரி உடனடியாக ஒடிஸாவிற்குப் புறப்பட்டார். வங்காளத்தின் வழியாக பயணம் செய்து அவர் ரேமுணா கிராமத்தினை அடைந்தார், அங்கே கோபிநாத்ஜி விக்ரஹத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட திரண்ட பாலினால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த்தத்தின் (க்ஷீர) பானையினைப் பெற்றார். அந்த க்ஷீர பானையானது கோபிநாதரால் திருடப்பட்டு மாதவேந்திர புரிக்கு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து கோபிநாதரின் விக்ரஹம் க்ஷீர சோர கோபிநாதர், “க்ஷீர் பானையினை திருடிய விக்ரஹம்” என்று அறியப்படுகிறார். ஜகந்நாத புரியை அடைந்த பின்னர், மாதவேந்திர புரி சந்தனத்தினையும் கற்பூரத்தையும் எடுத்துச் செல்வதற்கு மன்னரிடமிருந்து அனுமதி பெற்றார். இரு மனிதர்களின் உதவியுடன் அவர் அப்பொருட்களை ரேமுணாவிற்கு கொண்டு வந்தார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய கோவர்தன மலையின் கோபாலர் அந்த சந்தனத்தினை கற்பூரத்துடன் குழைத்து கோபிநாதரின் உடலில் பூசுவதற்கு விரும்பினார். அச்செயல் கோவர்தனத்தில் உள்ள கோபால விக்ரஹத்தினைத் திருப்திப்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்ட மாதவேந்திர புரி அக்கட்டளையினை நிறைவேற்றி விட்டு ஜகந்நாத புரிக்குத் திரும்பினார்.
யஸ்மை தாதும் சோரயன் க்ஷீர-பாண்டம்
கோபீநாத: க்ஷீர-சோராபிதோ ’பூத்
ஸ்ரீ-கோபால: ப்ராதுராஸீத் வஷ: ஸன்
யத்-ப்ரேம்ணா தம் மாதவேந்த்ரம் நதோ
“நான் மாதவேந்திர புரிக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை அர்ப்பணிக்கின்றேன், அவர் ஸ்ரீ கோபிநாதரால் திருடப்பட்ட க்ஷீர பானையைப் பெற்றவராவார், கோபிநாதர் அதன் பின்னர் க்ஷீர சோர எனப் புகழப்பட்டார். மாதவேந்திர புரியின் அன்பினால் திருப்தியுற்ற கோவர்தனத்தின் விக்ரஹமான ஸ்ரீ கோபாலர் பொதுமக்களின் தரிசனத்திற்காக தோன்றினார்.”