ஸ்ரீல பிரபுபாதரின் முக்கியத்துவம்

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

 

ஸ்ரீல பிரபுபாதர்

அல்லது ஒப்பில்லாத இலக்கியங்களை அளித்த மிகவுயர்ந்த ஆன்மீக உலகத்திற்கு வேத ஞானத்தை நன்கு பிரச்சாரம் செய்த ஆச்சாரியர்களைக் குறிக்க “பிரபுபாதர்” என்னும் முறையான பட்டம் உபயோகிக்கப்படுகிறது. ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர், ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி பிரபுபாதர், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதர் ஆகியோர் சில உதாரணங்களாவர்.

இஸ்கான் பக்தர்கள் “பிரபுபாதர்” என்று கூறும்போது, அவர்கள் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரையே குறிப்பிடுகின்றனர். உலகின் ஆன்மீக வரலாற்றில் தன்னிகரற்ற இடத்தை வகிப்பதால், “ஸ்ரீல பிரபுபாதர்” என்ற பட்டம் அவருக்கு முற்றிலும் பொருத்தமானதே.

பிரபுபாதரைப் பற்றிய முன்குறிப்பு

“தவறாக வழிநடத்தப்பட்ட பாவகரமான சமுதாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவே பாகவதம் ஏற்பட்டுள்ளது,” என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (1.5.11) கூறப்பட்டுள்ளது. கற்றறிந்த வைஷ்ணவ பண்டிதர்கள், பாகவதத்தின் இந்த வாக்கியம், ஸ்ரீல அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சார இயக்கத்தையே குறிக்கிறது என்று உறுதி செய்துள்ளனர். ஸ்ரீல வியாஸதேவர் பாகவதத்தினை இயற்றி ஐந்தாயிரம் வருடங்களுக்குப் பின்னர், ஜடத் தன்மை எனும் காரிருளில் மூழ்கியிருந்த மனித சமுதாயத்தின் ஆன்மீக சீர்திருத்தத்திற்காக தனது பக்திவேதாந்தப் பொருளுரைகளை எழுதியவர் ஸ்ரீல பிரபுபாதரே. அப்பொருளுரைகள் அவரது மிக முக்கிய பங்காகத் திகழ்கின்றன.

மேலும், உலகத்தின் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் தனது திருநாமம் பரப்பப்படும் என்று பகவான் சைதன்ய மஹாபிரபு கூறியிருந்தார். அவரது சம்பிரதாயத்தைச் சார்ந்த ஆச்சாரியர்கள், கிருஷ்ண பக்தி பிரச்சாரம், கலி யுகத்தின் இருண்ட காலத்திலும் பத்தாயிரம் வருட பொற்காலத்தை உண்டாக்கிடும் என்று உரைத்திருந்தனர். பகவான் சைதன்யரின் உபதேசங் களை பரவலாகவும் உறுதியாகவும் பிரச்சாரம் செய்ய தலைசிறந்த சேனாதிபதி ஒருவர் தோன்றுவார் என்று சைதன்ய மங்களத்தில் லோசன தாஸ தாகூர் முன்னுரைத்தார். கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பும் அந்த இரகசியமான திருப்பணி தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிருஷ்ணரால் சக்தி அளிக்கப்படாமல் மக்களின் மனதில் கிருஷ்ண பக்தியை ஊட்ட எவராலும் இயலாது என்பதை சைதன்ய சரிதாம்ருதம் உறுதி செய்கிறது. சிறந்த வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் (1838–1914), “அகிலமெங்கும் கிருஷ்ண பக்தியைப் பிரச்சாரம் செய்ய வெகுவிரைவில் ஒரு மஹாபுருஷர் தோன்றுவார்” என்று முன்னுரைத்தார். அந்த மஹாபுருஷர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரே என்பது தெளிவு.

 

நாம ஸங்கீர்த்தனத்தில் குழுவினருடன் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

பிரபுபாதரின் மகத்துவம்

பக்தரல்லாத எத்தனை பேரை வைஷ்ணவராக மாற்றுகிறார் என்பதைக் கொண்டு ஒரு பக்தரின் உயர்வை அறியலாம் என்று பக்திவினோத தாகூர் கூறியுள்ளார். உயர் தகுதிகள் பெற்றவரைக்கூட கிருஷ்ண பக்திக்கு அழைத்து வருவது கடினம். ஆனால், மேற்கத்திய நாடுகளின் கீழ்த்தரமான தகுதியற்ற இளைஞர்களின் மத்தியில் சென்ற ஸ்ரீல பிரபுபாதர் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கினார், அந்த அளவிற்கு அவர் கிருஷ்ணரால் சக்தி அளிக்கப்பட்டிருந்தார். ஸ்ரீல பிரபுபாதரின் ஈடு இணையற்ற உன்னதச் செயலை யாராலும் முழுமையாக அறிந்துகொள்ள இயலாது. மாமிசம் உண்ணுதல், தகாத பாலுறவு, சூதாட்டம், போதைப் பழக்கம் ஆகியவற்றை நன்கு ஆமோதிக்கும் சமூகத்தில் வளர்ந்த, வேதப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகிய, சாதுவை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பது குறித்து எந்த அறிவும் இல்லாத மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதர் தனியாகச் சென்றார். ஆன்மீக வாழ்க்கைக்கு அறவே தகுதியற்றவர்களாக இருந்தவர்கள் அம்மக்கள்.

அம்மக்களுக்கு மத்தியில் சென்றது மட்டுமின்றி, அவர் களுக்குப் படிப்படியாக பயிற்சி கொடுத்து, இன்று அவர்களில் பலரும் கிருஷ்ண பக்தியை மற்றவர்களுக்குப் புகட்ட வல்லவர்களாக, முதல்தர வைஷ்ணவர்களாக, பிரச்சாரகர்களாக எங்கும் எவ்விடத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் அளவிற்கு வழிநடத்தியுள்ளார் ஸ்ரீல பிரபுபாதர்.

கிருஷ்ண பக்தியை வெளியுலகிற்கு கொண்டு சென்றவர்

பக்தி, ஞானம், மற்றும் துறவின் இலட்சணங்கள் பொருந்திய பல்வேறு வைஷ்ணவர்கள் இந்தியாவில் இருந்தனர். எனினும், கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு ஸ்ரீல பிரபுபாதர் ஒருவரே தக்க தகுதிகளைப் பெற்றிருந்தார் என்பதே உண்மை. பகவான் சைதன்யரின் உபதேசங்கள், ஆன்மீக குருவின் ஆணை, கிருஷ்ணரின் திருநாமம் ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, இந்தியாவிற்கு வெளியே கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டவர் ஸ்ரீல பிரபுபாதர் மட்டுமே. பகவான் சைதன்யரின் செய்தியைப் பெறாமல் சிறிதும் உயர்வு பெற முடியாது என்ற நிலையில் இருந்த மக்களிடையே அதை பிரச்சாரம் செய்யும் அளவிற்கு கருணையும், தீர்மான நோக்கும் கொண்டிருந்தவர் ஸ்ரீல பிரபுபாதர் ஒருவரே. இத்தகைய ஈடு இணையற்ற பணியை கிருஷ்ணரின் மிகவுயர்ந்த அந்தரங்க பக்தர்களால் மட்டுமே செய்து முடிக்க முடியும். வைஷ்ணவ வரலாற்றில் ஸ்ரீல பிரபுபாதர் தன்னிகரற்ற இடம் வகிக்கிறார் என்பதை அவரது ஒப்புயர்வற்ற சாதனைகளால்  தெளிவாக அறியலாம்.

கிருஷ்ண பக்தியை நடைமுறைக்கு உகந்தபடியும் ஒளிவுமறைவு ஏதுமின்றி நேரடியாகவும் நவீன உலகிற்கு ஏற்றபடியும் பிரச்சாரம் செய்ய ஸ்ரீல பிரபுபாதர் சக்தி அளிக்கப் பட்டிருந்தார். பண்டிதனுக்கும் பாமரனுக்கும் பொருந்தும் வகையில், கிருஷ்ண பக்தியின் நெறிகளை சிறிதளவும் விட்டுக் கொடுக்காமல், அதன் மிகவுயர்ந்த உண்மைகளை தெளிவான, நுட்பமான வழியில் ஸ்ரீல பிரபுபாதர் நமக்களித்தார்.

 

உலகெங்கும் கிருஷ்ண பக்தியைப் பரப்பிய ஸ்ரீல பிரபுபாதர் (தனது சீடர்களுடன்)

அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர்

இஸ்கானின் வளர்ச்சியை ஸ்ரீல பிரபுபாதர் தானே மேற் பார்வையிட்டார். தெய்வீகப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்தல், ஹரிநாம ஸங்கீர்த்தனம், திருக்கோயில்கள், ஆஸ்ரமங்கள், பிரசாத விநியோகம், தெய்வீக பண்ணை நிலங்கள், குருகுலங்கள், விஞ்ஞானிகளிடமும் அறிஞர்களிடமும் பிரச்சாரம் செய்தல் என இஸ்கானின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் நிகழ்ச்சிகளை ஸ்ரீல பிரபுபாதரே அமைத்தார்.

ஸாதன பக்தி, பிரச்சாரம், விக்ரஹ வழிபாடு, கிருஷ்ணருக்காக சமைத்தல், மந்திர உச்சாடனம் என கிருஷ்ண பக்தியின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஆழமான அறிவுரைகளை வழங்கி வழிநடத்தியவர் ஸ்ரீல பிரபுபாதர். எவ்வாறு தோதி அணிவது என்னும் மிகச்சிறிய விஷயத்தைக்கூட அவர் செய்து காட்டினார்.

 

ஸ்தாபக ஆச்சாரியர்

எனவே, ஸ்ரீல பிரபுபாதரே இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர். இஸ்கானில் என்னவெல்லாம் நெறிகளும் உபதேசங்களும் நாம் வைத்துள்ளோமோ, அவை அனைத்தும் அவரிடமிருந்து வந்ததாகும். எனவே, இஸ்கானின் முக்கிய சிக்ஷா-குருவாகவும் ஆச்சாரியராகவும் ஸ்ரீல பிரபுபாதர் என்றும் விளங்குவார்.

தனது குரு மற்றும் பூர்வீக ஆச்சாரியர்களை ஸ்ரீல பிரபுபாதர் உறுதியாகப் பின்பற்றியவர் என்பதையும், நவீன காலத்திற்கு மிகவும் உகந்த முறையில் கிருஷ்ண உணர்வை வழங்கியுள்ளார் என்பதையும், அவரைப் பின்பற்றும் பக்தர்கள் அறிவார்கள். எனவேதான், சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கிருஷ்ண பக்திக்கு பல்வேறு அணுகுமுறைகளை வழங்கியுள்ள போதிலும், ஸ்ரீல பிரபுபாதரைப் பின்பற்றும் பக்தர்கள், அவரளித்த வழிமுறைகளையே பின்பற்றுவர்.

ஸ்ரீல பிரபுபாதரின் முயற்சிகள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணராலேயே முடிவு செய்யப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டவை என்பதை அவரது வெற்றியின் மூலம் அறியலாம்.

கிருஷ்ணருக்காக சமைப்பது உட்பட அனைத்தையும் ஸ்ரீல பிரபுபாதர் கற்றுக் கொடுத்தார்

பிரபுபாதர் அளித்த நெறிமுறைகள்

தீவிரமான பக்தர்கள் என்றும் ஸ்ரீல பிரபுபாதரை நேர்மையுடன் பின்பற்றுவோர் என்றும் கூறிக்கொள்ள விரும்புவோருக்கு, அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில இன்றிய மையாத அறிவுரைகளை ஸ்ரீல பிரபுபாதர் அளித்துள்ளார். உதாரணமாக, காலை நான்கு மணிக்கு விழித்தல், மங்கள ஆரத்தியில் கலந்து கொள்ளுதல், குறைந்தது 16 மாலைகள் மஹா மந்திரத்தை உச்சரித்தல், நான்கு கட்டுப்பாட்டு விதிகளை சிறிதளவும் பிறழாமல் பின்பற்றுதல் ஆகியவற்றை தீக்ஷை பெற்ற பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதரால் வரையறுக்கப்பட்ட இத்தகைய அனைத்து நெறிமுறைகளும் இஸ்கானில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறி முறைகளாகும். ஸ்திரமான நிலையில் ஸ்ரீல பிரபுபாதரைக் கடைப்பிடிப்பவர் அவரளித்த நெறிமுறைகளை மிக்க நம்பிக்கையுடன் அப்படியே தாங்கிச் செயல்பட வேண்டும். அத்தகைய பக்தர் ஸ்ரீல பிரபுபாதரால் அளிக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் எதையும் மாற்றவோ, இடைச் செறுகவோ முயல மாட்டார். ஏனெனில், ஸ்ரீல பிரபுபாதரால் நமக்குக் கொடுக்கப்பட்டவை–இன்று மட்டுமல்ல, அடுத்து வரக்கூடிய பத்தாயிரம் வருடங்களுக்கும்–மொத்த மனித சமுதாயத்தின் ஆன்மீக சீர்திருத்தத்திற்கான பக்குவமான முழுமை, முழுமையான பக்குவம் என்பதை அவர் அறிவார்.

(இக்கட்டுரை, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியின், கிருஷ்ண பக்தி, ஓர் அறிமுக வழிகாட்டி என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives